05 செப்டம்பர் 2020

சொஜோ மெர்த்தோ ஜாவா கல்வெட்டு கி.பி. 725

இந்தோனேசியா, மத்திய ஜாவா, பாத்தாங் மாநிலம் (Batang Regency), ரெபான் மாவட்டம் (Reban), சொஜோமெர்த்தோ (Sojomerto) கிராமம். அங்கே ஒரு கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். கி.பி. 725 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு. சொஜோ மெர்த்தோ கல்வெட்டு (Sojomerto inscription) [#1] என்று பெயர்.

[#1] Boechari, M. (1966). "Preliminary report on the discovery of an Old Malay inscription at Sojomerto". MISI. III: 241–251.

2007-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. ஓர் எரிமலைப் படிகப் பாறையில் (Andesite) எழுதப்பட்டு உள்ளது. அதன் அகலம் 43 செ.மீ. பருமன் 7 செ.மீ. உயரம் 78 செ.மீ. அதில் 11 வரிகள் உள்ளன.

பெரும்பாலான எழுத்துகள் தெளிவாக இல்லை. இருப்பினும் நவீன தொழில் நுட்பத்தின் உதவியினால் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து விட்டார்கள்.

அந்தக் கல்வெட்டில் சைலேந்திரா (Selendra) என்று பொறிக்கப்பட்டு உள்ளது. [#2] அதன் பின்னர் சைலேந்திரப் பேரரசை உருவாக்கியவர்கள் சைலேந்திரா வம்சாவழியினர் என்று தெரிய வந்தது.

[#2] Candi, Space and Landscape: A Study on the Distribution, Orientation and ...
Véronique Degroot - Architecture - 2009 - 497

சந்தானு (Santanu) - பத்ராவதி (Bhadrawati); இவர்களுடைய மகன் தபுந்தா சைலேந்திரர் (Dapunta Selendra). இவர் தான் சைலேந்திரா பேரரசை உருவாக்கி விரிவாக்கம் செய்தவர். தபுந்தா சைலேந்திரர் மனைவியின் பெயர் சம்புலா (Sampula). இவர்கள் பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். [#3]

[#3] The inscription is Shivaist in nature, talking about the head of a noble family named Dapunta Selendra, the son of Santanu and Bhadrawati, the husband of Sampula.

சைலேந்திரர்களால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள் மூன்று மொழிகளைப் பயன்படுத்துகின்றன. சமஸ்கிருதம்; பழைய மலாய் (Old Malay); பழைய ஜாவானிய மொழி (Old Javanese); சமஸ்கிருதம் என்பது காவி (Kawi) எழுத்துக்களில் அல்லது நாகராவுக்கு முந்தைய எழுத்துக்கள் (Pre Nagari Script).

அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகள்:

... ryayon sri sata
... a koti
... namah sivaya
... bhatara paramesva
... ra sarvva daiva ku samvah hiya
... mih inan isanda dapu
... nta selendra namah santanu
... namaanda bapanda bhadravati
... namanda ayanda sampula
... namanda vininda selendra namah
... mamagappasar lempewangih

மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில்:

Praise to Lord Shiva Bhatara Parameshvara and all the gods.
... from the honorable Dapunta Selendra

Santanu is the name of his father, Bhadrawati is the name of his mother, Sampula is the name of the wife of noble Selendra.

மொழிபெயர்ப்பு தமிழில்:

சிவன் பத்தாரா பரமேஸ்வரர் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் துதி.
கெளரவமான தபுந்தா சைலேந்திராவிடம் இருந்து...

சந்தானு என்பது அவரது தந்தையின் பெயர். பத்ராவதி என்பது அவரது தாயின் பெயர். சம்புலா என்பது உன்னத சைலேந்திராவின் மனைவியின் பெயர்.

சான்று: Boechari, M. (1966). "Preliminary report on the discovery of an Old Malay inscription at Sojomerto". MISI. III: 241–251.

அந்தக் கல்வெட்டு இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தைச் சார்ந்தது (The inscription is Shivaist in nature). அந்த கல்வெட்டின் ஓவியச் செதுக்கல்களில் சைவ சமயத்தின் வடிவங்கள் இருக்கின்றன.

சைலேந்திரா அரசர்கள் தொடக்கக் காலத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றி இருக்கிறார்கள் (Hindu Shaivist). பின்னர் மகாயன பௌத்தத்திற்கு (Mahayana Buddhism) மாறி இருக்கிறார்கள்.

இந்தக் கல்வெட்டு வாசகங்கள், தபுந்தா சைலேந்திராவின் குடும்பம் மத்திய ஜாவாவின் வடக்கு கடற்கரையில் குடியேறியது. அவர்கள் சைவ இந்துக்கள் என்று முடிவு அடைகிறது.

இந்த கல்வெட்டின் கண்டுபிடிப்பு சைலேந்திரர்கள் சுமத்திராவில் இருந்து வந்தவர்கள் என்று உறுதிப் படுத்துகிறது. தவிர அவர்கள் மத்திய ஜாவாவின் வடக்கு கடற்கரையில் இருந்து கேது சமவெளிக்குப் (Kedu Plain) புலம் பெயர்ந்தவர்கள் என்பதற்கான சாத்தியக் கூறுகளையும் முன்வைக்கிறது.

சைலேந்திரர் குடும்பம் முதன்முதலில் மத்திய ஜாவா வடக்கு கடற்கரையில் குடியேறியது. இவர்கள் ஆரம்பத்தில் இந்து சிவா பக்தர்கள். பின்னர் இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து கேது சமவெளியில் நிலைநிறுத்திக் கொண்டனர். பின்னர் மகாயான பௌத்த மதத்திற்கு மாறி உள்ளனர்.[#4]

[#4]. https://www.britannica.com/topic/Shailendra-dynasty

இந்தக் கல்வெட்டைப் போல மேலும் பல கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன. இந்திய வம்சாவழியினர் (பல்லவர்கள்) இந்தோனேசியாவை ஆட்சி செய்த வரலாறு அந்தக் கல்வெட்டுகளின் மூலமாகத் தெளிவு பெறுகிறது. இந்தச் சான்றுகள் ஒரு பனிமலையில் ஒரு கல். இதுவரை கிடைத்து உள்ள சில கல்வெட்டுகள்.

1. கங்கால் கல்வெட்டு (Canggal inscription - கி.பி. 732)

2. கலாசான் கல்வெட்டு (Kalasan inscription - கி.பி. 778)

3. கேலுராக் கல்வெட்டு (Kelurak inscription - கி.பி. 782)

4. மஞ்சு ஸ்ரீகிரக கல்வெட்டு (Manju Srigrha inscription - கி.பி. 792)

5. காராங் தெங்கா கல்வெட்டு (Karangtengah inscription - கி.பி. 824)

6. திரி தெபுசான் கல்வெட்டு (Tri Tepusan inscription - கி.பி. 842)

இந்தக் கல்வெட்டுகளை ஒவ்வொன்றாகப் பின்னர் அறிமுகம் செய்கிறேன். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.09.2020

சான்றுகள்:

1. Zakharov, Anton A (August 2012). "The Śailendras Reconsidered" (PDF). nsc.iseas.edu.sg. Singapore: The Nalanda-Srivijaya Centre Institute of Southeast Asian Studies.

2. Zakharov, Anton A (August 2012). "The Śailendras Reconsidered" (PDF). nsc.iseas.edu.sg. Singapore: The Nalanda-Srivijaya Centre Institute of Southeast Asian Studies.

3. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and Malay Peninsula.

4. De Casparis, J.G. de (1956). Prasasti Indonesia II : Selected inscriptions from the 7th to the 9th centuries AD. Bandung: Masu Baru, 1956


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக