15 ஆகஸ்ட் 2021

நாலு கட்டைப் பாடலில் நாகூர் ஹனிபா

தமிழ் மலர் - 15.08.2021

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை


சாகாவரம் பெற்ற ஒரு சாகித்திய சங்கீர்த்தனம். தில்லைத் திரவியத்தில் ஒரு திவ்வியப் பிரபந்தம். சாதி மதங்களைக் கடந்து போன ஒரு பவித்திர ஒப்பந்தம். இன்றும் ஒலிக்கும்; இனி என்றும் ஒலிக்கும். இறையருள் இருக்கும் வரையிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

என்னே ஒரு கணீர்க் குரல். என்னே ஒரு குரல் வளம். என்னே ஒரு கம்பீரத் தொனி. நாலு கட்டைப் பாடல். நாலு திக்கும் நர்த்தனமாடிய ஒரு மந்திரப் புன்னகை. எட்டுக் கட்டைப் பாடல்களினால் ஏழிசை மன்னர்களையும் கலங்கடித்த கம்பீரச் சாரீரம்.


சொல்லப் போனால் நாகூர் ஹனிபா ஒரு வைரம் பாய்ந்த கட்டை. விழுதுகளைத் தாங்கிய ஓர் ஆலமரம். சாய்ந்து நாளாகி விட்டது. வாழ்த்தலாம். வேறு எதையும் செய்ய முடியாது.

இந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் நெஞ்சம் இனிக்கின்றது. கனக்கின்றது. ரசிக்கும் போது மணக்கின்றது. மலர்கின்றது. ரசித்த பின்னர் ருசிக்கின்றது. இசைக்கின்றது. வாழ்த்த வயது இல்லை. சிரம் தாழ்த்திக் கூப்புகிறேன்.

நாகூர் ஹனிபா சாதி சமயங்களைக் கடந்து போன ஒரு மாமனிதர். சடங்கு சம்பிரதாயங்களைத் தாண்டிப் போன ஒரு நல்ல மனிதர். அவரை வெறும் ஒரு பாடகனாக மட்டும் பார்க்கக் கூடாது. சமயத்தையும் தாண்டிச் சென்று சாதனை படைத்த ஒரு புனிதராகத்தான் பார்க்க வேண்டும். நாம் வாழும் காலத்தில் அவர் ஒரு சகாப்தம். மறக்க வேண்டாம்.


அவரின் அந்த இடத்தை நிரப்ப இன்னும் ஒருவர் அவ்வளவு விரைவில் வருவாரா. தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு எவரும் இல்லை. இனிமேல் வரலாம். அப்படி ஒருவர் வருவாரா என்பதும் ஒரு கேள்விக்குறி. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

’நாகூர் ஹனிபா தமிழ்நாட்டுத் திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டு சேர்த்த ஒரு தனிமனித வானொலி.’ இப்படிச் சொன்னவர் யார் தெரியுங்களா. அவர்தான் பெரும் புகழ் பெரியார். அப்படி ஒரு புக்ழாரம் செய்து உள்ளார்.

பொதுவாக தமிழ்ப் பாடல்களில் சுருதி, லயம், ராகம் இருக்கும். பாடல்களின் மும்மூர்த்திகள் என்று சொல்வார்கள். அதனால் தான் இசையில் சுருதி என்பதை மாதா என்றும்; லயம் என்பதை பிதா என்றும் அழைக்கிறார்கள். பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வதை லயம் என்பார்கள். சுருதி இல்லாமல் பாட்டுக்கு எப்படி மதிப்பு இல்லையோ; அதே போல் லயம் இல்லாமல் பாட்டிற்கும் மதிப்பு இல்லை.


ஆனாலும் நாகூர் ஹனிபாவின் பாடல்களில் அந்தச் சுருதி லயங்களை மிஞ்சிய உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகள் இப்போதும் சரி; இனி எப்போதும் சரி பிரளயங்களாக ஆர்ப்பரிக்கும். இது உண்மையிலும் உண்மை. ஒரு சத்தியமான உண்மை என்றுகூட சொல்லலாம். அப்பேர்ப்பட்ட அழுத்தமான உணர்ச்சிக் குமிழ்கள் அவரின் பாடல்களில் தொற்றி நிற்கும்.

இசை லயங்களில் மூன்று வகை உள்ளன. விளம்பித லயம்; மத்திம லயம்; துரித லயம். இந்த மூன்று லயங்களையும் நாகூர் ஹனிபாவின் சுரிதி லயங்கள் தனியாகவே தாண்டி நிற்பதைக் காணலாம். அவருடைய பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வது சரியாக இருக்கும்.

இன்னும் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். ஒரு தாளத்தில் உள்ள அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை மீண்டும் போட்டு முடிப்பார்கள். அதை ஆவர்த்தம் என்று சொல்வார்கள். ஆவர்த்தம் என்பதை ஆவர்த்தனம் அல்லது தாளவட்டம் என்றும் சொல்லலாம்.


ஆதி தாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு இலகுவையும்; இரண்டு துருதங்களையும் போட்டு முடித்தால் ஓர் ஆவர்த்தனம் ஆகும். இந்த ஆவர்த்தன தாளவட்டங்கள் எல்லாமேநாகூர் ஹனிபாவின் பெரும்பாலான பாடல்களில் ஊன்றிச் செல்வதை நன்றாகப் பார்க்கலாம். சரி.

அழகிய தமிழ் மொழிக்கு அழுத்தமான எழுத்துக்ளை அழுத்திப் போட்டு அவற்றுக்கு மீசை வைத்தவர் பாரதியார். அவரைப் போலவே தன் குரல் வளத்தால் தமிழ் அன்னைக்கு தலைப் பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை நாயகன் நாகூர் ஹனிபா.

பதினைந்து வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்தவர். அப்புறம் திருமண வீடுகள்; மேடைக் கச்சேரிகள் என்று அடுக்கடுக்காய் தொடர்ந்து பாடினார். அவர் காலத்து 75 ஆண்டுகளில் 5000 திருமண வீடுகளில் பாடி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். அவரிடம் அந்த மாதிரியான ஒரு மனப்பக்குவம் இருந்தது. சரி.


நாகூர் ஹனிபா இலைமறைக் காயாக வாழ்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. பிரபலமான ஒரு பாடகர். திராவிடக் கொள்கையில் அலாதியான பிடிப்பு கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் மிக முக்கியமான பங்கு வகித்தவர். இசை முரசு என்று இனிமையாக அழைக்கப் படுகிறார்.

நாகூர் இ. எம். ஹனிபா (Nagore E. M. Hanifa), தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிப்பட்டினம் என்கிற ஊர். அங்கே தான் 1925 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார். தகப்பனாரின் பெயர் முகம்மது இஸ்மாயில். தாயாரின் பெயர் மரியம் பீவி. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Nagore_E._M._Hanifa)

இஸ்மாயில் முகம்மது ஹனிபா என்ற தன்னுடைய பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிபா என்று வைத்துக் கொண்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாகத் தலைதூக்கிய  காலக் கட்டத்தில் இவர் தன்னுடைய குரலையே ஆயுதமாகப் பயன்படுத்திப் போராடினார். வெற்றியும் கண்டார்.

(சான்று: http://www.thehindu.com/features/friday-review/music/when-his-life-was-a-song/article5785079.ece - Hanifa’s rise to fame as the ‘voice’ of the Dravida Munnetra Kazhagam (DMK)


செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே!
முன்னம் போட்ட சூடு என்ன
மறந்ததோ உனக்கு?
என்றும் இந்தி ஏற்க மாட்டோம்
ஓடிப்போ வடக்கு!

நாகூர் ஹனிபா பாடிய உணர்ச்சிமிகு பாடல். அந்தப் பாடலைத் தமிழ் உலகம் என்றைக்குமே மறக்காது.

1955-ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் குலேபகாவலி; 1961-ஆம் ஆண்டில் பாவ மன்னிப்பு; 1992-ஆம் ஆண்டில் செம்பருத்தி, 1997-ஆம் ஆண்டில் ராமன் அப்துல்லா. இப்படி நிறைய திரைப் படங்களில் பாடி இருக்கிறார்.

எல்லோரும் கொண்டாடுவோம்

உன் மதமா என் மதமா

நட்ட நடு கடல் மீது

இறைவனிடம் கையேந்துங்கள் போன்ற மணிமணியான பாடல்கள்.

நாகூர் ஹனிபா தி.மு.க.வின் தொடக்க காலத்தில் இருந்தே கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். உழைப்பில் விசுவாசத்தைப் பார்த்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தி.மு.க.-விற்கு அர்ப்பணித்த ஓர் அதிசயமான மனிதர்.

கடைசியில் உயர்ந்த குரலில் உச்சத் தொன்யில் உரக்கப் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்தவர். அந்த ஓங்கார உச்சத்தில் அவருடைய செவிப்பறை கிழிந்து போனது. கடைசியில் உடல் நலிந்து நலம் மெலிந்து, அப்படியே மறைந்து போனது அந்தத் தன்மானச் சிங்கம்.

ஒன்று மட்டும் உண்மை. இவராக எந்த ஒரு வாய்ப்பையும் தேடிப் போனது இல்லை. இவராக எந்த ஒரு வசதியையும் தேடிப் போனது இல்லை. வந்தது வரட்டும் என்று சொல்கிறவர். அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் திராவிடக் கொள்கையே அவருக்கு ஒரு பொற் குவியலாகத் தெரிந்தது. அப்படியே உருமி மேளமாகவும் திரிந்தது.

ஒரு செருகல். தமிழக அரசியல் வரலாற்றில் பிழைக்கத் தெரியாத அப்பாவி மனிதர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் நாகூர் ஹனிபாவின் பெயரைத் தான் முதல் இடத்தில் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அப்பாவி. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கிற மனசு. பிழைக்கத் தெரியாத மனிதர் என்று பேர் வாங்கியவர். இந்தப் பக்கம் இக்கரையில் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதில் மறக்காமல் என்னையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்களேன். கோலா சிலாங்கூரில் இருந்து கோலா கங்சார் வரை பலரும் சொல்லிச் சொல்லியே ஒருவழி பண்ணி விட்டார்கள்.

நாகூர் ஹனிபா நினைத்து இருந்தால் என்றைக்கோ தமிழ்நாட்டின் அமைச்சராகி இருக்கலாம். அதுவும் இல்லையா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் ஆகி இருக்கலாம். அதுவும் இல்லையா. பொருளாளராகவும் ஆகி இருக்கலாம். நாகூர் ஹனிபாவிடம் எல்லாத் தகுதிகளும் இருந்தன. அதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

ஹனிபாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே இருந்த உறவு இருக்கிறதே அது இன்று நேற்று வந்த உறவு அல்ல. கலைஞர் கருணாநிதி அரைக்கால் சட்டை போட்டுத் திரிந்த ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில் இருந்தே இருவருக்கும் அப்படி ஒரு நல்ல நட்பு. ஹனிபா மறைந்த செய்தியைக் கேட்டு முதல் ஆளாய்ப் பனித்த கண்களுடன் நின்றவர் கலைஞர் கருணாநிதி.

நாகூர் ஹனிபா கலைஞரை எப்போதும் மு.க. என்று செல்லமாகத் தான் அழைப்பார். இன்னும் ஒரு விசயம். நாகூர் ஹனிபா தன் ஒரு கையைப் பேராசிரியர் அன்பழகன் தோளிலும் இன்னொரு கையைக் கலைஞர் தோளிலும் போட்டுக் கொண்டு உரையாடும் உரிமை பெற்றவர். அந்த அளவிற்கு உரிமை.

இருந்தாலும் பாருங்கள். நாகூர் ஹனிபாவிற்கு ஏதாவது ஓர் உயர்ப் பதவியை, கலைஞர் கொடுத்து இருக்கலாம். நாகூர் ஹனிபா அந்த மாதிரி பட்டம் பதவிகளைத் தேடிப் போகிற மனிதரும் அல்ல. இருந்தாலும் ஏன் கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய கேள்வியாகவே இன்று வரை தொற்றி நிற்கிறது.

கலைஞர்  கருணாநிதி தன் இளமைக் காலங்களில் பெரும்பாலும் நாகூர் பகுதியில் சுற்றித் திரிந்தவர். அந்த நாகை பகுதியிலேயே காலத்தையும் நேரத்தையும் கழித்தவர். நாகை மக்களுடன் ஒன்றாய்க் கலந்து வாழ்ந்தவர்.

முன்பு காலத்தில் நாகூரில் கௌதிய்யா சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்தது. இன்னமும் இருக்கிறது. அந்தச் சங்கத்தின் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு, கலைஞர் கருணாநிதி சுற்றித் திரிந்த காலம் ஒன்று இருந்தது.

நாகூரில் வாழும் மூத்த குடிமக்கள் இன்றும் அதை நினைவு படுத்திச் சொல்வார்கள். ஆக அந்த வகையில் கலைஞரின் வளர்ச்சியில் இஸ்லாமியச் சகோதரர்களின் பங்கு கணிசமான அளவில் இருந்து இருக்கிறது. அதை கலைஞரும் மறுக்கவில்லை.

கோபாலபுரத்தில் கலைஞருக்கு ஒரு வீடு இருக்கிறது. தெரியும் தானே. அந்த வீட்டின் இப்போதைய மதிப்பு 8 கோடி ரூபாய். அந்த வீட்டைக் கூத்தாநல்லுர் கமால் சகோதரர்கள் தான் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் தான் கமால் பிரதர்ஸ் என்கிற கமால் சகோதரர்கள். அந்தக் காலத்துப் படத் தயாரிப்பாளர்கள்.

1957-ஆம் ஆண்டு புதையல் எனும் திரைப்படத்தைக் கமால் சகோதரர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். அந்தப் படத்திற்கு கருணாநிதி கதை வசனம் எழுதி இருந்தார். அந்தச் சமயத்தில் குளித்தலை தொகுதியில் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த நேரம்.

அந்த வீட்டை கலைவாணர் என்.எஸ்.கே. தான் வாங்கித் தந்தார் என்று சிலர் சொல்வது உண்டு. அது தவறுங்க. ரகசியத்தைப் பிறகு சொல்கிறேன். புது வீட்டிற்குப் புகுமனை செய்யும் போது கலைஞருடன் கூடவே இருந்து நாகூர் ஹனிபா உதவிகள் செய்து இருக்கிறார். இந்த உண்மை பலருக்கும் தெரியாது.

கமால் சகோதரர்களுக்கு வியட்நாம் நாட்டின் சைகோன் நகரத்தில் வணிகத் தொழில் இருந்தது. 1957-ஆம் ஆண்டு வியட்நாமிய போர். அதனால், சைகோன் நகரம் வீழ்ச்சி அடைந்தது. வியாபாரத்தில் நஷ்டம்.

அதன் பின்னர் கமால் சகோதரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கமால் பிரதர்ஸ் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்தார்கள். 1957-ஆம் ஆண்டு ’புதையல்’. 1960-ஆம் ஆண்டு ’தெய்வப்பிறவி’. 1964-ஆம் ஆண்டு ’வாழ்க்கை வாழ்வதற்கே’.

படத் தயாரிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றுத் தரவில்லை. நொடித்துப் போனதுதான் மிச்சம். இவர்களுக்கு கடைசி காலத்தில் யாருமே உதவி செய்யவில்லை. இந்தக் கட்டத்தில் தான் நாகூர் ஹனிபா ஐயா வருகிறார். எப்படி என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.08.2021

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Sara Rajah: super ayya

Vejayakumaran: சினிமாவிலும் பாடியிருப்பாரே.. வாழ்த்துக்கள்

Sheila Mohan: இறைவனிடம் கையேந்துங்கள்... என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்... ஐயாவின் குரலும்.. மிக அருமையான கட்டுரை.. நன்றிங்க சார்..!

Vani Yap: கட்டுரை படிக்க சிறப்பாக உள்ளது ஐயா.... நாகூர் ஹனீபா அவர் சமயம், சடங்குகள், சம்பிரதாயம் அனைத்தும் கடந்து தமிழ் மொழிக்கு அழகு சேர்த்தவர் என்று படிக்கும் போது பெருமையாக உள்ளது.... இனி இவர் போல் ஒருவர் வருவாரா... சாத்தியம் குறைவே ஐயா... சிறப்பு மிகுந்த பதிவு.. மிக்க நன்றி

Vani Yap: எனது இளவயதில் பிரமிக்க வைத்த அவரது பாடல்கள், இன்றளவும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது....😊👌

Jothy Subramaniam: கம்பீரமான குரல் வளம் கொண்டவர். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் சமய பேதங்கள் கடந்து அனைவரையும் வசீகரித்த பாடல்.

Rsmaniam Subra: 👌

Bobby Sinthuja: ஐயா, அருமையான பாடல் தமிழ் மக்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள்...

Venogobaal Kuppusamy: கட்டுரை மிக அருமை! தங்களின் இசை ஞானம் அபாரம்! வாழ்த்துகள்

Parimala Muniyandy: அருமை... என்றென்றும் மனதில் நிற்கும் பாடல்...

Arni Narendran: Mumbai - Masjid Bandar - I heard his live concert in the early 1980s. A Divine Golden Voice. 🌷

Alagumani Mathivanan: கம்பீரமான குரல்

Punithasamy Sittan: நாடோடி நண்பா போகாதே என்றென்றும் காதல் சாகாதே சிறப்பாக பாடி இருப்பார்.


 

1 கருத்து: