19 செப்டம்பர் 2020

சங்கராமா விஜயதுங்க வர்மன்: சைலேந்திரா பேரரசு

 தமிழ் மலர் - 14.09.2020

இந்தோனேசியா ஓர் அழகான உலகம். ஓர் அதிசயமான பூமி. அங்கே பற்பல புதுமைகள். பற்பல பழைமைகள். அந்தப் பழமைகளில் பற்பல மர்மங்கள். அந்த மர்மங்களில் நீண்ட நெடிய ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் இந்தியர்கள் 1370 ஆண்டுகள் ஆட்சி செய்ததும் ஒரு துணை வரலாறு.

சைலேந்திரா அரசு வாரிசுகள்: ஜாவானியப் பெண்மணி

இந்தோனேசியா எனும் தனி ஓர் உலகத்தில் மொத்தம் 13,466 தீவுகள். இந்தத் தீவுகளைப் பன்னிராயிரம் தீவுகள் என்று மணிமேகலைக் காப்பியத்தில் சொல்லப் படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் ஜாவா தீவிற்கு வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள். ஜாவா தீவை சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்று அழைத்து இருக்கிறார்கள்.

அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியத் தீவுகளுக்குப் பழம் பெரும் தமிழர்கள் சென்று இருக்கிறார்கள். இப்போதைய தமிழர்களுக்குப் பெருமையும் சேர்க்கிறார்கள். அப்படிப் போனவர்களில் பல்லவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.

போன இடங்களில் சின்னச் சின்ன நிலப் பிரபுக்களாக மாறினார்கள். அப்படியே சிற்றரசுகளை உருவாக்கி அழகு பார்த்து இருக்கிறார்கள். அப்படியே பேரரசுகளையும் உருவாக்கி பெரிய பெரிய சகாப்தங்களையும் படைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தோனேசியாவின் வரலாறு இந்தியப் பின்புலத்தில் இருந்து தான் தொடங்குகிறது. அந்தப் பின்புலத்தை இந்தோனேசியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. பரந்த மனத்துடன் மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். மலர்ந்த உணர்வுகளுடன் மனதாரப் போற்றுகிறார்கள்.

இந்தோனேசியாவை 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து உள்ளன. கி.பி. 130-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1500-ஆம் ஆண்டு வரை 1370 ஆண்டுகளுக்கு இந்தியப் பேரரசுகளின் ஆட்சிகள்.

தருமநகரா பேரரசு; ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு; சைலேந்திரா பேரரசு; மேடாங் மத்தாரம் பேரரசு; சிங்காசாரி பேரரசு; பாலி பேரரசு போன்றவை புகழ்பெற்ற பேரரசுகள்.

அவற்றுள் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) உருவாக்கிய பாலி பேரரசு (Bali Kingdom). கி.பி. 914-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1471-ஆம் ஆண்டு வரை பாலி பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. ஏறக்குறைய 550 ஆண்டுகள். பெரிய சாதனை.

கடைசி வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 1471-ஆம் ஆண்டு. ஆச்சரியமாக இல்லை. சிங்கப்பூரில் நீல உத்தமனின் வாரிசுகள் ஆட்சி செய்யும் போது பாலி தீவில் ஸ்ரீ கேசரி வர்மதேவாவின் வாரிசுகளின் ஆட்சி.

இருந்தாலும் 1471-ஆம் ஆண்டு தான் பாலி பேரரசு இந்தியர்களின் பிடியில் இருந்து கைநழுவிச் சென்றது. சரி. சங்கராமா விஜயதுங்கவர்மன் வரலாற்றுக்கு வருவோம்.

சைலேந்திரா பேரரசை 18 அரசர்கள் ஆட்சி செய்து இருக்கின்றார்கள். சைலேந்திரா அரசர்களின் பட்டியல்:

1. சந்தானு (Santanu - கி.பி. 650)

2. தபுந்தா சைலேந்திரா (Dapunta Selendra - கி.பி. 674)

3. சீமா (Shima Kalingga - கி.பி. 674 — 703)

4. மந்திமீனா (Mandimiñak - கி.பி. 703 — 710)

5. சானா (Sanna - கி.பி. 710 — 717)

6. சஞ்சயா (Sanjaya - கி.பி. 717 — 760)

7. ராக்காய் பனங்கரன் (Rakai Panangkaran - கி.பி. 760 — 775)

8. தரநீந்தரன் (Dharanindra - கி.பி. 775 — 800)

9. சமகரகவீரன் (Samaragrawira - கி.பி. 800 — 812)

10. சமரதுங்கா (Samaratungga - கி.பி. 812 — 833)

11. பிரமோதவர்த்தனி ராணியார் (Pramodhawardhani  - கி.பி. 833 — 856)     

12. பாலபுத்ரதேவா (Balaputradewa - கி.பி. 833 — 850)

13. உதயாத்தியவர்மன் (Sri Udayadityavarman - கி.பி. 960)

14. இயாட்சே (Hia-Tche - கி.பி. 980)

15. சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa - கி.பி. 988)

16. மாறன் விஜயதுங்கா (Sri Maravijayottungga  - கி.பி. 1008)

17. சுமத்திரபூமி (Sumatrabhumi - கி.பி. 1017)

18. சங்கராமா விஜயதுங்கவர்மன் - கி.பி. 1025)

இவர்களில் இருவர் மிக மிக முக்கியமானவர்கள். ஒருவர் தரநீந்தரன். அடுத்தவர் சங்கராமா விஜயதுங்கவர்மன்.

தரநீந்தரன் என்பவர் சைலேந்திரா பேரரசின் அரசராக இருந்த காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு; ஜாவாவில் இருந்த சைலேந்திரா பேரரசு; இரு பேரரசுகளும் இணைந்து ஒரே பேரரசாக வடிவம் பெற்றன. கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அதுவரையிலும் சைலேந்திரா பேரரசு ஓர் இந்து சைவ சமயப் பேரரசாக இருந்தது. தரநீந்தரன் படையெடுப்பிற்குப் பின்னர் சைலேந்திரா பேரரசு புத்தச் சமயத்திற்குப் புலம் பெயர்ந்தது. தரநீந்தரன் ஆட்சியில் தான் போரோபுதூர் (Borobudur) ஆலயம் நிர்மாணிப்புப் பணிகளும் தொடங்கின.

சங்கராமா விஜயதுங்கவர்மன். அவரின் ஆட்சி எந்த ஆண்டு முடிவு பெறுகிறது என்பதையும் பாருங்கள். 1025-ஆம் ஆண்டு. அந்த ஆண்டுடன் சைலேந்திரா அரசும் ஒரு முடிவிற்கு வருகிறது. அந்த ஆண்டில் தான் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தார்.

அடுத்து இந்தச் சங்கராமா விஜயதுங்கவர்மன் தான் கடாரம் எனும் பூஜாங் பேரரசையும் ஆட்சி செய்த கடைசி அரசரும் ஆவார்.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Sangrama_Vijayatunggavarman)

சைலேந்திரா பேரரசிற்கும் சோழர்களுக்கும் நல்ல உறவுகள் தான். ஆனால் மாறன் விஜயதுங்க வர்மனுக்குப் பின்னர் தான் பிரச்சினைகள் தொடங்கின. மாறன் விஜயதுங்க வர்மன் என்பவர் சைலேந்திரா அரசர்களில் 16-ஆவது அரசர்.

ஒரு கட்டத்தில் சைலேந்திரா பேரரசின் அரசராகச் சுமத்திராபூமி (Sumatrabhumi) என்பவர் இருந்தார். கி.பி.1017-ஆம் ஆண்டு அரியணை ஏறினார். இவர் சீனா நாட்டுடன் அதிகமாக நட்பு பாராட்டினார். சோழர்களுடன் உறவுகளைக் குறைத்துக் கொண்டார்.

அடுத்து வந்த சங்கராமா விஜயதுங்கவர்மனும் சோழர்களுடன் அதிகமாக நட்பு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மிதமான ஓர் ஏனோ தானோ போக்கு. அத்துடன் சீனாவின் நம்பிக்கையான வார்த்தைகள்.


சீனா இருக்கும் போது ஏன் சோழர்களுக்குப் பயப்பட வேண்டும். அவர்கள் வருவதற்கு முன்னரே நாங்கள் வந்து விடுவோம் எனும் சீனாவின் நம்பிக்கை வாசகங்கள். ஆனால் கடைசி நேரத்தில் சீனா உதவிக்கு வரவில்லை. காலை வாரி விட்டு விட்டது. சங்கராமா விஜயதுங்கவர்மன் ஏமாற்றப் பட்டார்.

கி.பி 960-ஆம் ஆண்டிலேயே சீனா நாட்டுடன் சைலேந்திரா பேரரசு தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உறவை முதன் முதலில் ஏற்படுத்தியவர் ஸ்ரீ உதயாத்திய வர்மன் (Sri Udayadityavarman).

அதன் பின்னர் வந்த சைலேந்திரா அரசர்கள் இயா சே (Hia-Tche), ஸ்ரீ சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa), மாறன் விஜயதுங்க வர்மன் (Maran Vijaya Ttunga Varman), சுமத்திராபூமி (Sumatrabhumi), சங்கராமா விஜயதுங்கவர்மன்.

சீனாவுடன் நெருக்கமானதும் சோழர்களுடன் நட்பு குறைந்து போனது. அது மட்டும் இல்லை. சோழர்களுக்கு எதிராகவே சைலேந்திரா அரசர்கள் செயல்படத் தொடங்கினார்கள். அதனால் வந்த வினைதான் இராஜா ராஜ சோழனின் படையெடுப்பு.

கடாரத்தைக் கடைசி கடைசியாக ஆட்சி செய்த சங்கராமா விஜயதுங்கவர்மனின் அசல் பெயர் ராமா விஜயா துங்கா வர்மன் (Rama Wijaya Tungga Warman). இவர் சுமத்திரா பலேம்பாங்கில் இருந்து கடாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

Sangrama Vijayatunggavarman or Sangramavijayottunggavarman or Sang Rama Wijaya Tungga Warman was an emperor of Srivijaya of Sailendra dynasty.

சங்கராமா விஜயதுங்கவர்மன் ஸ்ரீ விஜய பேரரசின் கடைசி அரசராக இருந்தாலும், இவர் சைலேந்திரா அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.

சைலேந்திரா பேரரசின் வழியாக வந்தவர்கள் தான் சைலேந்திர அரசப் பரம்பரையினர். இவர்கள் தான் ஸ்ரீ விஜய பேரரசைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள்.

சைலேந்திரா அரசப் பரம்பரையினர் இல்லாமல் ஸ்ரீ விஜய பேரரசு என்பதும் இல்லை. மஜபாகித் பேரரசும் இல்லை. ஆக சைலேந்திரா பேரரசு என்றால் அது ஒரு வகையில் ஸ்ரீ விஜய பேரரசைச் சார்ந்ததே.

சைலேந்திரா பேரரசுடன் ஸ்ரீ விஜய பேரரசுடன் இணைக்கப் பட்டதால் ஸ்ரீ விஜய பேரரசின் பெயர் தான் முன்னிலைப் படுத்தப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னோடியாக இருந்தது சைலேந்திரா பேரரசு ஆகும்.

சங்கராமா விஜயதுங்கவர்மனின் பெயர் தஞ்சை பெரிய கோயிலின் கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கிறது. 1030-ஆம் ஆண்டு கல்வெட்டுகள். கடாரம் கொண்ட இராஜேந்திர சோழனின் வெற்றிகளைப் பற்றிய ஒரு மெய்க்கீர்த்தி. அதில் சங்கராமா விஜயதுங்கவர்மனின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.

மெய்க்கீர்த்தி என்பது அரசர்களின் புகழ், கொடை, போர்ச் சிறப்புக்களைப் பற்றிக் கதை கூறும் பாடல் வகையாகும். பெரும்பாலும் அவை அகவல்பாவில் அமைந்து உள்ளன.

பூஜாங் பள்ளத்தாக்கில் சங்கராமா விஜயதுங்கவர்மன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள்.

அந்தப் புழுதிப் படர் மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள். கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள். அந்தப் பச்சைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஓராயிரம் கடாரத்து வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

இப்போது சிலர் வேறு மாதிரியாகக் கதை சொல்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் பள்ளத்தாக்கில் எங்கள் பாட்டி வடை சுட்டார்; எங்கள் தாத்தா இட்லிக்கு சாம்பார் விற்றார். எங்கள் மூதாதையர் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் கதை சொல்கிறார்கள்.

கேட்க நன்றாக இருக்கிறது. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே எனக்கும் படுகிறது.

1370 ஆண்டுகளாக இந்திய வம்சாவழியினர் இந்தோனேசியாவின் சுமத்திரா ஜாவா தீவுகளையும்; கடாரத்தையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆக கணிசமான அளவிற்கு அங்கே இந்திய இரத்தம் கலந்து இருக்கலாம். வாய்ப்புகள் உள்ளன. எனக்குள் ஒரு கேள்வி.

அங்கு இருந்து பக்கத்து பக்கத்து நாடுகளுக்குப் பல இலட்சம் பேர் குடியேறி இருக்கிறார்கள். அவர்களின் உடலில் என்ன மாதிரியான இரத்தம் ஓடலாம் அல்லது ஓடிக் கொண்டு இருக்கலாம். தெரியவில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சான்றுகள்:

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2020

1. Muljana, Slamet (2006). F.W. Stapel, ed. Sriwijaya. PT. LKiS Pelangi Aksara.

2. Coedes, George (1996). The Indianized States of Southeast Asia. University of Hawaii Press. pp. 142&143.

3. Boechari (1966). "Preliminary report on the discovery of an inscription at Sojomerto". MISI. III: 241–251.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக