10 பிப்ரவரி 2021

மலாயா வரலாற்றில் மலாயா தமிழர்கள்

தமிழ் மலர் - 09.02.2021

மலாக்காவை உருவாக்கியவர் பரமேஸ்வரா. அவருடைய காலத்தில் தீபகற்ப மலாயாவை மலாயா என்று அழைத்தார்கள். இது அண்மைய கால வரலாறு. இராஜா ராஜ சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது மலைநாடு மலாயா என்று அழைக்கப் பட்டது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.

அடுத்து அந்த வரலாற்றில் மலாயா எனும் பெயர் எப்படி தோன்றி இருக்கலாம். மலாயா வரலாற்றுக்குள் மலாயா தமிழர்கள் எப்படி வருகிறார்கள். இவற்றை வரலாற்றுச் சான்றுகளுடன் பார்க்கப் போகிறோம். வரலாற்றுப் படிவங்களில் இருந்து சான்றுகள் தொகுக்கப் படுகின்றன.

(Pande, Govind Chandra (2005). India's Interaction with Southeast Asia: History of Science, Philosophy and Culture in Indian Civilization, Vol. 1, Part 3. Munshiram Manoharlal. p. 266.)

கம்போடியப் பேரரசை உருவாக்கிய ஜெயவர்மன் - சூரியவர்மன் காலத்திலும் மலாயாத் தீபகற்பம் மலாயா என்று தான் அழைக்கப் பட்டு உள்ளது. இது ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. சரி.

மலாயாவின் பண்டைய கால வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938-ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்தார்கள். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தார்கள்.

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக் கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.

பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் ஊர் இருக்கிறது. இந்த ஊர் ஈப்போ மாநகருக்கு மிக அருகில் இருக்கிறது. இங்கே ஒரு பழைமை வாய்ந்த குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழைமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

(Gua Tambun may have 3,000-year-old cave drawings of humans, it discovered in 1959 by a British soldier. http://www.ipoh-city.com/attraction/Gua_Tambun_Cave_Paintings/)

அந்தக் காலக் கட்டத்தில் இந்தோனேசியா, மேலனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனித இனம் மலாயாவைத் தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்தி உள்ளது. தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து அந்த உண்மை தெரிய வருகின்றது.

இப்படி இடம் பெயர்ந்தவர்கள் சீனாவின் யூனான் பகுதியில் இருந்து வந்தவர்கள். இந்தியாவின் பர்மா எல்லைகளில் இருந்து வந்தவர்கள். வியட்நாம் கம்போடியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இன்னும் ஒரு விசயம்.

மலாயாவில் முதன்முதலில் குடியேறிய ஆதிவாசிகளுக்கும் பாப்புவா நியூகினி நாட்டைச் சேர்ந்த ஆதிவாசிகளுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

அப்படி மலாயாவுக்குள் வந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தார்கள். கற்களால் ஆயுதங்களைச் செய்தார்கள். மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்கள் வேறு யாரும் அல்ல.

ஓராங் அஸ்லி என்று அழைக்கப்படும் பூர்வீகக் குடிமக்கள் தான். இவர்கள் தாம் மண்ணின் அசல் மைந்தர்கள். இதை எழுதுவதால் எதிர்க்குரல் வரலாம். பயம் இல்லை. ஏன் என்றால் வரலாறு உதவிக்கு வரும் என்று நமக்கும் தெரியும்.

இந்த ஆதிவாசிகளுக்கு முன்னர் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒரு வகையான பூர்வீகக் குடிமக்களும் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்து மலாயாவில் குடியேறி இருக்கிறார்கள்.

இந்தக் காலக் கட்டத்தைக் கற்காலம் என்று வரலாறு சொல்கின்றது. இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளர்ப்புப் பிராணிகளும் இவர்களிடம் இருந்து உள்ளன.

இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டி உள்ளனர்.

கி.மு. 200-ஆம் ஆண்டிற்குப் பின் வந்தது வெண்கலக் காலம். இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப் படுகின்றன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் என்றும் லாக் வியட் கலாசாரம் என்றும் அழைக்கின்றனர். (Dong Son அல்லது Lac Viet).

இந்தக் கலாசாரம் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது.

(Dongson culture is the name given to a loose confederation of societies who lived in northern Vietnam likely between 600 BC-AD 200. http://archaeology.about.com/od/dterms/g/dongson.htm)

இருந்தாலும் இந்த டோங் சோன் கலாசாரம் வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றியதற்கான சான்றுகள் உள்ளன. இதை நாம் மறந்து விடக் கூடாது. சரி.

எப்படி இந்தக் கலாசாரம் இந்தோனேசியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தது என்பது தான் வரலாற்று அறிஞர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது. டோங் சோன் கலாசாரம் என்றால் என்ன?

•    முறையாக நெல் சாகுபடி செய்தல்

•    நெல் பயிர் செய்ய எருமை மாடுகளை முறையாகப் பழக்குதல்

•    அதிகமான மாமிசம் தரும் விலங்குகளை வளர்த்தல்

•    வலைகளைப் பின்னி மீன் பிடித்தல்

•    பாய்மரங்களைக் கட்டிப் படகு விடுதல்

•    மரத்தைக் குடைந்து படகுகளைச் செய்தல்

அடுத்து வருவது இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்த கலாசாரம். இந்தக் காலக் கட்டத்தில் தான் பூஜாங் சமவெளியில் தமிழர்களின் ஆளுமைகள் தொடங்கி உள்ளன.

ஆனாலும் இருப்புக் காலத்திற்கு முன்னரே பூஜாங் கலாசாரம் தொடங்கி விட்டது. இதை எவராலும் மறுக்க முடியாது. கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. 2000 – 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாறு.

கெடா மாநிலத்தின் சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆக கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொனமை வாய்ந்தது. அதே போல ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்திலும் வரலாற்றுப் புதையல்கள் உள்ளன. அந்த இடத்தில் கிரேக்க நாட்டு புராதன நகரமான ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாசி மணிகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்து உள்ளனர். பலர் அங்கே கோத்தா திங்கியிலேயே குடியேறியும் இருக்கிறார்கள்.

கோத்தா திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப் பட்டு வருகின்றன.

(Star Newspaper - "The Lost Treasure of Johor" 12.12.2013)

கெடா எனப் படும் கடாரத்தில் 4-ஆம் - 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் குடியேறி இருக்கிறார்கள். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன.

கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள பொரோபுடுர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடார நாகரிகம் உருவாகி விட்டது என்று பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் கூறுகிறார்.

(https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115)

மலாக்காவின் வரலாற்றையும், சிங்கப்பூர் வரலாற்றையும், சுமத்திரா ஜாவா வரலாற்றையும் பார்த்தால் கடாரத்து வரலாறு அவற்றை எங்கேயோ கொண்டு போய் ஒதுக்கித் தள்ளி விடுகிறது.

கடாரத்தைத் தோற்றுவித்தவர்கள் இந்தியர்கள் என்று பெரும்பாலான வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால் தமிழர்கள் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். ஏன் தெரியுங்களா.

அந்தக் காலக் கட்டங்களில் தமிழ்நாட்டில் நிறையவே துறைமுகங்கள். காவிரி பூம்பட்டினம்; கொற்கை துறைமுகம்; மருங்கூர்; அழகன்குளம்; காயல் பட்டினம், குலசேகரப் பட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினங்களில் இருந்து தமிழர்கள் ஆயிரக் கணக்கில் பூஜாங் வெளிக்கு வந்து உள்ளார்கள்.

மேலே சொல்லப்பட்ட பட்டினங்கள் பெரும்பாலும் பாண்டியர் காலத்துத் துறைமுகங்கள் ஆகும்.

பாண்டியர் துறைமுகங்கள் சங்க காலம் தொட்டே முத்துக் குளித்தலுக்கும்; முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்று இருந்தன. அவற்றில் கொற்கை துறைமுகம் தனிச் சிறப்புப் பெற்றது.

அங்கு நடைபெற்ற முத்து வணிகத்தைப் பற்றி தாலமி, பெரிபல்ஸ், பிளைனி போன்ற வரலாற்றுப் பயணிகள் குறிப்புகளை விட்டுச் சென்று உள்ளனர். பாண்டியர்கள் காலத்தில் 25-க்கும் மேற்பட்ட துறைமுகப் பட்டினங்களே உருவாக்கப்பட்டு உள்ளன.  

1. (Encyclopedia of Prehistory: Volume 3: East Asia and Oceania edited by Peter N. Peregrine, Melvin Ember)

2. (https://yarl.com/forum3/topic/106076/)

இந்தத் தமிழர்கள் தான் அரேபியாவுக்குப் போய் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவிற்குப் போய் இருக்கிறார்கள். கடாரத்திற்குப் போய் இருக்கிறார்கள். கம்போடியாவிற்குப் போய் இருக்கிறார்கள். இந்தோனேசியாவிற்கும் போய் இருக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள். வரலாற்றில் ஒரு சொட்டு சான்றும் இல்லாமல் சிலர் புருடா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். குமரிக் கண்டம் அவர்களுடையதாம். இராஜா சோழன் அவர்களின் வாரிசாம்; தோசை அப்பளம் அதிரசம் ரசம் மோர் பருப்பு சாம்பார் எல்லாமே அவர்களுடையதாம். ஒன்றுமே சொல்கிற மாதிரி இல்லைங்க.

முட்டிக் கொள்ள சுவரைத் தேடினால்; என் அறையில் இருந்த சுவர்கள் எல்லாம் முட்டின முட்டுகளால் ரொம்பவுமே மழுங்கிப் போய் விட்டன. மேலும் மோதினால் இடிந்து விழும். ரிப்பேர் பண்ண காசும் இல்லை. விடுங்கள்.

மலாக்கா நீரிணைக்கு அப்பால் இருக்கும் சுமத்திராவில் இருந்து வந்த மலாய் இனத்தவரின் ஆளுமை மலாயாவில் வேர் ஊன்றியுள்ளது. அங்கே தமிழர்களின் ஆதிக்கம் பெற்ற ஸ்ரீ விஜய அரசு இருந்து உள்ளது.

தமிழகத்தில் இருந்து வந்த பல்லவர்கள் தான் இந்தோனேசியாவில் பல அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பல்லவர்கள் தமிழ்நாட்டை 550 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள். அந்த வகையில் பல்லவர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்.

இல்லை என்று சிலர் போர்க் கொடி தூக்கலாம். தூக்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி சிலர் கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியுமாம். ஒரு தமிழன் ஏதாவது சொன்னால் பொத்துக் கொண்டு வருமாம்.

அதிரசமும் அச்சு உருண்டையும் அவர்களுடையது என்றும் சொல்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்க திராணி இல்லை. இளிச்சவாயன் கிடைத்தால் போதும். லெப்ட் அண்ட் ரைட் பிச்சு பேன் பார்ப்பார்கள்.

ஆக அப்படி இருக்கும் போது பல்லவர்கள் என்பவர்கள் தமிழர் இனத்தின் ஒரு பிரிவினர் என்று சொன்னால் தப்பா? வலிக்கிறது என்றால் இரண்டு பெனடோல் அனுப்பி வைக்கலாம். சரி.

சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது மனசு வெம்பிப் போகிறது.

நம் பழைய சுவடுகளைத் தெரிந்து கொள்வோம். இருக்கிற வரைக்கும் அவற்றை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம். அவ்வளவுதான். வேறு என்னங்க செய்ய முடியும்.

இனவாதமும் மதவாதமும் தலைவிரித்தாடும் போது இரண்டு காதுகளையும் இறுக மூடிக் கொள்வது சிறப்பு என்றால் இருக்கிற தமிழர்களின் வரலாற்றை ஆவணப் படுத்துவது அதிலும் சிறப்பு. நம் சந்ததிகளுக்கு அவற்றைச் சீதனமாக விட்டுச் செல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.02.2021

சான்றுகள்:

1. 1. Singaravelu Sachithanantham (2004). The Ramayana Tradition in Southeast Asia. Kuala Lumpur: University of Malaya Press.

2. Sastri, Nilakanta (1 January 1939). Foreign Notices of South India: From Megasthenes to Ma Huan. University of Madras.

3. Malaysian Indians - https://www.wdl.org/en/item/555/

4. Definisi 'keling'" (in Indonesian). Arti Kata - http://artikata.com/arti-333898-keling.html

5. ‘Keling’ and proud of it - https://www.thestar.com.my/opinion/columnists/along-the-watchtower/2016/08/10/keling-and-proud-of-it-the-k-word-deemed-to-be-derogatory-and-offensive-to-the-indian-community-sinc/

 

1 கருத்து: