12 செப்டம்பர் 2020

கலிங்கா மக்கள் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கா (Kalinga) எனும் மாநிலம் லூசோன் (Luzon) தீவில் உள்ளது. அதன் தலைநகரம் தாபூக் (Tabuk). முன்பு அந்த மாநிலத்தின் பெயர் கலிங்கா – அப்பாயாவோ (Kalinga-Apayao). 1995-ஆம் ஆண்டு கலிங்கா மாநிலம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பரப்பளவு 3,231 சதுர கி.மீ.
(YvesBoquet, Berlin 2017)

இது ஒரு மலைப் பிரதேசம். பலாபாலன் (Balbalan); லுபுவாகான் (Lubuagan); பாசில் (Pasil); பினுபுக் (Pinukpuk); திங்கலாயான் (Tinglayan); தானுடான் (Tanudan) மலைகள் உள்ளன.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மக்கள் 1500 மீட்டர் உயரத்தில் மலைக் காடுகளில் வாழ்கிறார்கள். இவர்களிடம் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது. உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்கிறார்கள். இவர்களின் முகத் தோற்றங்களில் இந்திய மண்வாசனை தெரிகின்றது.

காதுகளில் பெரிய பெரிய தோடுகளைப் போட்டுக் கொள்கிறார்கள். பெரிய பெரிய கழுத்து ஆபரணங்களையும் அணிந்து கொள்கிறார்கள். வண்ண வண்ண ஆடைகளைப் பாரம்பரிய உடைகளாக அணிந்து கொள்கிறார்கள். இவர்கள் ஒரு வகையான பொங்கல் அறுவடை நாளையும் திருவிழா நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

தங்களைக் கலிங்கர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறார்கள். இந்தக் கலிங்கப் பூர்வீக மக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் இணைந்து வாழ்வதைத் தவிர்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகத் தனித்தே வாழ்கின்றனர். முன்பு காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் கொரில்லா சண்டைகள். ஸ்பானிய போர் வீரர்கள் போய் சண்டையை நிறுத்தி இருக்கிறார்கள்.

இங்கு வாழ்ந்த கலிங்கா இளம் பெண் 2019-ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டிக்கு பிலிப்பைன்ஸ் அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மக்கள் பற்றி சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் கீழ்கண்டவாறு உறுதிப் படுத்துகிறார்.

ஏறக்குறைய 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கலிங்கர்களின் முதல் புலம்பெயர்வு நடைபெற்றது. அசோகரின் கலிங்கக் கொலைவெறி ஆட்டத்தில் இருந்து தப்பித்த பல ஆயிரம் பேர் கடல் மார்க்கமாகத் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் பிலிப்பைன்ஸ் தீவிற்கும் புலம் பெயர்ந்து இருக்கலாம். ஏற்கனவே பிலிப்பைன்ஸ் சமவெளிகளில் வாழ்ந்து வந்த உள்ளூர் பிலிப்பைன்ஸ் மக்களுக்குப் பயந்து மலைக்காடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம்.
(Sadasivan, Balaji Sadasivan 2011)

இந்தத் தகவல் சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் அவர்களின் கருத்து.

பண்டைக் கால இந்தியாவின் ஒரிசா, ஆந்திரா, வட தமிழ்நாட்டுப் பகுதிகள் கலிங்க அரசு என்று அழைக்கப் பட்டது. அதை மகா மேகவாகனப் பேரரசு என்றும் அழைப்பார்கள். கி.மு. 250 தொடங்கி கி.பி. 400 வரை ஆட்சியில் இருந்த பேரரசு.

கி.பி. 400-ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலிங்கப் பேரரசு இந்திய வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. வெகு காலமாய் அதைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போயின.

மறுபடியும் 7-ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்தப் பேரரசு புத்துயிர் பெற்றது. இந்தியாவின் ஒரிசா; ஆந்திர பிரதேசங்களை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
(IJARMSS 2016)

பின்னர் 8-ஆம் நூற்றாண்டில் கலிங்கப் பேரரசு பர்மாவைக் கைப்பற்றியது. அந்தக் காலக் கட்டத்தில் கலிங்க நாட்டவர் இலங்கை, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் (லூசோன்) போன்ற நாடுகளில் குடியேறினார்கள். ஆங்காங்கே சிற்றரசுகளை உருவாக்கினார்கள்.
(Janette P. Calimag 2016)

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் தீவில் இருக்கும் கலிங்கர்கள் எனும் பூர்வீகக் குடிமக்கள் எங்கே இருந்து வந்தார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் இதுவரையிலும் மிகத் துல்லியமாகக் கிடைக்கவில்லை.

இருப்பினும் கலிங்கர்கள் என்று அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் கலிங்கா எனும் ஒரு மாநிலத்தை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்து உள்ளது.
 
8-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் தான் கலிங்கர்கள் தீபகற்ப மலேசியாவில் குடியேறி இருக்கலாம். இது 8-ஆம் நூற்றாண்டு மலாயாப் புலம் பெயர்வு.

ஆதிகால மலாயா தமிழர்கள் இந்தக் கலிங்கப் பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இங்கே இருந்து தான் கெலிங் எனும் சொல்லும் மலாயா மக்களிடம் பரவி இருக்கலாம்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர மன்னர்களின் பரம்பரையினர் கலிங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென் சயாம் பகுதியில் இருந்த நிலப் பகுதிகளை ஆட்சி செய்தார்கள். அதே சமயத்தில் தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
(6. Coedes, George 1968. Walter F. Vella)

7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா ஜாவா தீவில் கலிங்கப் பேரரசு எனும் ஓர் அரசு உருவானது. இந்தியாவின் கலிங்கப் பேரரசின் பெயரே இந்தோனேசியாவின் கலிங்கப் பேரரசிற்கும் வைக்கப் பட்டது.

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறது.
(Drs. R. Soekmono, 1973)

ஆக அந்தக் காலக் கட்டத்திலும் இந்தோனேசியாவில் இருந்து இந்தியர்கள் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்தோனேசியா வரலாற்று ஆசிரியர் பூர்வாந்தாவின் ஆய்வறிக்கையில் இருந்து இங்கே பதிவு செய்யப் படுகிறது.
(H Purwanta 2012)

சான்றுகள்:

1. Source: Coedes, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Pg. 79)

2. International Journal of Advanced Research in ISSN: 2278-6236. Management and Social Sciences Impact Factor: 6.284. Vol. 5 | No. 6 | June 2016 www.garph.co.uk IJARMSS | 937

3. Province: Kalinga (province). PSGC Interactive. Quezon City, Philippines: Philippine Statistics Authority. (2016)

4. Edward Dozier (1966) reports that the Kalinga divide themselves into the southern
Kalinga who reside in Lubuagan, Pasil, and Tinglayan

http://nlpdl.nlp.gov.ph:81/CC01/NLP00VM052mcd/v1/v27.pdf // Edward Dozier. The Kalinga are one of the major ethnolinguistic groups inhabiting northern Luzon.

5. The Philippine Archipelago. YvesBoquet, Berlin, (2017), Springer International Publishing. ISBN 978‐3‐319‐5925‐8, pp 62-64

6. Sadasivan, Balaji Sadasivan. (2011). The Dancing Girl: A History of Early India. pp. 135–136. ISBN 978-9814311670.

6. Coedès, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 52)

7. Drs. R. Soekmono, (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd Ed (5th reprint edition in 1988 Ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 37.

8. Sneddon, James (2003). The Indonesian Language: Its history and role in modern society. Sydney: University of South Wales Press Ltd. p. 73.

9. Masatoshi Iguchi (2017). Java Essay: The History and Culture of a Southern Country. Troubador Publishing Ltd. p. 216. ISBN 9781784628857.

10. H Purwanta. (2012) Sejarah SMA/MA Kls XI-Bahasa, dkk

11. https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/kalinga

12. THE MIGRANTS OF KALINGA: FOCUS ON THEIR LIFE AND EXPERIENCES (2016) Janette P. Calimag, Kalinga-Apayao State College, Bulanao Tabuk City, and Kalinga.

Citation - தகுதியுரைகள்

In the 6th century, there was a kingdom called Kalingga, name derived from the very Indian kingdom Kalinga. Kalingga was the 6th century Indianized kingdom on the north coast of Central Java, Indonesia. 6th century. Two Indianized empires - the Srivijayan Empire (683-1275 AD) and Majapahit empire (1275 to 14th century) are said to have influence on Philippines' culture.

Source: https://www.quora.com/Is-there-any-link-between-the-present-Kalinga-tribe-in-the-Philippines-and-the-Kalingas-of-ancient-India

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக