07 ஜூன் 2020

மனிதர்களின் அழுகை நிறம் மாறாத பூக்கள்

அண்மையில் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் பரவலானது. ஒரு பெண்மணி இறந்து விடுகிறார். அதைப் பார்த்து அவர் வளர்த்த பாம்பு கண்ணீர் விட்டு அழுவதாக விளக்கம் கொடுத்து இருந்தார்கள். அதைப் பார்த்த  சிலருக்கும் கண்ணீர் கரைபுரண்டு ஓடி இருக்கலாம். அடடடா... சொந்த பந்தங்களுக்கு இல்லாத பாசமா என்று பலரும் விக்கித்துப் போனார்கள். என்னையும் சேர்த்துத் தான். 
 


வேதனைகளும் சோதனைகளும் எல்லைகள் கடந்து போகும் போது அழுகையும் தானாகப் பெருகி வரும். உலகில் உள்ள எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் அழுகை வரும். அழுகை என்பது உயிரினங்களுக்கு இயற்கை வழங்கிய வரப்பிரசாதம். சரி. பாம்பு கண்ணீர் விட்டு அழுமா?

மனிதர்களைப் போல பாம்புகளால் அழ முடியும். ஆனால் ஒரே ஒரு பலகீனம்.  கண்ணீர் மட்டும் வராது. ஒன் மினிட் பிலீஸ்...

மனிதர்களைப் பற்றி தலைப்பைக் கொடுத்து விட்டு பாம்பு பக்கம் போய் விட்டதாக நினைக்க வேண்டாம். ஓர் அறிவியல் தகவல். முதன்மை கொடுப்போமே.

பாம்புக்கு கண்ணீர் வரும் ஆனால் வராது என்று வடிவேலு கணக்கில் சொல்லிவிட்டுப் போகலாம். பாம்பினால் அழவும் முடியாது. மூக்கைச் சிந்தவும் முடியாது. அதற்குக் காரணம் பாம்புகள் மெகா சீரியல்கள் பார்ப்பது இல்லை என்று சொல்ல வரவில்லை. 




பாம்புகளின் உடல் அமைப்பே அப்படித்தான் என்று சொல்ல வருகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விசயத்திற்கு வருகிறேன்.

பாம்புகள் அழுவது இல்லை. அழவும் முடியாது. அவற்றுக்கு அதற்கான உடற்கூறியல் (anatomy) அமைப்பு இல்லை. அதாவது அதன் உடல் அமைப்பு கண்ணீர் சிந்துவதற்கு ஏற்றவாறு அமையவில்லை.

மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் இருப்பது போல பாம்புகளுக்கு அவற்றின் கண்களில் கண்ணீர் குழாய்கள் இல்லை. அதாவது கண்ணீர் நரம்பிழைகள் (tear ducts) இல்லை. அதனால் பாம்பிற்குக் கண்ணீர் வராது.

பாம்புக்கு உடல் முழுக்கச் செதில்கள் சின்னதும் பெரியதுமாக இருக்கும்.  பார்த்து இருப்பீர்கள். அதே போல அதன் கண்களிலும் செதில்கள் உள்ளன. அதாவது கண்களுக்கு மேல் கண்ணாடி போன்ற வெளிப்படையான செதில்கள் உள்ளன. அதனால் பாம்பிற்குக் கண்ணீர் வராது.




இன்னும் ஒரு விசயம். பாம்புகளுக்கு கண் இமைகள் இல்லை. எனவே அவை கண்களை மூடவும் முடியாது. கண்களைச் சிமிட்டவும் முடியாது. கண் அடிக்கவும் முடியாது.

கண் இமைகளுக்குப் பதிலாக மெல்லிய ஜவ்வுப் பொருள் அவற்றின் கண்விழிப் படலத்தை மூடி இருக்கும்.

அதற்கு கண்ணாடி (brilles) என்று பெயர். பாம்பின் அந்த மெல்லிய ஜவ்வுப் பொருள், அதன் கண்விழிப் படலத்தை எப்போதும் மூடி இருக்கும். அத்துடன் தலைப் பாகத்தில் உள்ள தோலுடனும் அந்த மெல்லிய ஜவ்வுப் பொருள் இணைக்கப்பட்டு ஒட்டி இருக்கும். அதனால் பாம்புகள் அவற்றின் கண்களை மூடவே முடியாது. 




ஆனாலும் அதன் கண்ணுக்கு உள்ளே இருக்கும் கண்விழித் திரைகளை மட்டுமே மூட முடியும். கண்விழித் திரைகள் மூடி இருந்தாலும் அதன் கண்கள் திறந்த வாக்கிலேயே தான் திறந்து இருக்கும். கண்கள் திறந்த வாக்கிலேயே தான் பாம்பு தூங்கும்.

பாம்புகளுக்கு உள்ள கண்விழித் திரையின் சிறப்புத் தன்மைகள், மனித அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

பாம்பு கண்விழித் திரையை அடிப்படையாகக் கொண்டு கண்ணாடி வில்லை (contact-lens) தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறந்த ’காண்டாக்ட் லென்ஸ்’களை உருவாக்கலாம் என்றும் சொல்கிறார்கள். பாம்பின் கண்களைத் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

கண்களை மூடாமல் எப்படி தூங்குவது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு மருத்துவப் புரட்சி செய்தாலும் செய்யலாம். சொல்ல முடியாது.




ஆக மனிதனுக்கு மட்டும் அழுகை வரலாம். மற்ற ஜீவராசிகளுக்கு வரக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. ஆக பாம்புக்கும் அழுகை வரலாம். ஆனால் கண்ணீர் வராது.

முட்டையும் இல்லை. பாலும் இல்லை. பாம்பாட்டம் போட மகுடி வித்துவான் மாயாசாமியும் இல்லை என்று தேம்பித் தேம்பி அழ நினைக்கலாம். என்ன செய்வது. பாம்பு வாங்கி வந்த வரம். அதன் கண்களில் உள்ள செதில்களை மீறி கண்ணீர் வெளியே வந்து கொட்டாது. பாவம் பாம்புகள். பாவப்பட்ட ஜென்மங்கள்.

உள்ளுக்குள் உள்ளேயே அழுது தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை. மனிதர்களைப் போல எட்டு வீடு கேட்கிற மாதிரி பாம்புகளால் ஒப்பாரி வைத்து அழவும் முடியாது. 




அந்த மாதிரி செதில்கள் மனிதர்களின் கண்களுக்கும் இருந்து இருந்தால்... தமிழ்த் திரைப்ப்படங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. சீரியல் தயாரிப்பாளர்களும் அமோகமாகக் கல்லா கட்டி கொழுத்த பணக்காரர்களாக ஆகி இருக்கவும் முடியாது. கல்லாவைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலைமை வந்து இருக்கலாம்.

இந்த அழும் விசயத்தில் மனிதர்களை மிஞ்சி, வேறு எந்த ஓர் உயிரினமும் அழுகைச் சாதனை செய்துவிட முடியாது. சீரியல்கள் எப்போது தமிழர்களை ஆட்டிப் படைக்கத் தொடங்கினவோ, அப்போதே மனுக்குலம் போற்றும் அழுகைப் பட்டயங்கள் மனிதர்களுக்குக் கிடைத்து விட்டன. இந்த அழுகை விசயத்தில் ஆண் பெண் பாகுபாடுகள் இல்லை.

ஆண் பெண் இருவரில் யாரால் அதிகமாக அழ முடியும் என்பதில் நீயா நானா போட்டி வரலாம். அப்படி வந்தால் ‘வாங்க வந்து பழகுங்க’ என்று சாலமன் பாப்பையா அவர்களைத் தான் நடுவராக அழைக்க வேண்டும். 



ஆக அழுகையின் திலகம்; அழுகையின் இமயம்; அழுகையின் சிகரம் எனும்  அழுகைப் பட்டயங்களை மனுக்குலம் எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கப் போவதும் இல்லை. அது அவ்வளவு சுலபத்தில் நடக்கப் போகிற காரியமும் இல்லை.

மற்ற உயிரினங்கள் போட்டிக்கு வந்தாலும் மனிதர்களின் அழுகையை மிஞ்சி எவராலும் ஜெயிக்கவும் முடியாது. ஏன் என்றால் மனிதர்களின் அழுகை என்றைக்குமே நிறம் மாறாத பூக்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.06.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக