08 மார்ச் 2021

மகளிர் தின வாழ்த்துகள் 2021

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது. மரம் சத்தத்தோடு முறிகிறது. இந்த நாட்டில் தமிழர் இனம், சத்தம் இல்லாத விதைகளாய் வாழ்ந்தார்கள். வாழ்கின்றார்கள். இனி வரும் காலங்களில் மாற்றத்தை எதிர்ப் பார்க்கின்றார்கள். அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் படுகிறார்கள்.

நாட்டின் வளப்பத்திற்காகத் தமிழர்கள் பட்ட அவலங்கள் சொல்லில் மாளா. அந்தத் தியாகச் சீலர்களின் அடிப்படை உரிமைகள் மீது அக்கறைக் காட்டாமல் இருப்பது நியாயம் அல்ல. எத்தனை இன்னல்கள் வந்தாலும் பொறுமையோடும்; சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

மலாயா தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். அவர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள்.

தங்களுகாக யோசிக்கத் தெரியாமல்; நாட்டுக்காக தங்களின் ஆசா பாச விழுமியங்களை இழந்த தமிழர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு? வந்தேறிகள் என்று அழைப்பது தான் தப்பு. படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயிலாக இருக்கக் கூடாது.

அவர்கள் உழைச்சுப் போட்ட சுகத்தில் தான்; இப்போது பலரும் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டுக் கொண்டு இனவாதச் சவடால் பேகின்றார்கள். மலாயா தமிழர்கள் இல்லை என்றால் மொழிவாதச் செருக்குகளும் இல்லை. இனவாத மிடுக்குகளும் இல்லை. பிழைப்பில் ஒரு கல் ஒரு கண்ணாடி தான்.

வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மை வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். செத்துப் போகாது. சமாதி காணாது. சத்தியமான உண்மை.

மலையூர் மண்ணில் மண்ணாய்க் கலந்து; கித்தா மரங்களோடு கித்தா மரங்களாய்க் கலந்து; தகரக் கொட்டாய்களில் கித்தா பூக்களாய்க் காய்ந்து கறுகிப் போனவர்கள் மலாயா தமிழர்கள். அவர்களை நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் நன்றி சொல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.03.2021



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக