11 February 2021

மலாயா தமிழர்கள் வரலாற்றில் பெண்டாத்தாங் சொல் வழக்கு

தமிழ் மலர் - 10.02.2021

மலாயா வரலாற்றில் மலாயா தமிழர்கள் எப்படி வருகிறார்கள். ஏன் வருகிறார்கள். எதற்காக வருகிறார்கள். கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டி உள்ளது. அப்போது தான் மலேசியாவில் தமிழர்கள் யார் என்பது தெரிய வரும்.

வந்தேறிகள் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே அந்த வந்தேறிகள் யார் என்பதும் தெரிய வரும். அத்துடன் மலாயா வரலாற்றைக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து கொண்டது மாதிரியும் அமையும்.

அண்மைய காலங்களில் பெண்டாத்தாங் எனும் ஒரு சொல் அதிகமாகவே புழக்கத்தில் உள்ளது. தெரியும் தானே. ஆச்சு பூச்சு என்றால் பெண்டாத்தாங். இசுக்கு பிசுக்கு என்றாலும்  பெண்டாத்தாங். ஈச்சங்காய் பீச்சங்காய் என்றாலும் பெண்டாத்தாங். அத்தைக்கு மீசை வைத்து அழகு பார்க்கும் ’லெவலே’ வேறு. சிலருக்கு வேலையே இல்லை போலும்.

யாராவது வெட்டிக்குச் சம்பளத்தைக் கொடுத்து சிறுபான்மை இனத்தவரைச் சீண்டச் சொல்லி உசுப்பி விடுவார்கள் போலும். நாளைக்கு எப்படி சீண்டலாம் என்று போர்வையைப் போர்த்திக் கொண்டே பிளேன் போடுவார்கள் போலும்.

1946-ஆம் ஆண்டில் மலாயன் யூனியன் உருவான காலத்தில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக வந்தேறி எனும் சொல்லை ஓன் பின் ஜாபார்  பயன்படுத்தினார். இப்போதைய அமைச்சர் ஹிசாமுடின் அவர்களின் தாத்தா. அதற்கு முன்னர் அந்தச் சொல் பயன்படுத்தப் படவில்லை. அப்போது மலாயாவில் இருந்த அத்தனைப் பேரும் சகலபாடிகள்.

அதன் பின்னர் அந்தச் சொல்லைத் துங்கு அப்துல் ரஹ்மான் பயன்படுத்தி இருக்கிறார். அவரும் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைச் சொல்லும் போது பலருக்கும் வேதனையாக இருக்கலாம். எனக்கு அது பழசாகி விட்டது. விடுங்கள்.

அந்த வக்கிரச் சொல்லைப் பயன்படுத்தாத ஒரே பிரதமர் உசேன் ஓன். அதன் பின்னர் மகாதீர் முகமது அவர்களுக்கு அந்தச் சொல் இத்தாலிய பிசா பெல்லி மாதிரி பழக்கத் தோசமாகி விட்டது.

வந்த இடத்தில் சிலர் வந்த இடம் மறந்து பாவம் தேடிக் கொள்வது வரலாறு பார்க்காத அதிசயமா. தனிநபர் யாரையும் சொல்லவில்லை. வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறேன்.

அந்தப் பெரிய தலைவருக்குப் பின்னர் அப்புறம் சொல்லவே வேண்டாம். மற்ற குட்டிக் குட்டித் தலைகள் எல்லாம் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆட்டுக் கல்லில் பெண்டாத்தாங் மாவு அரைக்கிற வேலையைச் சூப்பராகச் செய்து வருகிறார்கள்.


ரொம்ப வேண்டாம். பசார் மாலாம் சந்தையில் கூட ஒரு கிலோ ஒரு வெள்ளிக்கு விற்கும் அளவுக்கு ரொம்பவும் மலிவாகி விட்டது.

இவர்கள் மட்டும் என்னவாம். அங்கே மட்டும் என்ன வாழுதாம். அந்தச் சொல்லைச் சொன்னவர்களும்; சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் வந்தேறிகள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு அள்ளிவிட்டு சர்க்கஸ் கோமாளிக் கூத்துகளை செய்து வருகிறார்கள்.

சொல்பவர்களும் வந்தேறிகள் என்பது பாலர் பள்ளியில் படிக்கும் பச்சைச் சிசுவுக்குகூட தெரியும். ரொம்ப வேண்டாம். இந்த மண்ணில் ஊர்ந்து போகிறதே புழு பூச்சிகள். அவற்றுக்கும் தெரியும்.

ஆனால் அவர்கள் என்னவோ ஆகாயத்தில் இருந்து குதித்து வந்த வான்கோழி மாதிரியும்; மண்ணுக்குள் இருந்து பொசுக் என்று பொங்கி வந்த முள்ளங்கி மாதிரியும் மற்றவர்களைப் பார்த்து திரும்பிப் போ என்கிறார்கள்.

இதில் எங்கிருந்தோ ஒரு ஓநாய் வந்தது. அது பாட்டுக்கு இந்த நாட்டுத் தமிழர்களைப் பார்த்து உங்க நாட்டுக்கே திரும்பிப் போங்க என்று சொல்லி பிரேக் டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறது. தமிழர்கள் வாங்கி வந்த வரம்.

முன்னாள் பிரதமர் நஜிப் சார் பகிரங்கமாகவே தாம் இந்தோனேசியா, சுலாவாசி தீவில் இருந்து வந்தவர் என்று தம் பூர்வீகத்தை ஒப்புக் கொண்டார். அப்படி நாடு விட்டு நாடு வந்த ஒருவர் தான் இந்த நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.

நல்ல மனிதராக இருந்தவர் தான். ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சைக் கேட்டு இப்போது ரொம்பவுமே வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். பாவம் அவர்.

என்ன செய்வது. அவர் நினைத்தது ஒன்று. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டது. சரி. ஒரு முக்கியமான விசயத்திற்கு வருகிறோம். முதலில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த அரசுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள்.

இதை அடிக்கடி சொல்ல வேண்டி உள்ளது. இல்லை என்றால் ஒரு சிலர் அந்த அரசுகளையும் அவர்களின் பூர்வீகச் சொத்து என்று சொன்னாலும் சொல்வார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நடக்கலாம்.

1. சாலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - கலிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600
 
5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377
 
7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669 – 1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669 – 1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752 – 1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914 – 1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006 – 1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045 – 1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya Kingdom) கி.பி. 1183 – 1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222 – 1292

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293 – 1500

இதில் ஸ்ரீ விஜய அரசு மலாயாவின் இலங்காசுகம், கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்து உள்ளது.

1200-ஆம் ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் மலாயாவில் இஸ்லாம் சமயத்தைக் கொண்டு வந்தார்கள்.

பலேம்பாங்கைச் சார்ந்த அரசப் பரம்பரையினர் கி.பி.1299–ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஒரு தனி அரசாங்கத்தை உருவாக்கி அதற்கு துமாசிக் என்றும் பெயர் சூட்டினார்கள். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அந்த அரசாங்கத்தை 1398-ஆம் ஆண்டில் மஜாபாகித் அரசு தாக்கியது.

மலாயா தீபகற்பத்தை ஆள வேண்டும் எனும் எண்ணம் மஜாபாகித் மன்னருக்கு இல்லை. துமாசிக்கை அழிச்சாட்டியம் செய்து விட்டு அப்படியே போய் விட்டார். ஆனாலும் மஜாபாகித் ஆளுமையின் தாக்கத்தை இன்றும் மலாயாவின் கிளந்தான், தாய்லாந்தின் பட்டாணி மாநிலங்களில் காண முடிகிறது.

துமாசிக் என்று முன்பு அழைக்கப்பட்ட சிங்கப்பூர்; மஜாபாகித் அரசாங்கத்தால் தாக்கப் பட்டதும்; அதற்கு ஈடாக மலாக்கா நகரம் தோற்றுவிக்கப் பட்டது. மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா.

மஜாபாகித்தின் அடுத்து வரும் தாக்குதலில் இருந்து பரமேஸ்வரா தப்பிக்க நினைத்தார். சிங்கப்பூரிலேயே இருந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் உணர்ந்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

பரமேஸ்வரா தன்னுடன் சில நம்பிக்கையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது தான் மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாக அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார். அப்படி போய்க் கொண்டு இருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம் ஆகும். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.
நாய் மல்லாக்காக விழுந்து இருக்கலாம்.

பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா. அதனால் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது. வரலாறு எங்கே போகிறது. நன்றாக ஊர்ந்து கவனித்து வாருங்கள்.

தொடக்கக் காலத்தில் பரமேஸ்வராவிற்குச் சயாம் நாட்டில் இருந்து அதிகமான எதிர்ப்புகள் வந்தன. தாய்லாந்து நாட்டின் பழைய பெயர் சயாம். எதிர்ப்புகளுக்குக் காரணம் உண்டு.

பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன். இவர் தான் சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் எனும் பெயரையே வைத்தவர். அவர் அடித்துப் பிடித்து சிங்கப்பூரைக் கைப்பற்றியதனால் அவர் சயாம் நாட்டின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொண்டார். அதோடு அவருடைய வாரிசுகள் அனைவருமே சயாம் நாட்டின் எதிரிகள் ஆனார்கள்.

ஆக சயாம் நாட்டில் அச்சுறுத்தலுக்குப் பயந்து உதவிகளைத் தேடி பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். அவருக்குச் சீன அரசாங்கத்தின் பாதுகாப்பு கிடைத்தது. அதன் வழியாகப் பரமேஸ்வரா மலாக்காவின் அரசர் என பெருமை படுத்தப் பட்டார். அதுவே சயாம் நாட்டின் படையெடுப்புகளைத் தவிர்க்கவும் உதவியது.

15-ஆம் நூற்றாண்டுகளில் மலாக்கா மிகச் சிறப்பான வணிகத் தளமாக விளங்கியது. அரபு வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். வியாபாரமும் பெருகியது. சீனர்களின் வியாபாரமும் மலாக்காவின் வளப்பத்திற்குக் கை கொடுத்தது. இது மலாக்கா உருவான கதை. சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.

நாளைய கட்டுரையில் மலாயா எனும் பெயர் எப்படி தோன்றியது என்பதைத் தான் மிக ஆழமாகப் பார்க்கப் போகிறோம். வரலாற்றுச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. படிக்கத் தவறாதீர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.02.2021

சான்றுகள்:

1. Heng, Derek (2005), "Continuities and Changes : Singapore as a Port-City over 700 Years", Biblioasia, National Library Board, 1

2. Heidhues, Mary Somers (2001), Southeast Asia: A Concise History, Hudson and Thames

3. Windstedt, Richard Olaf (1938), "The Malay Annals or Sejarah Melayu", Journal of the Malayan Branch of the Royal Asiatic Society, The Branch, XVI

4. Sinha, Prakash Chandra (2006), Encyclopedia of South East and East Asia, Anmol Publications Pvt Ltd, 

No comments:

Post a Comment