04 செப்டம்பர் 2020

பிஜி தமிழர்கள் - 1

தமிழ் மலர் - 04.09.2020

தமிழன் இல்லாத நாடு இல்லை. அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடு இல்லை. அதுவே தமிழருக்கு வரலாறு எழுதிக் கொடுத்த வலிமிக்க வரப்பிரசாதம். தமிழ் நாடு இருக்கிறதே என்று கை நீட்டிக் காட்டலாம். ஏன் காட்ட வேண்டும்? எதற்காகக் காட்ட வேண்டும்?

தமிழ் நாடு என்பது தமிழரின் பெயரைச் சொல்லத் தான் ஓர் அடையாளம். ஒரு மாநிலம். மற்றபடி தமிழர்கள் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு தேசம் அல்ல. மன்னிக்கவும்.

அப்போது அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். பெருமையாக இருக்கின்றது. அதைப் பற்றி அந்தர்ப்புரங்களில் கதை கதையாகப் பேசினார்கள். உண்மை தான். உடல் புல்லரிக்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் வசந்தம் என்று சொல்லி வாய் வலிக்கப் புகழ்மாலை பாடினார்கள். உண்மை தான். உச்சி குளிர்கின்றது. கைகள் கழன்று விழும் அளவிற்கு வண்டி வண்டியாய்க் கவிதைகள் எழுதிக் குவித்தார்கள். உண்மை தான். நெஞ்சம் கனக்கின்றது.

பாடியவர்களுக்கும் சரி; புகழ்ந்தவர்களுக்கும் சரி; குடம் குடமாய்ப் பரிசுகளை அள்ளிக் கொடுத்து அழகு பார்த்தார்கள். அது எல்லாம் அப்போதைய கதைகள். ஆறிப் போன பழைய கஞ்சிக் கதைகள். இப்போது எல்லாம் அப்படிப் பாடினால் சோற்றுக்கு சுண்ணாம்பு கிடைக்காது.

ஆக தமிழர்களுக்கு என்று ஒரு நாடு எங்கேயும் இல்லை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாடு என்பது தமிழர்களின் நாடு அல்ல. இது வார்த்தை ஜாலம் அல்ல. வீசி உடைத்துப் போட ஒரு கண்ணாடியும் அல்ல. என் மனதில் இறுகிப் போன மௌனத்தின் விழுமியச் சாரல்கள். விசும்பும் மௌனத்தின் கம்போதி ராகங்கள்.

அதே அந்தத் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வாழ்கிறார்கள்.

தமிழ் மறக்கப்படும் நாடுகளில் ஒன்றுதான் பிஜி தீவு (Republic of Fiji). பசிபிக் பெருங்கடலில் பூபாளம் பாடும் ஒரு பச்சைத் தீவு. அந்தத் தீவில் வாழ்ந்த தமிழர்களின் கதை இருக்கிறதே அது காலத்தால் கரைக்க முடியாத ஒரு கண்ணீர்க் கதை.

காலனித்துவ ஆட்சியில் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட தமிழர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். மலாயா தமிழர்களுக்குத் தெரிந்த கதை. அதையும் தாண்டிய நிலையில் பிஜி நாட்டுத் தமிழர்கள் துவைத்துக் காயப் போடப் பட்டார்கள். இது உலக மக்களுக்குத் தெரியாத கதை.

மலாயா தமிழர்களின் நிலை கொஞ்சம் பரவாயில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஐலசா பாடிக் கொண்டே ரசுலா கப்பலில் ஏறி இதமிழ் மண்ணுக்கே போக முடிந்தது.

ஆனால் பிஜி தீவுக்குப் போன தமிழர்களுக்கு அப்படி ஒன்றும் அமையவில்லை. சாகும் வரை திரும்பிப் போகவும் முடியவில்லை. பிஜி தீவிலேயே பலர் மக்கி மண்ணாகிப் போனார்கள். அந்த வாயில்லப் பூச்சிகளின் வாரிசுகள் தான் இப்போது அங்கே தங்களின் தாய்மொழிக்கு உயிர்ப் பிச்சை கேட்டுப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களைப் பற்றிய வரலாறு வருகிறது. படியுங்கள். அவர்களின் சோக வரலாற்றை அசைப் போட்டுப் பாருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

அப்போதைய பிரிட்டிஷார் காலனித்துவ நாடுகள் மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், செய்ஷீல்ஸ், தென் ஆப்பிரிக்கா, நியூ கலிடோனியா, குயானா, சூரினாம். பெரிய பட்டியல் இருக்கிறது. அந்த நாடுகளுக்கு தமிழர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள்.

அதைப் போலவே பிஜி தீவிற்கும் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக் (indenture system) கொண்டு செல்லப் பட்டார்கள். அவை எல்லாம் தொலைதூர நாடுகள். கண் காணா தேசங்கள். அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வர முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டது.

ஏன் என்றால் சில நாடுகளில் கப்பல் பயணங்கள் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஏறிச் செல்லும் கப்பல்களாக இருந்தன. வெள்ளைக் கறுப்புத் தோல்களின் இனவெறி இதிகாசங்கள் கப்பலோடு பயணித்துக் கொண்டு இருந்த காலக் கட்டம்.

மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்துகள் இருந்தன. அங்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்ததும் இந்தியாவிற்குத் திரும்பி வர முடிந்தது. அதற்கான செலவுகளை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

சும்மா ஒன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதாயம் இல்லாமல் ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள். பொடி மிளகிற்குப் பொதி சுமக்கும் கதை எல்லாம் அவர்களிடம் செல்லாது. கிழக்கே உதிக்கும் சூரியன்கூட அவர்களைக் கேட்டுத் தான் உதிக்கும். தெரியும் தானே. உலகம் அறிந்த மாபெரும் ஆங்கிலேயத் தத்துவம்.

கொண்டு போகிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். அங்கே தமிழர்களின் இரத்தம் சொட்டும் வியர்வைத் தூறல்கள் நிற்கும் வரையில் நன்றாகவே துவட்டி எடுத்தார்கள். மன்னிக்கவும். சப்பி எடுத்தார்கள் என்று சொன்னால் தான் வரலாறு சந்தோஷப்படும். அப்புறம் என்ன. வெறும் எலும்புக்கூட்டு உயிர்ச் சக்கைகளை மட்டும் கப்பலில் ஏற்றி ’பை பை’ சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பிப் போகவே முடியாத நிலை. தொலை தூரத்தில் இருந்ததால் தமிழ் மண் உறவுகள் தலை கால் இல்லாமல் அறுந்து போயின. பிஜி நாட்டு மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் தமிழில் அதிகம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

தவிர தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைப் போதிக்க, தமிழ் நாட்டில் இருந்து ஆசிரியர்களைப் பிஜி நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாத நிலை. அதனால் தான் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழை முறையாகப் படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது.

பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249 கி.மீ). அதாவது 6989 மைல்கள். நம்முடைய உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் பிஜி தீவிற்குப் போவதற்கும்; உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சரியாகி விடுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குத் திசையில் தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு இருக்கிறது. பிஜி தீவு என்று சொல்வதைவிட பிஜி தீவுகள் என்று சொல்வதே சரியாகும். இருந்தாலும் பிஜி தீவு என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. பிஜி தீவைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து தான் பிஜி தீவுகள் என்று அழைக்கிறார்கள். எல்லாத் தீவுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 7055 சதுர மைல்கள். பிஜி தீவின் தலைநகரம் சுவா (Suva). 1970-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. சரி. பழைய வரலாற்றைக் கொஞ்சம் தூசு தட்டிப் பார்ப்போம்.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு போனார்கள். தொடக்கக் காலத்தில் தமிழர்களின் இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு போகப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், தெலுங்கர்கள், பீகார் வாசிகள்.

மொத்தம் 42 கப்பல்கள். 87 பயணங்கள். ஆரம்பத்தில் கல்கத்தாவில் இருந்து தொழிலாளர்களைக் கொண்டு போனார்கள்.

1903-ஆம் ஆண்டு முதல் எல்லாக் கப்பல்களும் மெட்ராஸ்; பம்பாயில் இருந்து போயின. மொத்தம் 60,965 பயணிகள். போய்ச் சேர்ந்தவர்கள் 60,553 பேர். ஏறக்குறைய 400 பேர் கப்பலிலேயே இறந்து விட்டார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஏறக்குறைய 40 பேர் இறந்து இருக்கிறார்கள்.

பாய்மரக் கப்பல்கள் பயணத்திற்கு சராசரியாக 73 நாட்கள். நீராவி இயந்திரக் கப்பல்களுக்கு 32 நாட்கள். கப்பல் நிறுவனங்கள் நூர்ஸ் லைன் (Nourse Line); மற்றும் பிரிட்டிஷ் - இந்தியா நீராவி கப்பல் நிறுவனம் (British-India Steam Navigation Company).

பிஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கத்தை அமைத்தவர் ஸ்ரீ சாது குப்புசாமி. இவர் சென்னையில் இருந்து பிஜி சென்றவர். அவர் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து சில அரிய தகவல்கள் பேஸ்புக் ஊடகத்தில் கிடைத்தன. அவர் எழுதி இருப்பதை நீங்களும் படித்துப் பாருங்கள்.

(https://www.facebook.com/pg/தமிழ்-Tamil-141482842472/)

“ஐந்து வருட ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர். (CSR) கம்பெனி வேலைக்கு நான் வந்த போது ஆண்களும் பெண்களுமாய்ப் பல நூறு பேர் வந்து இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சி.எஸ்.ஆர். கம்பெனியில் (Colonial Sugar Refining Company) கொலம்பர்கள் இருந்தார்கள்.

கொலம்பர்கள் என்றால் அதிகாரிகள். பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு, ஆங்கிலேயக் கொலம்பர்கள் சொல்வதே அப்போதைக்கு சட்டம். மீறிப் பேசக் கூடாது. மீறிப் பேசவும் முடியாது. கொலம்பர்கள் சொன்னால் மறுபேச்சு பேசாமல் செய்ய வேண்டும். மறுபேச்சு இல்லை.

கொலம்பர்களுக்குக் கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் சர்தார் என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் கையால் செய்து காட்ட வேண்டும்.

தமிழர்கள் ஒவ்வொரு நாளும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று பற்பல திட்டங்கள். கொலம்பர்கள் சர்தார்களுக்கு கட்டளை போடுவார்கள். சர்தார்கள் வேலையாட்களிடம் எருமை மாட்டு வேலைகளை வாங்குவார்கள்.

சொன்ன மாதிரி வேலை செய்து முடிக்காதவர்களுக்கு அவ்வளவுதான். அந்த ஆளைப் பிடித்து கீழே தள்ளுவார்கள். தள்ளிய கையோடு அது ஆணாக இருந்தாலும் சரி; இல்லை பெண்ணாக இருந்தாலும் சரி; அந்த ஆளின் மார்பு மேலே ஏறி கைகளால் குத்துவார்கள். உதைப்பார்கள். சம்பளக் கூலியைக் குறைப்பார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள்.

அது மட்டும் அல்ல. சில சமயங்களில் ஒழுங்காக வேலை செய்து முடிக்காதவர்களைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். உடனே அந்த வேலையாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எழுத்துப் பூர்வமான ஒரு சம்மன் வரும். பின்னர் அபராதம் விதிக்கப்படும்.

பிஜி தமிழர்கள் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.
பிஜி தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள் செய்து வந்த வேலைகளின் பட்டியல்:

1. ஏர் உழுதல். 2. கரும்பு நடுதல். 3. புல்வெட்டுதல். 4. குழி வெட்டுதல். 5. கரும்பு வெட்டுதல். 6. கரும்புக்கு உப்பு எரு போடுதல்.

கரும்பு வயல்களில் வேலை செய்யும் போது தமிழர்கள் பெரும் பெரும் கொடுமைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறார்கள். சர்தார்மார்களும் சரி; ஆங்கிலேயக் கொலம்பர்களும் சரி; தமிழர்களை மிக மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பதிலுக்குத் திருப்பி அடித்த தமிழர்களும் இருந்தார்கள்.

அப்படிப் பட்டவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். ஜெயிலுக்கு அனுப்பினார்கள். மூன்று மாதச் சிறைத் தண்டனை. சிறையில் இருந்து வந்த பின்னர் கடுமையான வேலைகளைக் கொடுப்பார்கள். அப்படி சிறைக்குப் போன தமிழர்களில் சிலர் மர்மமான முறையில் இறந்தும் போய் இருக்கிறார்கள்.

இதே கூத்து தான் இந்தப் பக்கமும் நடக்கிறது. லோக்காப்பில் அடைக்கப் பட்டவர்களில் பலர் லாக்காபிலேயே இறந்து போன கதைகள் தான். கேட்டுப் புளித்துப் போன கதைகள். இந்த லோக்காப் இராமாயணத்தை அப்போதே அந்தக் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் பசிபிக் பெருங்கடலிலேயே அரங்கேற்றம் செய்து  விட்டார்கள். பலே கில்லாடிகள். சரி.

Indentured labour from South Asia (1834-1917)

நாளைய கட்டுரையில் பிஜி தமிழர்கள் நடத்திய லங்கா தகனம் எனும் போராட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

(The South Indians in Fiji are mainly descendants of the 15,132 contract labourers who were brought to Fiji between 1903 and 1916. This represents about 25% out of a total of 60,965 contract labourers who were brought to Fiji between 1879 and 1916. They were forced in to ships from Madras and were mainly recruited in the districts of North Arcot, Madras, Krishna, Godavari, Visakhapatnam, Tanjore, Malabar and Coimbatore. More than half of the labourers from South India were recruited from North Arcot and Madras, but most of those recruited in Madras were originally from North Arcot and Chingleput.)

https://en.wikipedia.org/wiki/South_Indians_in_Fiji#References

சான்றுகள்:

1. Raghuram, Parvati; Sahoo, Ajaya Kumar; Maharaj, Brij; Sangha, Dave (16 September 2008). "Tracing an Indian Diaspora: Contexts, Memories, Representations". SAGE Publications India.

2. Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.

3. Navaneetham Pillay The most famous South African Tamil of our times". DailyMirror. 2013-08-31.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக