தமிழ் மலர் - 26.08.2020
தாய்லாந்தின் வரலாற்றில் பற்பல பேரரசுகள். பற்பல சிற்றரசுகள். பற்பல மன்னராட்சிகள். இந்து மதமும் புத்த மதமும் கலந்து மேள தாளங்கள் வாசித்த இனிதான ஆளுமைகள். அவற்றில் ஒன்றுதான் துவாராவதி பேரரசு. காலத்தின் கோலத்தால் கரைந்து போன ஓர் அழகிய பேரரசு. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சிக் கலையில் அதிசயங்கள் பார்த்த அற்புதமான ஒரு பேரரசு.
இந்தியா எங்கே இருக்கிறது. பர்மா எங்கே இருக்கிறது. இந்த இரு நாடுகளின் கலாசாரங்களும் ஒன்று சேர்ந்து எங்கோ ஒரு நாட்டில் ஒரு பெரிய கலவை கலாசாரத்தையே உருவாக்கி இருக்கின்றன. அப்படியே ஒரு பெரிய பேரரசையும் உருவாக்கி இருக்கின்றன. கேட்கும் போது மலைப்பு. கேட்ட பின்னர் திகைப்பு.
துவாரவதி என்றால் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். துவாரவதிக்கு மற்றொரு பெயர் துவாரகை. மகாபாரதத்தில் விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரத்தின் பெயரும் துவாரகைதான்.
துவாராவதி பேரரசு போன்று இந்தோனேசியாவிலும் எண்ணற்ற இந்தியப் பேரரசுகள். கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்டன. பெயர்கள் வேண்டாமே. நீண்ட ஒரு பட்டியல் வரும். பார்த்ததும் கேட்டதும் நெஞ்சு வலிக்கும்.
அதே போல கம்போடியா; லாவோஸ்; வியட்நாம்; பர்மா; தாய்லாந்து போன்ற நாடுகளிலும் எத்தனை எத்தனையோ இந்திய அரசுகள். முகவரிகளைத் தொலைத்து விட்டன. இன்னும் ’அட்ரஸ்’ அடையாளங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றன. கிடைத்தபாடு இல்லை.
ஒரு சில நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இருப்பதை இல்லாமல் செய்வது; அப்புறம் இல்லாமல் இருப்பதை இருப்பதாகச் செய்வது. ஆநிரை மீட்டிய அசகாய ஆய கலை போலும். அதுவே குமரிக் கண்டத்தில் அல்வா கிண்டி சாதனை செய்வது போலும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பரிந்துரை செய்யலாம் போலும்.
துவாராவதி பேரரசு (Dvaravati Kingdom) என்பது 6-ஆம் - 11-ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்தில் செழித்த வளர்ந்த ஒரு பண்டைய இராச்சியம். தவிர அதுவே தாய்லாந்தில் நிறுவப்பட்ட முதல் மோன் இராச்சியம் (Mon Kingdom) ஆகும்.
இந்திய கலாச்சாரத்தின் தலைவாசலாக அமைந்து கோலோச்சிய இராச்சியம். தாய்லாந்தில் இந்திய கலாசாரத் தாக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னோடியாக அமைந்த இராச்சியம் என்றுகூட சொல்லலாம்.
அந்தப் பேரரசின் தாக்கங்களை இன்றுகூட தாய்லாந்தில் பார்க்கலாம். அங்குள்ள பெண்கள் பலரின் உடல் தோற்றம்; உடல் அமைப்பு; உடல் நளினம்; உடல் மொழி; இந்தியப் பாரம்பரியப் பெண்களைப் போலவே நயனங்கள் பல பேசும்.
அவர்களின் ஆடை ஆபரணங்களில்கூட இந்திய மிதுனங்கள் இலக்கியமாய் இலக்கணங்கள் பேசும். இந்தியப் பாரம்பரியத்தின் பின்புலத் துருவங்களாய் அவர்கள் பயணித்துக் கொண்டு இருப்பதையும் நன்றாகவே உணர முடியும்.
இது வார்த்தை ஜாலம் அல்ல. சுய புலம்பலும் அல்ல. உண்மையின் அடிவானத்தில் தொட்டுப் பார்க்கும் தரிசனங்கள். போய்ப் பாருங்கள். தெரியும்.
தாய்லாந்தின் தலையாய நதி மீனாம் சாவ் பிராயா (Mae Nam Chao Phraya). 225 மைல் நீளம். இந்த நதியின் பள்ளத்தாக்கில் தான் துவாராவதி பேரரசு அமைந்து இருந்தது. இந்த நதியின் படுகைகளில் பல இடங்களில் துவாராவதி பேரரசு காலத்தில் செதுக்கப்ப்பட்ட கற்சிலைகளும்; கற்படிவங்களும்; கற்படிமங்களும் கிடைத்து உள்ளன.
அதையும் தாண்டிய நிலையில் துவாராவதி பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை எல்லாம் ஒவ்வொன்றாய் மீட்டு எடுத்து வருகிறார்கள். சின்ன பெரிய கோயில்கள். அவற்றைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்.
தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறார்கள். கிடைத்த பண்டைய பொருள்களை எல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள். அந்த வகையில் வரலாற்றுக்கு மரியாதை கொடுத்து மாலை போட்டு ஆரத்தி எடுக்கிறார்கள். சில நாடுகளில் அப்படியா செய்கிறார்கள். இருப்பதை எல்லாம் அழிக்க அல்லவா பார்க்கிறார்கள்.
சில இடங்களில் இல்லாத வரலாற்றை இருப்பதாகச் சொல்லி நிலாவிற்கே கயிறு திரித்துக் கொண்டு இருக்கிறார்கள். விடுங்கள். அரைத்தது போதும்.
மோன் இராச்சியம் என்று சொல்லி இருக்கிறேன். இதில் மோன் என்றால் என்ன என்று கேட்கலாம். இன்றைய மியன்மார் முந்தைய காலத்தில் பர்மா. இந்தப் பர்மாவில் இருந்து குடியேறியவர்கள் தான் மோன் மக்கள்.
மியன்மாரில் மோன் எனும் பெயரில் ஒரு மாநிலம் உள்ளது. பாகோ எனும் இன்னொரு மாநிலமும் உள்ளது. இந்த இரு மாநிலங்களுக்கு மத்தியில் இராவடி நதி (Irrawaddy) ஓடுகிறது. அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் தான் மோன் பூர்வீக மக்கள். தென்கிழக்கு ஆசியாவில் தேரவாத புத்தமதம் (Theravada Buddhism) பரவுவதற்கு மூலகர்த்தாக்களாக இருந்தவர்கள்.
Murphy, Stephen A. (October 2016). "The case for proto-Dvaravati: A review of the art historical and archaeological evidence". Journal of Southeast Asian Studies. 47 (3): 366–392.
இவர்களிடம் எப்படி இந்தியத் தாக்கங்கள் வந்தன என்பது பெரிய ஒரு புதிராக இருக்கிறது. ஆனால் இவர்கள் கம்போடியா நாட்டில் இருந்து மீகோங் ஆற்று வழியாக தாய்லாந்திற்குள் வந்து இருக்கிறார்கள். துவாராவதி பேரரசைத் தோற்றுவித்து இருக்கிறார்கள். ஆய்வுகள் மூலமாகத் தெரிய வருகிறது. சரி.
ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கம்போடியாவில் இந்தியர்கள் குடியேறி இருக்கிறார்கள். சின்னச் சின்ன அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். சாம்பா (Champa); பூனான் (Funan); சென்லா (Chenla); ஸ்ரீ கோட்டபுரம் (Sri Gotapura); கெமர் (Khmer) போன்ற அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த அரசுகளில் பூனான் பேரரசு (Funan kingdom), முதலாம் நூற்றாண்டு (1st century CE) கம்போடியா, வியட்நாம் நாடுகளில் உருவானது.
சென்லா பேரரசு (Chenla kingdom), முதலாம் நூற்றாண்டு லாவோஸ், கம்போடியா நாடுகளில் உருவானது.
சாம்பா பேரரசு (Champa kingdom), இரண்டாம் நூற்றாண்டு லாவோஸ் (Laos) நாட்டில் உருவானது.
ஆனால் துவாராவதி பேரரசு, 6-ஆம் - 11-ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்தில் உருவான பேரரசு. நிறைய கால இடைவெளி. 400 ஆண்டுகள் இடைவெளி.
இந்தத் துவாராவதி பேரரசு உருவான பின்னர்தான் கம்போடியாவில் கெமர் பேரரசு உருவானது. அதை உருவாக்கியவர் ஜெயவர்மன் (King Jayavarman II). உருவாக்கம் பெற்ற ஆண்டு கி.பி. 802. நினைவில் கொள்வோம்.
துவாராவதி பேரரசில் எப்படி இந்தியத் தாக்கங்கள் ஏற்பட்டன? இறுதிக் கட்டத்தில் எப்படி இந்தப் பேரரசு புத்த மயமானது? என்னைக் கேட்டால் இரு பதில்கள் உள்ளன.
பூனான் பேரரசு, சாம்பா பேரரசு, சென்லா பேரரசு ஆகிய மூன்று பேரரசுகளின் இந்திய மயத் தாக்கங்களினால் துவாராவதி பேரரசிலும் இந்தியத் தாக்கங்கள் ஊடுருவி இருக்கலாம். இந்தியத் தாக்கங்கள் நன்கு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்த போது புத்த மதத்தின் வருகை. அதனால் இந்தியக் கலாசாரத் தாக்கங்கள் நலிந்து போய் இருக்கலாம்.
துவாராவதி தனிமைப்படுத்தப் பட்ட நிலையில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்து உள்ளது. சம காலத்தில் மியன்மார் நாட்டில் சில மோன் ஆளுமைகளும் இருந்தன. வடக்கு தாய்லாந்திலும் சில ஆளுமைகள் இருந்தன. அவற்றின் மீது துவாராவதி பேரரசு வலுவான அரசியல் செல்வாக்கைச் செலுத்தவில்லை. அடித்துப் பிடித்து வளைத்துப் போடும் இட்லர் இடி அமீன் தன்மை இல்லை போலும்.
புவியியல் காரணமாகவும் இருக்கலாம். ஏன் என்றால் துவாராவதி பேரரசைச் சுற்றிலும் மலைப் பிரதேசங்கள். அதனால் தனிமைப்படுத்தப் பட்ட நிலை. இருப்பினும் ஒரு காலக் கட்டத்தில் இந்திய கலாச்சாரப் பரவலின் மையமாகத் துவாராவதி பேரரசு விளங்கி இருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன்.
புத்த மதம் வராமல் இருந்து இருந்தால் துவாராவதி பேரரசு கடைசி வரையில் ஓர் இந்தியப் பேரரசாக இருந்து இருக்கலாம். இது ஒரு கணிப்பு தான்.
ஆனாலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தாய்லாந்தில் ஓர் இந்தியப் பேரரசு கோலோச்சி வரலாறு படைத்து இருக்கிறதே. பெருமைப்பட வேண்டிய விசயம். சரி. துவாராவதி பேரரசின் வரலாற்றைப் பார்ப்போம்.
முன்பு காலத்தில் துவாராவதி பேரரசின் தலைநகரம் நக்கோன் பாத்தோம் (Nakhon Pathom). இப்போது நக்கோன் பாத்தோம் எனும் மாவட்டத்தின் தலைநகரம். பாங்காக் நகருக்கு மேற்கே 57 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்குதான் பிக்குனி எனும் புத்த பெண் துறவிகளுக்கான மடாலயம் உள்ளது. அதன் பெயர் வாட் பாடல் தம்மகன்லயானி (Wat Song Thammakanlayani). தாய்லாந்தில் பிக்குனிகளுக்கான ஒரே கோயில். வெளிநாட்டில் இருந்தும் பெண் துறவிகள் இங்கு வந்து துறவறம் மேற்கொள்கிறார்கள்.
அடுத்து ஒரு முக்கியமான தகவல். துவாராவதி எனும் பெயரில் ஓர் அரசு தாய்லாந்தில் இருந்தது என்பது பல நூற்றாண்டுக் காலமாக வெளியுலகத்திற்குத் தெரியாமலேயே இருந்தது.
1964-ஆம் ஆண்டில், தம்மகன்லயானி கோயிலுக்கு அருகில் ஸ்ரீ துவாராவதி எனும் சொற்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்தார்கள். வருடத்தைக் கவனியுங்கள். ஒரு 56 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
அதன் பின்னர் தீவிரமான அகழ்வாராய்ச்சிகள். உலகமே அதிசயித்துப் போனது. இப்படி ஓர் இந்து பேரரசு தாய்லாந்தில் இருந்து இருக்கிறதே என்று மலைத்துப் போனார்கள். தாய்லாந்து மக்களுக்கும் அதிர்ச்சி. ஆஸ்திரேலியா; பிரிட்டிஷ்; பிரெஞ்சு ஆய்வாளர்கள் நிறைய பேர் வந்து குவிந்து விட்டார்கள். கடந்த 20 ஆண்டு காலமாக ஆய்வுகள் செய்து வருகிறார்கள். ஆய்வுச் சோதனைப் பணிகள் இன்றும் தொடர்கின்றன.
இப்போது அங்கே இருந்து பற்பல இரகசியங்கள் சன்னம் சன்னமாய்க் கசிகின்றன. இடையில் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலுங்கான் (Maha Vajiralongkorn) அவர்களும் அந்த இடத்திற்கு வருகை புரிந்து இருக்கிறார்.
நாணயங்களின் கண்டுபிடிப்பு அங்கு வர்த்தகம் நடைபெற்று இருப்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் துவாராவதி பேரரசு நல்ல ஒரு பொருளாதார கட்டமைப்பில் புகழ் பெற்று இருந்து இருக்கலாம். இந்தியாவுடன் நீண்ட காலம் வர்த்தக கலாச்சார உறவுகளும் இருந்து இருக்கலாம்.
துவாரவதி பேரரசில் பர்மிய இந்திய கலாச்சாரத்தின் கலவைகள் இருந்தன. இருந்தாலும் புத்த மதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்து இருக்கிரார்கள்.
அசோக மன்னரின் புத்த யாத்ரீகர்கள் புத்த மதத்தைத் தென்கிழக்கு ஆசியாவிற்குள் கொண்டு வந்தார்கள். தெரிந்த விசயம். இருந்தாலும் அந்தக் காலக் கட்டத்தில் துவாரவதி பேரரசு, தென்கிழக்கு ஆசியாவில் புத்த மதத்தின் மையமாக இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
கி.பி. 607-ஆம் ஆண்டில் தாய்லாந்துக்குப் பயணம் செய்த சீன யாத்ரீகர்கள் அங்கே டோ-லோ-போடி (To-lo-poti) என்கிற ஓர் இராச்சியம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டது இந்தத் துவாராவதி பேரரசாக இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
துவாரவதி பேரரசில் பயன்படுத்தப்பட்ட அரச அடுப்புகளில் சில மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
சூர்ய விக்ரமா (Suryavikrama - 673-688);
ஹரி விக்ரமா (Harivikrama - 688-695);
சிகாவிக்ரமா (Sihavikrama - 695-718)
எனும் பெயர்கள் அந்த அடுப்புகளின் ஓரங்களில் செதுக்கப்பட்டு உள்ளன.
கி.பி.937-ஆம் ஆண்டில் ஒரு கெமர் கல்வெட்டு கிடைத்தது. அதில் துவாராவதி பேரரசில் இருந்த ஒரு சிற்றரசின் பெயர் சனசபுரா சிற்றரசு (Chanasapura) என்று எழுதப்பட்டு இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் சனசபுரா சிற்றரசின் இளவரசர்களின் பெயர்கள் வரிசையாக உள்ளன.
முதல் இளவரசரின் பெயர் பகதத்தா (Bhagadatta). இறுதியாக வரும் இளவரசரின் பெயர் சுந்தரவர்மன் (Sundaravarman). இவரின் மகன்கள் நரபதி சிம்ஹவர்மன் (Narapatisimhavarman) மற்றும் மங்கள வர்மன் (Mangalavarman) எனும் பெயர்களால் முடிக்கப் படுகிறது.
Coedes, G (1968). The Indianized States of Southeast Asia. Honolulu: University of Hawaii Press.
Murphy, Stephen A. (October 2016). "The case for proto-Dvaravati: A review of the art historical and archaeological evidence". Journal of Southeast Asian Studies. 47 (3): 366–392.
12-ஆம் நூற்றாண்டில் துவாராவதி பேரரசு மீது பர்மியர்கள் படை எடுத்தார்கள். சமாளித்துக் கொண்டது. அதன் பின்னர் கெமர் பேரரசின் இரண்டாம் சூர்யவர்மன் படையெடுப்பு. அதையும் சமாளித்துக் கொண்டது. அதன் பின்னர் தாய்லாந்து மன்னர்களின் பிடியில் சிக்கியது. நலியத் தொடங்கியது. மீண்டு வர முடியவில்லை. அப்படியே துவாராவதி எனும் பெயரும் வரலாற்றில் இருந்து மறைந்து போனது.
இப்படித்தான் பல இந்தியப் பேரரசுகள் உலக வரைப்படத்தில் இருந்து காணாமல் போய் இருக்கின்றன. இப்போதைக்கு இந்தியாவைத் தாண்டிய நிலையில் இந்தியர்களின் பெயரைச் சொல்ல ஒரு நாடு இல்லை. தமிழர்களின் பெயரைச் சொல்ல ஒரு பிடிமண் இல்லை. மன்னிக்கவும். வேதனையின் விம்மல்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.08.2020
சான்றுகள்:
1. https://www.britannica.com/place/Dvaravati
2. https://en.wikipedia.org/wiki/Dvaravati
3. https://en.wikipedia.org/wiki/Mon_people
4. https://en.wikipedia.org/wiki/History_of_Indian_influence_on_Southeast_Asia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக