இன்று மலேசியாவின் மெர்டேகா நாள். ஒவ்வோர் ஆண்டும் கோலாகலம். இந்த ஆண்டு கொரோனாவின் குதூகலம். அதனால் எல்லாமே அமைதிக் கோலம்.
பொதுவாக ஒரு நாடு சுதந்திரம் அடைந்த நாளில், அந்த நாடு வளர்ச்சி அடைந்ததைப் பற்றி மீள்பார்வை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எதுவும் சிறப்பாகச் சொல்வதற்கு இல்லை.
இரண்டு வாரத்திற்கு முன்னால் ‘மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும்’ என்று பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் சொல்லி ஒரு பட்டாசைக் கொளுத்திப் போட்டு விட்டார்.
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். மலேசிய அரசியலில் தூவானம் விட்டாலும் தீவானம் விடாது போலும். ஆச்சு பூச்சு என்றால் அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பாவாக மாற்றி விடுவது வழக்கமாகி வருகிறது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிப்பதும் பழக்கமாகி விட்டது.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. காலம் காலமாக நடந்து வரும் காம்போதி ராகத்தின் அரசியல் பல்லவிகள்.
மலேசிய அரசியல் ஜாம்பவான்கள் மத்தியில், புதிதாய்த் தோன்றிய சின்ன ஒரு மின்மினிப் பூச்சியின் சின்ன ஒரு கிளிப் கிளிப். இது போதும். ஒரு வருடத்திற்கு தாராளமாக மன உளைச்சல் கொடுக்கும்.
எந்த ஒரு நாட்டிலும் இனவாதம் மதவாதம் இரண்டும் சேர்ந்து வக்கிரம் பேசுவது நல்லது அல்ல. அந்த நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக கருத இயலாது. அஸ்திவாரமே சரி இல்லாத போது வளர்ச்சி பற்றி பேசுவதில் நியாயம் இல்லை.
நாட்டில் விசுவாசமான மாணவர்களை உருவாக்குவதில் இருந்து தாய்மொழிப் பள்ளிகள் தவறிவிட்டன என்று அந்தத் தலைவர் சொல்லி இருக்கிறார்.
அரசியல் லாபத்திற்காக உளறிக் கொட்டி இருக்கலாம். அப்படித்தான் தெரிகிறது. ஆக தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னவர்களில் இவர் முதல் ஆள் அல்ல. அதே சமயத்தில் இவர் நிச்சயமாக கடைசி ஆளாகவும் இருக்க மாட்டார். இன்னும் வருவார்கள்.
இருப்பினும் நம் பங்கிற்கு ஒரு பதிவு. இந்த நாட்டை இந்த அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கு தங்களால் இயன்றதைச் செய்த அந்த வெள்ளந்திகள்... நினைத்துப் பார்ப்போம். அவர்களின் பங்கு பெரிது. மறந்துவிடக் கூடாது.
ஆயிரம் வந்தாலும் ஆயிரம் போனாலும் அவர்கள் நம் மூதாதையர்கள். அவர்கள் இல்லாமல் நாம் இந்த அளவிற்கு வந்து இருக்க முடியாது. அவர்களுக்கு முதல் மரியாதை செய்வோம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2020
பேஸ்புக் பதிவுகள்
Parthipan Mariappan: Very touching article sir... Nandri Aiyaa.🙏
Muthukrishnan Ipoh: இந்த நேரத்தில் நம் மூதாதையர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்... நன்றிங்க...
Selvi Munisamy: நம் நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள்.ஆனால் நம் இனத்திற்கு இன்னும் சுதந்திரம் அடையவில்லை !! மனம் கனக்கிறது ஐயா.....
Muthukrishnan Ipoh: தாய்மொழிப் பள்ளிகள் எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டன... வேறு என்ன சொல்ல முடியும்...
Selvi Munisamy: நீங்கள் சொன்ன மாதிரியே ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி, கடைசியல நம்ப தமிழ்ப் பள்ளியிலேயே கை வைக்கிறார்கள். நெஞ்சு பொறுக்க வில்லை ஐயா...
Muthukrishnan Ipoh: எதிரி பலகீனமாகி விட்டால் கொட்டக் கொட்டக் குனிவான் என்பது ஒரு பொதுவான எதிர்ப்பார்ப்பு...
Sathya Raman: இந்த நல்ல நாளில் நயமான, நியாயமான கருத்துகளைச் சொல்லி பதிவான தகவலுக்கு நன்றிங்க சார்.
இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களாக இருந்தவர்கள் நமது முன்னோர்கள். அவர்களின் உழைப்பதை, சிந்திய உதிரத்தை இன்று உதாசீனம் செய்யும் நன்றி கெட்டவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் நம் மனத்தை, தன்மானத்தை உறுத்தினாலும் நம் இன ஒற்றுமையால் மட்டுமே அத்தகைய அநீதிகளை அப்புறப் படுத்த முடியும்.
தாய் மொழிப் பள்ளிகளை மூடுவதிலே குறியாகி இருக்கும் மூடர்களின் முடிவை நாம் பார்த்துக் கொண்டு பாராமுகமாய் இருக்க மாட்டோம் என்று அந்த கபோதிகளுக்கும் கண்டிப்பாக தெரியும்.
சொந்த மொழியே இல்லாதவர்களுக்கு மற்ற இனத்தவரின் தாய் மொழி தாகத்தின் தாக்கம் உணர தகுதி அற்றவர்களே. இந்த நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால் இன்னமும் இனவெறியும் மதவெறியும் சிறை பட்டேதான் கிடக்கிறது வன்மங்களும், வக்கிரமும் மனதில் இருந்து தெளியாத வரை, தேறாத வரை சுதந்திரம் வெறும் சுமையே...
Muthukrishnan Ipoh: பல்லினம் சார்ந்த நாட்டில் இனவாதம் மதவாதம் என்பது பேராண்மை வாதங்கள். அப்படிப்பட்ட சுயவாதங்கள் காலப் போக்கில் ஒரு நாட்டின் நல்லிணக்கத்தைச் செல்லரித்து விடும். சிறுபான்மை இனத்தவர் அழுது புலம்பலாம். அரற்றலாம். ஆர்ப்பரிக்கலாம்.
ஆனால் பேரினத்தை எதிர்த்துப் பேர் போட முடியாது என்பது அங்கே தொக்கி நிற்கும் ஒரு வக்கிரத்தன்மை. இது உலகம் முழுமையும் காணப்படும் உலகளாவிய வக்கர அரசியல் நகர்வுகளில் ஒன்றாகும்.
இந்தப் பக்கம் கொஞ்சம் பரவாயில்லை. சமாளிக்க முடிகின்றது. சில நாடுகளில் சிறுபான்மை இனத்தவர் வேர் அறுக்கப் படுகின்றனர். எடுத்துக்காட்டாக ரோகிங்யா இனத்தவர்.
அடுத்து... ஓர் இனத்திற்கு வலுவான வரலாறு இல்லாத போது அந்த இனத்தையும் குறை சொல்ல முடியாது. இல்லாத போது என்ன செய்வதாம். இல்லாததற்கு வண்ணம் பூசி வரலாறு பேசும் போது அமைதி காப்பதே சிறப்பு. ஆனால் சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படை உரிமைகளில் நெருடல்கள் ஏற்படும் போது தான் எதிர்ப்புகள் தோன்றும்.
தங்களின் தெளிவான பதில் பதிவு சிறப்பாக உள்ளது. உள்ளத்தின் சாரல்களில் உணர்வுகள் கொப்பளிக்கின்றன. நன்றிங்க சகோதரி.
Parameswari Doraisamy: வணக்கம் ஐயா... என் மனதில் தோன்றிய எண்ணங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி. இனவாதம் மதவாதம் தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் தேசிய தினம் கொண்டாடுவது அவசியமா என்று தோன்றுகிறது ஐயா...
Muthukrishnan Ipoh: இந்த ஆண்டு தேசிய தினம் கொண்டாடப்படவில்லை. அதற்குத் தலையாய காரணம் கொரோனா பரவல். அதைத் தவிர்க்கும் நோக்கத்தில் அணிவகுப்புகள்; மற்ற மற்ற கொண்டாட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு உள்ளன.
ஒரு நாட்டின் விடுதலை; ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அந்த நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாங்கிய ஓர் உரிமைப் பத்திரம். இந்த நாட்டைப் பொறுத்த வரையில் மூன்று இனத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து கையெழுத்துப் போட்டு வாங்கி இருக்கிறார்கள்.
இன வாதம் மதவாதம் தலைவிரித்து ஆடினாலும் ஒரு நாட்டின் தேசிய தினம் என்பதைத் தவிர்க்க முடியாது. அத்தியாவசியமானது. அவசியம் என்பதே என் கருத்து.
Parameswari Doraisamy >>> Muthukrishnan Ipoh: வணக்கம் ஐயா... சுயநலத்துக்காக வேசம் போட்டு ஏமாற்றும் பேர்வழிகள் பார்த்து என் மனம் கசந்து போய்விட்டது. இவ்வேளையில் உங்க கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். எனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டேன். நன்றி.
Maha Lingam: நன்றி... இவர்களும் எனது இரத்த தொடர்புடைய முன்னோர்களே... எனது இனம்... நாம் தமிழர்... நாமே தமிழர்...
Muthukrishnan Ipoh: ஆயிரம் புதிய உறவுகள் வந்தாலும் ஆரம்பத்தில் உருவாக்கி விட்டவர்களை நாம் மறக்கவே கூடாது... மறந்தால் மனித இனத்தில் அடையாளம் தெரியாதவர்கள் படியலில் சேர்க்கப் படலாம்... நன்றிங்க ஐயா...
Vimal Sandanam சிலர் இப்படித் தான் சில நேரங்களில் கூவுவார்கள் ஐயா. என்ன செய்வது? உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.
Muthukrishnan Ipoh: கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் எனும் உறவுகள்... இந்தியர் எனும் உறவு முறை விட்டுப் போவது இல்லை... தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க...
KR Batumalai Robert: மிகவும் அருமை அண்ணன்.
Muthukrishnan Ipoh: நன்றிங்க வாழ்த்துகள்...
Mageswary Muthiah
Muthukrishnan Ipoh: அருமை... அருமை... கண் பட்டுவிடப் போகிறது...
Sara Rajah: நம் இனத்திற்கு இன்னும் சுதந்திரம் அடையவில்லையே.
Muthukrishnan Ipoh: சுதந்திரம் கிடைத்தும் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை...
Ramala Pillai: 🌹💯👌🌹
Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்...
Yogavin Yogavins: மிகவும் அருமை
Muthukrishnan Ipoh: நன்றிங்க... வாழ்த்துகள்...
Kody Sivasubramaniam: மழை பொழியும் போதெல்லாம் தவளை எப்படி கத்துகிறதோ... அதே மாதிரி தான் அரசியல் மழை அடிக்கும் பொழுதும் இவர்களும்... எப்படி வேண்டுமானலும் கூவிக் கொள்ளட்டும் ....
நம் பள்ளிகள் மீது கை வைத்து விடுவார்களா... அல்லது உங்களை போன்றவர்கள் தான் விட்டு விடுவீர்களா... ஒரு காலும் நம் தலைவர்களும் விட மாட்டார்கள் என்று நம்பலாம். தமிழோடு நாம்... 🙏
Muthukrishnan Ipoh: 1956-ஆம் ஆண்டு மலாயா கல்விக் கொள்கைக்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை ரசாக் திட்டம். இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம்.
மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.
1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனியுங்கள்.
சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி என்பது 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது. சரிங்களா.
ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன.
முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).
இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).
இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையை சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். இரு தரப்பிலும் இணக்கச் சுணக்கங்கள். அதைச் சரி செய்யவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.
சுருக்கமாகச் சொல்லப் போனால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம் ஆகும்.
ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட வேண்டும்.
இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாகவும் இருந்து வருகிறது
எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.
ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது.
தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். சரி. இந்த ரசாக் அறிக்கையில் ஓர் இறுதி குறிப்பு உள்ளது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
ரசாக் அறிக்கை 1956-இன் பரிந்துரையில் சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்பது தான் இறுதி குறிப்பு ஆகும். இதில் ஒளிவு மறைவு தேவை இல்லை.
ரசாக் அறிக்கையை முழுமையாகப் படித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். இறுதி குறிப்பு என்ன சொல்கிறது என்பதும் தெரிய வரும்.
R Muthusamy Rajalingam: விடுதலை நாளாம்!!!
கதிரவன் மட்டும்
வந்து போகிறான்....
காரிருளில் என்
நேச தேசம்.
சனநாயகத்திற்க்கு
வாய்க்கரிசி...
பணநாயகத்திற்க்கு
வக்கனை அரிசி...
இன்று விடுதலை நாளாம்!!!
மீண்டும் கதிரவன்...
விடுதலை கோரி
காரிருள்.
இரா முத்து
Muthukrishnan Ipoh: கருத்துகள் சொல்ல இயலவில்லை ஐயா...
Jaya Brakash: அனைவருக்கும் இனிய 63 வது மலேசிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் அன்புடன் மூ. ஜெய பிரகாஷ் குடும்பத்தினர்
Muthukrishnan Ipoh: தங்களுக்கும் தேசிய தின வாழ்த்துகள்...
Jaya Brakash: வணக்கம் ஐயா...நான் உங்கள் முன்னாள் மாணவன் sir. SRJK (T) TELUK MERBAU SEPANG சுங்கை PELEK SELANGIR
Muthukrishnan Ipoh: ஜெயபிரகாஷ்... நினைவு வருகிறது. எப்படி தம்பி இருக்கிறீர்கள்... நலமாகப் பயணிக்க வாழ்த்துகிறேன்... குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்...
Kesavan Selvaraj: இனிய 63 வது மலேசிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு ஒரு ஆபத்து என்றல் மீண்டும் ஒரு மொழி போர் செய்தாக வேண்டும்!!! பொறுத்திருந்து பார்ப்போம்!
Muthukrishnan Ipoh: முன்பு 48 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி ஒரு பெரிய சர்ச்சையே ஏற்பட்டது.
சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். 1971-ஆம் ஆண்டு. அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.
(Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)
பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். சிக்கிக் கொண்டார். 1978 அக்டோபர் 11-ஆம் தேதி. அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.
நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.
(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);
மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.
1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார். சரி.
அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.
அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இந்த மாதிரி அடிக்கடி பிசுபிசுப்புகள்.
Kody Sivasubramaniam: ஒரே தேசியம், ஒரே நாடு. ஒரே மூசசு
Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்...
Kanna Kannan:
Srivali Seeridaram: Arumai ayya
Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக