28 ஆகஸ்ட் 2021

தாலிபான் ஆட்சியில் தடுமாறும் பெண் உரிமைகள்

தமிழ் மலர் - 28.08.2021

1996-ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்; ஏது செய்வார்கள் என்று எவருக்குமே தெரியாது. அவர்களைக் கொண்டு வந்த அமெரிக்காவிற்கும் தெரியாது.

கடைசியில் பிளேட்டைத் திருப்பிப் போடுவார்கள் என்று அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானும் எதிர்பார்க்கவில்லை. கணிப்பு வேறு. நகர்வு வேறு. நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று.


தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சொன்ன முதல் வார்த்தை ‘நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள். நல்ல பேர் எடுங்கள். ரஷ்யாவை விரட்டி விட்டு உங்களைக் கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு விசுவாசமாக இருங்கள்’. இப்படிச் சொல்லித்தான் தாலிபான்களை அமெரிக்கா வளர்த்து விட்டது. ஆட்சியில் உட்கார வைத்தது.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் கடுமையான சமயச் சட்டங்களை அமல்படுத்தினார்கள். தீவிரமான சமயப் பற்றை அமல் படுத்தினார்கள். ஒரு வகையில் அது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை.

’நாட்டைப் பொருளாதாரத் துறையில் முன்னேற்றுங்கள் என்று சொல்லித்தான் உங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். ஆனால் நீங்கள் என்னடா என்றால் வேறு துறையை வளர்ப்பதில் தான் முனைப்பாக இருக்கிறீர்கள்’ என்று அமெரிக்கா கொஞ்சமாய்க் கோபித்துக் கொண்டது.

தாலிபான்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு பல கோடி கோடி டாலர்களை அமெரிக்கா செல்வு செய்து விட்டது. நவீன ஆயுதங்களைக் கொடுத்து; நன்றாகப் பயிற்சிகளைக் கொடுத்து; நன்றாகப் பழக்கியும் விட்டது. இருந்தாலும் போட்ட காசு திரும்பி வர வேண்டாமா. அதனால் செல்லமாய்க் கடிந்து கொள்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.


இப்போது தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளார்கள். அப்போதும் அதே பல்லவி. இப்போதும் அதே சரணங்கள் தான். அப்போது பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. இப்போதும் மறுக்கப் படுகிறது.

பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட்டன. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. அப்போதும் அதுவே. இப்போதும் அதுவே.

பெண் குழந்தைகளுக்கு எட்டு வயது ஆகிவிட்டால், அதன்பிறகு சமயக் கல்வியைத் தவிர பொதுக் கல்விக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் கல்வி கற்பதற்கே தடை என்றால் வேலை செய்வது எல்லாம் எப்படி?

(Ban on women studying at schools, universities or any other educational institution. Taliban have converted girls' schools into religious seminaries.)

முன்பு காலத்திய தாலிபான் ஆட்சியில் ஆண்கள் வேலை செய்யும் இடத்தில் பெண்கள் வேலை செய்யக் கூடாது. அப்போது அந்த மாதிரி ஒரு தடை. இப்போது பெண்கள் வேலைக்குப் போவதற்கும் தடை. ஆக பெண்கள் வேலை செய்வது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விட்டது.


முந்தைய ஆட்சியில், 1996 செப்டம்பர் 30-ஆம் தேதி, தலிபான்கள் அனைத்துப் பெண்களுக்கும் வேலைக்குச் செல்ல தடை விதித்தனர்.

அப்போது அரசு ஊழியர்களில் 25 விழுக்காட்டினர் பெண்கள் ஆகும். அந்த வகையில் பல்லாயிரக் கணக்கான பெண்கள் வேலை இல்லாமல் பாதிக்கப் பட்டனர்.

(Complete ban on women's work outside the home, which also applies to female teachers, engineers and most professionals. Complete ban on women's activity outside the home unless accompanied by a mahram (close male relative such as a father, brother or husband.)

(http://www.rawa.org/rules.htm - Some of the restrictions imposed by Taliban on women in Afghanistan)

ஆண் கடைக்காரர்களுடன் பெண்கள் பழகுவதற்கு தடை விதிக்கப் படுகிறது.

(Ban on women dealing with male shopkeepers.)

பெண்களின் கல்விக்குத் தடை விதிக்கப் படுவதால் பள்ளியில் பயின்ற பெண்பிள்ளைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அனைத்துப் பெண்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் பெண்களாக இருந்ததால், அவர்களுக்கும் வேலை இழப்புகள்.

1996-ஆம் ஆண்டில் தாலிபான்கள் காபூல் நகரத்தை கைப்பற்றியதும், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதன் விளைவாக, அந்தப் பள்ளிகளை நம்பி வாழ்ந்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் காபூலில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றன. பெண் ஆசிரியர்களின் குடும்பங்கள் தான் ஏராளம்.

இப்போது 2021-ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளனர். பழைய பாவனையில் எது நடந்துவிடக் கூடாது என்று நினைத்தார்களோ அதுவே நடந்தும் வருகிறது.

இதில் கருத்துச் சொல்ல நமக்குத் தகுதி இல்லை. அவர்களின் ஆட்சி. அவர்களின் அதிகாரம். அவர்களின் அரசு கொள்கைகள்.

இந்தப் பக்கம் மட்டும் என்னவாம். யார் யாரோ வருகிறார்கள். யார் யாரோ போகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. நம்ப வீட்டையே சுத்தம் பார்க்க முடியவில்லை. இதில் பக்கத்து வீட்டுச் சுத்தம் பற்றி பேசுவதில் என்னங்க நியாயம் இருக்கிறது. ஆனால் பெண்களின் அடிப்படை உரிமைகளில் துண்டு விழும் போது தான் பிரச்சினையே தோன்றுகிறது.

இப்போதைய தாலிபன்களின் ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், அடிப்படையிலான உரிமைகளில் பாதிப்புகள் ஏற்படும் போது அதிகமாகவே கலக்கம்.

பெண்களுக்கு என்று தாலிபன்கள் வகுத்து வைத்து இருக்கும் சட்ட விதிமுறைகள், இந்த நவீனக் காலத்தில் கிரகித்துக் கொள்ளச் சிரமமாக உள்ளது. அவர்களின் சமய நம்பிக்கை ஆப்கானிஸ்தானிய பஸ்தூன் பூர்வீக மக்களின் சமய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

தாலிபான்கள் இப்போது கடைப்பிடிக்கும் பெண்களுக்கான விதி முறைகள் 1992-ஆம் ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்து விட்டன. அந்த விதி முறைகள் ரஷ்யாவிற்கு எதிர்த்துப் போராடிய ரப்பானி - மசூத் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டவை ஆகும்.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதே விதி முறைகள் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டன. அந்தச் சட்டங்களில் ஒரு சில சட்டங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

அனைத்துலக ஊடகங்களின் வெளிவந்த தகவல்களின் சான்றுகளைக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. மற்றபடி சொந்தக் கருத்துகள் எதுவும் இல்லை.

ஆப்கானிஸ்தானியப் பெண்கள் பொதுவில் நடமாடும் போது எல்லா நேரங்களிலும் கட்டாயமாகப் பர்தா (burqa) அணிய வேண்டும்.

’ஒரு பெண்ணுக்குச் சொந்தம் இல்லாத ஆண்கள், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் போது தீய எண்ணங்களுக்கு வழி வகுக்கலாம்’ என்று காரணம் சொல்லப் படுகிறது.

(Gohari, M. J. (1999). "Women and the Taliban Rule". The Taliban: Ascent to Power. Karachi: Oxford University Press. pp. 108–110)

பெண்கள் குதிக்கால் சப்பாத்து (high-heeled shoes) அணியக் கூடாது. நடக்கும் போது சப்பாத்தில் இருந்து வரும் சத்தம் ஆண்களின் கவனத்தைச் சிதறடிக்கலாம் என்று காரணம் சொல்லப் படுகிறது.

கணுக்கால் மூடப் படாமல் உடை அணிந்தால் பொதுவில் கசையடி கொடுக்கப்படும்.

(Whipping of women in public for having non-covered ankles. Ban on women wearing high heel shoes, which would produce sound while walking. A man must not hear a woman's footsteps.)

பொதுவான இடங்களில் பெண்கள் சத்தமாகப் பேசக் கூடாது. அந்நியர்கள் பெண்களின் குரலைக் கேட்கக் கூடாது. அதற்காக இந்த ஏற்பாடு என்று தாலிபான்கள் சொல்கின்றனர்.

ஒரு பெண் குழந்தைக்கு எட்டு வயது ஆகிவிட்டால், அவளுடைய நெருங்கிய இரத்த உறவு தவிர, வேறு எந்த ஓர் ஆண்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கக் கூடாது. இந்த விதிமுறையை இப்போது கொண்டு வந்து இருக்கிறார்கள்.

(Griffin, Michael (2001). Reaping the Whirlwind: The Taliban movement in Afghanistan. London: Pluto Press. pp. 6–11, 159–165.)

பெண்கள் தங்கள் தந்தை, சகோதரன் அல்லது கணவன் எனும் ஆண் துணையுடன் தான் வெளியில் செல்ல வேண்டும். தனி ஆளாகச் செல்ல முடியாது.

ஒரு வகையில் பார்த்தால் பெண்கள் வீட்டுக் கைதிகளாக வாழ வேண்டிய நிலை. ஒரு முறை ஓர் ஆப்கானியப் பெண்மணி தெருவில் தனியாக நடந்ததற்காகத் தலிபான்களால் கடுமையாகத் தாக்கப் பட்டார்.

அப்போது அந்தப் பெண் சொன்னது: ’என் தந்தை போரில் கொல்லப் பட்டார். எனக்கு கணவர் இல்லை. சகோதரர் இல்லை. மகன் இல்லை. இந்த நிலைமையில் நான் தனியாக வெளியே செல்ல முடியா விட்டால், நான் எப்படித்தான் வாழ்வது?’

பெண்கள் புர்கா அணியாமல் வெளியே போகக் கூடாது. அப்படி வெளியே  போவதாக இருந்தால் இரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் சாலைகளில் நடக்க வேண்டும்.

ஒரு வீட்டில் தரைத் தளம் அல்லது முதல் தளத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டின் சன்னல்களைத் திரைத் துணிகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
கண்ணாடி ஜன்னல்களாக இருந்தால் சாயம் அடித்து மறைக்க வேண்டும்.
வெளியில் உள்ளவர்கள் பார்த்தால் அறைக்குள் நடமாடும் பெண்களின் உருவங்கள் தெரியாமல் இருக்க வேண்டும்.

(Compulsory painting of all windows, so women can not be seen from outside their homes.)

பெண்களை வைத்துப் புகைப்படம் எடுக்கக் கூடாது. செய்தித் தாள்கள், புத்தகங்களில் பெண்களின் படங்களைக் காட்சிப் படுத்தக் கூடாது.

(Ban on women's pictures printed in newspapers and books, or hung on the walls of houses and shops. Photographing, filming and displaying pictures of females in newspapers, books, shops or the home was banned.)

நாடு முழுவதிலும் இருக்கும் அழகு நிலையங்களைத் தாலிபான்கள் மூடி விட்டார்கள். நெயில் பாலிஷ் என்று சொல்லப்படும் நகப்பூச்சு செய்து கொள்ள பெண்களுக்குத் தடை விதிக்கப் படுகிறது.

(Ban on the use of cosmetics. Many women with painted nails have had fingers cut off.)

கடைகளிலும் சரி; வீடுகளிலும் சரி; பெண்களைப் படம் எடுப்பதற்கும்; அந்தப் படங்களைக் காட்சிப் படுத்துவதற்கும் தடை செய்யப் படுகிறது. கடைகளில் பெண்களின் புகைப்படங்கள் அறவே இருக்கக் கூடாது.

(Latifa (2001). My Forbidden Face: Growing up under the Taliban. New York: Hyperion. pp. 29–107)

பெண்கள் எனும் சொல்லைக் கொண்டு எந்த ஓர் இடத்திற்கும் பெயர் இருந்தால் உடனடியாக மாற்றம் செய்யப் படுகிறது.

எடுத்துக்காட்டாக, பெண்கள் பூங்கா (women's garden) என்று பெயர் இருந்தால், அந்தப் பெயர் வசந்தப் பூங்கா (spring garden) என பெயர் மாற்றம் செய்யப் படுகிறது.

பெண்கள் தங்கள் குடியிருப்புகள் அல்லது வீடுகளின் முற்றத்தில் நிற்கக் கூடாது. தெரு நடமாட்டங்களைக் கவனிக்க தடை விதிக்கப் படுகிறது.

(Ban on women appearing on the balconies of their apartments or houses. )

வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பெண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

(Ban on women's presence in radio, television or public gatherings of any kind.)

திடலில் பெண்கள் தனியாக ஓடி ஆடி விளையாட முடியாது.

(Ban on women playing sports or entering a sport center or club.)

1998-ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல். அங்கு அரசு நடத்தும் மிகப் பெரிய அனாதை இல்லம். அதன் பெயர் டாஸ்கியா மஸ்கான் (Taskia Maskan).

அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போது அந்த இல்லத்தில் வசித்த 400 சிறுமிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியே செல்ல அனுமதிக்கப் படாமல் உள்ளே அடைக்கப் பட்டு இருந்தனர். சரி.

சைக்கிள் அல்லது மோட்டர் சைக்கிள் போன்றவற்றைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. பயணிக்கவும் அனுமதி இல்லை.

(Ban on women riding bicycles or motorcycles, even with their mahrams.)

ஒரு பெண்ணுடன் கணவன் துணையாக வரவில்லை என்றால் டாக்சியில் பயணம் செய்ய முடியாது.

பேருந்து, டாக்சி போன்ற பொதுப் போக்குவரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயணம் செய்ய முடியாது. தாலிபான்களின் முன்னைய ஆட்சியில், பெண்களுக்கு என்று தனியாகப் பேருந்து, மினிபஸ் சேவைகள் இருந்தன. அந்த வழக்கம் மீண்டும் அமலுக்கு வருகிறது.

முந்தைய தாலிபன்களின் ஆட்சிக் காலத்தில், பெண்களின் உடல்நல விசயங்களில் கடுமையான பாதிப்பு.

அதாவது ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது. (Ban on women being treated by male doctors.) பெண் மருத்துவர்கள் தான் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

அதன் காரணமாக ஆபத்து அவசர வேளைகளில், முறையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் பெண்கள் பலர் உயிரிழந்து உள்ளனர்.

இசை கேட்பது தடைசெய்யப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களுக்கும் தான். திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களைப் பார்க்க அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

(Banned listening to music, not only for women but men as well. Banned the watching of movies, television and videos, for everyone.)

அரசு பெண் ஊழியர்கள்; ஆசிரியைகள் விசயத்தைப் பார்ப்போம். பெண் பிள்ளைகளுக்கான கல்வி நிறுத்தப் படுவதாலும்; பெண்கள் அரசு ஊழியர் சேவையில் இருந்து நீக்கப் படுவதாலும் 30,000 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு தாலிபான் தலைவர் முகமது உமார் சொல்கிறார்: ’பெண் அரசு ஊழியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள்; இவர்களின் சேவை நிறுத்தப் பட்டாலும் அவர்களுக்கு மாதந்தோறும் ஏறக்குறைய 5 அமெரிக்க டாலர்கள் (25 ரிங்கிட்) ஊதியம் வழங்கப் படுகிறது.

தாலிபான்கள் புதிய 2021 ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் ஓர் ஆசிரியையின் சராசரி சம்பளம் மாதத்திற்கு 1500 ரிங்கிட். ஆக இப்போதைய 25 ரிங்கிட்டை வைத்துக் கொண்டு அந்த ஆசிரியைகள் என்னதான் செய்யப் போகிறார்கள்.

பெண்களுக்கான வேலை வாய்ப்பு பாதிப்புகள்தான் பெரிதும் உணரப் படுகின்றன. காபூல் நகரத்தில் மட்டும், முந்தைய தாலிபான் ஆட்சியில் 106,256 மாணவிகள்; 148,223 மாணவர்கள்; மற்றும் 8,000 பெண் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். 7,793 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 63 பள்ளிகள் மூடப்பட்டன.

அண்மைய புள்ளி விவரங்களின்படி 90 இலட்சம் ஆப்கான் பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் படிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஹெராத் நகரில் தாலிபான்கள் பல பள்ளிகளை அழித்து விட்டனர். அதனால் 20 இலட்சம் பெண் குழந்தைகள் தங்களின் கல்வியை இழந்து விட்டனர். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் முந்தைய ஆட்சியில், கட்டாயத் திருமணங்கள்; பாலியல் சித்ரவதைகள்; சந்தையில் பெண்கள் விற்பனை போன்ற கொடுமைகள் எல்லாம் நடந்து உள்ளன.

இது மட்டும் இல்லை. முந்தைய ஆட்சியில், இன்னும் எவ்வளவோ உள்ளன. ஒரு பெண் தன் விரல் நகங்களுக்கு நகப் பூச்சு வைத்துக் கொண்டாள் என்பதற்காக 1996-ஆம் ஆண்டு தாலிபான்கள், அவளுடைய கட்டை விரலையே வெட்டி விட்டார்கள்.

மிக அண்மையில், 2021 ஜூலை மாதம், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் இடத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர், இறுக்கமாகச் சிலுவார் போட்டதற்காகச் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.

முந்தைய ஆட்சியில் ஆப்கானியப் பெண்களின் உரிமைகள் தடுமாறின. இன்றைய ஆட்சியில் தடுமாறுகின்றன. இனி எப்படியோ தெரியவில்லை.
நல்லதே நடக்க வேண்டும்; பெண்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்; பெண்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.08.2021
 
சான்றுகள்;

1. UN Secretary-General interim report on human rights in Afghanistan by Mr. Felix Ermacora, Special Rapporteur of the Commission on Human Rights, November 8, 1994 - http://www.rawa.org/gallery.html

2. Bureau of Democracy, Human Rights, and Labor (1998-01-30). "Afghanistan Country Report on Human Rights Practices for 1997". US Department of State.

3. Allan Nacheman (2001-05-03). "Afghan women tell tales of brutality, terror at hands of Taliban". AFP.

4. Amnesty International (1997-06-01). "Women in Afghanistan: The violations continue".

5. Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) (1997-03-30). "Afghan woman stoned to death for adultery".

6. World: South Asia, Albright warns Taleban on women - http://news.bbc.co.uk/2/hi/south_asia/466739.stm

7. Taliban Killed Young Woman For Wearing Tight Clothing - https://gandhara.rferl.org/a/afghanistan-taliban-woman-killed/31393873.html

8. Indian Author Sushmita Banerjee killed by Taliban in Afghanistan - https://news.biharprabha.com/2013/09/indian-author-sushmita-banerjee-killed-by-taliban-in-afghanistan/

நூல்கள்:

1. The Taliban's War on Women: A Health and Human Rights Crisis in Afghanistan (PDF). Physicians for Human Rights. 1998. ISBN 1-879707-25-X.

2. Skaine, Rosemarie (2002). The Women of Afghanistan under the Taliban. MacFarland & Company. ISBN 0-7864-1090-6.

3. Mehta, Sunita, ed. (2002). Women for Afghan Women: Shattering Myths and Claiming the Future. Palgrave Macmillan. ISBN 1-4039-6017-8.

4. Women of Afghanistan in the Post-Taliban Era: How Lives Have Changed and Where They Stand Today. MacFarland & Company. ISBN 978-0-7864-3792-4.








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக