தமிழ் மலர் - 23.08.2020
பழங்காலத்து மலாக்காவைப் பழங்காலத்து பரமேஸ்வரா தோற்றுவித்தார். உண்மை. பழங்காலத்து மலாக்காவின் வரலாறு பழங்காலத்து பரமேஸ்வரா காலத்தில் இருந்து தொடங்குகிறது. உண்மை. பழங்காலத்து மலாக்காவின் வரலாற்றில் இருந்து தான் அண்மைய காலத்து மலாயா காலனித்துவ வரலாறும் தொடங்குகிறது. இதுவும் உண்மை.
ஆனால் ஒட்டு மொத்த மலாயாவின் வரலாற்றுச் சுவடுகள், மலாக்கா காலத்தில் இருந்துதான் தொடங்குகிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது பரமேஸ்வராவிற்குப் பின்னர்தான் மலாயா வரலாறு தொடங்குகிறது என்று சொல்லப்படுகிறது. இது ஏற்றுக் கொள்வதற்கு இடம் இல்லை.
தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா; சீனா போன்ற நாடுகளின் கலாச்சார தாக்கங்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. அறிஞர் அஜி சாகா (Aji Saka) என்பவரைப் பற்றி பலருக்கும் தெரியும். இவர்தான் ஜாவா தீவில் முதன்முதலில் கால் பதித்த இந்திய இளவரசர்.
கி.பி 78-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பர்மா, தாய்லாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு இருந்து வியட்நாம், கம்போடியா, மலாயா வழியாக புருணை, போர்னியோ, பாலி, ஜாவாவுக்குச் சென்றவர். இவர் மூலமாகத்தான் ஜாவாவில் ஒரு நாகரிகம் தோன்றியதாக இந்தோனேசியர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள். இந்தோனேசியப் பள்ளிப் பாட நூல்களிலும் அறிஞர் அஜி சாகாவைப் பற்றி எழுதப்படுகிறது.
ஆனால் இந்தப் பக்கம் உள்ள பள்ளிப் பாட நூல்களில் கி.பி.1400-ஆம் ஆண்டில் இருந்துதான் மலாயாவின் வரலாறு எழுதப் படுகிறது. இது ஒரு சரியான வரலாற்றுப் பார்வை அல்ல. இது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. இதுவே என் கருத்தும்கூட.
கற்பனையான பிம்பங்களின் நகர்வுகளைச் சார்ந்து வரலாறுகள் அமைந்து விடக் கூடாது. சத்தியமான விழுமிய நுகர்வுகளைச் சார்ந்து தான் சாத்வீகமான வரலாறுகள் இயங்க வேண்டும். சத்தியமான சாணக்கியங்களைப் பேச வேண்டும்.
ண்மையைச் சொல்கிறேன். மலையூர் மலாயாவின் வரலாறு மலாக்காவில் தொடங்கவில்லை. கெடாவில் தொடங்குகிறது. மலாக்காவை விட கெடாவின் வரலாறு தான் மிக மிகப் பழமையானது. இதுதான் சத்தியமான உண்மை.,
மலாயாவில் கெடாவின் வரலாறுதான் மிகப் பழைமையானது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். மலையூர் எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து தான் மலாயா எனும் பெயரே வந்தது. இதுவும் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள்.
ஆயிரம் கோடி வருடங்கள் ஆனாலும் சரி; வரலாற்று உண்மைகளை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது. மறைத்துப் பேசவும் முடியாது.
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு தெரியாமல் கல்யாணி ராகத்துடன் காம்போதி ராகத்தை இணைப்பதால் கல்யாணி தாழ்ந்து போகாது. கல்யாணி என்றைக்கும் கல்யாணி தான். கௌரி மனோகரி என்றைக்கும் கௌரி மனோகரி தான்.
King Porous |
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சி. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினரின் (USM’s Centre for Global Archaeological Research) ஒரு கண்டுபிடிப்பு.
கெடா பூஜாங் சமவெளியில் சுங்கை பத்து எனும் இடத்தில் 1890 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கலைப் படைப்புகள் (ancient artifacts) கண்டுபிடிப்பு. மலாயா வரலாற்றில் அது ஒரு புதிய பரிமாணம்.
(http://www.freemalaysiatoday.com/category/nation/2011/09/10/kedah-not-malacca-the-oldest-kingdom/)
அதே அந்தப் பூஜாங் சுங்கை பத்து (Sungai Batu) எனும் இடத்தில் அதே 1890 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இரும்பு உருக்கிகளையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர்கள் கண்டுபிடித்தது கி.பி.110-ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மிக மிகப் பழமையான உலோகப் பொருட்கள்.
(COLLINGS, H.D. 1936 Report of an archaeological excavation in Kedah Malay Peninsula, Bulletin Raffles Museum Ser. B 1: 5 - 16.)
(LAMB, A. 1960 Report on the Excavation and Reconstruction of Chandi Bukit Batu Pahat, Central Kedah, Federation Museums Journal N.S.5.)
இந்தக் கண்டுபிடிப்புகள் மலாக்கா வரலாற்றைச் சுத்தமாகப் புரட்டிப் போட்டுப் பின்னுக்குத் தள்ளி விட்டன. ஏன் என்றால் மலாக்காவின் வரலாறு கி.பி.1400-ஆம் ஆண்டு தொடங்குகிறது. அதே சமயத்தில் கெடாவின் வரலாறு கி.பி.110-ஆம் ஆண்டு தொடங்குகிறது.
இந்த இரு வரலாற்றுச் சுவடுகளின் கால இடைவெளியைக் கவனியுங்கள். 1300 ஆண்டுகள். ஆக அந்த வகையில் கெடா வரலாற்றைத் தான் உலக வரலாற்று ஆசிரியர்கள் முன்னிலைப் படுத்துகிறார்கள்.
இதை உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். மறுப்பதினாலும் மறைப்பதினாலும் ஓர் உண்மை தாழ்ந்துவிடப் போவது இல்லை.
வரலாறு என்பது ஒரு சமூகத்தின் தாக்குதல் அல்லது ஒரு சமயத்தின் தாக்கத்தினால் சிதைவு நிலையை அடைந்து விடக்கூடாது. அதனால் ஒரு வரலாற்று மாயை உருவாக்கப் படவும் கூடாது.
மறுபடியும் சொல்கிறேன். ஒட்டுமொத்த மலாயா வரலாற்றின் தொடக்கம் கெடா வரலாற்றில் இருந்து தான் தொடங்குகிறது. முதலில் தொடங்குவது மலாக்கா வரலாறு அல்ல. இதை மலேசிய வரலாற்றுப் பாட நூல் ஆசிரியர்கள் மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே போதுமான சான்றுகளுடன் கெடாவின் வரலாற்றை முன் வைக்கிறேன்.
காலம் காலமாகக் கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. சரி.
ஆனால் அந்த மாறன் மகாவம்சன் என்பவர் மாசிடோனியாவில் (Macedonia) இருந்து வந்தவர் என்று உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அது சரியன்று.
மாறன் மகாவம்சன் என்பவர் மகா அலெக்ஸாண்டரின் பரம்பரையில் இருந்து வந்தவரா? இது எப்படி என்று பார்ப்போம்.
உண்மையில் மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர். மாசிடோனியா எனும் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. எப்படி என்று கதையைக் கேளுங்கள்.
மகா அலெக்ஸாண்டர் (Alexander the Great) கி.மு. 326-இல் இந்தியாவின் மீது படை எடுத்தார். பலருக்கும் தெரிந்த விசயம். அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரசீகத்தின் மீது ஒரு படையெடுத்தார்.
பாரசீகம் என்றால் ஈரான் நாட்டைக் குறிக்கும். ஆரியன் (Land of the Aryans) எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் என்று அந்த நாட்டிற்குப் பெயரும் வந்தது. முன்பு காலத்தில் ஈரானைப் பாரசீகம் என்று அழைத்தார்கள். ஆக ஆரியன் எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் எனும் சொல்லே உருவானது.
ஈரான் நாட்டின் தென் பகுதியில் பெர்சிஸ் (Persis) எனும் சமவெளி உள்ளது. ஈரான் மீது படை எடுத்து வந்த கிரேக்கர்கள் ஈரானைப் பெர்சிஸ் என்று அழைத்தார்கள். காலப் போக்கில் ஈரான் நாடு பெர்சியா (Persia) ஆனது. தமிழர்கள் பார்சீகம் என்று அழைத்தார்கள். 1935-ஆம் ஆண்டு பெர்சியா என்பது ஈரான் ஆனது.
(https://www.britannica.com/place/Persia - The term Persia was used for centuries and originated from a region of southern Iran formerly known as Persis.)
கி.மு. 330-ஆம் ஆண்டுகளில் பாரசீகத்தின் மேற்குப் பகுதியை டாரியஸ் III (King Darius III) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். காவுகமேலா எனும் இடத்தில் (Battle of Gaugamela - 1st October 331 BCE) மகா அலெக்ஸாண்டர் படையுடன் ஒரு பயங்கரமான போர்.
இந்தப் போருக்கு அரபேலா போர் (Battle of Arbela) எனும் மற்றொரு பெயரும் உண்டு. அந்தப் போரில் அரசர் டாரியஸ் தோற்றுப் போனார். மகா அலெக்ஸாண்டருக்கு வெற்றி.
இந்தப் போர் முடிந்ததும் மகா அலெக்ஸாண்டர், ஈரான் நாட்டின் கிழக்குப் பக்கமாய் வந்தார். அப்போது அந்தப் பகுதியை ராஜா கீதா (Raja Kida Hindi of Hindostan) எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசர் ஆட்சி செய்து வந்தார்.
இந்த ராஜா கீதாவிற்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தார். அவருடைய பெயர் இளவரசி ஷார் பெரியா (Shaher Ul Beriah). இந்தக் காலக் கட்டத்தில் இந்து மதம் தான் பிரதான மதம். ஆக ஷார் பெரியா எனும் இளவரசியை மகா அலெக்ஸாண்டர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் தந்தையார் ராஜா கீதாவிற்கு 300,000 தங்க தினார் நாணயங்களை மகா அலெக்ஸாண்டர் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்தத் திருமணத்திற்குப் பின்னர் மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் (King Porus) மன்னரை எதிர்த்துப் போரிட்டார். போரஸ் மன்னரின் துணிச்சலைக் கண்டு அவருக்கே அவருடைய நாட்டைத் திருப்பிக் கொடுத்தார். அது ஒரு தனி வரலாறு.
(https://en.wikipedia.org/wiki/Battle_of_the_Hydaspes)
போர் முடிந்து அலெக்ஸாண்டர் திரும்பிப் போகும் போது இளவரசி ஷார் பெரியாவைப் பாரசீகத்திலேயே விட்டுச் சென்று இருக்கிறார். பின்னர் அவர் ரோமாபுரிக்கு போகிற வழியில் மர்மமாய் இறந்து போனார். அதுவும் தனி ஒரு கதை. தனி ஒரு வரலாறு.
மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியாவிற்கும் பிறந்த குழந்தைகளின் வழிவழி வந்தவர்களில் 11-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் தான் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan).
ஆக மாறன் மகாவம்சன் என்பவர் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. மாசிடோனியாவில் இருந்தும் வரவில்லை. அவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர். பாரசீகத்தின் அப்போதைய பிரதான மதம் மஸ்தியாசனம் அல்லது மத்தியாசனா (Mazdayasna) எனும் மதமாகும்.
(Boyd, James W.; et al. (1979), "Is Zoroastrianism Dualistic or Monotheistic?", Journal of the American Academy of Religion, Vol. XLVII, No. 4, pp. 557–588)
மத்தியாசனா மதம் என்பது சோரோஸ்டிரியம் (Zoroastrianism) எனும் வழிப்பாட்டில் இருந்து தோன்றியது. இந்த மத்தியாசனா மதமும் இந்து மதமும் சம காலத்தில் இருந்த மதங்கள்.
இந்து மதம் சிந்து வெளியில் துரிதமாகப் பரவி வரும் காலத்தில் மத்தியாசனா மதம் பாரசீகத்தில் படர்ந்து பரவி நின்றது. கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி வருகிறேன். மத்தியாசனா மதம் இந்து மதத்திற்குப் பின்னர் தோன்றி இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. சோரோஸ்டிரியம் என்பது ஒரு கிரேக்கச் சொல்.
நாம் இங்கே மதங்களைப் பற்றி விவாதிக்கவில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை. மாறன் மகாவம்சன் என்பவர் எங்கே இருந்து வந்தார். எப்படி கெடாவிற்கு வந்தார் என்பதைப் பற்றித் தான் அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். சரிங்களா.
(https://prezi.com/h5nqop0pj6h5/hinduism-and-zoroastrianism/)
மாறன் மகாவம்சன். இந்தப் பெயரைச் சற்று உற்றுக் கவனியுங்கள். அந்தப் பெயர் ஓர் இந்தியப் பெயராகத் தெரியவில்லையா. மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகும். மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும் சொல்லாகும். மாரன் என்பது ஒரு வடச் சொல். மாறன் என்பது தமிழ்ச் சொல்.
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
எனும் சொற்கள் புறநானூற்றில் சொல்லப் படுகிறது.
(http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=55&file=l1280d10.htm).
புறநானூறு எனும் காப்பியம் இடைச் சங்கக் காலத்தில் தோன்றியது. இந்தக் காலப் பகுதி கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்தது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் சங்கம் அமைத்தனர். தமிழ் வளர்த்தனர். அதனால் சங்க காலம் என பெயர் சூட்டப்பட்டது. சரி. இந்தச் சங்கக் காலத்தில் மாறன் எனும் பெயர் புழக்கத்தில் இருந்தது. தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னனின் தாக்கத்தினால் அப்போது பிறந்த குழந்தைகளுக்கு மாறன் என்று பெயர் சூட்டினார்கள்.
அந்த வகையில் தான் மாறன் மகாவம்சனுக்கும் பெயர் வந்தது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.
(R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 16 (2 (131)): 31–35.)
முன்பு காலத்தில் பாய்மரக் கப்பல்களில், கடல் கடந்து போய் வணிகம் செய்து வந்தார்கள். அந்த வகையில் மாறன் மகாவம்சன் தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வணிகம் செய்ய வந்து இருக்கிறார். பின்னர் அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார்.
பள்ளிப்பாட நூல்களிலும் சரி; உயர்க் கல்விக் கூடங்களிலும் சரி; அறிவியல் அகழாய்வுச் சாலைகளிலும் சரி; உண்மையான வரலாற்றை நேர்மையான முறையில் பதிவு செய்ய வேண்டும். அதுவே தார்மீகப் பொறுப்புகளின் தாரக மந்திரங்கள்.
ஏழு சுவரங்களில் சிந்து பைரவி இனிக்கும். சாருகேசி இசைக்கும். கௌரி மனோகரி மணக்கும். நவநீதம் மயக்கும். ராகங்கள் மாறுவது இல்லை. அதே போல வரலாறும் மாறுவது இல்லை.
கெடாவின் வரலாறு மறைக்கப்படக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு மறைநிலை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. என்ன தான் வரலாற்றை மாற்றிப் போட்டாலும்; எப்படித் தான் திரித்துப் போட்டாலும்; எப்படித் தான் திருத்திப் போட்டாலும் அவற்றின் உள்ளே உறைந்து கிடக்கும் உண்மை உயிர்ப்புகளை மாற்றவே முடியாது.
வரலாற்று நெருடலில் சன்னமாய் நெஞ்சத்தின் எரிச்சல். சற்றே மௌனமாய் உரசிச் செல்கிறது. விடுங்கள். மாறன் மகாவம்சனின் வரலாற்றுப் பதிவுகள் நாளையும் வரும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக