தமிழ் மலர் - 11.09.2020
மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கடல் புறா. எஸ்.எஸ். ரஜுலா. இறக்கை கட்டாமல் பறந்து வந்த கப்பல். பற்பல கடல் கொந்தளிப்புகள், பற்பல சுனாமிகள். பற்பல கடல் சூறாவளிகள். அவற்றை எல்லாம் பார்த்து வந்த கப்பல். நம்முடைய மூதாதையர்களைச் சலிக்காமல் சளைக்காமல் மலாயாவுக்குச் சுமந்து வந்த கப்பல்.
அந்தக் கப்பல் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், கன்னடர்கள், சிங்களவர்கள், சீனர்கள், சீக்கியர்கள் என்று எவரையும் பிரித்துப் பார்க்கவில்லை.
ஒரே தட்டில் சாப்பிட வைத்தது. ஒரே பாயில் படுக்க வைத்தது. ஓர் ஓரத்தில் கக்கல். இன்னோர் ஓரத்தில் கழிசல். அலைகடல் தாண்டி ஒரு சேர கரை சேர்த்த கப்பல். மலாயா தமிழர்களின் வரலாற்றில் ஒன்றித்துப் பிணைந்து போன ஓர் அழகிய தேவதை.
In the past 130 years, the number of foreign migrant workers in Malaya has grown from about 84,000 in 1880 to more than three million in 2010.
http://suararasmi.blogspot.my/2013/02/migrant.html
தென் இந்தியாவில் இருந்து வந்த அத்தனைப் பேரையும் பினாங்குப் புறமலையில் ஒரே கூண்டுக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. கொப்பூழ்க் கொடி உறவுகளை அப்படியே இறுக்கமாகக் கட்டிப் போட்டது.
அதை ஒரு கப்பல் என்று சொல்வதைவிட மலாயாத் தமிழர்களின் கடல் தேவதை என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு எஸ்.எஸ். ரஜுலா கப்பல் மலாயா தமிழர்களின் வாழ்க்கையிலும் சொப்பனக் கனவாகி விட்டது.
தென் இந்தியத் தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் மலாயாவுக்குக் கொண்டு வருவதற்கு நான்கு காரணங்கள் உள்ளன.
முதல் காரணம்:
தென் இந்தியாவும் மலாயா தீபகற்பமும் புவியல் ரீதியில் மிக அருகாமையில் இருக்கும் நிலப் பகுதிகள். கப்பல் வழியாகத் தொழிலாளர்களை எளிதாகக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. அப்படி கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் தரை மார்க்கமாகத் தாயகத்திற்குத் தப்பிச் செல்ல முடியாது.
கால்நடையாக மலாயா, தாய்லாந்து, பர்மா காடுகளைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தென்னிந்தியாவிற்குள் செல்வது என்பது மரண சாசனத்தின் முதல் அத்தியாயம். ஆக அது நடக்காத காரியம். அது தான் முதல் காரணம்.
இரண்டாவது காரணம்:
இந்தியா எனும் துணைக் கண்டமும் மலாயா எனும் நாடும் ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்தன. ஏற்கனவே தென் இந்தியாவின் பொருளாதாரம் ஆங்கிலேயர்களால் சுரண்டி எடுக்கப்பட்டுத் துடைக்கப்பட்டு விட்டது. ஒரே வார்த்தையில் கஜானா காலி.
ஆக தென் இந்தியாவின் ஆள்பலத்தைப் பயன்படுத்தி மலாயாவின் இயற்கைச் செல்வத்தைச் சுரண்ட முடியும் என்பது ஆங்கிலேயர்களின் அடுத்த கனவு. இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம்:
தென் இந்திய மக்களின் வறுமை நிலை. சென்னை மாநிலத்தின் கருவூலம் ஆங்கிலேயர்களால் காலியாக்கப் பட்டதும் அதனை நம்பி வாழ்ந்த மக்கள் நிர்கதி ஆனார்கள்.
சென்னை அரசாங்கத்தின் நிதியுதவியை நம்பி வாழ்ந்த விவசாய மக்களுக்கும் பேரிடி. வாழ்வாதாரத் தடங்கல்கள். அதனால் தென் இந்திய மக்களை அடிமை போல நடத்த முடியும் என்பது ஆங்கிலேயர்களின் அசத்தல் உணர்வு. இது மூன்றாவது காரணம்.
நான்காவது காரணம்:
தென் இந்தியர்களின் சாதியக் கோட்பாடுகள். சொந்த தமிழ் இனத்தின் மீதே அதிருப்தி. பெருவாரியான தென் இந்தியர்கள் வெள்ளைத் தோல் ஆங்கிலேயர்களுக்கு கீழ்பணிந்து நடப்பவர்கள்.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாகப் பயணிக்கும் தன்மை. அதாவது வெள்ளைக்கார எசமானர்களிடம் மீது அவர்கள் வைத்து இருந்த அதீத விசுவாசத் தன்மை. இதுவும் ஒரு காரணம்.
இந்த நான்கு காரணங்களை முன்வைத்து தான் ஆங்கிலேயர்கள் காய்களை அழகாக நகர்த்தினார்கள். 1910-ஆம் ஆண்டுகளில் தென் இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக நலிந்த நிலை. கஜானா காலி. ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாகச் சுரண்டி எடுத்துக் கப்பல் கப்பலாக இங்கிலாந்திற்குப் பார்சல் செய்து விட்டார்கள்.
அதனால் அப்போதைய தென் இந்திய மக்கள் தடுமாறித் தத்தளித்து நின்றார்கள். ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும். உள்நாட்டில் கிடைத்தாலும் சரி; அல்லது வெளிநாட்டில் கிடைத்தாலும் சரி. என்ன வேலை கிடைத்தாலும் போய்ச் செய்யலாம் எனும் தயார் நிலையில் இருந்தார்கள். சரி.
மும்பாய்க்கு அருகில் சூரட் எனும் இடம். (Surat is a city in the Indian state of Gujarat). [1] 1600 ஆம் ஆண்டு. ஒரு பாய்மரக் கப்பல் கரை தட்டியது. கப்பலின் பெயர் ’ஹெக்டர்’ (Hector). அப்போதைக்கு ஆங்கிலேயர்களின் முதுமொழி ’வியாபாரம் காலனித்துவம் அல்ல’ (Commerce not Colonization).
[1]. William Hawkins (1600) was a representative of the English East India Company notable for being the commander of Hector, the first company ship to anchor at Surat in India on 24 August 1608.
இப்படிச் சொல்லிதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள். வலது காலை எடுத்து வைத்தார்களா; அல்லது இடது எடுத்து வைத்தார்களா. தெரியவில்லை. எதற்கும் இந்தியாவில் இருக்கும் இட்லி சாம்பாரைக் கேட்டால் தெரியும். எல்லாம் வெள்ளைத் தோல்கள் தானே. உறவு விட்டுப் போகுமா. ஆனால் கடைசியில் என்ன நடந்தது தெரியுங்களா?
இந்தியா என்கிற ஒரு புண்ணிய பூமியே கண்ணீர் விட்டு அழுதது. 19-ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் அந்தத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆங்கிலேயர்கள் இழுத்துப் பிடித்து இடுப்பில் செருகிக் கொண்டார்கள். அப்புறம் என்ன. அகில இந்தியாவிற்கே மாட்சிமை தங்கிய மகாராணி என்று ஒரு வெள்ளைத் தோல் முடி சூட்டிக் கொண்டது.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுங்களா. ஒரு முறைகூட அந்த விக்டோரியா மகாராணியார் இந்திய மண்ணில் கால் எடுத்து வைக்கவே இல்லை. ஆனால் இந்தியாவின் மாபெரும் மகாராணி. வெற்றித் திலகம் விக்டோரியா மகாராணியார்.
எங்கே எதைப் பார்த்து முட்டிக் கொள்வதோ தெரியவில்லை. கழுதை முட்டும் சுவரைத் தேடுகிறேன். கழுதையும் இல்லை. சுவரும் இல்லை. வயதும் ஓடிவிட்டது.
ஆக விக்டோரியா மகாராணியார் என்பவர் மக்களைப் பார்க்காத ஒரு கலிகாலத்து மகராசி. மன்னிக்கவும். ஒரு மகாராணியார். வானொலி, வாட்ஸ் அப், தொலைபேசி, தொல்லைக்காட்சி என்று எதுவுமே இல்லாத காலக் கட்டம். பருவக் காற்றை நம்பி, பாய்மரக் கப்பல்களில் ஐலசா பாடி வந்த காலம்.
அந்த மகாராணியார் லண்டனில் இருந்து கொண்டே அதிகாரம் பண்ணி சாதனை படைத்து இருக்கிறார். ஒரு நாட்டின் மக்களைப் பார்க்காமலேயே ஒரு நாட்டின் மகாராணியாக ஒருவர் இருந்தார் என்றால் அவர் இவராகத்தான் இருக்க முடியும். உலகம் போற்றும் சாதனை. மிக்க மகிழ்ச்சி. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யலாம்.
இந்தியாவின் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போகும் எண்ணத்துடன் தான் ஆங்கிலேயர்கள் சின்னச் சின்னத் தோனிப் படகுகளில் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் நான்கைந்து மாமாங்கங்களில் மாபெரும் கண்டத்தையே கண்டம் கண்டமாக வெட்டித் துண்டு போட்டு விட்டார்கள்.
அதோடு விட்டு விடவில்லை. சின்னச் சின்னதாகக் கூறு போட்டார்கள். இந்திய மக்களை அப்படியே இனவாரியாக மொழி வாரியாகப் பிரித்தார்கள். அதில் பலரை ஒப்பந்தக் கூலிகள் (Indentured Labor) எனும் பேரில் மலாயா, பர்மா, தென் ஆப்ரிக்கா, கரிபியன், பிஜி, ரியூனியன் தீவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
போன இடங்களில் கொத்தடிமை மொத்தடிமை என்று அந்த வெள்ளந்திகளைக் கசக்கிப் பிழிந்ததுதான் மிச்சம். இருக்கிற வரையில் அவர்களின் இரத்தத்தைச் உறிஞ்சி எடுத்தார்கள்.
மலாயாவை எடுத்துக் கொள்ளுங்கள். கித்தா மரங்களில் வெள்ளையாக வந்த பாலை அப்படியே சிகப்புக் கடுதாசியில் மாற்றி எழுதினார்கள். ஆய கலையில் அறுபத்து மூனாவது கலை.
கடைசியில் என்ன ஆனது. அந்த ஏழைகளையும் அவர்களின் வாரிசுகளையும் 'எப்படியாவது பிழைச்சுப் போங்க' என்று கைகழுவி விட்டு விட்டு ஓடியே போய்ச் சேர்ந்து விட்டார்கள். இந்தப் பெருமை ஆங்கிலேயர்களைத் தவிர வேறு யாருக்கு கிடைக்கும். சொல்லுங்கள்.
அவர்கள் உண்மையிலேயே கெட்டிக்காரர்கள். இதில் யார் இளிச்சவாயர்கள். நான் சொல்ல வேண்டியது இல்லை. மலாயா தமிழர்களுக்குத் தெரியும். உலகத் தமிழர்களுக்கும் தெரியும்.
உலகத்தில் பாதியை ஆட்சி செய்தவர்கள் இந்த ஆங்கிலேய வெள்ளைக்காரர்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவில் பாதி, ஆசியாவில் கால்வாசி என்று கணக்குப் போடலாம். அவர்கள் ஆட்சி செய்த நாடுகளை ஒரு பெரிய பட்டியல் போடலாம்.
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… உலகில் 53 நாடுகளை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவற்றில் இப்போது 225 கோடி மக்கள் வாழ்கிறார்கள். உலக மக்கள் தொகை 712 கோடி என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இங்கிலாந்து ஒரு சின்ன நாடு. அந்த நாட்டைக் காட்டிலும் மலேசியா ஒன்றரை மடங்கு பெரியது. உலக வரைப் படத்தில் இங்கிலாந்து ஒரு குண்டுமணி அரிசி. அவ்வளவுதான். ஆனால் ஒரு கட்டத்தில் உலக தாதாக்கள் என்று இப்போது சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இங்கிலாந்தைப் பார்த்து ஓட்டம் எடுத்தவை.
'மண்ணும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம்... ஆளை விடுங்கடா சாமி' என்று ஒலிம்பிக் ஓட்டம் ஓடிய ஐரோப்பிய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.
ஆங்கிலேயர்களின் இதிகாசங்கள் அட்டகாசமான வரலாற்றுச் சுவடுகளை எழுதிச் சென்று உள்ளன. வியாபாரம் செய்ய வந்தவர்கள் இந்தியாவிலும் மலாயாவிலும் வாழ்ந்தவர்களை வியாபாரப் பொருட்களாக மாற்றிய பெருமை இருக்கிறதே… சும்மா சொல்லக் கூடாது. காலத்தால் அழிக்க முடியாத ஒரு காம்போதி ராகம்.
மலாயா இந்தியர்கள் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஆங்கிலேயர்களின் அந்த இதிகாசங்களை மறக்க மாட்டார்கள். மறக்க நினைக்கவும் மாட்டார்கள். காம்போதி ராகங்களுக்கு அனுபல்லவிகள் சேர்த்த உலக மகா மனிதர்களை எப்படிங்க மறக்க முடியும்.
(தொடரும்)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.09.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக