20 செப்டம்பர் 2020

கடாரம் பூஜாங் பள்ளத்தாக்கு நடராஜன்

மலேசிய வரலாற்று ஆசிரியர். பூஜாங் நடா என்று அன்புடன் அழைக்கப் படுகிறவர். டாக்டர் ஜெயபாரதிக்கு அடுத்த நிலையில் கடாரத்து வரலாற்றுக் காற்றைச் சுவாசிக்கும் அழகிய மகனார்.

நாளைய சமுதாயத்திற்கு நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர். இருபது ஆண்டு கால ஆய்வுகள்.

எந்த நேரத்தில் எங்கே இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம் சுங்கை பட்டாணி அமான் ஜெயாவில் பார்த்தேன். நீண்ட நேரம் பேசினோம். அடுத்த நாள் பினாங்கில் பார்க்கிறேன்.

என்னங்க டத்தோ என்று கேட்டால், அது அப்படித் தான் என்பார். சமயங்களில் அவரின் நகைச்சுவை பேச்சில் ஊசி மிளகாய் உரைப்புகள் வந்து போகும்.

ஒரு தடவை மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரான்சிஸ் சில்வன் அவர்களைப் பார்ப்பதற்குத் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிற்குச் சென்று இருந்தேன்.

சாட் மசாலா உணவகத்தில் சந்திப்பு. உள்ளே போகிறேன். அங்கே பூஜாங் நடராஜா. தனி ஒரு மேசையில் தனிமையில் அமர்ந்து இருந்தார். அருகில் தேநீர் கோப்பை.

மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி என்னைப் பார்க்கிறார். முகத்தில் மகிழ்ச்சி அலைகள். மலேசிய இந்தியர்கள் சார்ந்த வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுக்கும் பணிகளில் இருவருமே ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சுவாசக் காற்றுகளின் அலைகள்.

’இன்று பூஜாங் வரலாறு பற்றி சிலாங்கூர் ஆசிரியர்களிடம் ஒரு மேடைப் பேச்சு. பெரிய இடத்துப் பெரிசுகளைப் பற்றியும் அழுத்தமாகப் பேசப் போகிறேன். வர்றீங்களா மலாக்கா’ என்றார்.

’என் மீது ஒரு கறுப்புப் புள்ளி வைக்கப் படலாம். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை மலாக்கா. வருவது வரட்டும்’ என்றார். என்னை மலாக்கா என்று அழைப்பார்.

இவர் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலாயா தமிழர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும். அவருடைய ஆய்வுப் பணிகளுக்கு மலாயா தமிழர்கள் அனைவரும் துணையாக இருப்போம்.

மலாயா தமிழர்கள் கண்டு எடுத்த மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. நடமாடும் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.09.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக