20 ஜூன் 2020

இந்தோனேசியா சாலகநகரப் பேரரசு

சாலகநகரம் பேரரசு (Salakanagara kingdom); அல்லது சாலகநகரப் பேரரசு என்பது மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த பேரரசு.

சாலகநகரப் பேரரசு, இந்தோனேசியாவில் இந்தியர் மயமாக்கப்பட்ட முதல் பேரரசு. இதை ஜலநகரப் பேரரசு என்றும் அழைப்பது உண்டு. சாலகநகரம் என்றால் வெள்ளி இராச்சியம் என்று பொருள். (Salakanagara means Silver Kingdom). 




(Salakanagara kingdom is the first historically recorded Indianised kingdom in Western Java. This Kingdom existed between 130-362 AD.)

(சான்று: Darsa, Undang A. 2004. “Kropak 406; Carita Parahyangan dan Fragmen Carita Parahyangan“, Makalah disampaikan dalam Kegiatan Bedah Naskah Kuna yang diselenggarakan oleh Balai Pengelolaan Museum Negeri Sri Baduga. Bandung-Jatinangor: Fakultas Sastra Universitas Padjadjaran: hlm. 1 – 23)

சாலகநகரப் பேரரசிற்குப் பின்னர் வந்தது கூத்தாய் பேரரசு. (Kutai Kingdom). போர்னியோ தீவின் கலிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட பேரரசு. கூத்தாய் பேரரசு 1670 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அரசு.




காரிங்கான் இந்து சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம். போர்னியோ கலிமந்தான் காடுகளில் வாழும் டயாக் மக்களைப் பற்றியும் கேள்விப்பட்டு இருக்கலாம். அந்த டயாக் மக்களில் ஒரு பிரிவினர் இன்றைய காலத்தில் பின்பற்றி வரும் இந்து சமயத்திற்குப் பெயர்தான் காரிங்கான் இந்து சமயம்.

டயாக் மக்களை இந்து சமயத்திற்கு மாற்றியதே இந்தக் கூத்தாய் பேரரசு தான். இந்தப் பேரரசு கி.பி. 350-ஆம் ஆண்டு தோன்றிய முதன்மைப் பேரரசு.

கூத்தாய் (Kutai) பேரரசிற்குப் பின்னர் தர்மநகரப் பேரரசு (Tarumanagara) ஆட்சிக்கு வந்தது. 




தர்மநகரம் அல்லது தர்மா இராச்சியம் (Taruma Kingdom) என்பது சுந்தா தீவுப் பகுதியில் இந்திய மயமாக்கப்பட்ட இராச்சியம் (Sundanese Indianised kingdom) ஆகும்.

5-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளராக பூர்ணவர்மன் (Purnawarman) இருந்தார். இவர்தான் ஜாவா தீவில் முதன்முதலில் கல்வெட்டுகளை தயாரித்து அதில் எழுத்துகளைப் பதித்தார். சரி.

(சான்று: Mary Somers Heidhues (2000). Southeast Asia: A Concise History. London: Thames and Hudson. p. 45 and 63.)




சாலகப் பேரரசிற்கு வருவோம். சாலகம் என்றால் சிறுகுறிஞ்சா எனும் மூலிகைச் செடி. இந்தோனேசியா ஜாவா தீவில் அதிகமாய்க் காணப்படும் மூலிகை.

தவிர அந்தக் காலத்துப் பெண்கள் நெற்றியில் அணியும் ஓர் ஆபரணத்திற்குப் பெயரும் சாலகம் தான். இப்போது அந்த ஆபரணம் பயன்பாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சாலகநகரப் பேரரசு ஏறக்குறைய 1890 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய அரசு. வருடத்தைக் கவனியுங்கள். நூறு இருநூறு ஆண்டுகள் அல்ல. 1890 ஆண்டுகள். 




ஆக பல நூறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள் போர்னியோ, பிலிப்பின்ஸ், மலாயா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குப் பயணித்து இருக்கிறார்கள்.

பயணம் போன இடங்களில் நிலபுலன்களை வாங்கி இருக்கிறார்கள். நிலப் பிரபுக்களாக மாறி இருக்கிறார்கள். சிற்றரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தச் சிற்றரசுகளைப் பேரரசுகளாக மாற்றி இருக்கிறார்கள்.

அப்போதைய காலத்தில் வாழ்ந்த அந்தக் காலத்துத் தென்னிந்தியர்களைத் துணிகரமான கடலோடிகள் என்று புகழ்மாலை சூடலாம். 




நீராவிக் கப்பல்கள் இல்லை. டீசல் கப்பல்கள் இல்லை. வெறும் காற்றை நம்பிய பாய் மரக் கப்பல்களில் உலகத்தையே சுற்றி வந்து இருக்கிறார்கள்.

கி.பி. 120-ஆம் ஆண்டுகளில் தேவ வர்மன் (Dewawarman) என்பவர் ஒரு வணிகத் தூதராக ஜாவா தீவிற்கு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு வணிகர். ஜாவாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வணிக உறவுகளை மேம்படுத்திக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் இந்தியாவில் இருந்து ஜாவா தீவிற்கு வந்தவர்.

(Dewawarman was an Indian ambassador or trader sent from India to establish relations with Javadwipa. A relatively modern literature in the 17th century Pustaka Rajya Rajya i Bhumi Nusantara describes salakanagara as being founded by an Indian merchant.)

(சான்று: http://ww1.wacananusantara.org/ - "Salakanagara, Kerajaan "Tertua" di Nusantara")




அப்போதைய காலத்தில் ஜாவா தீவை சாவகத் தீவு; ஜாவாதீபம் (Javadwipa) என்று மேலை நாட்டவர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

அப்படி வந்த தேவ வர்மன், சில ஆண்டுகளில் சாலகநகர அரசைத் தோற்றுவித்தார். தேவ வர்மன் என்பவர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்.

எப்படித் தோற்றுவித்தார் என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் தான் தோற்றுவித்தார் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

இந்தோனேசிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான எடி எஸ். ஏகஜதி (Edi S. Ekajati) என்பவர் இப்படிச் சொல்கிறார். 




முன்பு காலத்தில் சாலகநகரம் என்பது கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களில் ஒரு புராணத் தீவாக இருந்தது. ஏன் என்றால் சாலகநகரம் என்றால் சமஸ்கிருதத்தில் வெள்ளி நாடு என்று பொருள் படுகிறது.

(Edi S. Ekajati, one of Indonesia historian, argued that Salakanagara is Argyre which was a mythical island of silver in Greek and Roman mythology because Salakanagara means "country of silver" in Sanskrit.)

(சான்று: Edi S. Ekadjati (2005). Kebudayaan Sunda Zaman Pajajaran, Jilid 2. Pustaka Jaya.)




இருப்பினும் சாலகநகர வரலாறு மிகவும் சற்றே மர்மமாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகள்; தொல்பொருள் சான்றுகள் போதுமானதாக இல்லை. அதற்கு உறுதியான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. கோயில்கள் அல்லது கட்டுமான இடிபாடுகள்; நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை.

இருந்தாலும் சலக்கநகர வரலாற்றுக்கு முக்கியச் சான்றாக விளங்குவது புஸ்த்தகா ராஜ்ய ராஜ்யா பூமி நுசந்தாரா (Pustaka Rajya-rajya I Bhumi Nusantara) எனும் கையெழுத்துப் பிரதி மட்டுமே.

சாலகநகரப் பேரரசைத் தோற்றுவித்தவர் தேவ வர்மன் என்று சோஜோமெர்த்தோ (Sojomerto inscription) கல்வெட்டு சான்று சொல்கிறது. 




புஸ்த்தகா ராஜ்ய ராஜ்யா பூமி நுசந்தாராவின் கூற்றுப்படி, இன்றைய இந்தோனேசியா மேற்கு ஜாவா, பான்டென் (Banten) மாநிலத்தின் கடற்கரையில் சாலகநகரம் அமைந்து இருந்தது.

(According to Pustaka Rajya Rajya i Bhumi Nusantara, Salakanagara was located on west coast of Java, in the present day Banten province.)

சாலகநகர மன்னர்கள்:

1. தேவவர்மன் I (130-168); (தர்மலோகபாலா)

2. தேவவர்மன் II (168-195); (தேவவர்மன் I-இன் மூத்த மகன் - பிரபு திக்விஜயகாசன் - Prabu Digwijayakasa)

3. தேவவர்மன் III (195-238); (பிரபு சிங்கசாகரா பீமயாசவீரயா - Prabu Singasagara Bimayasawirya)

4. தேவவர்மன் IV (238-252); (உஜோங் கூலோன் ராஜா - Raja Ujung Kulon)




5. தேவவர்மன் V (252-276);

6. தேவவர்மன் VI (276-289); (மகிஷா சுரமர்தினி வர்மாதேவி - Mahisa Suramardini Warmandewi)

7. தேவவர்மன் VII (289-308); (மோதேன் சமுத்திரா - Mokteng Samudera)

8. தேவவர்மன் VIII (308-340); (பிரபு பீமா திக்விஜயா சத்யா கணபதி - Prabu Bima Digwijaya Satyaganapati)

9. ஸ்ரீ கர்ணாவா வர்மன்தேவி (340-348) - Srikarnawa Warmandewi

10. தேவ வர்மன் பிரபு தர்ம வீரையா (348-362) - Dewawarman VIII Prabu Darmawirya



The Sojomerto inscription is an inscription discovered in 
Sojomerto village, Reban, Batang Regency, Central Java, Indonesia.

(சான்று: Munandar, Agus Aris; Ekajati, Edi Suhardi (1991). Pustaka pararatwan i bhumi Jawadwipa, parwa 1, sargah 1-4: rangkuman isi, konteks sejarah, dan peta (in Indonesian). Yayasan Pembangunan Jawa Barat.)

சாலகநகரப் பேரரசு தோற்றுவிக்கப் பட்டதும் தேவ வர்மன், தன் பெயரைப் பிரபு தர்மலோகபாலா தேவ வர்மன் ரக்சபுர சாகரன் என்று மாற்றிக் கொண்டார். (Prabu Dharmalokapala Dewawarman Raksagapura Sagara). இவர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருடைய மனைவியின் பெயர் தேவி பாவாச்சி லாரசதி (Dewi Pwahaci Larasati).

உள்ளூர் நிலப்பிரபுவின் மகளை தேவ வர்மன் திருமணம் செய்து கொண்டதால் அவர் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை.

சாலகநகரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் தேவர்மன் (Dewawarman) வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களின் ஆட்சிக் காலத்தில் இரு சிறிய அரசுகளையும் நிறுவி இருக்கிறார்கள். அந்த இரு சிற்றரசுகளின் விவரங்கள்:

1. உஜோங் குலோன் அரசு (Ujung Kulon Kingdom)

உஜோங் குலோன் அரசு, இப்போது இந்தோனேசியாவின் உஜோங் குலோன் வட்டாரத்தில் அமைந்து உள்ளது. இந்த அரசு சேனாபதி பகதூரா ஹரிகானா ஜெயசக்தி (Senapati Bahadura Harigana Jayasakti) என்பவரால் நிறுவப்பட்டது.

இந்தச் சேனாதிபதி என்பவர் சாலகநகரப் பேரரசைத் தோற்றுவித்த தேவவர்மனின் தம்பியாகும்.

உஜோங் குலோன் அரசை தர்ம சத்யநகரா (Darma Satyanagara) என்பவர் ஆட்சி செய்த போது, மூன்றாம் தேவவர்மனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் (தர்ம சத்யநகரா) சாலகநகர பேரரசின் 4-வது மன்னர் ஆனார்.

(When this kingdom was led by Darma Satyanagara, the king married the daughter of Dewawarman III and later became the 4th king in the Kingdom of Salakanagara.)

இந்தக் கட்டத்தில் சாலகநகரப் பேரரசிற்கு இணையாக மற்றோர் அரசு போட்டியாக உருவாகிக் கொண்டு இருந்தது. அதன் பெயர் தர்மநகரப் பேரரசு (Tarumanagara).

இந்தத் தர்மநகரப் பேரரசு நன்றாக வளர்ச்சி அடைந்ததும், உஜோங் குலோன் சிற்றரசின் மீது படை எடுத்தது.

தர்மநகரப் பேரரசின் மூன்றாவது அரசராக இருந்த பூர்ணவர்மன் தான் அந்தப் படையெடுப்பைச் செய்தார். உஜோங் குலோன் சிற்றரசைக் கைப்பற்றினார்.

(When Tarumanagara grew into a large kingdom, Purnawarman (the third Tarumanagara king) conquered the Ujung Kulon Kingdom.)

கடைசியில் உஜோங் குலோன் சிற்றரசு, தர்மநகரப் பேரரசின் துணைச் சிற்றரசாக மாறியது.

சாலகநகரப் பேரரசின் மற்றொரு சிற்றரசு;

2. தஞ்சோங் கிடுல் அரசு (Kingdom of Tanjung Kidul)

தஞ்சோங் கிடுல் அரசு, இப்போதைய இந்தோனேசியாவின் சியான்ஜூர் (Cianjur) மாநிலத்தில் அமைந்து இருந்தது. அதன் தலைநகரம் அக்ரபிந்தபுரா (Aghrabintapura).

இந்தச் சிற்றரசை சுவேதா லிமான் சக்தி (Sweta Liman Sakti) எனும் அரசியார் ஆட்சி செய்து வந்தார். இந்த அரசியார் சாலகநகரப் பேரரசை உருவாக்கிய தேவவர்மன் அரசரின் இரண்டாவது சகோதரி ஆவார்.

சாலகநகரப் பேரரசின் அமைவிடங்கள்

சாலகநகரப் பேரரசு மையமாகக் கொண்ட மூன்று இடங்களை இந்தோனேசிய அரசாங்கம் அடையாளம் கண்டு உள்ளது. அந்த இடங்களின் விவரங்கள்:

1. தெலுக் லாடா, பாண்டென் (Teluk Lada, Pandeglang, Banten)

2. கொன்டெட், ஜகார்த்தா (Condet, Jakarta)

3. சாலாக் மலை, போகோர் (Mount Salak, Bogor)

1.1. முதலாவதாக தெலுக் லாடா விளக்கம்:

இப்போதைய இந்தோனேசியா, பாண்டென் மாநிலத்தில் பாண்டெகிலாங் (Pandeglang, Banten) எனும் இடத்தில் லாடா விரிகுடா (Lada Bay) இருக்கிறது. அந்த இடத்தில் சாலகநகரப் பேரரசின் தலைநகரம் ராஜதபுரா அமைந்து இருக்கலாம் என்று வாங்சா கெர்டா கையெழுத்துப் பிரதியில் (Wangsakerta Manuscript) எழுதப்பட்டு உள்ளது.

சாலகநகரப் பேரரசின் எட்டாவது மன்னராக ஆட்சி செய்த தேவர்மன் (Dewawarman VIII), இந்த இடத்தில் இருந்து ஜாவா முழுவதும் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தி இருக்கிறார். இது முதலாவதாக அடையாளம் காணப்படும் இடம்.

2.1. இரண்டாவதாக கொன்டெட் விளக்கம்:

இப்போதைய இந்தோனேசியா, கிழக்கு ஜகார்த்தா பகுதியில் கொன்டெட் (Condet, Jakarta) எனும் இடம் உள்ளது. அதாவது இப்போதைய சுந்தா கெலாப்பா (Sunda Kelapa) எனும் துறைமுகத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொன்டெட் சிறுநகரம். அங்கே சாலகப் பேரரசு மையம் கொண்டு இருந்து இருக்கலாம். இது இரண்டாவதாக அடையாளம் காணப்பட்டு உள்ள இடம்.

இந்தப் பகுதியில் சுங்கை திராம் (Sungai Tiram) எனும் நதி ஓடுகிறது. இந்த நதியில் சிப்பிகள் அதிகம். சாலகநகரப் பேரரசை உருவாக்கிய தேவவர்மனின் மாமியார் பெயர் அகி திராம் (Aki Tirem). சுங்கை திராம் நதிக்கு மாமியார் அகி திராம் பெயரில் இருந்து வந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் முடிவிற்கு வருகிறார்கள்.

(Ciondet or Condet in East Jakarta, which is 30 kilometers from the port of Sunda Kelapa. This area has a flowing river named Sungai Tiram. The word "Oysters" supports comes from the name of Aki Tirem, in-law of Dewawarman I, founder of Salakanagara.)

3.1. மூன்றாவதாக போகோர் சாலாக் மலை விளக்கம்:

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் போகோர் (Bogor) எனும் மாநகரம் உள்ளது. அங்கே சாலாக் எனும் பெயரில் ஒரு மலை உள்ளது.

இந்த சாலாக் மலைக்கு சாலகநகரப் பேரரசின் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம். சுந்தா மொழியில் சாலகநகரம் என்றால் வெள்ளி இராச்சியம் என்று பொருள். தவிர சாலாக் எனும் சொல்; சாலகம் எனும் சொல்லுடன் இணைந்து போகிறது.

Third, Mount Salak (Bogor) is a mountain which is a silver-day afternoon compilation. In Sundanese, Salakanagara means Silver Kingdom. In addition, this opinion is also based on the similarity of names between Salaka and Salak.

சாலகநகரப் பேரரசைப் பற்றி இந்தோனேசியர்கள் பல காணொலிகளைத் தயாரித்து இருக்கிறார்கள். யூடியூப்பில் உள்ளன.

அதன் முகவரிகள்:

1. https://www.youtube.com/watch?v=Ys0TaOO8lX0

2. https://www.youtube.com/watch?v=grLkQUiAf9k

3. https://www.youtube.com/watch?v=xUCX8tAMpRw

4. https://www.youtube.com/watch?v=oaBrpIR9B8s

5. https://www.youtube.com/watch?v=Au8mhnGTeoQ

அங்கே இந்தியர்களின் கலையையும் கலாசாரத்தையும் தங்களின் கலாசாரமாக நினைத்துப் போற்றுகின்றார்கள். புகழ்கின்றார்கள்.

கரை தாண்டி அடுத்தப் பக்கம் பார்த்தால் இருக்கிற எல்லா இந்திய வரலாற்றுச் சுவடுகளையும் அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். பிரச்சினை இல்லை.

தென்கிழக்காசியாவில் இந்தியர்களின் ஆளுமை வரலாறுகளைத் தோண்டி எடுத்துச் சான்றுகளுடன் முன் வைப்போம். அதை நம் கடமையாகக் கருதுவோம். நாம் மறைந்த பின்னர், எதிர்காலத்தில் இந்தப் பதிவுகள் நம் சந்ததியினருக்குப் பேருதவியாக அமையும் என்று நம்புவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.06.2020

References:
1. Coedes, George (1968). Walter F. Vella, ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.

2. Drs. R. Soekmono, (1988) [First published in 1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed.

3. https://id.wikipedia.org/wiki/Naskah_Wangsakerta - Ayatrohaedi. 2005. Sundakala: cuplikan sejarah Sunda berdasarkan naskah-naskah "Panitia Wangsakerta" Cirebon. Pustaka Jaya, Jakarta. ISBN 979-419-330-5

4. Raffles, Thomas Stamford. 1817. The History of Java, 2 vol. London: Block Parbury and Allen and John Murry.

5. A. Sobana Hardjasaputra, H.D. Bastaman, Edi S. Ekadjati, Ajip Rosidi, Wim van Zanten, Undang A. Darsa. (2004). Bupati di Priangan dan Kajian Lainnya Mengenai Budaya Sunda. Pusat Studi Sunda.

6. Degroot, Veronique M. Y. (2009). Candi, Space and Landscape. A study on the distribution, orientation and spatial organization of Central Javanese temple remains. Leiden, Netherlands: Sidestone Press. p. 84.

7. Atja, Drs. (1970). Ratu Pakuan. Lembaga Bahasa dan Sedjarah Unpad. Bandung.

8. https://hindualukta.blogspot.com/2015/02/pendiri-kerajaan-salakanagara-dan-raja.html

9. https://www.sejarahindonesia.web.id/kerajaan-salakanagara/

10. HISTORY OF SALAKANAGARA: Sundanes Of Kingdom - https://www.youtube.com/watch?v=Ys0TaOO8lX0

11. https://www.indephedia.com/2019/10/history-of-salakanagara-perak-country.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக