02 ஜூலை 2020

பரமேஸ்வரா தாயார் சரவர்தானி

தமிழ் மலர் - 02.07.2020

பரமேஸ்வரா என்பவர் யார்? எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே வாழ்ந்தார்? எங்கே இறந்தார்? அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது? 

ஏன் மலாயாவுக்கு வந்தார்? பரமேஸ்வரா மதம் மாறினாரா? பரமேஸ்வராவின் வரலாற்றுப் படிவங்கள் காணாமல் போவது உண்மையா? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கிடைக்காத வரையில் பரமேஸ்வராவின் வரலாறு முழுமை அடையாது. அவரைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுத்து அவரைப் பற்றிய உண்மைகளை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அதுவே மலாயா தமிழர்களின் கடமையாகும்.



இந்தக் கட்டத்தில் பரமேஸ்வராவின் தாயாரைப் பற்றிய தகவல்களும்; தந்தையாரைப் பற்றிய தகவல்களும் நமக்கு கிடைத்து உள்ளன. அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பரமேஸ்வராவின் தந்தையார் பெயர் ராணா மங்களா (Rana Menggala). அசல் பெயர் தமியா ராஜா (Damia Raja). மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja). இந்த ராணா மங்களா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த நான்காவது ராஜா.

பரமேஸ்வராவின் தாயார் பெயர் சரவர்தானி (Sarawardani). 



தமியா ராஜா - சரவர்தானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மூத்த மகன். பிறந்த ஆண்டு 1344. பிறந்த இடம் சிங்கப்பூர் மேரு மலை. இதைக் கென்னிங் குன்று (Fort Canning Hill) என அழைக்கிறார்கள். மலாய் மொழியில் புக்கிட் லாராங்கான் (Bukit Larangan). சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமன் வைத்த பெயர்.

மேரு என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இந்து தொன்மவியல் புராணங்கள்; காப்பிங்களில் குறிப்பிடப்படும் ஒரு மலை ஆகும். மகா மேரு, மந்திர மலை என்றும் இந்த மலை அழைக்கப் படுகிறது.

கடைச் சங்கக் காலத்தில் குமரி ஆறு; பற்றுளி ஆறு ஆகியவை மேரு மலையில் உற்பத்தியான ஆறுகள் என சீனப் பழங்கதைகளில் சொல்லப் படுகின்றன.



இந்தோனேசியாவில் அரசுகளை உருவாக்கிய பல்லவ மன்னர்கள் மேரு எனும் சொல்லை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே போல சிங்கப்பூருக்கு வந்த நீல உத்தமன் அவர் பார்த்த முதல் மலைக்கு மேரு மலை என்று பெயர் வைத்து இருக்கிறார். ரொம்ப வேண்டாம்.

கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் உலக அதிசயம் இருக்கிறதே, அதற்கு மேருமலைக் கோட்டை என்று சூரியவர்மன் பெயர் வைத்து இருக்கிறார். அவரும் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர் தானே.

அந்த வகையில் சிங்கப்பூர் மலைக்கு மேரு மலை என பெயர் வைக்கப் பட்டது. அங்கே தான் நீல உத்தமன் தன் அரண்மனையை முதன்முதலில் கட்டி இருக்கிறார். அங்கே இருந்து தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இடத்தை மாற்றி விட்டார்.



அதன் பிறகு அந்த இடம் அரசப் பரம்பரையினரின் கல்லறைகள் இடமாக மாறி இருக்கிறது.

சிங்கப்பூர் மேரு மலை 14-ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த பண்டைய சிங்கப்பூராவின் மையமாக இருந்து உள்ளது. அரசியல், மதம், வணிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது.

1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்களை விவரித்து இருக்கிறார்.



முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிங்கப்பூர் மேரு மலையின் முக்கியத்துவத்திற்கு சான்றுகள் உள்ளன. 1928-ஆம் ஆண்டில் ஒரு கண்டுபிடிப்பு. அதாவது 14-ஆம் நூற்றாண்டின் ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்களின் ஒரு தற்காலிக சேமிப்புக் கிடங்கைக்  கண்டுபிடித்தார்கள்.

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் தான், சிங்கப்பூர் மேரு மலையில் மனிதர்களின் குடியேற்றம் கைவிடப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. சரி. தமியா ராஜா ராணா மங்களா வரலாற்றுக்கு வருகிறோம்.



தமியா ராஜா ராணா மங்களா மஜபாகித் வம்சாவழியைச் சேர்ந்தவர். தமியா ராஜா - சரவர்தானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மஜபாகித் வம்சாவழியினர் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே பரமேஸ்வராவும் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா. இந்த மகாராணியார் மஜபாகித் அரசின் மூன்றாவது ஆட்சியாளர்.

பரமேஸ்வராவின் வழித்தோன்றலைப் பார்க்க வேண்டும் என்றால் சிங்காசரி; மஜபாகித் அரசுகளின் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மையான விவரங்கள் தெரிய வரும்.

மஜபாகித் அரசு ஜாவாவை ஆட்சி செய்த அரசு. கடைசி இந்து மத அரசு. மஜபாகித் அரசு தோன்றுவதற்கு முன்னர் சிங்காசரி (Singhasari Kingdom) எனும் அரசு இருந்தது. இந்தப் அரசும் கிழக்கு ஜாவாவை ஆட்சி செய்தது. இது இந்து மயமான அரசு. இந்து மதமும் பௌத்த மதமும் கலந்த அரசு. 



சிங்காசரி பேரரசை ஆட்சி செய்த மன்னர்கள்:

1. கென் அரோக் - ராஜசா (Ken Arok 1222 – 1227)

2. அனுசபதி - அனுசநாதா (Anusapati 1227 – 1248)

3. பஞ்சி தோஜெயா (Panji Tohjaya 1248)

4. விஷ்ணுவரதனா நரசிம்ம மூர்த்தி (Vishnuvardhana - Narasimhamurti 1248 – 1268)

5. ஸ்ரீ கீர்த்தநகரா (Kertanegara 1268 – 1292)

மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா காலத்தில் சிங்காசரி அரசு உச்சத்தில் கோலோச்சியது. இருப்பினும் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ஸ்ரீ கீர்த்தநகரா கொல்லப் பட்டார். அவருடைய மருமகன் ராடன் விஜயா, மதுரா தீவுகளுக்குத் தப்பிச் சென்றார். அங்கு இருந்த ஆரியா வீரராஜா (Arya Viraraja) என்பவர் ராடன் விஜயாவுக்கு உதவி செய்தார். 



பின்நாட்களில் கிழக்கு ஜாவா பிரந்தாஸ் சமவெளியில் ராடன் விஜயா ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தார். அந்த அரசின் பெயர் தான் மஜபாகித். இதை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். மீண்டும் சிங்காசரி அரசிற்கு வருகிறேன் 

சிங்காசரி பேரரசின் கடைசி மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா. இவருடைய மகளின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜ பத்தினி (Sri Gayatri Rajapatni). இவரைத் தான் ராடன் விஜயா திருமணம் செய்தார். அந்த வகையில் ராடன் விஜயா, ஸ்ரீ கீர்த்தநகராவின் மருமகன். ராடன் விஜயாவின் மற்றொரு பெயர் நாராரியா சங்கரமவிஜயா (Nararya Sangramawijaya)

இவர்களுக்குத் திரிபுவனா துங்காதேவி (Tribuana Tunggadewi) எனும் மகள் பிறந்தார். இந்தத் திரிபுவனா துங்காதேவி தான் மஜபாகித் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர் (1326-1350).

இவரின் மற்றொரு பெயர் திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி (Tribhuwanno Tunggadewi Jayawishnu Wardhani). இன்னொரு பெயரும் உள்ளது. கீதா ராஜா (Dyah Gitarja).



மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. மஜபாகித் பேரரசை இவர் தனி ஒருவராக ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.

மகாராணியார் திரிபுவனா துங்காதேவி, மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் கீர்த்தவரதனா (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் ஈஸ்வரி (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் சிங்கவரதனா (Singawardana).



ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் ராணா மங்களா (Rana Menggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பரமேஸ்வரா. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்த கதாநாயகர்.

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)

பரமேஸ்வராவின் கொள்ளுத் தாத்தா தான் நீல உத்தமன். சிங்கப்பூரை உருவாக்கியவர். சிங்கப்பூருக்குச் சிங்கம் ஊர் என்று பெயர் வைத்தவர். சரி.



ஆக பரமேஸ்வராவின் தந்தையார் பெயர் ராணா மங்களா (Rana Menggala). அசல் பெயர் தமியா ராஜா (Damia Raja). மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja). ராணா மங்களா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த நான்காவது ராஜா. பரமேஸ்வராவின் தாயார் பெயர் சரவர்தானி (Sarawardani).

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன...
பதினாறும் பாட சுகமானது...

என்று கண்ணதாசன் எழுதிச் சென்றார்.

அவருக்கு முன்னாலேயே பரமேஸ்வர ராகம் எனும் ஒரு ராகம் மலாக்காவில் பூபாளம் பாடி இருக்கிறது. அந்த ராகம் தான் மலாக்காவின் வரலாற்றில் பதினேழாவது ராகமாக ஆனந்த பைரவிகளையும் பாடிக் கொண்டு இருக்கிறது.

ஏழு சுவரங்களில் அழகிய ராகம் சம்பூர்ண ராகம்.
ஆறு சுவரங்களில் அதிசய ராகம் சாடவ ராகம்.
ஐந்து சுவரங்களில் அற்புத ராகம் ஔடவ ராகம்.
நான்கு சுவரங்களில் அபூர்வ ராகம் வக்ர ராகம்.
மூன்று சுவரங்களில் ஆனந்த ராகம் நவநீத ராகம்.

அத்தனை ராகங்களிலும் அப்போதும் இப்போதும் எப்போதும் ஓர் அம்சவர்த்தினி ராகம் உள்ளது. அந்த ராகம் தான் பரமேஸ்வரா ராகம்.

சான்றுகள்:

1. Sarawardani. married Ranamenggala, and had a son, Parameswara who was born in 1344,
(https://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate)

2. Parameswara merupakan cicit (turunan keempat) dari Ratu Tribhuwana Wijayatunggadewi, penguasa Majapahit yang ke 3.
(https://tirto.id/takhta-majapahit-dan-bakti-tribhuwana-tunggadewi-kepada-ibu-cB9k)

3. Urutan silsilahnya adalah sebagai berikut: Pertama, Ratu Tribhuwana Wijayatunggadewi menikah dengan Kertawardhana (anak tertua dari Mahesa Anabrang / Adwayabrahma), memiliki anak perempuan: Iswari.
(https://id.wikipedia.org/wiki/Tribhuwana_Wijayatunggadewi)

4. Kedua, Iswari menikah dengan Singawardana, memiliki anak perempuan: Sarawardani. Ketiga, Sarawardani menikah dengan Ranamenggala (yang kemudian bergelar Shri Rana Wira Kerma), memiliki anak laki laki: Parameswara
(https://ms.wikipedia.org/wiki/Perbincangan:Parameswara)

1 கருத்து:

  1. அற்புதமான வரலாற்று ஆய்வு. உங்கள் தேடல் ஆய்வின் வலியை உணர முடிகிறது. எல்லாவற்றையும் நூல் வடிவில் ஆவணமாக்கினால் பிற்கால தலைமுறைக்கு உதவுமே!

    பதிலளிநீக்கு