01 ஜூலை 2020

சிங்காசரி பிரஜ்ன பரமிதா சிலை

தமிழ் மலர் - 01.07.2020

போதி சத்வ தேவி பிரஜ்ன பரமிதா (Bodhi Sattva Devi Prajna Paramita). இனிதான அழகிய பெயர். ஆனந்தங்கள் பூக்கும் அழகிய பைரவி. அர்த்தங்கள் தொனிக்கும் அம்ச வர்த்தனி. வடச் சொல்லாக இருந்தாலும் கடந்து போக முடியவில்லை.

 

பெயருக்கு ஏற்றவாறு சிலையின் நயனமும் நளினங்களும் எதார்த்தமான நெழிவு சுழிவுகளை அள்ளித் தெளிக்கின்றன. அத்தனையும் அற்புதமான நளினங்கள். பொலிவும் தெளிவும் அழகும் சிலை செதுக்கல் மிருதுவிலும் வளை ஓசைகள் போலும். ஒரு சொர்க்க லோகச் சுந்தரி போலும். நகையும் உவகையும் தொகையாய் தனி ஓர் ஆவர்த்தனம்.

பொதிகை மலை உச்சியில் நீராடும் கன்னியாய் மேலே இருந்து கீழே இறங்கி வந்து இருக்கலாம். இடம் தேடி இந்தோனேசியாவில் தடம் பதித்து இருக்கலாம். சொல்ல முடியாது. புன்னகை பூக்கும் அந்தப் பூவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது. மிக அற்புதமான கலை வடிவம்.


அதற்கு முன்னர் பௌத்த சமயத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். ஏன் என்றால் இந்தச் சிலைக்கும் பௌத்த மதத்திற்கும் தொடர்புகள் உள்ளன.

பௌத்த சமயத்தில் பல பிரிவுகள் உள்ளன. தேரவாதா பௌத்தம்; ஜென் பௌத்தம்; மகாயான பௌத்தம்; யோகாசாரா பௌத்தம்; வஜ்ஜிராயன பௌத்தம். ஏறக்குறைய ஒரு பத்துப் பிரிவுகள் உள்ளன.

இருப்பினும் இரு முக்கியமான பிரிவுகள் உள்ளன. தேரவாத பௌத்தம்; மகாயான பௌத்தம். ஒரு செருகல். பௌத்தம் அல்லது புத்தம். இரண்டும் ஒன்றுதான். குழம்பிக் கொள்ள வேண்டாம்.

 



இதில் தேரவாத பௌத்தம் என்பது இலங்கை, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா நாடுகளில் பின்பற்றப் படுகின்றது. மகாயான பௌத்தம் சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தைவான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

வச்சிரயான பௌத்தம் என்று மூன்றாவது வகையும் உள்ளது. திபெத்து, மங்கோலியாவில் பின்பற்றப்படுகிறது.

மகாயான பௌத்தம் (Mahayana Tantric Buddhism) என்பது அவற்றில் ஒரு பிரிவு தான். அந்தப் பௌத்தப் பிரிவில் ஓர் உயர்ந்த நிலைப்பாட்டின் தெய்வமாகப் போற்றப் படுகிறவர் தான் இந்த சத்வ தேவி பிரஜ்ன பரமிதா. 




இவரை வஜ்ர தாரா (Vajradhara) என்றும் அழைப்பது உண்டு. பௌத்த மதத்தில் மிக உயர்ந்த அறிவின் சக்தி என்று கருதப் படுகிறவர். அதாவது பௌத்த மதத்தின் பெண் தெய்வமாகக் கருதப் படுகிறவர். சரி.

13-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவை சிங்காசரி (Singhasari) எனும் பேரரசு ஆட்சி செய்த காலத்தில், போதி சத்வ தேவி பிரஜ்ன பராமிதாவின் (Bodhisattvadevi) ஓவியங்களும்; கற்சிலை வேலைபாடுகளும் நிறையவே உருவாக்கப் பட்டன. அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள். பிரமாதமான துல்லிதமான கைத் திறன்கள்.

அந்த வகையில் 700 ஆண்டுகளுக்கு முன்னால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய பிரஜ்ன பரமிதா சிலையைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம். இதைப் போல நிறைய சிலைகள் செதுக்கப்பட்டு இருக்கலாம். சில சிலைகள் கிடைத்து உள்ளன. ஆனால் சேதம் அடைந்து விட்டன.




13-ஆம் நூற்றாண்டில், மகாயான பௌத்தம் சிங்காசரி பேரரசின் ஆதரவைப் பெற்று சிறந்து விளங்கியது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு ஜாவாவில் சிங்காசரி பிரஜ்ன பரமிதா; சுமத்திரா ஜம்பியில் பிரஜ்ன பரமிதா போன்ற சில பிரஜ்னபரமிதா சிலைகள் உருவாக்கப் பட்டன.

கிழக்கு ஜாவாவின் சிங்காசரி பிரஜ்ன பரமிதா (Prajnaparamita Singhasari) சிலையும்; சுமத்திரா ஜம்பி பிரஜ்ன பரமிதா (Prajnaparamita Jambi) சிலையும் ஒரே காலக் கட்டத்தில் தயாரிக்கப் பட்டவையாக இருக்கலாம். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சுமத்திரா ஜம்பி பிரஜ்ன பரமிதா சிலையின் தலைப் பாகம் இல்லாமல் மோசமான நிலையில் கிடைத்தது.

அவற்றில் இந்தக் கிழக்கு ஜாவா சிங்காசரி பிரஜ்ன பராமிதா சிலை, சிறந்த ஓர் அழகியல் வரலாற்றைக் கொண்டது. 




கிழக்கு ஜாவா (East Java), மலாங் (Malang), குங்குப் புத்ரி (Cungkup Putri) எனும் இடத்தில் சிங்காசரி காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப் பட்டது. அந்தக் கோயிலுக்கு (Singhasari temple) அருகில், 1818-ஆம் ஆண்டு, இந்தச் சிலை கண்டு எடுக்கப் பட்டது.

அந்தச் சிலைதான் சிங்காசரி பிரஜ்ன பரமிதா சிலை. கிட்டத்தட்ட சரியான நிலையில்; சிதைபடாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொஞ்ச காலம் மண்ணுக்குள் புதைபட்டு இருந்து இருக்கலாம்.

சிங்காசரி கோயிலுக்கு அருகில் ஒரு கோயில் வளாகம். அதன் தெற்கே ஒரு சிறிய விகாரம். அங்குதான் அந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலையைக் கோயில் பொம்மை (Candi Wayang); அல்லது குங்க்குப் புத்ரி (Cungkup Putri) என்றும் உள்ளூர் மக்கள் அழைத்தார்கள். இன்றும் அழைக்கிறார்கள்.




சிலையைக் கண்டுபிடித்தது உள்ளூர் மக்கள் தான். அவர்களிடம் இருந்து  கிழக்கு டச்சு கம்பெனியைச் சேர்ந்த மோனேரியோ (D. Monnereau) என்பவர் அந்தச் சிலையை பெற்றுக் கொண்டார்.

இருந்தாலும் அவர் கண்டு எடுத்ததாக வரலாறு சொல்கிறது. மலேசிய மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’லெம்பு பூஞ்ஞா சூசு; சாப்பி பூஞ்ஞா நாமா’. பசுவின் பால். வெண்ணெய்க்கு பேரும் புகழும். அது இதுதான் போலும்.

1820-ஆம் ஆண்டில் இந்தச் சிலையை ரெய்ன்வார்ட் (C.G.C. Reinwardt) என்பவர் இந்தோனேசியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு கொண்டு போனார். அங்கு உள்ள ரிஜக்ஸ் (Rijksmuseum, Leiden, Netherlands) அரும் காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 158 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிலை அங்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தது.




1978-ஆம் ஆண்டு நெதர்லாந்து ராணியார் ஜூலியானா (Queen Juliana) இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்தார். அப்போது இந்தச் சிலையை இந்தோனேசியாவிற்கே மீண்டும் கொடுத்தார். இந்தச் சிலை இப்போது ஜகார்த்தாவில் இருக்கும் இந்தோனேசியா தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Indonesia) உள்ளது.

அந்த அருங்காட்சியகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கெடுங் அர்கா (Gedung Arca) அரங்கத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

அழகியல் பாவனையில் ஆன்மீகத்தை இணைக்கும் (combines aesthetic perfection and spirituality) அரிய கலை வடிவங்களில் ஒன்றாகப் புகழப் படுகிறது. பண்டைய காலத்து இந்தோனேசிய கலையின் சிறப்புமிக்கச் சின்னமாகவும் மாறி உள்ளது.




சிலையின் அமைதியான வெளிப்பாடு; தியானத்தின் அழகிய நிலை; சைகைச் சயனங்கள்; செல்வச் செழிப்பின் அலங்காரங்கள்; அவற்றின் மத்தியில் அமைதியையும் ஞானத்தையும் பரிந்துரைக்கும் பாவனைகள். வஜ்ராசனா தெய்வத் தோரணைகள் (vajrasana posture). தாமரை கோலத்தின் ஒரு தியான நிலை. மனதைக் கொள்ளை அடிக்கும் பெண்மையின் லாவண்யம்.

பத்மாசனம் போட்ட நிலையில், இரட்டை தாமரை பீடத்தின் (lotus pedestal) மீது அமர்ந்து இருக்கும் அப்சாரா அழகின் காட்சி. மேகங்கள் கலைந்த நிர்மலமான ஜீவியப் பெண்மை. ஆகா... எப்படி வர்ணிப்பது. இதற்கு மேல் என்னாலும் போற்றிப் பூஜிக்க இயலவில்லை.

ஆக அந்த வகையில் இந்தோனேசியாவில் கண்டு எடுக்கப்பட்ட சிலைகளில் இந்தப் பிரஜ்ன பரமிதா சிலைதான் மிக மிகப் புகழ்பெற்றது. மதிப்பு மிக்கது. நீல நயனங்களைத் தாண்டிய நீல மேகங்களின் நளினம்.

(The statue is of great aesthetical and historical value, and is considered as the masterpiece of classical Hindu-Buddhist art of ancient Java. Today, the statue is one of the prized collection of the National Museum of Indonesia, Jakarta.)




பண்டைய ஜாவாவில் புதைந்து போய் இருக்கும் பழைமை வாய்ந்த கலையில் தலைசிறந்த படைப்பாக இந்தப் பிரஜ்ன பரமிதா சிலை கருதப் படுகிறது.

இந்தச் சிலைக்கு கிழக்கு ஜாவாவின் பிரஜ்ன பரமிதா (Prajnaparamita of East Java) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்த சிலையின் உயரம் 126 செ.மீ. அகலம் 55 செ.மீ. தடிமன் 55 செ.மீ. வெளிர் சாம்பல் நிறம். எரிமலைப் படிகப் பாறைக் கல்லால் செதுக்கப் பட்டது.

இந்தச் சிலை சிங்கசாரியின் முதல் ராணியாக இருந்த கென் தெடிஸ் (Ken Dedes) என்பவரின் சிலையாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதே கருத்தைச் சொல்கிறார்கள்.




சிங்கசாரி பேரரசைத் தோற்றுவித்தவர் கென் அரோக் எனும் ராஜசா (Ken Arok, Rajasa). பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர். இவரின் மூலமாகத் தான் மஜபாகித் அரசின் எல்லா வாரிசுகளும் தோன்றினார்கள்.

மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வராவும்; சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமனும் ராஜசா மன்னரின் வழித் தோன்றல்கள் தான். 

இந்த சிலையைப் பற்றி மற்றொரு கருத்து உள்ளது. மஜபாகித் (Majapahit) பேரரசின் முதல் மன்னர் கீர்த்த ராஜாசா (Rajasa). இவரின் மனைவி காயத்ரி ராஜ பத்தினி (Gayatri Rajapatni). அவரைச் சித்தரிக்கும் சிலையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இந்தோனேசியாவில் இந்து மதம் பன்னெடுங் காலமாகப் பயணித்து வந்து உள்ளது. புத்த மதம் வருவதற்கு முன்னரே அங்கே இந்து மதம் முக்கியமான மதமாக விளங்கி உள்ளது.




இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் 1800 ஆண்டுகளாக இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல பேரரசுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். பல எண்ணற்ற இந்து புத்த ஆலயங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். பல்லாயிரம் பளிங்குச் சிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் சிங்காசரி பிரஜ்ன பரமிதா சிலை.

இந்தோனேசியாவில் இந்தியர்கள் உருவாக்கிய பேரரசுகள் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். உலகம் இருக்கும் வரையிலும் வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் பேராண்மைகள்.

ஒரு பக்கம் உண்மையான வரலாற்றை வாழ்த்தித் துதிக்கின்றார்கள். இன்னொரு பக்கம் அதே வரலாற்றை வரலாற்றை தாழ்த்தி மிதிக்கின்றார்கள். வாழ்த்துவதும் துதிப்பதும் பேராண்மைத் தன்மையின் வரலாறுகள். மிதிப்பதும் சிதைப்பதும் பேராண்மைத் தன்மையின் கோளாறுகள். இன்னும் ஒரு விசயம். 




இந்தோனேசியாவில் பலரின் பெயர்கள் இந்திரா, கிருஷ்ணா, குணவான், சத்தியவான், தர்மவான், குபேரன், சித்தார்த்தா (Sudarto), சூரியா, தேவி, பிரிதிவி, ஸ்ரீ, சிந்தா, ரத்னா, பரமிதா, குமலா, இந்திரா, ராதா, பிரியா, மேகவதி என்று முடியும். பார்த்து இருக்கலாம். கேட்டும் இருக்கலாம். இதைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

ஒருமுறை ஜப்பானிய செய்தியாளர் ஒருவர் கருடா விமானத்தில் தோக்கியோவில் இருந்து பயணிக்கும் போது, இந்திராவதி எனும் விமானப் பணிப்பெண்ணைப் பார்த்து, “நீங்கள் ஏன் இப்படி இந்தியப் பெயர்களை வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.

அதற்கு அவர், “நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது” என்று பதில் சொன்னாராம். நெஞ்சத்தில் சுமை. சன்னமாய்க் கனக்கின்றது.

சான்றுகள்:


1. Ann R. Kinney; Marijke J. Klokke; Lydia Kieven (2003). Worshiping Siva and Buddha: The Temple Art of East Java. University of Hawaii Press.

2. Drake, Earl (2012). Gayatri Rajapatni, Perempuan di Balik Kejayaan Majapahit. Yogyakarta: Ombak.

3. Collectionː Prajnaparamita. National Museum of Indonesia.

4. https://en.wikipedia.org/wiki/Prajnaparamita_of_Java




1 கருத்து:

  1. சீனம் சென்ர போதித்தருமர்!
    https://vetrichezhian9.wordpress.com/செய்திமடல்-பாகம்-38-newsletter-part-38/

    பதிலளிநீக்கு