25 ஆகஸ்ட் 2021

ஆப்கானிஸ்தான் வரலாற்றில் தலிபான் தலைபீடங்கள்

தமிழ் மலர் - 21.08.2021

கொரோனா ஒரு பக்கம். வறுமை ஒரு பக்கம். அச்சம் ஒரு பக்கம். இதில் அம்னோ ஒரு பக்கம். நான் தான் பிரதமர்; நீதான் துணைப் பிரதமர் எனும் அரசியல் ஆவர்த்தனங்கள். இதில் இப்போது புதிய பிரதமர். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் அந்தப் பக்கம் தலிபான்கள். உலகமே அவர்களை அண்ணாந்து பார்க்கிறது. இப்போதைக்கு நம் நாட்டு அரசியல் வேண்டாம். ஆப்கானிஸ்தான் பக்கம் பொடிநடையாய்ப் போய்ப் பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல். கடைசி கடைசியாக ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் (Islamic Emirate of Afghanistan) என மாற்றி உள்ளனர். இனிவரும் காலங்களில் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் ஆட்சியில் தான் இருக்கும். அப்படித்தான் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தாலிபன்கள் என்பவர்கள் யார். எங்கு இருந்து வந்தார்கள். எப்படி ஒரு நாட்டையே பிடிக்க முடிந்தது என்பதைப் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. தெரிந்து கொள்வோம். அதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் வரலாற்றைத் தெரிந்து கொள்வது சிறப்பு.

ஆப்கானிஸ்தான் ஓர் இஸ்லாமியக் குடியரசு. இதன் நாலா புறமும் நிலத்தால் சூழப்பட்டது. 1747 தொடங்கி 1973 வரை ஒரு மன்னராட்சி நாடாக இருந்தது. அதன் பின்னர் அரசியல் புரட்சி இராணுவப் புரட்சி என்று இன்றைய நாள் வரைக்கும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை ஒரு சர்வ சாதாரணமான நாடாக நினைத்துவிட வேண்டாம். உலகத்துக்கே நாகரிகம் சொல்லிக் கொடுத்த நாடுகளில் ஒன்றாகும். பொன்னும் மணியும் கொட்டிக் கிடந்த நாடு.


உலகத்திலேயே எங்கள் இனம் தான் ஒசத்தி என்று ஓர் இனம் இப்போது பிதற்றிக் கொண்டு திரிகிறது. தெரியும் தானே. அந்த இனம் தோன்றுவதற்கு முன்னாலேயே ஆப்கானிஸ்தானில் நகர நாகரிகங்கள் தோன்றி விட்டன. சிந்து வெளி நாகரிகத்திற்கு இணையான வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாடு தான் ஆப்கானிஸ்தான்.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் ஒரு  முக்கியமான நாடு. 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரிகங்கள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்து உள்ளன.
 
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் ஒரு சந்திப்பு மையமாக இருந்து உள்ளது. பல போர்க் களங்களையும் பார்த்து உள்ளது. ஆதிகாலம் தொடங்கி பற்பல புலம்பெயர்வுகள் அங்கே நடந்து உள்ளன. பல பேரரசுகள்; பல வம்சாவளியினர் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து உள்ளனர். ஒரு பட்டியல் கொடுக்கிறேன். பாருங்கள்.

கிரேக்கோ - பாக்டிரியன்கள் - Greco-Bactrians

இந்தோ - சித்தியர்கள் - Indo-Scythians

குசான்கள் - Kushans

கிடாரிட்சுகள் - Kidarites

ஹெப்தலைட்டுகள் - Hephthalites

அல்கான் - Alkhons

நெசாக்சுகள் - Nezaks

ஜுன்பில்சுகள் - Zunbils

துருக்கிய சாகிதுகள் - Turk Shahis

இந்து சாகிதுகள் - Hindu Shahis

லாவிக்குகள்- Lawiks

சபாரிட்கள் - Saffarids

சமனிட்சுகள் - Samanids

கஜனாவிட்சுகள் - Ghaznavids

குரிட்ஸ் - Ghurids

குவாரசுமியர் - Khwarazmians

கால்ஜி - Khaljis

கார்த்தி - Kartids

லோடி - Lodis

சுர்ஸ் - Surs

மொகலாயர்கள் - Mughals

ஹோதக் - Hotak

துரானி - Durrani


முதலில் ஆரியர்களின் புலம்பெயர்வு (Indo-Aryan migrations). ஆரியர்கள் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்கிறேன். இவர்களை இந்தோ - ஈரானியர்கள், இந்தோ - ஆரியர்கள், மேதாக்கள், பாரசீகர் என்றும் பிரிக்கலாம். அவர்களுக்குப் பின்னர் தான் கிரேக்கர் படை எடுத்தார்கள்.

கிரேக்க நாடு எங்கே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் எங்கே இருக்கிறது. அந்தக் காலத்தில் மோட்டார் காடியும் இல்லை. மோட்டார் சைக்கிளும் இல்லை. சைக்கிளும் இல்லை. எல்லாம் குதிரை ஒட்டகச் சவாரிகள்தான். நடடடா ராஜா கதைதான்.

நாலாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து குதிரையிலேயே வந்து நாடுகளை எல்லாம் பிடித்து இருக்கிறார்கள். பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்களை எல்லாம் செய்து இருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.

அந்தக் காலங்களில் அடுத்த நாடுகள் மீது படை எடுத்தார்கள். அந்த நாடுகளின் செல்வச் செழிப்புகளைக் கொள்ளை அடித்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் வேறு மாதிரியான கொல்லைப்புற அணுகுமுறைகள்.

அதிலும் போட்டிகள். நீ தலைவனா நான் தலைவனா என்கிற போட்டி. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை பரவாயில்லை போலும். கண்ணியமாகத் திருடினார்கள். நியாயமான திருடர்கள் என்று பேர் போட்டுப் போய் விட்டார்கள்.


கிரேக்கர்களுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த மௌரியர்கள் படை எடுத்தார்கள். அடுத்து குஷான்கள் (Kushans), ஹெப்தலைட்கள் (Hephthalites), அரேபியர்கள், மொங்கோலியர்கள், துருக்கியர்கள். அவர்களுக்கு எல்லாம் தலைமகன்களாக வந்தவர்கள் வெள்ளைத்தோல் பிரிட்டிஷார்.

இவர்களுக்குப் பிறகு சோவியத் ரஷ்யா கொஞ்ச நாட்களுக்கு சட்டாம்பிள்ளை வேலை பார்த்தது. அப்புறம் மிக அண்மைய காலத்தில் உலகப் போலீஸ்காரர் வந்தார். அமெரிக்கா என்றால் சும்மாவா என்று சொல்லி அந்த நாட்டை ஒரு வழி பண்ணிபட்டு சென்று விட்டார்கள்.

தலிபான்களின் தொல்லை பொறுக்க முடியாமல் ‘ஆளை விடுங்கடோ சாமி’ என்று தலைதெறித்து ஓடியே போய் விட்டார்கள். ஆகக் கடைசியாக ஆப்கானிஸ்தான் நாடு அமெரிக்காவின் பிடியில் இருந்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்கா எடுத்துக் கொண்ட 20 ஆண்டு காலத்தில், 4 அமெரிக்க அதிபர்கள் பதவிக்கு வந்து போய் இருக்கிறார்கள். 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கி, ஆப்கானிஸ்தானில் $2 டிரில்லியன் (2,000,000,000,000) டாலருக்கும் அதிகமாகவே அமெரிக்கா செலவு செய்து உள்ளது.


டிரில்லியன் என்றால் பத்தாயிரம் கோடி. அதாவது 40 ஆயிரம் கோடி மலேசிய ரிங்கிட்.

ஒவ்வொரு நாளும் அமெரிக்கா $300 மில்லியன் டாலர்களை ஆப்கானிஸ்தானில் செலவு செய்து இருக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு 30 கோடி டாலர்கள். அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள 40 மில்லியன் மக்களுக்கும் ஆளாளுக்கு $ 50,000 டாலர்கள் செலவு செய்து உள்ளது.

இதில் நேரடியான போர்ச் சண்டைச் செலவுகள் $800 பில்லியன் டாலர்கள்.
ஆப்கான் இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க $85 பில்லியன் டாலர்கள்.

அந்த 20 ஆண்டுகளில் மூன்று மில்லியன் உயிர்கள் பலி. மீண்டும் அதே பல்லவி. பழைய தலிபான் ஆட்சி. இப்படி கோடிக் கோடியாய்ச் செலவு செய்து ஒரு புண்ணியமும் இல்லாமல் போய் விட்டதே.


இப்படி பல நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்புக்கு செய்து உள்ளன. ஆப்கானிஸ்தானின் செல்வங்களை எல்லாம் சுரண்டிச் சென்றன. மன்னிக்கவும். கொள்ளை அடித்துச் சென்றன.

இயற்கையிலேயே ஆப்கானிஸ்தான் ஒரு மலைப் பிரதேசமான நாடுதான். பெரும் விவசாயத்திற்கு ஏற்ற நாடு அல்ல. ஆனால் கனிவளங்கள் நிறைந்த நாடு.

அங்கே கறுப்புத் தங்கம் பெட்ரோல் கிடைக்கும் என்றுதான் அமெரிக்கா வியூகம் போட்டு களம் இறங்கியது. சோழியன் குடுமி சும்மா ஒன்றும் ஆடாது. எட்டு முழம் வேட்டியைக் கட்டிக் கொண்டு பெருச்சாளி ஓடுகிறது என்றால் சும்மாவா?

4000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியாவைச் சேர்ந்த பல குழுக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் குடிபெயர்ந்து உள்ளன. இவ்வாறு வந்தவர்கள் பெரும்பாலோர் ஆரியர்கள்.

இதே காலக்கட்டத்தில் பாரசீகம் மற்றும் இந்தியாவிற்குள் ஆரியர்கள் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடியேறிய பகுதிகள் ஆரியானா என அழைக்கப்பட்டது. ஆரியர்களின் பூமி என்று பொருள்.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். இவர்களைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்கிறேன். நேற்றைய கட்டுரை ’தீண்டாமைக் கொடுமையில் திருவாங்கூர் தமிழ்ப்பெண்கள்'. அதில் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறேன்.


ஆரியர் எனும் சொல் ஈரானியச் சொல். ஆர்யா (Arya) எனும் சொல்லில் இருந்து திரிந்து வந்தது. ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள்.

இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்கள். சைபீரியா பூர்வீக மக்களுடன் பிரச்சினை. ஒதுக்கப் பட்டார்கள். அதனால் புலம் பெயர்ந்தார்கள்.

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே கசக்ஸ்தான்; உஸ்பெகிஸ்தான்; துருக்கி; ஈராக்; ஈரான் வழியாக வந்து, கடைசியில் இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தார்கள்.

சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய சிந்து மக்களைத் தங்களின் ஆன்மீகப் பாதையில் ஈர்த்துக் கொண்டார்கள். சிந்து மக்களையும் காம்போதி ராகங்களாக மாற்றி அவர்களைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்தும் வைத்தார்கள்.


சிந்து சமவெளி நாகரிகம் தோன்றுவதற்கு முன்னரே தமிழகத்தில் தமிழர் நாகரிகம் தோன்றி விட்டது. அதன் பின்னர் தான் ஆரியர்கள் தமிழகத்திற்குள் வந்து இருக்கிறார்கள். சாதி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் சம்மணம் போட்டு ஆரத்தி எடுத்தன.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் பகுதியில் பாரசீகப் பேரரசான அச்செமினிட் (Achaemenid) பேரரசு பலமாக வலுவாக இருந்தது.

கி.மு. 300-ஆம் ஆண்டுகளில் மாவீரன் அலெக்சாந்தர் படை எடுத்து வந்தார். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்.

கி.மு. 323-ஆம் ஆண்டில் அலெக்சாந்தர் மரணத்திற்குப் பின்னர் கிரேக்கர்களின் செலூசிட்ஸ், பாக்ட்ரியா, இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள், ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. மெளரியப் பேரரசினால் ஆப்கானிஸ்தானில் பௌத்த மதம் பரப்பப்பட்டது.


கி.பி. முதலாம் நூற்றாண்டில டோச்சானியன் குஷான்கள் (Tocharian Kushans) என்பவர்கள் ஆப்கானிஸ்தானைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு அரசுகள் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றின. பௌத்தம், இந்து மதங்களைப் பின்பற்றி வந்த பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப் பட்டார்கள்.

1299-ஆம் ஆண்டில் மங்கோலியப் பேரரசன் ஜெங்கிஸ் கான் என்பவரின் கொடுங்கோல் ஆட்சிக்குள் ஆப்கானிஸ்தான் தடுமாறிப் போனது. 1504-ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் பார்பர் வந்தார். மொகலாயப் பேரரசு உருவாக்கப்பட்டது.

18-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் காஸ்னாவிட் கான் நாஷர் (Ghaznavid Khan Nasher) என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்திற்கு எதிரான புரட்சி. ஆப்கானிஸ்தானில் இருந்து பாரசீகர்கள் துரத்தப் பட்டார்கள்.

1738-ஆம் ஆண்டில் பாரசீகத்தில் இருந்து நாடிர் ஷா என்பவரின் படையெடுப்பு. கந்தகார், காபூல், லாகூர், காஸ்னி போன்ற பகுதிகள் வீழ்ந்தன. நாடிர் ஷா பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.


ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர், நாடிர் ஷா, சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். மொகலாய மன்னர் முகமது ஷாவின் படைக்கு எதிரான போர்.

1739-ஆம் ஆண்டில் நடந்தது. அந்தப் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொகலாய படைவீரர்களை, நாடிர் ஷாவின் படை கொன்று குவித்தது.

தோல்வி அடைந்த மொகலாய மன்னர் முகமது ஷா, நாதிர் ஷாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.

அந்த உடன்படிக்கையின் மூலமாக இந்தியாவின் கோகினூர் வைரம் பறிபோனது. விலை மதிப்பு சொல்ல முடியாத மயிலாசனம் பறிபோனது. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிபோயின.

இந்தியாவின் ஒட்டு மொத்தச் செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. டன் கணக்கில் யானை, ஒட்டகங்கள் மீது ஏற்றி, ஈரானுக்குக் கொண்டு போகப் பட்டன.

1747ஆம் ஆண்டில் ஆப்கான்; பஸ்தூன் ஆகிய குழுவினர் கந்தகார் நகரில் கூடி அகமது ஷா என்பவருக்கு முடி சூட்டுகின்றனர். இவர் தன் கடைசிப் பெயரை டுரியோ என மாற்றிக் கொண்டார். டுரியோ என்றால் முத்துக்களின் முத்து என்று பொருள்.

இந்த டுரியோ எனும் பெயரில் தான் துராணிப் பேரரசு உருவானது. அந்தத் துராணிப் பெயரில் இருந்துதான் இன்றைய ஆப்கானிஸ்தான் நாடும் உருவானது.

19-ஆம் நூற்றாண்டில் அங்கே பல்வேறு உள்நாட்டு அரசியல் குழப்பங்கள். தவிர பாரசீகர் மற்றும் சீக்கியர்கள் பிரச்சினைகள்.

இவற்றின் காரணமாக ஒரு நூற்றாண்டு மட்டுமே அந்தத் துராணி பேரரசு நிலைத்து இருந்தது. ஆப்கான் வரலாற்றுத் தொடர் நாளையும் இடம்பெறுகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.08.2021




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக