05 செப்டம்பர் 2020

ஜாவா விஷ்ணு ஆலயங்கள்

 தமிழ் மலர் - 19.07.2020

இந்தோனேசியா வரலாற்றில் மிகப் பழமையான பேரரசுகளில் முதலாவது சாலகநகரப் பேரரசு. அடுத்துப் பழைமையானது கூத்தாய் பேரரசு. மூன்றாவதாக வருவது தர்மநகரா பேரரசு.

இந்தத் தர்மநகரா பேரரசு கி.பி. 358–ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 669-ஆம் ஆண்டு வரை மேற்கு ஜாவாவை ஆட்சி செய்த பேரரசு. அந்தப் பேரரசை உருவாக்கியவர் ஜெயசிங்க வர்மன் (Rajadirajaguru Jayasingawarman).

இவரின் வாரிசுகள் மேற்கு ஜாவாவில் நிறைய ஆலயங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள். அனைத்தும் 1600 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஆலயங்கள். களிமண்ணையும்; வைக்கோல்களையும்; சுண்ணாம்பையும் பிசைத்துக் கட்டிய திருமூர்த்தி ஆலயங்கள்.

கால ஓட்டத்தில் அந்த ஆலயங்கள் அனைத்துமே மண்ணுக்குள் புதைந்து போயின. 1600 ஆண்டுகள் என்பது சாதாரண கால இடைவெளி அல்ல. ஒரு பெரிய நீண்ட காலப் பரப்பு வெளி.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் ஒரு 36 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்த ஆலயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எல்லாமே வயல்காடுகளில் புதைந்து கிடந்து இருக்கின்றன.

ஜெயசிங்க வர்ம அரசரின் தலைமுறையினர் ஏறக்குறைய 30 ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள். அவற்றில் 17 ஆலயங்கள் மட்டுமே மீட்கப் பட்டன. மற்றவை சிதைந்த நிலையில் இன்னும் மண்ணுக்குள் இருக்கின்றன.

மீட்கப்பட்ட ஆலயங்கள் இப்போது இந்தோனேசியாவின் தேசியக் கலாச்சார பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தோனேசியாவின் கல்வி, கலாச்சார அமைச்சு, அந்தப் பகுதிக்கு பத்துஜெயா கோயில் வளாகம் (Batujaya Temple complex) என பெயரிட்டு உள்ளது, இந்த வளாகத்தை உலக அளவில் விளம்பரப் படுத்த இந்தோனேசிய அரசாங்கம் இப்போது முழுமூச்சாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

(The declaration is stated in Education and Culture Ministerial Decree No.70/2019, signed by the minister, Muhadjir Effendy, on March. 11 in Jakarta.)

இதுதான் அண்மைய காலத்து இந்தோனேசிய வரலாற்றில் மிகவும் முக்கியமான செய்தியாகும்.

ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் பத்து ஜெயா (Batujaya). இந்த ஆலய வளாகம் இந்தோனேசியா, மேற்கு ஜாவா, கரவாங் (Karawang) எனும் இடத்தில் உள்ளது. இப்போது இந்த இடம் ஒரு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தளம் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அந்த இடத்தில் உள்ள ஆலயங்களைச் சுந்தானிய (Sundanese) மக்கள் ஊனூர் (Unur) என்று அழைக்கிறார்கள். ஊனூர் என்றால் கலைப் பொருட்களைக் கொண்ட பூமியின் உயர் மேடுகள்.

மேற்கு ஜாவா வயல் காடுகளில் புதைந்து கிடந்த ஆலயங்களை மீட்டு எடுப்பதற்கு அமெரிக்காவின் போர்ட் கார் தயாரிப்பு நிறுவனம் (Ford Motor Company) பத்து கோடி ரிங்கிட் செலவு செய்து உள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் ஐந்து கோடி வழங்கி உள்ளது. இந்தோனேசியாவின் பக்கத்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஆனந்க் கோடீஸ்வரர் ஒரு கோடி ரிங்கிட் வழங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.

மீட்புப் பணிகளில் இந்தோனேசிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு வரலாற்று அறிஞர்கள் குழுவை உருவாக்கி இருக்கிறது. அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கு அனைத்து வகையிலும் அதிகாரப் பூர்வமான ஆதரவுகளையும் வழங்கி வருகிறது.

அகழ்வாராய்ச்சிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு தனி இராணுவக் குழுவைக்கூட அமைத்துக் கொடுத்து இருக்கிறது. வெளியே பலருக்கும் தெரியாத தகவல்கள்.

இந்த நிதியுதவிகளைக் கொண்டுதான் மண்ணுக்குள் புதைந்து இருக்கும் மற்ற மற்ற ஆலயங்களையும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் அந்த ஆலயங்கள் சிதைவு பெறாமல்; நலிவு பெறாமல் நயனங்கள் பாடுகின்றன. ஆனால் என்ன... களிமண்; மணல்; வைக்கோல்; சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட திருமூர்த்தி ஆலயங்கள். இன்றும் நிமிர்ந்து நின்று வீரவசனங்கள் பேசுகின்றன.

ஆலயங்களைக் கட்டுவதற்கு அவர்கள் எரிமலைக் கற்களையும் எரிமலைப் படிகக் கற்களையும் பயன்படுத்தவில்லை. ஏன் என்றால் அந்தக் கற்கள் வெகு தொலைவில் இருந்தன. பல நூறு மைகளுக்கு அப்பால் இருந்தன.

மீட்கப்பட்ட ஆலயங்களில் இந்து தெய்வமான விஷ்ணு முதன்மைப் படுத்தப் பட்டு இருக்கிறார்.

மீட்கப்பட்ட கட்டமைப்புகளில் இரு அமைப்புகள் இப்போதைய கோயில்களின் வடிவத்தில் aமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு ஜீவா கோயில் (Jiwa Temple) என்று இந்தோனேசியர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தோனேசியா பாண்டுங் தொல்பொருள் அமைப்பின் (Bandung Archeology Agency) தலைவரான டாக்டர் டோனி ஜுபியான் டோனோவின் (Dr Tony Djubiantono) கூற்றுப்படி, 2-ஆம் நூற்றாண்டில் ஜீவா கோயில் கட்டப்பட்டது.

இந்தோனேசியாவில் உள்ள கோயில்களை அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. ஏன் என்றால் அந்தக் கோயில்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்த அரசர்களால் கட்டப்பட்டவை ஆகும். அதனால் அவர்கள் பிரித்துப் பார்க்கவும் முயற்சி செய்யவில்லை.

1863-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதற்கு சியாரூட்டூன் கல்வெட்டு (Ciaruteun inscription) என்று பெயர். ஓர் ஆற்றின் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. 5-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.

இந்திய பல்லவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெங்கி எழுத்துக்கள்; சமஸ்கிருத எழுத்துக்களில் இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டு உள்ளது. "தருமநகரா" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான தர்மநகர மன்னன் பூரணவர்மன் (Purnawarman) என்பவரைப் பற்றியும் கூறுகிறது.

சீனப் பௌத்த துறவி பா சியான் (Fa Xian) என்பவர் தன்னுடைய போ - கு - சி (fo-kuo-chi ) எனும் நூலில் தர்மநகராவைப் பற்றி எழுதி இருக்கிறார். கி.பி. 414-ஆம் ஆண்டில், ஜாவா தீவின் ஜாவதீவிபா (Javadvipa) எனும் இடத்தில் ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகவும்; அப்போது தர்மநகராவில் விஷ்ணு ஆலயங்கள் இருந்ததாகவும் அவர் எழுதி இருக்கிறார்.

சியாரூட்டூன் கல்வெட்டில் எழுதப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தர்மநகரா பேரரசு, கி.பி 358-ஆம் ஆண்டில் ராஜாதி ராஜகுரு ஜெயசிங்கவர்மனால் (Rajadirajaguru Jayasingawarman) நிறுவப் பட்டது என்று நிபுணர்கள் முடிவு செய்கின்றனர்.

கி.பி.382-ஆம் ஆண்டில் ஜெயசிங்கவர்மன் காலமானார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் தர்மயவர்மன் (Dharmayawarman) கி.பி 358-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 395-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். தர்மநகராவின் அடுத்த மன்னர் பூர்ணவர்மன். இவரின் ஆட்சிக் காலம் கி.பி 395 - கி.பி. 434. இவர்தான் கி.பி 397-ஆம் ஆண்டில் சுந்தபுரா (Sundapura) என்கிற புதிய தலைநகரைக் கட்டியவர்.

தர்மநகரா பேரரசை 12 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். கடைசி மன்னர் லிங்காவர்மன். இவர் கி.பி 669-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்.

கி.பி 670-ஆம் ஆண்டில், தர்மநகரா பேரரசு இரண்டாகப் பிரிந்தது. சுந்தா அரசு (Sunda Kingdom) என்றும் கலூ அரசு (Galuh Kingdom) என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

தர்மநகரா பேரரசை ஆட்சி செய்த அரசர்கள்

1. ஜெயசிங்கவர்மன் (Jayasingawarman 358 - 382)

2. தர்மயவர்மன் (Dharmayawarman 382 - 395)

3. பூர்ணவர்மன் (Purnawarman 395 - 434)

4. விஷ்ணுவர்மன் (Wisnuwarman 434 - 455)

5. இந்திரவர்மன் (Indrawarman 455 - 515)

6. சந்திரவர்மன் (Candrawarman 515 - 535)

7. சூர்யவர்மன் (Suryawarman 535 - 561)

8. கீர்த்தவர்மன் (Kertawarman 561 - 628)

9. லிங்கவர்மன் (Linggawarman 628 - 650)

10. தருசியபாவன் (Tarusbawa 670 - 690)

இதன் பின்னர் தர்மநகரா பேரரசு இரண்டாகப் பிரிந்து விட்டது. இந்தப் பேரரசு பிரிவதற்கு முன்னர் தான் விஷ்ணு ஆலயங்கள் கட்டப்பட்டன. கால வெள்ளத்தில் புதைந்து போயின. இப்போது மீட்டு எடுத்து வருகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில், மேற்கு ஜாவாவின் பல்வேறு இடங்களில் பல புதிய புதிய வரலாற்றுத் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கம்போங் பூஜோங் மிஞ்சாவில் உள்ள பூஜோங் மிஞ்சா கோயில்; 1977-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரோங்கேங் அல்லது பாமரிக்கன் கோயில் (Ronggeng Temple or Pamarican Temple); கராவாங் மாவட்டத்தில் பத்துஜெயா கோயில் வளாகம் (Batujaya Temple complex); சங்குவாங் கிராமத்தில் உள்ள சங்குவாங் கோயில் (Cangkuang Temple).

இந்தக் கோயில்கள் எப்போது, யாரால் கட்டப் பட்டன என்பது குறித்த உண்மைகள் இன்னும் மிகச் சரியாக வெளிப்படுத்தப் படவில்லை. இருந்தாலும் வரலாற்று ஆய்வாளர்கள் அயராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு பக்கம் சிதைந்து போனவற்றை எல்லாம் தூசு தட்டி மீட்டு எடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் இருப்பதை எல்லாம் இரவோடு இரவாக இடித்துப் போட்டு விட்டுப் போகிறார்கள். மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம். ஒரு தனிப்பட்ட பதிவு.

இந்தோனேசியாவின் ஆலயங்களைப் பற்றி எழுதி வரும் அடியேன் என்னை தமிழன் அல்ல என்றும்; இந்து சமயத்தின் அடிவருடி என்றும் ஊடகங்களில் திட்டித் தீர்க்கிறார்கள். இந்தோனேசியாவின் ஆலயங்களை வரலாற்று அடிப்படையில் தான் பார்க்கிறோம். அவற்றின் வரலாற்றைத் தான் தூசு தட்டிப் பார்க்கிறோம். போற்றுவார் போற்றட்டடும். தூற்றுவார் தூற்றட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2020

சான்றுகள்:

1. https://candi.perpusnas.go.id/temples_en/deskripsi-west_java

2. https://www.southeastasianarchaeology.com/…/batujaya-templ…/

3. "Batujaya Temple complex listed as national cultural heritage". The Jakarta Post. April 8, 2019.

4. Candi Batujaya Dibangun dengan Teknologi Canggih -
https://web.archive.org/…/www.pikiran-rakyat.com/node/127026

5. https://en.wikipedia.org/wiki/Batujaya


பேஸ்புக் பதிவுகள்


Vimal Sandanam: காய்க்கிற மரத்துக்குதான் கல்லடி ஐயா. உண்மையைத்தானே எடுத்து இயம்புகின்றீர்கள்.இதில் தவறு இல்லையே ஐயா.புதையுண்டு போன கோயில்கள் எப்படி ஐயா சிதைவடையாமல் உள்ளன?வாழ்த்துக்கள் ஐயா

Letchmy Chengodam: அருமையான தகவல்கள். நன்றிங்க ஐயா.

Elan Ada: அருமையான தகவல்.நன்றி.

Kumar Murugiah Kumar's: பகிர்வு அருமை ஐயா ! தொடருங்கள் ஐயா !வாழ்த்துகள்

Balasubramaniam Muthusamy:

Shanker Muniandy: இந்தோனேஷியாவின் மறுபக்க வரலாறுகளை குறிப்பாக தமிழர்களுக்கு தெரிய வைத்தமைக்கு நன்றிகள் பல ஒவ்வொன்றும் பொக்கிஷம். உங்களின் போற்றத்தக்க பனி தொடரட்டும்.

Avadiar Avadiar: Nalla tagaval Ayya

M Krisnan Achari:

R Muthusamy Rajalingam:
அருமை ஐயா. ஒரு கேள்வி, இந்தோனேசிய பண்டைய பேரரசர்கள், அன்றைய இந்திய பெருநிலத்திலிருந்து, இந்தோனேசிய வந்து ஆட்சி அமைத்தவர்களா? அல்லது உள்ளூர் வாசிகள் இந்து கலாச்சாரங்களை ஏற்றுக் கொண்டு, அரசுகளை உருவாக்கினார்களா?

Jeeva Nathan: Nanri ayya

இராமசாமிகவுண்டர்:
உங்கள் பணி மகத்தானது. பணி தொடரட்டும். இவண். புலவர் இராமசாமி தமிழ்நாடு நாமக்கல்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக