21 ஆகஸ்ட் 2020

பரமேஸ்வரா காலத்து தங்க ஆபரணங்கள்

1926-ஆம் ஆண்டு. சிங்கப்பூர் கென்னிங் மலையின் உச்சியில் ஒரு நீர் தேக்கம் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டினார்கள். சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அதிசயமான தங்க ஆபரணங்கள்; அபூர்வமான நவரத்தின ஆபரணங்கள். அழகு அழகான காதணிகள்; கால் கொலுசுகள்.

அனைத்துமே 14-ஆம் நூற்றாண்டின் கலைநய எழில் வடிவங்கள். இந்திய ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்கள். அந்த நகைகள் 700 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டது.

தங்க நகைகளில் ஒளி வீசும் மோதிரங்கள்; பளிச்சிடும் காதணிகள். உடைகள் மீது பயன்படுத்தப்படும் தங்கச் சங்கிலிகள். சிறிய இரத்தினங்களைக் கொண்ட வளையல்கள். கால் கொலுசுகள். சீனா நாட்டுப் பீங்கான் களையங்கள், மண் பாண்டங்கள் மற்றும் அழகிய கண்ணாடித் துண்டுகள்.

மிக மிக அழகான நகைகள். அவற்றில் ஒரு நகை, காளி துர்கா தேவியின் தலை வடிவத்தைக் கொண்ட ஆயுதச் சங்கிலி. பொதுவாக அத்தகைய சிற்பக் கலை ஆபரணங்களைச் சுமத்திரா; ஜாவா தீவுகளில் தோண்டி எடுத்து இருக்கிறார்கள்.

ஜாவாவில் காளி தேவியை காலா என்று அழைக்கிறார்கள். இந்தியர்கள் பனஸ்பதி அல்லது கீர்த்திமுகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.

8-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையில் ஜாவாவில் நிறைய இந்து கோயில்கள்; ஜாவானிய கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றின் நுழைவாயிலில் ஒரு பாதுகாப்புச் சின்னமாக காலா தெய்வம் வைக்கப்பட்டு இருக்கும்.

(The two rings set are probably earrings, with diamonds, bar-and-socket joints and wire hinges. The plaque of repoussé work depicting the Javanese kala (also known as banaspati and kirthimukha) has flexible chains. The kala motif is a protective symbol found at the entrance of Hindu and Javanese temples dating from the 8th to 14th centuries.)

அதன் பின்னர் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் கென்னிங் மலையின் (Fort Canning Hill) ரகசியங்களைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கென்னிங் மலையின் உச்சியிலும் அதன் சரிவுப் பகுதிகளிலும் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் ஆய்வுகள் செய்தது.

ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பெரிய பெரிய ஆச்சரியத்தை அளித்தன. அந்த ஆய்வுகள் சிங்கப்பூர் கென்னிங் மலை உச்சியில் ஓர் அரண்மனை இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஓர் அரசப் பரம்பரையினர் வாழ்ந்ததற்கான தடயங்களையும் உறுதி செய்தன. ஐந்து சந்ததிகளைச் சார்ந்த அரசர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளையும் முன் வைத்தன. வேறு என்னங்க சொல்ல முடியும்.

(Records indicate that this may have been the home of a Palembang prince named Parameswara, who fled Temasek (Singapore) after a Javanese attack.)

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.

அந்த நேரத்தில் தான், சிங்கப்பூர் மேரு மலையில் (சிங்கப்பூர் கென்னிங் மலை) மனிதர்களின் குடியேற்றம் கைவிடப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

அந்தப் புலம்பெயர்வு காலத்தில் தான் அந்த நகைகளையும் அங்கேயே விட்டுச் சென்று இருக்கிறார்கள். இந்த நகைகள் தான் பரமேஸ்வரா சிங்கப்பூரை ஆட்சி செய்த வரலாற்றை உறுதி படுத்துகின்றன.

1926-ஆம் ஆண்டில் அங்கே நீர்த்தேக்கக் கட்டுமானம் (Fort Canning Service Reservoir) தொடங்கியது. 1929-ஆம் ஆண்டில் நிறைவு அடைந்தது. அப்போது தான் பரமேஸ்வரா அல்லது அவர் சார்ந்த மூதாதையர்களின் ஆபரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்தக் கென்னிங் மலையில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப் பட்டது. 14-ஆம் நூற்றாண்டின் சிங்கப்பூரின் கடைசி ஆட்சியாளராக இருந்தவர் பரமேஸ்வரா.  அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான இடமாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

இருந்தாலும் அந்தக் கல்லறை பரமேஸ்வராவின் கல்லறையாக இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. என்னுடைய கருத்தும் அதுவே.

ஏன் என்றால் பரமேஸ்வரா மலாக்காவில் இறந்து போனார். போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். வாய்ப்புகள் அதிகம். கென்னிங் மலையில் அடக்கம் செய்யப் பட்டதற்கான எந்த ஆதாரமும் இது வரையிலும் கிடைக்கவில்லை.

மலாக்காவில் இறந்து போனவரின் உடலைச் சிங்கப்பூர் கென்னிங் மலைக்கு கொண்டு வந்து இருப்பார்களா? அந்தக் காலத்தில் மலாக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு ஓர் உடலைச் சுமந்து வர 20 நாட்கள் பிடித்து இருக்கலாம். சாலை வசதிகளும் இல்லை. எல்லாமே காட்டுப் பாதைகள். ஒற்றையடிப் பாதைகள்.

ஆகவே கென்னிங் மலையில் உள்ள கல்லறைக்கும் பரமேஸ்வராவுக்கும் எவ்வாறு தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பரமேஸ்வரா என்பவர் தான் சிங்கப்பூரைக் கடைசியாக ஆட்சி செய்தவர். அவர் தான் சிங்கப்பூரின் கடைசி ராஜா. அவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த முதல் மன்னர். வரலாறு என்றைக்கும் பொய் பேசாது என்று பரமேஸ்வரா ராகம் என்றைக்கும் பூபாளம் பாடிக் கொண்டு இருக்கும்.

(இந்தக் கட்டுரை தமிழ் மலர் 13.07.2020 நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது)

சான்றுகள்:

1. Archaeological research at Fort Canning started only in 1984, and evidence from these research efforts indicate that the hill has been inhabited on and off since the 14th century.
https://www.roots.sg/Content/Places/surveyed-sites/Archaeological-Excavation-Site-at-Fort-Canning-Park

2.  The artefacts found there suggest that the site was used for craftsmen’s activities such as glass and gold working in the 14th century.
https://eresources.nlb.gov.sg/history/events/2ebfebad-a4d5-4bbb-bf43-c7db6e30eb7d

3. History of the Object: These were part of a cache of gold ornaments discovered at Fort Canning Hill in Singapore, by labourers excavating for a reservoir in 1928. Measurements: Rings: Internal diameter 0.9cm, External diameter 1.95cm. Where it was made: Indonesia; Java. Time period: AD 14th century - AD 14th century. Owner: National Museum of Singapore.
http://masterpieces.asemus.museum/masterpiece/detail.nhn?objectId=10825

4. Kala Armlet and Earrings - Majapahit empire had political and cultural influence on Singapura in the 14th century. Circa 14th century, Singapore. https://www.bicentennial.sg/emporium/kala-armlet-and-earrings/

5. Ban Zu or Banzu (Chinese: 班卒; pinyin: Bānzú; Wade–Giles: Pan-tsu; Malay: Pancur) was a port settlement believed to have thrived in Singapore during the 14th century. It was mentioned by the Chinese traveller Wang Dayuan in his work Daoyi Zhilüe as the two settlements that made up Temasek. It may have been abandoned before 1400 after an attack by either the Siamese or the Majapahit. - https://en.wikipedia.org/wiki/Ban_Zu

6. R.O. Winstedt (November 1928). "Gold Ornaments Dug Up at Fort Canning, Singapore'". J.M.B.R.A.S. [Journal of the Malayan Branch of the Royal Asiatic Society]. 6 (4): 1–4.

7. C.M. Turnbull (30 October 2009). A History of Modern Singapore, 1819–2005. NUS Press. pp. 21–22. ISBN 978-9971694302.

8. Archaeology and its Role in the Construction of Singapore History - https://www.academia.edu/11893806/Archaeology_and_its_Role_in_the_Construction_of_Singapore_History

9. Journal Of The Malayan Branch The Royal Asiatic Society Vol-vi (1928) - https://archive.org/stream/in.ernet.dli.2015.7737

10. Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 83–84.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக