17 பிப்ரவரி 2021

அப்போது வாருங்கள் இப்போது வந்தேறிகள்

தமிழ் மலர் - 17.02.2021

உலகின் அழகான அற்புதமான அதிசயமான நாடு மலேசியா. அழகு அழகான இயற்கை வளங்கள். அழகு அழகான கனிவளங்கள். அழகு அழகான மரங்கள் செடிகள் கொடிகள். அழகு அழகான மனிதர்கள். கலர் கலரான இனங்கள். அதில் கதைகள் சொல்லும் மதங்கள்.

இயற்கை அன்னையே ஆசைப்பட்டு ஓடி ஆடி கண்ணாம்பூச்சி விளையாடிய இனிதான காடுகள் மேடுகள். அதைப் பார்த்து உலகின் எல்லா ஜீவராசிகளுக்கும் ஆசைகள் வந்தன. இடம் தேடி இங்கே வந்தன. வசதியாய் வளமாய் வாழ்கின்றன. அதோடு ஆனந்தமாய் ஆனந்த பைரவிகளையும் அன்றாடம் பாடுகின்றன.

இன்னும் ஒரு செய்தி. இந்த நாடு இறைவன் தந்த ஓர் அட்சயப் பாத்திரம். அர்ப்பணிப்பு வளாகத்தில் மணிமுத்துகளின் சீதனத் தடாகம். இயற்கை அழகில் சொல்லாமல் கொள்ளாமல் அம்சவர்த்தனங்கள். இயற்கை அன்னை சிந்தாமல் சிதறாமல் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். அத்தனையும் பச்சைப் பசேல் சீதனக் கொலுசுகள்.

அதனால் தானோ என்னவோ தெரியவில்லை; மலாயாவைப் பார்த்து கிழக்கு உலகின் அழகிய முத்து என்று ஐரோப்பியர்கள் புகழாரம் செய்தார்கள். அப்படி ஆசை ஆசையாய்ப் பார்க்கப்பட்ட நாடு. அப்படி ஆசை ஆசையாய் வளர்க்கப்பட்ட நாடு.

ஆனால்... ஆனால்... அண்மைய காலங்களில் அந்த ஆசைகள் எல்லாம் கரைந்து முறுகி வருகின்றன. இனவாத மதவாதப் பெரிசுகளின் கண்மண் தெரியாத கதகளி ஆட்டங்கள். இதில் கடன் வாங்கி வாங்கியே ஒரு நாட்டை கடன்காரா நாடாக மாற்றி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் ஆசிய வளர்ச்சி நிறுவனத்தில் அதிகமாக பணத்தைச் சேர்த்து வைத்து இருந்த நாடு. மற்ற நாடுகளுக்கு அள்ளிக் கொடுத்த நாடு. இப்போது பாருங்கள். கடன்கார நாடுகளின் பட்டியிலில் சிக்கிக் கொண்டு அல்லல் படுகிறது.

சுயநலத்திற்காகவும் சொந்தக் குடும்பத்தின் பந்த பாச நலனுக்காகவும் நாட்டை அடமானம் வைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள் சிலர். சீனாவிடம் பல நூறு பில்லியன்கள் கடன். அந்தக் கடன்களை மொத்தமாக அடைத்து முடிக்கப் பல பத்தாண்டுகள் பிடிக்கலாம். வேதனை ஒரு பக்கம். விசும்பல்கள் ஒரு பக்கம்.

பிரதமர் நஜிப் காலத்தில் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களுக்கு சீனா நிதி உதவி செய்தது. 2014 மே மாதம் 31-ஆம் தேதி, பிரதமர் நஜிப் சீனாவுக்கு ஓர் அரசுப் பயணம் மேற்கொண்டார். அப்போது சீனாவின் பிரதமர் லி கெக்கியாங் (Li Keqiang).

சீனாவும் மலேசியாவும் இருதரப்பு வர்த்தகத்தை 2017-ஆம் ஆண்டுக்குள் 160 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கு முடிவு செய்தன. குறிப்பாக ஹலால் உணவு, நீர் பதப் படுத்துதல், ரயில் கட்டுமானம் மற்றும் துறைமுகங்கள் போன்ற கட்டுமானங்கள்.

160 பில்லியன் டாலர் என்பது சாதாரண காசு இல்லை. மலேசியாவில் உள்ள அத்தனை பேருக்கும் ஆளுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் கொடுக்கலாம். அவ்வளவு பெரிய காசு. ஆனால் சீனா கொடுக்கும் அவ்வளவு பணத்திற்கும் வட்டியும் முதலுமாக நாம் கொடுக்க வேண்டும். முப்பது ஆண்டு ஒப்பந்தம் என்றால் சீனா கொடுக்க நினைத்த அந்தப் பணம் 200 பில்லியனாக எகிறிப் போய் இருக்கும். நல்ல வேளை. மகாதீர் வந்து தடுத்து நிறுத்தினார். சரி.

மலேசியா இன்று இணைய நாளிதழில் அமரர் ஜீவி. காத்தையா அவர்கள் வந்தேறிகள் வரலாறு என்ன சொல்கிறது எனும் தலைப்பில் 2014-ஆம் ஆண்டு ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். அதில் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

ஜீவி. காத்தையா அவர்கள் அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதி; ஒரு சமூகச் செயற்பாட்டாளர்; கட்டுரையாளர்; செய்தியாளர்; களப் போராளி; மலேசியத் தொழிலாளர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். சென்ற 2020-ஆம் ஆண்டில் தம்முடைய 82-ஆவது அகவையில் காலமானார்.

நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர். மலேசியப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை போட்டியிட்டவர். 1964-ஆம் ஆண்டில் அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தை (AMESU) உருவாகக் காரணமாக இருந்தவர்.

இவரைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இப்போது வந்தேறிகள் பற்றி என்ன சொல்கிறார். அதைப் பார்ப்போம்.

அமெரிக்கா பல இனங்களைக் கொண்ட  நாடு. அங்கு நிற அடிப்படையிலான குமுறல்கள் இன்று வரையில் நீடிக்கின்றன. இருந்தாலும் அந்நாட்டு மக்கள் ஒருவரைப் பார்த்து “வந்தேறி” என்று சொல்ல மாட்டார். “திரும்பிப் போங்க” என்று கொக்கரிக்க மாட்டார். “திரும்பிப் போங்க” என்று சொன்னால் எல்லோருமே திரும்பிப் போக வேண்டும்.

அங்கே யாருமே மண்ணின் மைந்தர்கள் அல்ல. எல்லோருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான். “திரும்பிப் போங்க” என்று சொன்னால் சிவப்பு இந்தியர்களைத் தவிர, மற்ற எல்லோருமே அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நடக்குமா. நடக்கிற காரியாமா? சிவப்பு இந்தியர்கள் தான் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்.

இந்தப் பக்கம் ஓராங் அஸ்லி மக்களை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் தான் அசல் மண்ணின் மைந்தர்கள். இவர்கள் எங்கே? இவர்களின் பெயரைச் சொல்லிப் பேர் போட்டுக் கொண்டு இருக்கும் சிலரும் பலரும் எங்கே?

மலேசியாவும் பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாடு. பல்லின மக்களின் உழைப்பால் செழிப்பும் வளப்பமும் அடைந்த நாடு. இப்படி ஒரு புண்ணிய பூமியில் “வந்தேறிகள்” மற்றும் “திரும்பிப் போங்க” என்கிற கூப்பாடுகள். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. ரொம்ப காலமாகவே நீண்ட நெடிந்து வருகின்றன.

ஜீவி. காத்தையா சொல்கிறார்: வந்தேறிகள் எனும் சொல்லுக்கு தூபம் போட்ட பெருமை நாட்டின் பெரும் தலைவர்கள் என்று கூறப்படும் ஓன் பின் ஜாபார்; துங்கு அப்துல் ரஹ்மான்; மகாதிர் முகமட்; மேலும் சில பல தலைவர்கள்.

புழு பூச்சிகளுக்குக்கூட இவர்களின் பின்னணி நன்றாகத் தெரியும். ஆனால் இவர்கள் என்னவோ மலேசிய மண்ணுக்குள் இருந்து லபக் என்று முளைத்தவர்கள் போல் மற்றவர்களைப் பார்த்து திரும்பிப் போ என்று சொல்கிறார்கள்.

அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் அவர்களைப் பாராட்டலாம். பகிரங்கமாக சொல்லி இருக்கிறார். தம்முடைய இந்தோனேசியா சுலாவாசி பூர்வீகத்தை ஒப்புக் கொண்டு உள்ளார். பாராட்டுவோம்.

“திரும்பிப் போங்க” என்ற கூப்பாடு  இன்றும் தொடர்கிறது. அந்தக் கூப்பாடு மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளது. அதே நேரத்தில் அந்தக் கூப்பாட்டிற்கு எதிர்ப்பும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

ஒரு நாட்டின் குடிமகனை திரும்பிப் போ என்று சொன்னால் அது அவனுடைய உரிமைக்குச் சவால் விடுவது போலாகும். அந்தச் சவால் நாட்டில் நிலவி வரும் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் போன்றவற்றைச் சீரழிக்கும் தன்மை கொண்டவை. இதைத் தான் மலேசியத் தமிழர்களின் சார்பில் நானும் முன்வைக்கிறேன்.

மலேசியத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளில் கை வைப்பது தவறு. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

மகாதீரின் மகள் மரினா மகாதீர். அவர் ஒரு முறை சொன்னார். அவர் சொன்னதை இங்கு பதிவு செய்கிறேன். ’நாம் எங்கே பிறந்தோம் என்ற கேள்விக்கு இன்றைய உலகில் இடம் இல்லை. அதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அமைந்து இருக்கிறது.’ சரி.

2014-ஆம் ஆண்டு கெராக்கான் மாநாட்டில் அந்தக் கட்சியின் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் என்பவர் கூறியதையும் பதிவு செய்கிறேன்.

இந்த நாட்டில் ஓராங் அஸ்லி, சபா மக்கள்; சரவாக் மக்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் வந்தேறிகள்தான். மற்ற அனைவரும் வந்தேறிகள் தான்”

“சீனர்களை வந்தேறிகள் என்று அடிக்கடி கூறுபவர்கள்கூட வந்தேறிகள் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை” என்று டான் கூறினார்.

பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் பேச மாட்டார்கள். எதைப் பேசக் கூடாதோ அதைத்தான் பேசுவார்கள். எப்படி பேசினால் எதைப் பேசினால் மற்றவர்கள் காயப் படுவார்கள் என்று நினைக்கிறார்களோ அதைத் தான் பேசுவார்கள். அத்தனையும் அர்த்தம் இல்லாத பேச்சுகள்.

இதில் ஊரை விட்டு ஊர் ஓடி வந்த ஒருவர்.. அந்த மனுசனாலும் சும்மா இருக்க முடியவில்லை. காலா காலமாக இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தியர்களையும் சீனர்களையும் சீண்டிப் பார்க்கிறார். அதில் அவருக்குப் பெரிய சந்தோஷம்.

தமிழகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. அப்படியே சன்னமாய் அடங்கிப் போனது. ஆனால் இங்கே அதே மாதிரியான புயல்காற்று அடிக்கடி விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. அப்படியே மலேசிய இந்தியர்களையும் வாட்டி வதைத்து விட்டுப் போகிறது.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பார்கள். அந்த மாதிரி தான் சில நாடுகளில் குறுக்குப் புத்திக் குதிரைகள் குறுக்கு வழியில் விளம்பரம் தேடிக் கொண்டு ஓடுகின்றன.

எல்லாவற்றிலும் அவர்களே ஒசத்தி; எல்லாமே அவர்களுக்குச் சொந்தம். இது நெருப்புக் கோழியின் மயக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்த மயக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். அந்த வகையில் வரலாறு என்கிற மாத்திரையை அடிக்கடி கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்ல. என்னுடைய கடப்பாடு.

ஆச்சு பூச்சு பேச்சுக்கு எல்லாம் வந்தேண்டா பால்காரன் என்று சொல்லி வந்தேறிகள் வந்தேறிகள் என்கிறார்கள். அந்தச் சொல்லை நாம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விடலாம். ஆனால் அந்தச் சொல் தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தப் படுவதால் அதற்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சில பல நூறாண்டுகளாக வாழ்ந்து கரைந்து போனவர்கள் மலாயா தமிழர்கள். அவர்களைப் பார்த்து ’நீங்கள் வந்தேறிகள்... திரும்பிப் போங்கள்’ என்றால் அதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அப்படிச் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா?

யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது. மலேசிய தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லும் போது வேதனை வரவில்லை. சிரிப்பு தான் வருகிறது.

மலாயாவில் கூலிக்கு மாராடிக்க வாங்கோ என்றுதான் அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் மலாயா தமிழர்கள் அவர்களின் ஒப்பற்ற உழைப்பையும், அப்பழுக்கற்ற உதிரத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார்கள்.

அன்றைய மலாயா இன்று மலேசியாவாக இந்த அளவிற்கு மலர்ச்சியுடன் மிளிர்ந்து நிற்பதற்கு காரணம் யார். மலாயா தமிழர்கள்.

இன்று இந்த நாட்டில் திரும்புகிற இடங்களில் எல்லாம் நிரம்பி வழியும் வங்களாதேசிகள் அல்ல. இந்தோனேசியர்கள் அல்ல. மியான்மார் வாசிகள் அல்ல. நேபாளிகள் அல்ல.

சாட்சாத் இன்னமும் எல்லா நியாயமான உரிமைகளையும் விட்டுக் கொடுத்து... விட்டுக் கொடுத்து... ஏமாந்து போய் நிற்கும் மலாயா தமிழர்களே. அவர்களின் வரலாற்றில் கண்ணீரும், காயங்களும் தான் மிஞ்சிப் போய் நிற்கின்றன அவைதான் மலாயா தமிழர்களுக்குக் கிடைத்த தியாகத்தின் திருவோடுகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(17.02.2021)

சான்றுகள்:

1. வந்தேறிகள்: வரலாறு என்ன சொல்கிறது? - https://malaysiaindru.my/115047

2. China and Malaysia pledged to increase bilateral trade to US$160 billion by 2017 - https://en.wikipedia.org/wiki/Debt-trap_diplomacy#Malaysia

3. Is Malaysia the cradle of civilisation? - https://www.freemalaysiatoday.com/category/opinion/2020/09/17/is-malaysia-the-cradle-of-civilisation/

4. The Malays were once probably a people of coastal Borneo who expanded into Sumatra and the Malay Peninsula as a result of their trading and seafaring way of life. This expansion occurred only in the last 1,500 years https://www.britannica.com/topic/Malay-people

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக