12 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள் ஆங்கிலேய இதிகாசங்களில் - 2

 தமிழ் மலர் - 12.09.2020

மலாயாவில் ஆங்கிலேயர்களின் அதிகார ஆளுமைகளைப் பார்ப்பதற்கு முன்பு, அவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி ஒரு சின்ன தகவல். ஆங்கிலேயர்கள் அமெரிக்காவில் மட்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் பருத்தி வியாபாரம் பார்த்தவர்கள். பருத்தி பருத்தியாய்ப் பணத்தைச் சுரண்டிக் கொண்டு போனவர்கள். 


ஆசியாவில் இருந்து தேயிலையைக் கொண்டு போனார்கள். அமெரிக்காவில் இருந்த கோதுமை அரிசியை இங்கே கிழக்குப் பக்கமாய்க் கொண்டு வந்து கொட்டினார்கள்.

அடுத்து அடிமை வியாபாரத்திற்கு அரிச்சுவடியும் எழுதினார்கள். சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்த சிவப்பு இந்தியர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். கிழக்கே உதிக்கும் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் எழும்; எங்களைக் கேட்டுத்தான் விழும் என்று வீரவசனம் பேசினார்கள்.

அண்ணாந்து பார்த்தால் ஆகாசம். மல்லாந்து படுத்தால் தமிங்கிலோ வாசம் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பேர் போட்டு விட்டார்களே. அது வரைக்கும் ஆங்கிலேயர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.


ஆங்கிலேயர்கள் இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் வெள்ளைக்கார அதிகாரிகளையும் 60,000 வீரர்களையும் வைத்துக் கொண்டு முப்பது கோடி இந்தியர்களை ஆட்டிப் படைத்து ஆங்கிலேய அர்ச்சுவடி எழுதி இருக்கிறார்கள். இது என்ன சாதாரண விசயமா. சொல்லுங்கள்?

இந்த இடத்தில் ஒன்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தின் பரப்பளவு 244,755 சதுர கி.மீ. மலேசியாவின் பரப்பளவு 332,370 சதுர கி.மீ. அதைவிட பற்பல மடங்கு பெரியது இந்தியா.

அப்பேர்ப்பட்ட அந்த இந்தியாவை ஐம்பதே ஆண்டுகளில் அடித்துப் பிடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டார்களே. மறக்க இயலுமா.

பர்மாவில் இருந்த மலைஜாதிக் கற்களைக் கொண்டுவர ஆட்களை அனுப்பினார்கள். மலாயாவில் இருந்த காடுகளை வெட்டித் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள்.

சிங்கப்பூரில் இருந்த பாசா காடுகளைத் திருத்தி காபிச் செடிகளை நட்டு வைக்க ஆட்களை அனுப்பினார்கள். கிறிஸ்மஸ் தீவுகளின் சுரங்கங்களை வெட்டி 'பாஸ்பேட்' எனும் உப்பு உலோகம் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள்.

தென் ஆப்ரிக்காவில் காட்டுப் புதர்களை அழித்து கரும்புத் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள். மாலைத் தீவுகளின் ஆழ்கடலில் முத்துகள் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள்.

மடகாஸ்காரின் மலை அடிவாரங்களில் வாசனைத் தாவரங்கள் நடுவதற்கு ஆட்களை அனுப்பினார்கள். பிஜி - சாலமான் தீவுகளின் உடலுழைப்புப் பண்ணைகளுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அங்கே அனுப்பப் பட்டவர்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து போன இந்தியர்கள். அனுப்பியவர்கள் ஆங்கிலேயர்கள்.

சொந்த பந்தங்களைப் பிரிந்து போனவர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். போனவர்கள் பெரும்பாலும் தென் இந்தியர்கள். இப்போது மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் மூத்தத் தலைமுறைகளின் வழித்தோன்றல்கள் தான்.

அவர்களின் மூதாதையர் அங்கேயும் இங்கேயும் எப்படி வேதனைப் பட்டு இருக்கிறார்கள் என்பதை இப்போதைய இளம் சந்ததியினர் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling) எனும் ஓர் ஆங்கிலேய எழுத்தாளர் இருந்தார். மிகவும் புகழ் பெற்றவர். அவர் இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்தார்.

அவர் எழுதிய 'ஜங்கல் புக்' எனும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. பலர் படித்து இருக்கலாம். கிராமப்புற வாசனைகள் நிரம்பியது. இந்தியாவைப் பற்றிய உண்மையான வாசகங்கள்.

இருந்தாலும் ஆங்கிலேயத் தத்துவார்த்தக் கற்பனைகள். அதில் 'மவுகிலி' எனும் கதாபாத்திரம். படித்தவர் நெஞ்சில் எப்போதும் நிழலாடிக் கொண்டு இருக்கும். அந்த மவுகிலி கதாபாத்திரம் கடைசியில் வனவிலங்கு அதிகாரியாக மாறுகிறார். விக்டோரியா மகாராணியாரிடம் இருந்து ஓய்வூதியம் பெறுகிறார்.

ஒரு கற்பனைக் கதையில்கூட ஆங்கிலேயர்களின் தலைமைத்தனம் ஊறுகாய் போல அங்கே இங்கே கொஞ்சம் கொஞ்சமாய்த் தொட்டுக் கொள்ளப் படுகிறது. பார்த்தீர்களா.

ஆங்கிலேயர்களுக்கும் மலாயா மக்களுக்கும் நேரடியான, நெருக்கமான சமூகத் தொடர்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆங்கிலேய மன்றங்கள், கழகங்கள், விடுதிகள் போன்றவற்றில் மலாயா தமிழர்கள் உறுப்பியம் பெற முடியாது.

ஆங்கிலேயர்களின் அலுவலகங்களுக்குள் நுழைய முடியாது. அவர்களின் விடுதிகளுக்குள் தமிழர்கள் போகவும் கூடாது. கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று அமெரிக்காவில் அறிவிப்புப் பலகையே போட்டு இருந்தார்களாம். இது எப்படி இருக்கு?

அந்த மாதிரி இந்தியாவிலும் அறிவிப்புப் பலகை போட்டு இருக்கிறார்கள். காஷ்மீர் சிம்லாவில் நடந்த உண்மை. அங்கேதான் ஆங்கிலேயர்களின் கோடைகால உல்லாச மாளிகைகள் இருந்தன.

இந்திய மக்கள் ஆங்கிலேயர்களைப் போல சட்டை சிலுவார் போட்டுத் தெருவில் நடப்பது எல்லாம் முடியாது. தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்படியே மீறி நடந்தால் கசையடிகள். அபராதங்கள். தண்டனைகள்.

இந்தியர்கள் நுழையக் கூடாத தனிப்பட்ட விடுதிகளில் ஜாமீன் தாரர்கள், சாகிப்புகள், குட்டி குட்டி ராஜாக்கள், குறுநிலத்து மன்னர்கள் போன்ற மேலிடத்துப் புள்ளிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.

இத்தாலிய விஸ்கி, பாரிஸ் வாயின், ரஷ்ய வாட்கா, ஜமாய்க்கா ரம், பெல்ஜிய பீர் என்று மதுபான வகையறாக்கள் ஆறாய் ஓடின. இளம் பெண்கள் குலுங்கி ஆடும் போது வக்கிர மொழிகள் சிப்பிக்குள் இருந்து நளினமாக வெளியே வந்து எட்டி எட்டிப் பார்த்து இருக்கின்றன. சரி. இந்தப் பக்கம் பார்ப்போம்.

சத்தியமாகச் சொல்கிறேன். இங்கே மலாயாவில் தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக அநியாயமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களை வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். சான்றுகள் இருக்கின்றன.

அந்தச் சுவடுகளின் தாக்கம் தான் மலாயாத் தோட்டங்களில் வாழ்ந்த ஆரம்ப கால தாத்தா பாட்டிகளையும் ரொம்பவுமே பாதித்து இருக்கிறது.

கிராணிகளைக் கண்டால் சைக்கிளை விட்டு கீழே இறங்கி சலாம் போடுவது. காலில் போட்டு இருக்கும் சிலிப்பரைக் கழற்றிக் கைகளில் பிடித்துக் கொள்வது. வேட்டியைத் தூக்கி கோவணமாகப் பின்னிக் கொள்வது. மண்டோர்கள் எகிறும் போது மண்ணில் விழுந்து மன்னிப்பு கேட்பது.

கறுப்புத் தோல் வெள்ளைத் தோல் மேனேஜர்கள் அடித்துச் சாற்றும் போது அவர்களுடைய கால்களைக் கட்டிப் பிடித்துக் கெஞ்சுவது. கண்ணீர் வடிப்பது. இப்படி நிறைய உண்டு. மலாயா தமிழர்களை ஆங்கிலேயர்கள் மிகவும் ஏளனமாக நினைத்து கேவலமாக நடத்தி இருக்கிறார்கள்.

இந்தியர்களைப் படிப்பு இல்லாதவர்கள். மிரட்டினால் பதுங்கிப் போகிறவர்கள். உலகத் தரத்திற்கு உயர்ந்து வர முடியாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அந்தக் கோட்பாட்டுக்குச் சூடம் சாம்பிராணி காட்டி தூபம் போட்டு இருக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் எல்லாம் ஒன்றுதான். மொத்தத்தில் ஒரு கொத்தடிமை வாழ்க்கை.

ஆங்கிலேய இதிகாசங்களில் மலாயா தமிழர்களின் வரலாறும் ஒரு பகுதியே. இருந்தாலும் அந்த வரலாறு நீண்டு நெடியது. ஆங்கிலேயர்களின் மலாயா காலனித்துவ ஆட்சியில், மலாயா தமிழர்கள் எழுந்து வரமுடியாத அளவிற்கு அடிமைகளைப் போல அமுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளிகளைப் பறித்து எடுத்து; சாக்குப் பைகளில் போட்டு; மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே அழைத்து வரப் பட்டார்கள்.

அவர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய்ப் பணத்தை ஏற்றிக் கொண்டு போனார்கள். ஜிங்கு ஜிக்கான் பாடி பழைய ஆளாகி விட்டார்கள்.

கடைசியில் மலேசிய இந்தியர்களுக்குப் ’பை பை’ காட்டி அவர்களை அனாதைகளாகப் பரிதவிக்க விட்டுச் சென்றது தான் வரலாற்றுக் கொடுமை.

மலாயா சுதந்திரம் அடைந்தது. ஆனால் மலாயா தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இனவாதமும் மதவாதமும் தலை விரித்து ஆடுகிறது. நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். மலேசிய வரலாற்றில் மலேசியத் தமிழர்கள் மாபெரும் சாதனைகளைச் செய்தவர்கள். அந்தச் சாதனைகள் அனைத்தும், காலத்தால் மறக்க முடியாத காலச் சுவடுகள். வரலாற்று வேதங்கள் வார்த்து எடுக்க முடியாத வரலாற்றுப் படிமங்கள்.

மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு தெரியாது. என்ன பொறுக்கி எடுக்கிறது தான் பெரிய இலச்சை புடிச்ச வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த ராகங்கள். வேறு எப்படித்தான் சொல்லுவதாம்.

தமிழகத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே மசாஜ் செய்து இருக்கிறார்கள். அது மட்டுமா. அப்போது அங்கே கிடைத்த ’லைவ் பாய்’ சவர்க்காரத்தைப் போட்டு நன்றாகவே குளிப்பாட்டியும் விட்டு இருக்கிறார்கள்.

உதறல் எடுத்த அந்தச் சாமானிய மக்களை நன்றாகவே துவைத்துக் காயப் போட்டு இருக்கிறார்கள். அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை.

இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களின் குளிர்க் காய்ச்சல் நடுக்கத்தைத் தான் சொல்ல வருகிறேன்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே தமிழ்ப் பள்ளிகளை இழுத்து மூடுங்கள் எனும் ஐஸ்கட்டி ஆலாபனைகள் வேறு. மன்னிக்கவும் காம்போதி ராகங்கள்.
 
எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். அவர்கள் சமாளிக்க வேண்டுமே.

பச்சைக் காடாய்க் கிடந்த ஒரு நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலாயா தமிழர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலாயா தமிழர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி இன உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

இதில் மலேசியத் தமிழர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கிறோம் என்று காலம் காலமாக நானா நீயா போட்டிகள். அந்தச் சாக்கில் ஆயிரம் ஆயிரம் கட்சிகள். தடுக்கி விழுகிற இடம் எல்லாம் கட்சிகள். கட்சிகள். விட்டால் எதிர்க்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கட்சி வந்தாலும் வரலாம். விடுங்கள். இது மலேசிய இந்தியர்களின் போன ஜென்மத்து கர்ம வினைகள்.

ஒரே வார்த்தையில் சொன்னால் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; மலேசியத் தமிழர்களின் வரலாறு சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் கடந்த மலேசிய தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

ஒன்று மட்டும் உண்மை. மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாய் வந்தவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். அதை மறக்காமல் இருந்தால் சரி.

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய அந்த வாயில்லா பூச்சிகளுக்கு முதல் மரியாதை செய்வோம். சிரம் தாழ்த்துகிறேன்.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக