தமிழ் மலர் - 07.12.2020
செரோக் தெக்குன் கல்வெட்டு. மலாயா வரலாற்றில் மலையூர் தமிழர்களின் மற்றும் ஒரு காலச்சுவடு. மறைந்து வரும் மலாயா தமிழர்களின் வரலாற்றில் மறைக்க முடியாத ஒரு தொன்மைச் சுவடு. அட்சரேகை ஆசீர்வதிக்கும் அருஞ்சுவடு. அப்படியே தீர்க்க ரேகை தீர்த்தம் அளிக்கும் திருச்சுடர் திருச்சுவடு. அதுவே புக்கிட் மெர்தாஜாம் செரோக் தெக்குன் புனிதச் சுவடு.
இதற்கு அருகிலேயே மற்றும் ஓர் ஆலயச் சுவடு. பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் புனித அன்னாள் தேவாலயம். உலகப் புகழ்பெற்ற புனித ஆலயம். கோடிக் கணக்கான பக்தர்களின் கோபுர வாசல். 1846-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஓர் அழகு பளிங்குச் சிருங்காரம். மலாயா வரலாற்றில் மற்றும் ஒரு வரலாற்றுப் பேரிகை.
Cherok Tok Kun Inscription at Bukit Mertajam, Penang is the only ancient Stone Age monument and the oldest such inscription in Malaysia. The inscription was found in the foothills of St. Anne's Church. Cherok Tok Kun Inscription is inscripted in Tamil language; Pallava language and Sanskrit. The inscription written in black stone 1500 years ago.
அதன் வளாகத்திலேயே இன்னும் ஒரு நினைவுச் சின்னம். அதுதான் இந்தச் செரோக் தெக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tokun Relics).
இந்தக் கல்வெட்டு நினைவுச் சின்னத்திற்கும் மலையூர் தமிழர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. அதற்கான சான்றுகளும் உள்ளன. இங்கே தமிழர்கள் எப்படி வருகிறார்கள். அவர்களை இங்கே இதில் முடுச்சுப் போட வேண்டாம் என்று சிலர் சொல்லலாம்.
The Cherok Tok Kun Inscription was discovered by Lt. Col. James Low in 1845. It signifies of the ancient Indian - Hindu - Buddhist presence in Malaysia. A King by the name of Ramanibar ruled over the areas of Bujang Valley and areas around Bukit Mertajam. There was a war against him. In that battle the king of the opposing country was defeated. King Ramanibar won and claimed victory.
பிரச்சினை இல்லை. முந்தானை முடுச்சும் போடவில்லை. மூன்று முடிச்சும் போடவில்லை. சாட்சிக்கு மூகுத்தி அம்மனை அழைக்கவும் இல்லை.
செரோக் தெக்குன் கல்வெட்டில் பாலி மொழியைச் சார்ந்த பல்லவ எழுத்துகள் உள்ளன. தமிழ் மொழியைச் சார்ந்த தமிழ் எழுத்துகள் உள்ளன. சமஸ்கிருத எழுத்துகளும் கலந்து வருகின்றன. மறுபடியும் சொல்கிறேன். அந்தக் கல்வெட்டில் தமிழ் எழுத்துகள் உள்ளன. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
செரோக் தெக்குன் கல்வெட்டு இருக்கிறதே இது மலேசியாவில் மாறுபட்ட ஒரு வரலாறுக்குச் சான்றாய்ச் சாட்சியம் அளிக்கிறது. மற்றொரு மாறுபட்ட நினைவுச் சின்னம் என்று சொல்லலாம். தப்பு இல்லை.
The 6th century inscriptions describe the heroic efforts of an Indian king, Ramanibar, who vanquished and completely destroyed his enemies in a devastating battle.
மலேசிய அருங்காட்சியம்; மலேசியத் தொல்லியல் துறை; ஆகிய இந்த இரு வரலாற்று அமைப்புகளும் அங்கீகரித்த கருங்கல் பாறையைத் தான் செரோக் தெக்குன் கல்வெட்டு என்று அழைக்கிறோம்.
மலேசியாவின் தொன்மைமிக்க ஒரே பழைய கற்கால நினைவுச் சின்னம் இதுதான். இப்படிப்பட்ட மிகப் பழைமையான கல்வெட்டுச் சின்னம் இதுவரை மலேசியாவில் கிடைக்கவில்லை.
கருங்கல்லில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டைப் புனித அன்னாள் தேவாலயம் (St Anne Church) வளாகத்தின் அடிவாரத்தில் கண்டுபிடித்தார்கள். சரி.
அந்தக் கல்வெட்டின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம். மலாயா வரலாற்றில் ஜேம்ஸ் லோ (Lt. Col. James Low) என்பவரின் பங்களிப்புகள் அசாத்தியமானவை. ஆனாலும் அவரைப் போல எத்தனையோ வரலாற்றுக் கண்டுபிடிப்பாளர்கள் வந்து போய் இருக்கலாம்.
ஆனால் ஜேம்ஸ் லோ, உள்ளதை உள்ளபடியாக எழுதிவிட்டுச் சென்று இருக்கிறார். ஒரு காலக் கட்டத்தில் அவருடைய வரலாற்றுக் கண்டுபிடிப்புகளையும்; வரலாற்றுப் பார்வைகளையும் எப்படி எப்படி எல்லாமோ மறைத்தார்கள். என்ன என்னவோ செய்து பார்த்தார்கள்.
யார் எவர் என்று கேட்க வேண்டாம். நீங்களே தாராளமாய் அனுமானிக்கலாமே. இருப்பினும் உண்மையான உண்மைகள் நிலைத்து விட்டன. ஒரு தனிப்பட்ட செருகல்.
நம்மிடம் உருப்படியான வரலாறு இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் உலகத்தாரின் கண்களைக் கட்டி புதிய வரலாறுகளை உருவாக்கலாம். அது தெரியுமா உங்களுக்கு?
சில இடங்களில் அப்படித்தான் நடக்கின்றன. எந்த இடங்கள் என்று கேட்க வேண்டாம். இட்லியும் இடியப்பமும் எங்கள் பாட்டி சுட்டுச் சம்பாதித்தப் பாரம்பரியச் சொத்து என்று சொல்கிறவர்கள் சிலர் சண்டைக்கு வரலாம். ஊர்ப் பொல்லாப்பு வேண்டாமே.
பினாங்கு; புக்கிட் மெர்தாஜாம்; செரோக் தெக்குன்; செபராங் பிறை (புராவின்ஸ் வெல்லஸ்லி) ஆகிய பகுதிகள் பண்டைய கடாரத்தின் ஒரு பகுதியாகும். கடாரம் பரந்த படர்ந்த ஒரு பெரும் பகுதி. பல்லவத் தமிழர்கள் ஆட்சி செய்த பகுதி.
கடாரம் எனும் தமிழ்ப் பெயரில் இருந்து தான் கெடா எனும் பெயர் தோன்றியது. மாற்றுக் கருத்துகள் இல்லை. கடாரம் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் சமவெளியில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு.
அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்றும் அழைக்கலாம். பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம். தப்பு இல்லை. ஏன் தெரியுங்களா.
கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. 2000 – 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாறு. கெடா மாநிலத்தின் சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
சுங்கை பத்து ஆய்வு மையம், சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.
The Sungai Batu Archaeological site in the Bujang Valley is now certified as dating back to 582 BC instead of 535 BC previously, making it by far the oldest recorded civilisation in the South East Asian region and among the oldest in Asia.
ஆக கெடாவின் வரலாறு மிகப் பழைமையானது என்று சொல்ல இது ஒரு தகவல் போதுமே.
கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள பொரோபுடுர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடார நாகரிகம் உருவாகி விட்டது என்று பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் கூறுகிறார்.
(https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115)
மலாக்காவின் வரலாற்றையும், சிங்கப்பூர் வரலாற்றையும், சுமத்திரா ஜாவா வரலாற்றையும், கடாரத்து வரலாறு எங்கேயோ கொண்டு போய் எங்கேயோ ஒரு புறமாய் ஒதுக்கித் தள்ளி விடுகிறது.
ஆக மலாயாவின் பன்னெடுங்கால வரலாற்றில் கெடா வரலாறு என்பது தான் முதன்மையானது; தலைமையானது. இதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். சரி.
செரோக் தெக்குன் கல்வெட்டைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்குச் சொன்னவர் ஜேம்ஸ் லோ. 1842-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. ஜேம்ஸ் லோ அந்தக் காலக் கட்டத்தில் ஆங்கியர்கலின் இராணுவ அதிகாரியாகப் பணி புரிந்தார். லெப்டினண்ட் கானல் பதவி.
அடுத்தபடியாக இவர்தான் 1849-ஆம் ஆண்டில் கெடா வரலாற்றுப் பதிவேடுகளையும் (Kedah Annals) கண்டுபிடித்தார். கெடா வரலாற்றுப் பதிவேடுகளின் மற்றொரு பெயர் மாறன் மகாவம்சன் (Merong Mahawangsa) பதிவேடுகள்.
அதன் பின்னர் 1864-ஆம் ஆண்டு பூஜாங் சமவெளியைக் கண்டுபிடித்துச் சொன்னார். பூஜாங் சமவெளி சுங்கை பட்டாணி நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்தப் பகுதியில் 2010-ஆம் ஆண்டுகளில் பல வாரங்கள்; பல மாதங்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளேன். அந்த ஆய்வுகளுக்கு ஜேம்ஸ் லோவின் வரலாற்றுப் படிமங்கள் பேருதவியாய் அமைந்து உள்ளன.
செரோக் தெக்குன் கல்வெட்டு; கெடா வரலாற்றுப் பதிவேடு; பூஜாங் சமவெளி; கடாரம்; சுங்கை பத்து; சுங்கை மெர்போக் கரையோரக் கட்டடச் சிதைவுகள்; சுங்கை பத்து அகழாய்வு மையங்கள்; சுங்கை மெர்போக் தொல்பொருள் காப்பகம்; இவை எல்லாமே மலாயாவில் தமிழர்களின் பண்டைய காலத்துப் பரிமாணங்களுக்குச் சாட்சிகள் சொல்கின்றன. இதை யராவது மறுக்க முடியுமா?
அண்மைய காலங்களில் வரலாறுகள் தீவிரமாக மறைக்கப்பட்டு வரலாம். ஆனால் கடாரம் எனும் சொல்லிலேயே தமிழ் தவழ்ந்து போகிறதே; அது ஒன்று போதுமே.
செரோக் தெக்குன் கல்வெட்டு (Cherok Tok Kun Inscription); பல்லவம்; தமிழ்; சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. ஆறாம் ஆண்டுக் காலத்துக் கல்வெட்டு. அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கருங்கல்லில் எழுதப்பட்ட கல்வெட்டு.
அந்தக் காலக் கட்டத்தில் கடாரம் புக்கிட் மெர்தாஜாம் பகுதிகளை ரமணிபரன் (Ramanibar) எனும் மன்னர் ஆட்சி செய்து இருக்கிறார். அவரை எதிர்த்து ஒரு போர் நடந்து உள்ளது. அந்தப் போரில் எதிர் நாட்டு மன்னர் தோற்கடிக்கப் பட்டார். ரமணிபரன் வெற்றி அடைந்து வெற்றி வாகை சூடினார்.
அவரின் வீர முயற்சிகளை அந்தக் கல்வெட்டு விவரிக்கின்றது. அது மட்டும் அல்ல. ரமணிபரன் மன்னரை எதிர்க்கும் அனைத்து எதிரிகளுக்கும் அதே நிலைமை ஏற்படும் என்றும் அந்தக் கல்வெட்டு எழுத்துகள் எச்சரிக்கை செய்கின்றன.
இந்தக் கல்வெட்டு அமைந்து இருக்கும் இடம் மிக மிக ஒதுக்குப்புறமான இடத்தில் முற்றும் துறந்த முனிவரைப் போல அமைதியாக உள்ளது. புனித அன்னாள் தேவாலயத்திற்குள் சென்று தேடினால் தான் அந்த இடமே பார்வையில் தென்படுகிறது.
ஒரு பெரிய கருங்கல் (கிரானைட்) கற்பாறை. அதில் அழகாகச் செதுக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துகள். ஏழு வரிகள். அதைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் லோ அவருடைய பெயரையும் பதித்துச் சென்று இருக்கிறார்.
அது மட்டும் அல்ல. அங்கே போன் சிலர் தங்களுக்குடைய பெயர்களையும் கிறுக்கி வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அசல் எழுத்துகள் மறைந்து போய்க் கிடக்கின்றன.
அந்தக் கல்வெட்டில் உள்ள வாசகங்கள்:
# ராஜா ரமணிபரண் எதிரிகள் மற்றும் துன்மார்க்கர்கள் எப்போதும் துன்பப் படுகிறார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
# அனைத்துப் பெரிய புத்தர்களின் பாதுகாவலரான மாணிக்கா (Manikatha) இதை கூறுகிறார்.
# அறிவு என்பது எல்லா இடங்களிலும்; வாழ்க்கையின் ஒவ்வொரு வடிவத்திலும்; ஒவ்வொரு வகையிலும் வெளிப்படுகின்றது.
# முறையாகச் செயல்படும் கர்மா தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
இந்த வரலாற்றுச் சின்னத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். தற்சமயம் புனித அன்னாள் தேவாலய நிர்வாகத்தினர் பெரிய மனத்துடன் பராமரித்து வருகிறார்கள். வாழ்த்துகிறோம். இருப்பினும் அவர்கள் இல்லாத நேரத்தில் அங்கே போகும் சில பொறுப்பற்ற காலிகள் கண்ட மாதிரியாகக் கிறுக்கி விட்டுப் போகிறார்கள். என்னதான் செய்ய முடியும்.
மலேசிய அருங்காட்சியகம்; தொல்பொருள் துறை; ஆகிய இரு அமைப்புகள் இணைந்து அமைத்த அதிகாரப்பூர்வப் பளிங்குக் கல் நுழைவாசலில் உள்ளது. மற்றபடி சிறப்பாகச் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. இருப்பினும் மலாயா வரலாற்றில் செரோக் தெக்குன் கல்வெட்டு மற்றோர் அத்தியாயம். போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பழைய அத்தியாயம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.12.2020
சான்றுகள்:
1. https://malaysiamegalithic.blogspot.com/2012_07_01_archive.html?view=classic
2. La civilisation de ports-entrepôts du Sud Kedah (Malaysia): Ve-XIVe siècle (French Edition) (French) Paperback – June 1, 1992
3.https://donplaypuks.blogspot.com/2015/11/ancient-indian-inscription-in-cherok.html
4.https://www.southeastasianarchaeology.com/2009/07/24/cherok-tok-kun-inscripton/
5. https://www.megalithic.co.uk/article.php?sid=45962
(No part of this content may be reproduced, republished, or re-transmitted by any means without the expressed written consent of author. Please email: ksmuthukrishnan@gmail.com for permission.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக