24 ஜூலை 2021

1870-ஆம் ஆண்டு ரந்தாவ் லுக்குட் தமிழர்கள் கண்ணீர் வரலாறு

இடுப்போடு இழுத்துக் கட்டிய வேட்டி. அந்த வேட்டிக் கோவணத்தில் ஒட்டுப் போட்ட ஓட்டைகள். உடம்போடு ஒட்டிக் கொண்ட ஒரு பொட்டுத்துணி. சப்பாத்து இல்லாமல் ஒடிந்து விழும் ஒல்லிக் கால்கள். தலையில் முக்கால் பீக்கள் மரவெள்ளி மூட்டை. விழுந்தோம் கவிழ்ந்தோம் என்று படகுப் பாலங்களில் மூட்டைகளைச் சுமக்கும் கண்ணீர்க் காட்சி.

அவர்கள்தான் முதுகு எலும்பு முறிந்த லுக்குட் தமிழர்கள். இடுப்பு எலும்பு நகர்ந்த லிங்கி தமிழர்கள். கழுத்து எலும்பு தகர்ந்த லின்சம் தமிழர்கள். கறுப்புத் தோல் கிழிந்த ரந்தாவ் தமிழர்கள்.
 


இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட உழைப்புகளின் உயிர்த் தோரணங்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம் போன்ற பழம்சுவடி காப்பகங்களில், மலாயா காபி ரப்பர் தோட்டங்களைப் பற்றிய சில அரிய படங்கள் உள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளராகப் பதிவு செய்து வரலாற்றுப் படங்களை மீட்டு எடுத்து வருகிறோம். 


அந்த வகையில் அண்மையில் நமக்கு ஒரு படம் கிடைத்து உள்ளது. ஒரு வரலாற்றுப் படம். எடுக்கப்பட்ட இடம்: நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டப் படகு துறை. காலவெளி: 1870 - 1900. பொருள்கள்: மரவெள்ளிக் கிழங்குகள்.

அந்தப் படத்தைப் பார்க்கும் போது மனசு ரொம்பவும் வேதனைப் பட்டது. இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்பாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட வரலாற்றுத் தோரணங்கள்.

அந்தப் படம் 1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில், படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு அந்த மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன இவர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டு; சொகுசாக வாழ்ந்து விட்டு வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாத மதவாதத்தின்  இடைச் செருகல். வேதனை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.07.2021

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author(s): Rathborne, Ambrose B. British Library shelfmark: Digital Store 010055.ee.10 London. Date: 1898. Publisher: Swan Sonnenschein


1870 - 1900-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு அந்த வகையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

[1#]. In 1890 the most successful estates proved to be those where access was easy, in Selangor, areas around Klang and Kuala Lumpur, in Negeri Sembilan areas near the coastal village of Lukut, now Port Dickson, and in Perak in the area of Matang and Lower Perak.

[1#]. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் பிரதான  விளைச்சல். [#1]

[#1]. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் லுக்குட்,  லிங்கி காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். [#2]

[#2]. Formerly the company was known as the Linggi Coffee Company, and Liberian coffee was grown on the first properties acquired, but it was decided in 1900 to substitute the more profitable product, Para rubber.

1905-ஆம் ஆண்டு தான் அந்தக் குழுமத்தின் காபி, கிழங்கு, வாழைத் தோட்டங்கள் அனைத்தும் ரப்பர் தோட்டங்களாக மாறின.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடியும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

[3#]. Liberian coffee flourished in Malay States’ relatively low-altitude coffee farms from the 1870s through to the late 1890s.

[3#]. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

1900-ஆம் ஆண்டில் லுக்குட் நிறுவனத்தின் ரப்பர்  தோட்டங்கள்:

1. லுகுட் (Lukut)

2. மார்ஜோரி (Marjorie)

3. லிங்கி (Linggi)

4. உலு சவா (Ulu Sawah)

5. காஞ்சோங் (Kanchong)

இந்தத் தோட்டங்க சிரம்பான் நகரில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்து இருந்தன. லுக்குட் லிங்கி பகுதியில் இப்போது இருக்கும் தோட்டங்கள்:

Erin Estate,

Ladang Hew Mun,

Ladang Lukut,

Ladang Bonawe,

Ladang Siliau North,

Ladang Siliau,

Ladang Lukut,

Ladang Sungai Salak,

Ladang Parit Gila,

Ladang Sua Betong,

Ladang Bukit Belco,

Ladang Bukit Untong,

Ladang Port Dickson Lukut,

Ladang Port Dickson Lukut,

Ladang Bradwall,

Ladang Ranston,

Ladang Leigh,

Ladang Eng Aun,

Ladang Linggi Berhad,

Ladang Wilmor,

Ladang Bukit Palong,

Ladang New Ruthken,

Ladang Sua Betong,

Ladang Arunasalam,

Ladang Shiaw You,

Ladang Sungai Salak,

Ladang Perhentian Siput

மேலே காணப்படும் படம் 1900-ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகள் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக