25 ஜூலை 2021

ரந்தாவ் லின்சம் தோட்டத் தமிழர்கள் கண்ணீர் வரலாறு - 1870

தமிழ் மலர் - 25.07.2021

1870-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் தோட்டம் (Linsum Estate); மலாயாவிலேயே மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் வரலாறு படைத்து உள்ளது.

முதன்முதலில் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்தார்கள். லாபகரமாக அமையவில்லை. அதனால் காபி தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பரின் பக்கம் மாற்றிப் பார்த்தார்கள்.


1870 - 1900-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ஆண்டுகளைக் கவனியுங்கள்.

காபி ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு மரவெள்ளி, சர்க்கரைவல்லி உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன. அந்தத் தோட்டங்களில் மலாயா தமிழர்கள் தான் வேலை செய்து இருக்கிறார்கள்.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டது. அதையும் நினைவில் கொள்வோம்.


மலாயாவைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதிச் சென்ற வரலாற்று நூல்களில் ரந்தாவ், லிங்கி, லுக்குட், போர்டிக்சன் பற்றி அதிகமாகவே எழுதி இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்திய படகுகள்; கப்பல்கள்; சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்குச் செல்லும் போது லிங்கி, லுக்குட், போர்டிக்சன் படகுத் துறைகளை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கின்றன.

லிங்கி முகத்துவாரம் அதிக அலைகள் இல்லாத இடமாக இருந்து உள்ளது. பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; அதன் பின்னர் வந்த டீசல் கப்பல்கள்; அணைவதற்கு லிங்கி லுக்குட் பகுதிகள் பாதுகாப்பான படகுத் துறைகளாக விளங்கி உள்ளன. ஒரு செருகல்.


முதன்முதலில் மலாக்காவில் மலாக்கா சுல்தானகம் ஆட்சியில் இருந்த போது மாட்டு வண்டிகள் மலாயாவில் அறிமுகம் செய்யப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டதும் திரவ ரப்பர் பாலையும்; உலர்ந்த ரப்பர் பொருள்களையும் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் படம் எடுத்து இருக்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம்; நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகப் பழஞ்சுவடிக் காப்பகம் போன்ற பழம்சுவடி காப்பகங்களில், மலாயா காபி ரப்பர் தோட்டங்களைப் பற்றிய சில அரிய படங்கள் உள்ளன. அந்தப் பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளராகப் பதிவு செய்து அந்தப் படங்களை மீட்டு எடுத்து உள்ளேன். 


அண்மைய காலங்களில் வாட்ஸ் அப்; பேஸ்புக் ஊடகங்களில் மலாயா தமிழர்களைப் பற்றிய அரிய வரலாற்றுப் படங்கள் வைரலாகி வருவதைப் பார்த்து இருக்கலாம். அவற்றில் பெரும்பாலான படங்களை அடியேன் மீட்டு எடுத்த படங்கள். பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் நமக்கு மேலும் ஒரு படம் கிடைத்து உள்ளது. அபூர்வமான வரலாற்றுப் படம். எடுக்கப்பட்ட இடம், நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். கொண்டு செல்லப்படும் பொருள்கள் மரவெள்ளிக் கிழங்குகள். காலவெளி: 1870 - 1900. அந்தப் படத்தைப் பார்க்கும் போது மனசு ரொம்பவும் வேதனைப் பட்டது.

முதுகு எலும்பு முறிந்த தமிழர்கள்; இடுப்பு எலும்பு நகர்ந்த தமிழர்கள்; கழுத்து எலும்பு தகர்ந்த தமிழர்கள்; கறுப்புத் தோல் கிழிந்த தமிழர்கள். இடுப்போடு ஒட்டிய வேட்டி. மேலே சட்டை இல்லை. சப்பாத்து இல்லாத வெறும் கால்கள்.

வேட்டிக் கோவணங்களில் ஓட்டை விழுந்து; விழுந்தோம் கவிழ்ந்தோம் என்று படகுப் பாலங்களில் நடந்து; முக்கால் பீக்கள் மூட்டைகளைச் சுமக்கும் காட்சி. 


இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்னதாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட உழைப்புகளின் உயிர்த் தோரணங்கள்.

நல்ல வேளை. இவர்களை வைத்துப் படம் பிடித்து; காணொலி தயாரித்து; மித்ராவிடம் பேரம் பேசி; பணம் சம்பாதிக்கும் தமிழ்ப் பெருமகனார்கள் அப்போது இல்லாமல் போய் விட்டார்கள்.

அஞ்சு கிலோ அரிசி. இரண்டு கிலோ சீனி. ஒரு கிலோ உப்பு. ஒரு போத்தல் சமையல் எண்ணெய். பத்து பாக்கெட் மெகி மீ. அம்புட்டுத்தான். பத்து வீட்டுக்குக் கொடுத்து; இருபது படங்கள் எடுத்து; முப்பது வாட்ஸ் அப் குழுக்களில் போட்டு; பெருமை பேசும் கொரோனா காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். போதாத காலம். விடுங்கள்.

ஆனால் உண்மையாக வெளிச்சம் விளம்பரம் இல்லாமல்; அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல்; சொந்தக் காசைப் போட்டு உதவி செய்யும் நல்ல நல்ல மனிதர்களும் நம்முடன் பயணிக்கின்றார்கள். புடம் போட்ட தங்கங்கள். இவர்களுக்கு முதல் மரியாதை. 


வாட்ஸ் அப்; பேஸ்புக் ஊடகங்களில் ’என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள்’ என்று செல்பி எடுத்துப் போடும் முகக் கவரிகளுக்கு இரண்டாம் மரியாதை. மன்னிக்கவும்.

1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்ட வரலாற்றுப் படத்திற்கு வருகிறேன். காபி மரவெள்ளி மூட்டைகளைப் படகுகள் மூலமாகப் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து நிற்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடி செய்வதும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

1876-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைக் கொண்டு வருவதற்கு  இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; மலாயாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1878-ஆம் ஆண்டில் தமிழர்கள் மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்ய வந்தனர். அதற்கு முன்னர் 1840-ஆம் ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு 2000 பேர் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் முன்பாக 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இந்த உண்மையைச் சொல்வதற்கு பிரான்சிஸ் லைட் இப்போது இல்லை. ஆழ்ந்த உறக்கம். தட்டி எழுப்ப வேண்டும். அப்படியே அவர் எழுந்து வந்தாலும் அவரைப் பாதி வழியிலேயே மறித்து மண்டையைக் கழுவி விடுவார்கள்.

உலகின் மூத்த குடிமக்களின் மூத்தத் தலைவர் என்று புகழாரம் சூட்டி, அங்கேயே வரலாற்றை மாற்றி விடுவார்கள். உலகில் பல இடங்களில் நடக்கும் கோல்மால் குளறுபடிகளைத் தான் சொல்ல வருகிறேன். சிலருக்கு கோப தாபங்கள் வரலாம். பொறுப்பு நான் அல்ல. பிரான்சிஸ் லைட்.

1870-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் நெகிரி செம்பிலான் லுக்குட் லிங்கி தோட்டம்; பேராக் கோலாகங்சார்; பாடாங் செராய்; புரோவின்ஸ் வெல்லஸ்லி நிபோங் திபால்; மலாக்கோப் தோட்டம் பினாங்கு; போன்ற இடங்களிலும் காபி பயிர் செய்யப் பட்டது. அங்கேயும் தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

ஆனால், 1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. இருப்பினும் 1898-ஆம் ஆண்டில் தான் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் படங்கள் ரந்தாவ் லிங்கி தோட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனும் ஒரு கருத்து உள்ளது. எனினும் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்படும் படமும் கிடைத்து உள்ளது. ஆகவே இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ரந்தாவ், லின்சம் தோட்டமும்; ரந்தாவ் லிங்கி தோட்டமும் மிக அருகாமையில் இருக்கும் பக்கத்து பக்கத்து தோட்டங்கள். ஆக மலாயா தமிழர்கள், 1878-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் முதன்மையான  விளைச்சல்.

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 142 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகின்றது.

மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. ஒன்றை நினைவில் கொள்வோம். மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள் தான் மலாயா தமிழர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன அந்த மலாயா தமிழர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டுக் கொண்டு; சொகுசாக வாழ்ந்து கொண்டு; வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாதத்தின் ஓர் இடைச் செருகல். மனம் கலங்குகிறது. வேதனை.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். என்ன சொல்வது? அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்ல மனசு வரவில்லை.

கரை தாண்டி வந்த தமிழர் இனம் இங்கே இரண்டாம் கிலாஸ் இனமாக தரம் பிரித்துப் பார்க்கப் படுகிறது. மூன்றாம் கிளாஸுக்குத் தள்ளப் படலாம். நமக்குள் இனியும் ஏனோ தானோ போக்குகள் வேண்டாம்.

நாம் நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை வந்தேறிகள் என்று சொல்லிச் சீண்டிப் பார்க்கிறார்கள்.

நமக்கு இப்போது மிக முக்கியம் காசு பணம் அல்ல. மிக முக்கியம் சொத்து சுகம் அல்ல. ஒன்றே ஒன்றுதான். ஒற்றுமை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.07.2021

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author(s): Rathborne, Ambrose B. British Library shelfmark: Digital Store 010055.ee.10
London. Date: 1898. Publisher: Swan Sonnenschein

3. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

4. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

5. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

பின்னூட்டங்கள்

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: நன்றி வாழ்த்துகள் ஐயா. அற்புதம். நல்ல ஆழமான கருத்துக் கொண்ட பதிவு.

"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கு ஏற்ப மிக மிக நேர்மையாக உழைத்த நம் முன்னோர்களுக்கு இன்றைய ஆட்சி கொடுக்கும் பட்டம் "வந்தேறிகள்"...

இந்த மண்ணில் உரமாகக் கிடக்கும் நமது மூதாதையர்களின் மதிக்கத் தெரியாத மூடர்களிடையே சிக்கித் தவிக்கிறோம். வாய்த்ததும் சரியில்லை. நம்மை அனாதையாகத் தவிக்க விட்டு விட்டான்.

வந்தவரும் அதி சுயநலப் போக்கில் நம்மை ஆட்டிப் படைக்கிறான். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

கரு. ராஜா: கட்டுரையைப் படித்தேன். அருமை ஐயா. நீங்கள் மட்டும் இல்லை என்றால் ஏப்பம் விட்டுவிடுவார்கள். நீங்கள் புள்ளி விவரத்தோடு சொல்வதற்கு நன்றி ஐயா. பாராட்டுக்கள்.

வெங்கடேசன்: சோகமான தகவல்






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக