30 மார்ச் 2021

கிள்ளான் நெடுஞ்செழியன் எளிமையின் வழமை

 தமிழ் மலர் - 28.03.2021

திருக்குறள். காலத்தில் அழியாத கலைநெறிக் கருவூலம். ஞாலத்தில் மறையாத மொழிநீதிக் கருவூலம். மனிதச் சிந்தனைகளின் வாழ்வியல் தத்துவம். அந்த வாழ்வியல் தத்துவத்தில் வாழ்வாதார அணிகலனாய்ப் பரிணமிக்கும் ஒரு பொற் குவியல். பரிமேழகம் பார்த்துப் பரிவட்டம் கட்டிப் பாரிஜாதம் பார்க்கும் தலைவாசல். ஒவ்வொரு தமிழர்க் குடும்பத்திலும் சத்தியம் பேச வேண்டிய ஒப்பற்ற வாழ்வியல் விழுமியம்.

இப்படிச் சொல்பவர் ஒரு திருக்குறள் புகழேந்தி அல்ல. திருக்குறள் செம்மல் அல்ல. திருக்குறள் முனைவரும் அல்ல. மாறாக மலேசிய நாட்டில் வாழும் ஒரு சாமானியத் தமிழர். நெடுஞ்செழியன் எனும் பெயரில் நெடும் காலமாய்ப் பயணிக்கும் ஒரு சாமானிய மனிதர்.

தமிழ் இனத்திற்கும்; தமிழ் மொழிக்கும்; தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சத்தம் இல்லாமல் யுத்தம் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்து வரும் ஒரு சாதாரண மனிதர்.

பல் மருத்துவராகத் தொழில் சேவைகள் செய்தாலும் பாமரர்கள் போற்றும் மனிதநேயச் சேவைகளைச் செய்து வருகிறார். ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக தமிழ் மொழி - தமிழ்ப்பள்ளிச் சேவைகள். பலருக்கும் தெரியாத உண்மை.

அவரின் சேவைப் பின்புலன்களைப் பார்க்கும் போது மலைப்பு ஏற்படவில்லை. வியப்பு ஏற்படவில்லை. வாழ்த்த வேண்டிய மனித உணர்வுகள் என்றே தோன்றுகிறது. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிச் சிறப்பு செய்ய வேண்டும்.

இடையில் சின்ன ஒரு செருகல் வந்து போகிறது. சொல்ல வேண்டிய நிலைமை. தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பத்து பாக்கெட் மெகி; பத்து பாக்கெட் மீகூன்; பத்து கிலோ அரிசி; பத்து ரிங்கிட் ஆங் பாவ். அதிகம் இல்லை. இரண்டு மூன்று நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சின்ன ஓர் உபசரிப்பு. இருந்தாலும் பத்து பேரைக் கூப்பிட்டு; பத்து படங்களைப் பிடித்து; பத்திரிகையில் போட்டு படம் காட்டும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு சிலர்தான். எல்லோரும் அல்ல.

அதே மண்ணில் ஆர்ப்பாட்டம் இல்லாமல்; ஆரவாரம் இல்லாமல்; எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்; மிக அமைதியாகச் சிலரும் பலரும் பயணிக்கின்றார்கள். அப்படிப்பட நல்ல உள்ளங்கள் விளம்பரங்கள் தேடுவது இல்லை. வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இல்லை.

அதே சமயத்தில் அசல் உண்மையான சேவகர்களைப் பலருக்கும் தெரிவதும் இல்லை. இருக்கிற இடம் தெரியாமல் வாழ்கின்ற அவர்களுக்கு விளம்பரம் கிடைப்பதும் குறைவு. வெளிச்சம் கிடைப்பதும் குறைவு.

அந்த விளம்பரம் வெளிச்சங்களை அவர்கள் நாடிப் போவது இல்லை போலும். அப்படிப்பட்டவர்களை நாம் தான் தேடிப் போக வேண்டும். அந்தப் பட்டியலில் பயணிப்பவர்களில் ஒருவர்தான் பூச்சோங் பல் மருத்துவர் நெடுஞ்செழியன். டாக்டர் நெடு என்று அழைக்கிறார்கள்.

அனைத்துக அளவில் மருத்துவத் துறை வழியாக இவர் அறியப் பட்டாலும்; சத்தம் இல்லாமல் சலனமான வெளிச்சத்தில் சாதித்து வருகிறார். இவர் மலாயாத் தமிழர்களின் வாரிசு. ஒரு மலேசியத் தமிழர். வாழ்த்துகிறோம்.

இவரின் தமிழ்ச் சேவைகள்; தமிழார்ந்த உணர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் இவர் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவர்.
 
டாக்டர் நெடுஞ்செழியன் ஒரு தமிழ்மொழிச் சேவையாளர். தமிழினப் பற்றாளர். தமிழ் மொழியை உயிருக்கும் மேலாய்க் கருதும் ஒரு தமிழர்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எளிமையான வழமையில் தமிழ் வளர்க்கும் இவரின் குடும்பத்தாருக்கு முதல் மரியாதை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். மலேசியாவில் நல்ல தமிழ்ச் சேவைகள் செய்து வருகிறார். அவரைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும்; அடையாளப் படுத்த வேண்டும் என்று நினைத்தது உண்டு. அதற்கும் சரியான நேரம் காலம் சரியாக அமைய வேண்டும் அல்லவா.

சில தினங்களுக்கு முன்னர் பூச்சோங்கில் அமைந்து இருக்கும் அவருடைய பல் மருத்துவகத்தில் சந்தித்தேன். ஏற்கனவே அலைபேசியில் பேசியது உண்டு. கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.  

எளிமையானத் தோற்றம். இயல்பான பழகுமுறை. சொற்களில் அழுத்தங்கள். உச்சரிப்புகளில் தெளிவு. உவமானங்களில் உயிர்ப்புகள். சுய விளம்பரத்தைத் தவிர்க்கும் பாங்கு. பலரையும் கவர்ந்து இருக்கலாம். என் கணிப்பு சரியாக அமையும்.

அவருடைய மருத்துவகத்தில் ஐந்து பணியாளர்கள். ஒருவர் மருத்துவர். பெயர் விக்னேஸ்வரி. பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் போகச் சொல்லி மலேசியச் சுகாதார அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பயணம்.

மேலும் நான்கு பணியாளர்கள். பெயர்கள் வேண்டாமே. வாடிக்கையாளர்களை இனிதாக வரவேற்று இனிதாகப் பேசி இனிதாகச் சேவை செய்கிறார்கள். தனியார் மருத்துவகம் என்பதற்காக அல்ல. அவர்களின் இயல்பான சேவை நற்பண்புகள்.  

வரவேற்பு அறையில் சந்திப்பு. முதல் அறிமுகம். அவர் சொல்கிறார். மனிதனாகப் பிறந்தாலே பற்பல வேதனைகள்; பற்பல சோதனைகள்; பற்பல அவலங்கள். அத்தகைய மனித வாழ்க்கையை இனிமையாக்கி அலங்கரிப்பது எளிமையான விசயங்கள் தான் ஐயா.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள்; நம்மைச் சார்ந்த நல்ல நல்ல நிகழ்வுகள்தான் நம்முடைய மனங்களை அழகு செய்கின்றன. இப்படி அழகாகத் தமிழ் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழில் பேசுவது அவமானம் அல்ல. அது நம் அடையாளம்!

'பேசு தமிழா பேசு’ எனும் பேச்சுப் போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உயர்க்கல்வி மாணவர்களிடையே நடைபெற்று வரும் “பேசு தமிழா பேசு” போட்டியின் நீதிபதிகளில் ஒருவராகப் பயணித்தவர் டாக்டர் நெடுஞ்செழியன். இது போன்று பல தமிழ் மேடை நிகழ்ச்சிகளில் நடுவராகப் பயணித்து உள்ளார்.

எளிமையை நாம் ஏளனமாகப் பார்க்கக் கூடாது. புறக்கணிக்கக் கூடாது. அந்த எளிமையை நம் வாழ்க்கையுடன் அணைத்து மகிழ வேண்டும். மனித வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் எளிமை என்றும் இனிமையாக இருக்கும். இது மிகையில்லை. சத்தியமான உண்மை என்று சொல்கிறார். அந்த எளிமையில் தான் பூச்சோங் நெடுஞ்செழியன் என்பவரும் நிற்கின்றார்.

முதலில் அவரின் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். இருவருமே இனிய தமிழ் எங்கள் தமிழ் என்று வாழ்ந்தவர்கள். எளிமைத் தமிழில் இனிமை கண்டவர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். தகப்பனாரின் பெயர் வேங்கு. தாயாரின் பெயர் வள்ளியம்மை.

தமிழ் நாவல்களைப் படிப்பது என்றால் அவர்களுக்கு அலாதியான ஆர்வம். சாண்டில்யன்; கல்கி; அகிலன்; டாக்டர் மு.வ; நா. பார்த்தசாரதி; ஜெயகாந்தன்; ஜானகி ராமன்; கி.வ.ஜெகநாதன்; ரமணி சந்திரன்; பாலக்குமரன்; ஜெயமோகன்; ராஜம் கிருஷ்ணன்; சுஜாதா போன்றோரின் நாவல்களைச் சேகரித்து தங்கள் பிள்ளைகளையும் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த நாவல்களைச் சின்ன வயதிலேயே படித்ததினால் தான் நெடுஞ்செழியன் இன்று தமிழ் மொழிப் பயன்பாட்டில் சிறந்து விளங்குகிறார் என்று சொல்லலாம்.

இவருடைய தந்தையார் ஒரு தமிழாசிரியர். ஷா ஆலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவருடைய தாயார் தந்தையார் மூலமாக மட்டும் அல்ல. பாட்டியின் மூலமாகவும் டாக்டர் நெடுஞ்செழியன் தமிழை வளர்த்துக் கொண்டார்.

இராமயணத்தில் ஒவ்வொரு காண்டமாக அவரின் பாட்டி சொல்லிக் கொடுத்து இருக்கிறார். பாலகாண்டம்; அயோத்தியா காண்டம்; ஆரண்ய காண்டம்; கிட்கிந்தா காண்டம்; சுந்தர காண்டம்; யுத்த காண்டம் என்று எல்லாக் காண்டங்களையும் காட்சி காட்சியாகப் பாட்டி சொல்லுவாராம்.

டாக்டர் நெடுஞ்செழியன் சொல்கிறார். எடுத்துக்காட்டாக அயோத்தியா காண்டம். இராமனுக்கும், சீதைக்கும் காட்டில் நடந்த வனவாசம் காதை. அந்தக் கதையைச் பாட்டி சொல்லும் போது எங்களுக்கு அந்த வனவாசக் காட்சி அப்படியே தெரியும். அப்படி உயிரோட்டமாய்க் கதையைச் சொல்வார்.

மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. இது ஓர் இதிகாசக் காப்பியம் என்பதை நினைவில் கொள்வோம். டாக்டர் நெடுஞ்செழியன் எப்படி விவரிக்கிறார் என்று பார்ப்போம்.

’திரௌபதி காட்டில் உட்கார்ந்து இருப்பாங்க... வெளியே ஒரு புள்ளிமான் ஓடிக் கொண்டு இருக்கும்... அந்த மானைப் பிடித்துத் தரச் சொல்லுவாங்க... பீமன் ஒரு பலசாலி. அவர்தான் மானைப் பிடிக்க முதலில் போவார்.

அந்த மான் எங்கே எங்கேயோ ஓடும். மானை விரட்டி விரட்டி பீமனுக்குத் தாகம் எடுத்துவிடும். குடிப்பதற்கு தண்ணீர் தேடுவார். அப்போது குயிலும் மயிலும் கத்தும் சத்தம் கேட்கும். ஒரு குளிர்ந்த இடத்தில் தான் குயிலும் மயிலும் கத்தும். ஆக அங்கே தண்ணீர் இருக்கும் என்பதைப் பீமன் உணர்ந்து கொண்டார்.

அங்கே ஒரு சின்ன தடாகம். பீமன் தண்ணீர் குடிக்கப் போகிறார். அப்போது அங்கே இருந்த குயிலும் மயிலும் பீமனிடம் கேள்விகள் கேட்கின்றன. ‘ஏய் மானிடா... எங்களுடைய மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு தண்ணீர் குடி. இல்லை என்றால் இறந்து போவாய்.

முதல் கேள்வி: வாடாத பயிர் எது? இரண்டாவது கேள்வி: வருத்தம் இல்லாத சுமை எது? மூன்றாவது கேள்வி: உலகத்தில் அதிசயமானது எது?

கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தாகத்தினால் பீமன் தண்ணீர் குடித்து இறந்து விடுகிறார். அடுத்து அர்சுணன், நகுலன், சகதேவன் அனைவருக்கும் அதே நிலைமை. தண்ணீர் குடித்து இறந்து விடுகிறார்கள்.

கடைசியாகத் தர்மம் வருகிறார். மூத்தவர். நிதானமாக நடந்து கொள்கிறார். அவர் மூன்று கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லிவிட்டுத் தண்ணீர் குடிக்கிறார். அப்போது குயிலும் மயிலும் சேர்ந்து சொல்கின்றன. நாங்கள் தான் சித்ர குப்தன்; எமதர்மன்.  உங்களைக் அந்த இடத்தில் இருந்து இங்கே கொண்டு வந்து காப்பாற்றுவதற்காகத் தான் மானை அனுப்பி வைத்தோம் என்று சொல்கின்றன.   

இது கதை. இதில் முக்கியமானது குயிலும் மயிலும் கேட்ட கேள்விகள் தான். முதல் கேள்வி: வாடாத பயிர் எது? உங்களுக்குத் தெரியுமா. சொல்லுங்கள் பார்ப்போம். பரவாயில்லை. நானே சொல்கிறேன்.

வாடாத பயிர் அருகம்புல். அதுதான் வாடாத பயிர். இரண்டாவது கேள்வி: வருத்தம் இல்லாத சுமை எது? தாய்மை அடைதல். தாய்மை ஒரு சுமை தான். ஆனாலும் வருத்தம் இல்லாத சுமை தானே. எந்தத் தாயாவது தன் குழந்தையைச் சுமை என்று சொல்வாளா?

அடுத்து மூன்றாவது கேள்வி: உலகத்தில் அதிசயமானது எது? இதற்கான பதில் பிறப்பு இறப்பு. புரிகிறதா. பிறப்பும் இறப்பும் தான் உலகத்திலேயே அதிசயம் என்று மகாபாரதம் சொல்கிறது. உண்மைதான். பிறப்பதும் ஓர் அதிசயம். இறப்பதும் ஓர் அதிசயம்.

பூச்சோங் டாக்டர் நெடுஞ்செழியனுக்கு சின்ன வயது. ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் பாட்டி அந்தக் கதையைச் சொன்னார். இப்போது அவருடைய வயது 50-ஐ தாண்டி விட்டது. இருப்பினும் நன்றாக நினைவில் வைத்து இருந்து இப்போதும் சொல்லிக் காட்டுகிறார்.

நேற்று நடந்தை இன்று மறந்துவிடும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருப்பினும் இவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி சொன்ன கதையை மறக்காமல் இன்றும் நினைவில் வைத்து இருக்கிறார். பாராட்ட வேண்டும். சின்ன வயதில் கற்றது சிலை மேல் எழுத்து என்று சொல்வார்கள். உண்மை.

அது மட்டும் அல்ல. அவருடைய பாட்டி எப்போதும் புத்தகம் கையுமாக இருப்பாராம். எங்கே எப்போதும் கையில் ஒரு புத்தகம் இருக்குமாம். புத்தகப் பாட்டி என்று பட்டம் கொடுக்கலாம். அவரிடம் இருந்து தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நெடுஞ்செழியனுக்கு வந்ததாகவும் சொல்கிறார்.

இப்போது எல்லாம் இணையத்தைப் பார்த்துப் படிக்கிறோம். அப்போது புத்தகத்தைப் பார்த்துப் படித்தோம். உலகம் ரொம்பவும் மாறி விட்டது. இருந்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தைச் சின்னப் பிள்ளைகளிடம் வழக்கப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்காமல் போய் விடுவார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு நூல்களைப் படிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களின் நினைவாற்றல் கூடுகிறது. சிந்திக்கும் திறன் கூடுகிறது. விவாதிக்கும் திறமை விரிவடைகிறது. இணையம் என்பது உயிர்க் காற்று. ஆனால் நூல் என்பது உயிர்மண் என்கிறார் டாக்டர் நெடுஞ்செழியன்.

இன்று (28.03.2021) காலை 10 மணிக்கு மலேசிய வானொலி மின்னல் பண்பலையில் ‘அமுதே தமிழே’ எனும் இலக்கிய நிகழ்ச்சி. பொன்மணியாள் பொன் கோகிலம் படைக்கும் அற்புதமான இலக்கிய நிகழ்ச்சி. பொன் கோகிலம் மலாயா தமிழ் உலகிற்கு கிடைத்த மற்றும் ஒரு பொன் கலசம். அந்த நிகழ்ச்சியில் அரு.சு. ஜீவானந்தன் கதைகள் எனும் தலைப்பில் டாக்டர் நெடுஞ்செழியன் இலக்கிய உரை ஆற்றுகிறார்.  கேட்டுப் பாருங்கள்.

பார்த்தால் அவரா இவர் என்று ஐயம் எழும். கேட்டால் அந்த மனிதரா என்று குழப்பமும் ஏற்படும். அவ்வளவு எளிமையாகப் பழகுகிறார். தமிழ் மொழியைப் பற்றியும் தமிழினம் பற்றியும் நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார். நாளைய கட்டுரையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2021

சான்றுகள்:

1. Sang Kancil Foundation Malaysia - https://www.hati.my/yayasan-sang-kancil-malaysia/

2. Yayasan Sang Kancil Malaysia - https://www.facebook.com/yayasanskm/

3. Nedu The Dentist Klinik Pergigian Puchong - https://www.whatclinic.com/dentists/malaysia/kuala-lumpur/bukit-jalil/nedu-the-dentist-klinik-pergigian-puchong

4. Nedunchelian Vengu - University of Malaya Department of Oral Pathology & Oral Medicine & Periodontology Nedunchelian Vengu

பேஸ்புக் பதிவுகள்

Venogobaal Kuppusamy: நல்லோரை நயம்பட அறிமுகம் செய்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி! இருவருக்கும் நன்றியும் நல்வாழ்த்துகளும்!

Muthukrishnan Ipoh >>> Venogobaal Kuppusamy: நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை... ஒருவர் பண்புடையாராக இருப்பின் மழை பொழியும். உயிர்கள் தழைக்கும்.

Devendran Ravi: வாழ்த்துக்கள் ஐயா

Arni Narendran: Vaazthugal from Mumbai 🙏🌿

Muthukrishnan Ipoh >>> Arni Narendran: நன்றிங்க

Sheila Mohan: வாழ்த்துகள் சார்...

Kala Balasubramaniam:

Arojunan Veloo: மகிழ்ச்சி; வாழ்த்துகள் டாக்டர்!

Letchumanan Nadason:

Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: அவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Balamurugan Balu:

Velan Mahadevan:

Sharma Muthusamy:

Arichanderan Manickavasakar:

Isham Balqis: Vaalthukkal sir

R Muthusamy Rajalingam: விளம்பர வெளிச்சம் அற்று, தமிழ்ப் பணி ஆற்றும், அவருக்கு வாழ்த்துகள். சிறப்பான ஆக்கம் ஐயா.

Muthukrishnan Ipoh >>> R Muthusamy Rajalingam: ஆரவாரம் இல்லாமல் அமைதியாகப் பயணிக்கின்றார்... எவர் ஒருவர் தாம் செய்த நல்காரியங்களைப் பற்றி வெளியே சொல்லாமல் இருக்கின்றாரோ அவரை நன்மக்களின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும்.

Kumar Murugiah Kumar's: வாழ்க அவர் தமிழ் உணர்வோடு, வாழ்த்துகள் பாராட்டுகள் ஐயா!

Muthukrishnan Ipoh >>> Kumar Murugiah Kumar's: தமிழ் மொழிக்குச் சேவை செய்பவர்களை அடையாளப்படுத்த வேண்டியது நம் கடமை ஐயா..

Kumar Murugiah Kumar's >>> Muthukrishnan Ipoh: எல்லாம் இறைவனின் சித்தம் ஐயா ! தொடருங்கள் ஐயா !

Muthukrishnan Ipoh: இலை மறைக் காயாக வாழும் ஒரு தமிழர்... அறிமுகம் செய்வது நல் வழக்கம்.

Sheila Mohan: வாழ்த்துகள் சார்..

தேவிசர சரவணக்குமார்:
அருமை.... வாழ்த்துகள்

Raghawan Krishnan: Fantastic.

Sara Rajah: வாழ்த்துகள் அய்யா

தேவிசர சரவணக்குமார்:

Oviyar Mugil:


Isham Balqis: Vaalthukkal sir






1 கருத்து: