20 பிப்ரவரி 2021

ஒராங் அஸ்லி வரலாற்றில் மலாயா தமிழர்கள்

தமிழ் மலர் 18.02.2021

மலாயாவில் நடந்த கதை. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. அந்தக் காலக் கட்டத்திலும் சரி. அதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டு கால கட்டத்திலும் சரி; மலாயாவில் முதன்முதலில் தடம் பதித்தவர்கள் தமிழர்கள் தான்.

இவர்களுடன் மேற்கே இருந்து வந்தவர்கள் அராபியர்கள். வடக்கே இருந்து வந்தவர்கள் சீனர்கள். இந்த மூன்று வெளிநாட்டுக்காரர்கள் தான் இந்த நாட்டில் வாழும் ஒராங் அஸ்லி பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகிய முதல் வெளியுலக மனிதர்கள்.

வாழ்வியல் நாகரிகத்தை அறிமுகம் செய்து வைத்தவர்கள். இவர்களில் கொஞ்சம் ஆழமாய்ப் போய் பழகியவர்கள் தமிழர்கள்.

தோல் நிறத் தோற்றத்தில் ஒராங் அஸ்லி மக்களைப் போல இருந்ததால் தமிழர்களுடன் பழகுவதற்கு அவர்களுக்குப் பிடித்துப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் பாய்மரக் கப்பல்களில் வந்தவர்கள் போனவர்கள் பெரும்பாலும் எல்லோருமே ஆண்கள் தான். பெண்கள் மிக மிகக் குறைவு.

இந்தக் காலத்தைப் போல தோலில் ஒரு பையை மாட்டிக் கொண்டு உலகத்தைச் சுற்றி எல்லாம் வந்து விட முடியாது. அந்தக் காலத்தில் பெண்களைப் பெட்டிப் பாம்பாக அடக்கிப் போட்டு வாசித்தார்கள்.

பிள்ளைகளைப் பெற்றுப் போடும் தொழிற்சாலையாக நினைத்தார்கள். மன்னிக்கவும். இப்படிச் சொல்வதில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. உண்மை தானே. ஒரு செருகல்.

இப்போது பாருங்கள். ‘லெவலே’ வேறங்க. புருசனைப் பார்த்து வாடா போடா என்று கூப்பிடும் அளவிற்கு முற்றிப் போயிடுச்சு. தமிழக இறக்குமதிச் சீரியல்கள் அல்லது டிக் டாக் பாருங்கள். உண்மை தெரியும்.

நம்ப நாட்டு தொலைக்காட்சிப் படங்கள் மட்டும் என்னவாம். நாங்களும் உப்புமா சுப்புமா கிண்டுவோம் என்று ரொம்பவும் முன்னேறி விட்டார்கள். சரி.

இது என்ன 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களும் ஓராங் அஸ்லி மக்களும் சொந்த பந்தமா பழகினார்களா? என்ன புதுக் கதை என்று கேட்க வேண்டாம். உண்மைக் கதைங்க. படியுங்கள்.

எங்க இனம்தான் உலகத்திலேயே ரொம்ப ஒசத்தி என்று சிலர் மார்தட்டிக் கொள்வார்கள். அந்த மாதிரிச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதைக் காட்டிலும்; எங்க இனம் தான் நாகரிகத்தைச் சொல்லி கொடுத்தது என்று சொல்வதில் என்னங்க தப்பு. பெருமை பட வேண்டிய விசயம் தானே.

ஏறக்குறைய 2000 - 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்தார்கள். சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அவர்கள் வரும் வரையிலும் அஸ்லி பழங்குடியினர் வெளித் தொடர்புகள் இல்லாமல் உட்புறக் காட்டுப் பகுதிகளிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

அந்த வகையில் ஓராங் அஸ்லி மக்களைச் சந்தித்த முதல் வெளிநாட்டு மக்கள் தமிழர்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர் அல்பெர்ட்டோ கோமஸ் கூறி இருக்கிறார்.

அவர் ’மலேசியாவின் ஒராங் அஸ்லி’ எனும் ஆய்வு நூலை 2004-ஆம் ஆண்டு எழுதினார். அந்த நூலில் அதைக் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழர்கள் இந்த நாட்டிற்கு வரும் வரையில் ஓராங் அஸ்லி மக்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமலேயே காடுகளில் வாழ்ந்து வந்து உள்ளார்கள் என்றும் சொல்கிறார்.

ஒராங் அஸ்லி பழங்குடியினர் நறுமணக் கட்டைகள், தோகைகள், பிசின் (களிம்பு) போன்றவற்றைக் காடுகளில் இருந்து சேகரித்து வந்தார்கள். அவற்றைத் தென் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களிடம் கொடுத்தார்கள்.

காட்டுச் சேகரிப்புப் பொருள்களுக்குப் பதிலாக உப்பு, துணிமணி, இரும்புக் கருவிகளைத் தமிழர்களிடம் இருந்து பண்டமாற்று செய்து கொண்டார்கள் என்று அல்பெர்ட்டோ கோமஸ் எழுதி இருக்கிறார்.

ஓராங் அஸ்லி மக்களுடன் தமிழர்கள் நெருங்கிப் பழகினார்கள். பச்சைக் குத்துவதை அறிமுகம் செய்து வைத்தார்கள். வெற்றிலைப் பாக்கு போடுவதைக் கற்றுக் கொடுத்தார்கள். மூங்கில்களில் புல்லாங்குழல் செய்து வாசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த பாவனையில் பூர்வீகப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள். பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள். தமிழர்களில் சிலர் காடுகளில் குடியேறி ஓராங் அஸ்லி மக்களுடன் வாழ்ந்தார்கள்.

காட்டுக்குள் போய் திரும்பி வர முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அப்படியே கரைந்து போனவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் திரும்பித் தங்கள் நாட்டிற்குச் செல்லும் போது ஓராங் அஸ்லி பெண்களைத் தங்களுடன் அழைத்தும் சென்றும் இருக்கிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓராங் அஸ்லி மக்களுடன் காடுகளில் அடைக்கலமாகி திரும்பி வராமல் போன தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இனத்தோடு இனம் சேர்ந்து கரைந்து போய் இருப்பார்கள். ஆனால் டி.என்.ஏ. எனும் மரபணுக்கள் பொய் சொல்லா. சோதனை செய்தால் கண்டிப்பாகத் தெரிந்துவிடும். ஆனால் விடுவார்களா? இருப்பதையே அழித்து ஒழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் டி.என்.ஏ. ஆராய்ச்சியா?

அது மட்டும் அல்ல. அந்தத் தமிழர்களின் சுவடுகளைத் தேடி பேராக்; பகாங் காடுகளுக்குள் போக வேண்டும். சுவடுகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். சாதாரண விசயம் அல்ல.

அதே வேளையில் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓராங் அஸ்லி பெண்கள் பற்றிய விவரங்களும் நமக்குக் கிடைக்கவில்லை. எங்கே போய் தேடுவதும் என்று தெரியவில்லை.

கீழ்க்காணும் இணைய முகவரியில் அல்பெர்ட்டோ கோமஸ் எழுதிய அந்த நூலின் பி.டி.எப். கோப்புகள் உள்ளன. தரவிறக்கம் செய்து நீங்களும் படித்துப் பார்க்கலாம். ஒராங் அஸ்லி பழங்குடியினர் முதன்முதலில் சந்தித்தவர்கள் தமிழர்கள் எனும் உண்மை தெரிய வரும்.

இந்த உலகில் இரண்டாவது மூத்த இனம் என்று சொல்லும் இனத்தவர்கள், அந்தக் காலக் கட்டத்தில் இந்த ஒராங் அஸ்லி பழங்குடியினரைச் சந்தித்து இருப்பார்களா பழகி இருப்பார்களா என்றுகூடத் தெரியவில்லை. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உண்மை தெரிய வரும்.

மலேசியாவில் வாழும் பழங்குடி மக்களை 18 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவர்கள் அனைவரையும் ஒராங் அஸ்லி என்று பொதுவாக அழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் மொழி, கலாசாரப் பண்புகள் ஒவ்வொரு பிரிவிற்கும் மாறுபட்டவை. மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

இவர்களில் செமாங் (Semang) அல்லது நெகிரிட்டோ இனத்தவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். செனோய் (Senoi) இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழ்கின்றனர்.

புரோட்டோ மலாய் (Proto Malay) இனத்தவர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர். புரோட்டோ என்றால் முந்தைய என்று பொருள்.

செமாங் பூர்வீக மக்கள் தென் இந்தியாவில் உள்ள ஆதிக்குடிகளின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று மனிதவியலாளர்கள் (Ethnologists) சொல்கிறார்கள். ஏற்கனவே சில கட்டுரைகளில் ஆப்பிரிக்காவில் முதல் மனித இனத்தின் புலம் பெயர்வுகளைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.

குமரிக் கண்டம் எனும் குமரி நாடு பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்து இருந்த ஒரு கண்டம். இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம். தமிழ் மொழி; தமிழ்க் கலாசாரம்; தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என கருதப் படுகிறது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தக் கண்டத்தைக் கடல் கொள்ளாத போது ஆப்பிரிக்காவில் இருந்து ஆதி குடிமக்கள் அங்கு குடியேறி இருக்கிறாரகள்.

அந்தக் குமரிக் கண்டத்தில் இருந்து கடற்கரை வழியாக மக்கள் மலாயா தீவுக் கூட்டங்களுக்கும் வந்து இருக்கிறார்கள். அப்படி மலாயாவுக்கு வந்தவர்கள் தான் மலாயா பழங்குடி மக்களாகும்.

ஒராங் அஸ்லி பழங்குடியினர் இப்போது பேராக், பகாங், கிளந்தான் போன்ற மலேசியா மாநிலங்களிலும் மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், வட ஆஸ்திரேலியா, அந்தமான் தீவுகள் நாடுகளிலும் காணப் படுகிறார்கள்.

அந்த ஓராங் அஸ்லி மக்களில் ஒரு பிரிவினர் தான் செமாங், செனோய் மக்கள். 10,000 - 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் குடிப் பெயர்வு நடந்து இருக்கலாம்.

இவர்களுக்குப் புரோட்டோ மலாய் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். மலாயாவில் நடந்த குடியேற்றம் என்பதால் புரோட்டோ (மலாய்)  என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

2000-ஆவது ஆண்டு மலேசிய மக்கள் தொகை கணக்கின்படி அஸ்லி பழங்குடியினரின் மக்கள் தொகை 0.5 விழுக்காடு. இவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 148,000. இதில் பெரும்பான்மையினர் செனோய் பூர்வக்குடியினர் 54 விழுக்காடு. புரோட்டோ மலாய் பூர்வக்குடியினர் 43 விழுக்காடு. செமாங் பூர்வக்குடியினர் 0.3 விழுக்காடு.

அஸ்லி பழங்குடியினரின் ஏழ்மை நிலை 76.9 விழுக்காடு. அவர்களில் 35 விழுக்காட்டுப் பூர்வக்குடியினர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள்.

அஸ்லி பழங்குடியினர் பெரும்பகுதியினர் புறநகர் பகுதிகளில் குடியேறியுள்ளனர். சிறுபான்மையினர் நகர்புறங்களில் குடியேறியுள்ளனர். 1991-ஆம் ஆண்டில் தேசிய எழுத்தறிவு அளவு 86 விழுக்காடாக இருந்தது.

ஆனால் அஸ்லி பழங்குடியினரின் எழுத்தறிவு 43 விழுக்காடு தான். இவர்களின் சராசரி வாழ்நாள்: ஆண்களுக்கு 53 ஆண்டுகள். பெண்களுக்கு 52 ஆண்டுகள்.

நெகரிட்டோ பழங்குடியினரில் பலதரப்பட்ட துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கென்சியு, கின்டெக், லானோ, ஜாகை, மென்ரிக், பாடெக் போன்ற பிரிவுகள் உள்ளன.

இவர்களில் பேராக், கெடா, பகாங் மாநிலங்களில் உள்ளவர்களைச் சாக்கே என்று அழைப்பது உண்டு. "சக்காய்" என்பது அடிமை என்று பொருள்.

தவிர கிளந்தான், திரங்கானுவைச் சேர்ந்தவர்களைப் பங்கான் (Pangan) என்று அழைப்பார்கள். பங்கான் என்பது "காட்டு வாசிகள்" என்று பொருள். பல காலத்திற்கு பிறகு புதிய கற்காலத்தில் செனோய், புரொட்டொ - மலாய் பழங்குடியினர் இங்கு புலம் பெயர்ந்து உள்ளனர்.

நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர் அமரர் ஜீவி. காத்தையா. அவர் ‘மலேசியா இன்று’ இணைய இதழில் எழுதிய ’வந்தேறிகள் வரலாறு’ எனும் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

ஓராங் அஸ்லி பழங்குடியினர் மலைகளிலும் காடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களின் உறைவிடங்கள் இலைகளினால் மூடப்பட்ட சிறு சிறு பரண்கள். இந்தப் பரண்களின் தரையில் கம்புகள் அடுக்கி அவற்றின் மேல் உறங்குவார்கள்.

உறைவிடங்களில் காட்டுத்தீ மூட்டி வைத்து இருப்பார்கள். போக்குவரவு செய்யப் படகுகள் இல்லை. வாகனங்கள் இல்லை. வீடு வாசல்கள் இல்லை. காடுகளில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, பறவை, விலங்கு இவைதான் அவர்களின் உணவு.

சிக்கிமுக்கி கற்கள்; கூர்மையான ஆயுதங்கள்; இவற்றைப் பயன் படுத்தி நெருப்பு உண்டாக்குகிறார்கள். அம்பும் வில்லுமே இவர்களின் முக்கியமான ஆயுதங்கள். இவர்கள் உணவுகளைச் சேமித்து வைப்பது இல்லை.

ஒரு கூட்டமாக ஒரு குழுவாக வாழ்வார்கள். இவர்களுக்கு குழுத் தலைவன் என்று எவரும் இல்லை. மனசில் சூது வாது கள்ளம் கபடம் இல்லாமல் பழகக் கூடியவர்கள்.

செமாங் பழங்குடி மக்கள் இடி; மின்னல் போன்ற இயற்கைத் தன்மைகளை முதன்மைப் படுத்தி வணங்கி வருகிறார்கள். தெய்வங்களாகவும் கருதுகிறார்கள்.
அவற்றைச் சமாதானப் படுத்தத் தங்கள் கெண்டைக் காலின் முன்புறத்தில் சின்னதாய் வெட்டிக் கொள்வார்கள். அங்கு இருந்து இரத்தம் எடுக்கிறார்கள். தெய்வ அன்பளிப்பு செய்கிறார்கள்.

செமாங் பழங்குடி மக்கள் மற்றொரு பழங்குடி மக்களான சக்கேய் இனத்தவருடன் கலப்பு மணம் செய்து கொள்கிறார்கள். பழங்குடி மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

சக்கேய் மக்கள் தென் சீனா, யூனான் (Yannan) மலைப் பகுதிகளில் இருந்து வந்து மலாயாவில் குடியேறியவர்கள். மங்கோலிய - இந்தோனேசிய வம்சாவளியினர். மங்கலான மஞ்சள் நிறம் கொண்டவர்கள். இவர்கள் பேசும் மொழி இந்தோசீனாவைச் சேர்ந்த ‘மொன் அன்னம்’ மொழியாகும்.

செமாங் மக்களைவிட அழகிலும் உயரத்திலும் நிறத்திலும் நன்றாக இருப்பார்கள். நீண்ட தலை அமைப்பு. சுருட்டை முடி. பச்சை குத்திக் கொள்வார்கள். நீண்ட ஊதுகுழல் இவர்களின் வேட்டை ஆயுதம். மரங்களின் மீது குடிசை காட்டி வாழ்கிறார்கள்.

தமிழர், சீனர், ஜாவானியர், பூகிஸ்காரர், அராபியர், ஐரோப்பியர் போன்றவர்களிடம் இருந்து பல நாகரிக முறைகளை மண்ணின் மைந்தர்கள் கற்றுக் கொண்டார்கள்.

அந்த வகையில் வரலாற்றை வரலாறாகப் பார்க்க வேண்டும். அவர்களிடம் இருந்தே விவசாயம், வியாபாரம், நாணயப் புழக்கம், இரும்பு, வெள்ளி, தங்கம் இவற்றின் உபயோகம், ஆடை நெய்தல், வீடுகள் அமைத்தல், படகுகள் கட்டுதல், அரசியல் முறைகள் முதலியவற்றைத் தெரிந்து கொண்டார்கள்.

இவர்கள் பேசும் வார்த்தைகளில் பல சொற்கள் அந்நியர்களிடம் இருந்து கடன் வாங்கப் பட்ட சொற்களே. அப்படி இருக்கும் போது சமஸ்கிருத மொழியின் கிளை மொழியே இவர்களின் மொழி என்று சொல்கிறார்கள். எங்கேயோ இடிக்கிறது.

இந்த நாட்டுப் பூர்வீக மக்களுக்கு நாகரிகம் பற்றி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தமிழர்கள். அப்படிப்பட்ட ஓர் இனத்தை வந்தேறிகள் என்று சொல்லலாமா. சொல்வதற்கு மனசு வரலாமா. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக வரலாற்றைத் திசை திருப்பலாமா?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.02.2021

சான்றுகள்:

1. Gomes, Alberto G. "The Orang Asli of Malaysia". International Institute for Asian Studies.

2. அல்பெர்ட்டோ கோமஸ் - https://scholar.google.com.my/citations?user=vGLzBO8AAAAJ&hl=en

3. World Directory of Minorities and Indigenous Peoples - https://minorityrights.org/minorities/orang-asli/

4. Malaysia's indigenous tribes fight for ancestral land and rights in a modern world - https://www.channelnewsasia.com/news/asia/malaysia-orang-asli-ancestral-land-rights-11848294

5. Cultural Assimilation among Malays and Indians in Malaysia - PDF - Punitha Sivanantham; Kumaran Suberamanian

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக