தமிழ் மலர் - 08.12.2020
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் ஜாவி போதனை முறை தொடரும் என்று துணைக் கல்வியமைச்சர் முஸ்லிமின் யாஹ்யா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் ஜாவி பாடப் போதனையை மீட்டுக் கொள்ளும் திட்டத்தைக் கல்வி அமைச்சு கொண்டு இருக்கவில்லை.
தாய்மொழி மற்றும் தேசியப் பள்ளிகளில் ஜாவி மொழிப் பாடத்தைப் போதிப்பதை, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் முடிவு செய்தது. அந்த முடிவைக் கல்வி அமைச்சு தொடர்ந்து அமல்படுத்தி வரும். இவ்வாறு துணைக் கல்வியமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
பழைய அரசாங்கம் எடுத்த அந்த முடிவை கொள்கை நிலையில் கல்வி அமைச்சு தொடர்ந்து பின்பற்றும். இதில் மாற்றம் இல்லை என்று ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
ஜாவி பாடத்தைப் பயில்வதைக் குறுகிய சிந்தனையோடு பார்க்க வேண்டாம். மலேசிய ரிங்கிட் நாணயத் தாளிலும் தற்போது ஜாவி எழுத்துகள் இடம்பெற்று இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பகாசா மலேசியா பாடத் திட்டத்தில் மூன்று பக்கங்களுக்கு மட்டுமே ஜாவி பாடம் இடம்பெற்று இருக்கும் என்ற முடிவு 2021-ஆம் ஆண்டிலும் தொடரும் என துணைக் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக