12 செப்டம்பர் 2021

கடாரத்து பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை

தமிழ் மலர் - 12.09.2021

அலெக்சாண்டர் பிறந்தது கி.மு. 323. அசோகர் பிறந்தது கி.மு. 269. ஜுலியஸ் சீசர் பிறந்தது கி.மு. 100. கிளியோபாட்ரா பிறந்தது கி.மு. 51. இந்த வரலாற்று அதிசயங்கள் பிறப்பதற்கு முன்னதாகவே கடாரத்தில் ஒரு நடன தேவதை பிறந்து விட்டாள். அவளுடைய பெயர் பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை.

கடல் மேல் கடாரம் இசை பாட; கரை மேல் தாரகை இடை ஆட; இரண்டும் கலந்த உறவில் என் நெஞ்சம் ஒடிந்து போகுதே! வாழ்க கடாரம். வாழ்க லிந்தாங் தேவதை.

1957-ஆம் ஆண்டில்; கெடா மாநிலத்தில் பத்து லிந்தாங் (Batu Lintang) எனும் கிராமப்புறப் பகுதியில் ஒரு நாட்டியச் சிலையைக் கண்டு எடுத்தார்கள். அழகான சிலை. அச்சு அசல் குலைந்தாலும் மச்சு பிச்சு மயக்கும் சிலை. அந்தச் சிலைக்குப் பெயர்தான் பத்து லிந்தாங் நாட்டியத் தாரகைச் சிலை.


1200 ஆண்டுகள் பழைமையானது. பூஜாங் வரலாற்றைப் பற்றி காலா காலத்திற்கும் கதைகள் சொல்லிக் கொண்டு இருக்கும் கலைச்சிலை. இந்தச் சிலையைப் போல இன்னும் பல சிலைகள், கடாரத்து மண்ணில் இன்றும் புதைந்து கிடக்கின்றன.

1830-ஆம் ஆண்டுகளிலேயே மிகப் பழைமையான தொல் பொருள்கள்; தொன்மை வாய்ந்த சிலைகளாய் புதைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. எனினும் 1936-ஆம் ஆண்டில் தான் முறையான அகழாய்வுகள் தொடங்கின.

ஒரு வருடம் கழித்து 1937-ஆம் ஆண்டில் அந்த ஆய்வுகள் நிறுத்தப் பட்டன. 1941-ஆம் ஆண்டு மீண்டும் ஆய்வுகள். இரண்டாம் உலகப் போரின் போது ஆய்வுகள் மீண்டும் நிறுத்தப் பட்டன. அதன் பின்னர் தொடங்கிய ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பூஜாங் சமவெளிக்கு உலக பாரம்பரியத் தளம் எனும் தகுதியை வழங்க முன்வந்தது.

எதிர்பார்த்து போலவே கிடப்பில் போடப் பட்டது. தூசி தட்டி எழுப்புவார்களா தெரியவில்லை. அதற்குள் இன்னொரு பூஜாங் பிறந்து வந்து அதுவும் பெரிய மனுசியாகிப் போகலாம்.


கெடாவின் சுங்கை பத்து பகுதியில் தான் அதிகமான தொல்பொருள் ஆய்வு களங்கள் உள்ளன. ஏறக்குறைய 100 இடங்கள் என்று சொல்லலாம். அடுத்து அதிகமான இடங்கள் குனோங் ஜெராய் எனும் ஜெராய் மலை அடிவாரத்தில் காணப் படுகின்றன.

கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் மெர்போக் சிறுநகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி. இதன் பரப்பளவு 224 சதுர கிலோ மீட்டர். அதாவது சிங்கப்பூரின் பரப்பளவில் பாதி.

வடக்கே குனோங் ஜெராய். தெற்கே சுங்கை மூடா ஆறு. சில கிலோ மீட்டர் மேற்காகத் தள்ளிப் போனால் மலாக்கா நீரிணை. சுங்கை மெர்போக் ஆறு, மலாக்கா நீரிணையில் இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கி.மீ.

சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானைகள், மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; இரும்புத் தூண்கள்; வெண்கலப் படிமங்கள் எல்லாம் 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது கி.மு. 582 ஆண்டில் உள்ளவை.


அசோகர் அலெக்ஸாண்டர் கிளியோபாட்ரா காலத்திற்கு முன்பாகவே பூஜாங் சமவெளியில் வரலாறுகள் பேசப்பட்டு உள்ளன. சுங்கை பத்து ஆய்வு மையம் (Sungai Batu Archeological Complex), சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

(The Sungai Batu Archaeological site in the Bujang Valley is now certified as dating back to 582 BC instead of 535 BC previously, making it by far the oldest recorded civilisation in the South East Asian region and among the oldest in Asia.)

சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்தது.


இதுவரையிலும் சில நூறு அல்லது சில ஆயிரம் தொல் பொருட்கள் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் பல ஆயிரம் பொருட்கள் மண்ணுக்குள் புதைந்து மர்மமாய்க் கிடக்கின்றன. அவ்வாறு மீட்டு எடுக்கப்பட்ட சிலை தான், 1200 ஆண்டுகள் பழைமையான பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை.

குனோங் ஜெராய் மலை அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கற்சிலைகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அவற்றுள் பெரும்பாலானவை இந்து புத்தமத வழிப்பாட்டுச் சிலைகளாக இருக்கலாம்.

அதே போல மெர்போக் ஆற்று முகத்துவாரத்திலும் மூடா ஆற்றின் முகத்துவாரத்திலும் நிறைய சிலைகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்தவர்கள் அந்தச் சிலைகளை உருவாக்கி இருக்கலாம்.


பூஜாங் பள்ளத்தாக்கு அகழாய்வுப் பணிகளில் மிக முக்கியமானவர் டாக்டர் எச்.ஜி. குவார்டிச் வேல்ஸ் (Dr. H.G. Quartich Wales). இவர் தாய்லாந்து மன்னர் ராமா (Rama VII) அவர்களுக்கு ஆலோசகராக இருந்தவர்.

1951-ஆம் ஆண்டில் இவர் ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் மகா இந்தியாவை உருவாக்குதல்: தென்கிழக்கு ஆசிய கலாச்சார மாற்றத்தில் ஓர் ஆய்வு (Making of Greater India: a study in South-East Asian culture change).

அதில் இந்தியாவில் இருந்து பூஜாங் பள்ளத்தாக்கிற்கு வந்தவர்கள் வணிகம் செய்வதையே முக்கியமான நோக்கமாகக் கொண்டு இருந்தார்கள். அப்படி வந்தவர்கள் வெகு காலமாக இங்கே தங்கி இருக்கிறார்கள்.

ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு மேலாக வணிகப் போக்குவரத்து இருந்து உள்ளது. அதன் பிறகு தான் 1025-ஆம் ஆண்டில் சோழர்களின் படையெடுப்பு நடந்து உள்ளது.


ஆக கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பூஜாங் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தென்னிந்தியர்களின் குடியேற்றம் நடந்துள்ளது என்று எச்.ஜி. குவார்டிச் வேல்ஸ் சொல்கிறார்.

தென்னிந்தியாவின் ஆட்சிகளையும் கொஞ்சம் பார்ப்போம். தென்னிந்தியாவில் முதலாம் நூற்றாண்டில் இருந்து 3-ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்களும் சோழர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

4-ஆம் நூற்றாண்டில் இருந்து 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர் ஆட்சி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் ஆட்சி.

இவர்களின் ஆட்சி காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடன் கொண்ட உறவுகள் பெரும்பாலும் வணிக உறவுகள். அந்த வணிக உறவுகள் மூலமாக கடாரத்தில் தென்னிந்தியர்களின் கலையும் கலாசாரமும் வளர்ந்து உள்ளன.

இந்தக் காலக் கட்டத்தில் தான் தென்னிந்திய அர்ச்சகர்கள்; ஆரிய இனத்தவர்; தமிழக மன்னர்களின் போர் வீரர்கள் வந்து போய் இருக்கிறார்கள். தென்னிந்திய அரசர்களும் வந்து போய் இருக்கிறார்கள்.


அந்த வகையில் பூஜாங் பள்ளத்தாக்கில் அப்போது வாழ்ந்த உள்ளூர் மக்களும் தமிழர்களின் கலாசாரத்தையும்; சிவ வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தக்காலக் கட்டத்தில் புத்த மதம் முதலில் வரவில்லை. சிவ வழிபாடு வந்த பின்னர் தான் புத்தம் வந்து இருக்கிறது. நினைவில் கொள்வோம்.

இந்தியர்கள் என்று பொதுவாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. பூஜாங் சமவெளிக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வந்து இருக்கிறார்கள். சோழர்கள்; பல்லவர்கள்; பாண்டியர்கள் என பலரும் வந்து போய் இருக்கிறார்கள்.

ஆகவே அப்படி வந்தவர்களை எல்லாம் ஒரே பார்வையில் இந்தியர்கள் என்றே சொல்ல வேண்டி வருகிறது.


அப்போதைய அரசியல் முறைப்படி ஓர் அரசரைப் பொது மக்கள் தெய்வமாக மதிக்க வேண்டும். துதிக்க வேண்டும். அது ஒரு வகையில் எழுதப் படாத சாசனம். அதைத் தான் பூஜாங் மக்களும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.

சோழன் வென்ற கடாரம் எனும் ஆய்வு நூலில் வரலாற்று ஆசிரியர் டத்தோ நடராஜன் எழுதி இருக்கும் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

‘மகாராஜாவை தெய்வீகமான தேவராஜாவாகக் கருதும் அரசியல் முறை ஏற்றுக் கொள்ளப் பட்டது. அரண்மனை விழாக்கள்; சடங்குகள்; இசைக் கச்சேரிகள்; இராமாயணம்; மகாபாரதம் எனும் இதிகாசங்கள் ஆகியவை உள்ளூர் கலாசாரத்தோடு கலந்தன. அவர்களின் மொழியில் சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் கலந்தன.

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியில்; ஆனால் பல்லவத் தமிழ் எழுத்துகளில் உள்ளன. சமஸ்கிருதமும் தமிழும் அரசவைப் பிராமணர்களாலும் மேல்குடியினராலும் சமயச் சடங்களுக்காகப் பயன்பட்டு இருக்கலாம்.


இந்தியர்களிடம் இருந்து பெறப்பட்ட கலாசாரத் தாக்கம் பூஜாங் பள்ளத்தாக்கு முழுமைக்கும் பரவி இருந்தது. எல்லாக் கலாசார ஊக்குவிப்புகளும் இந்தியாவில் இருந்தே வந்தன. வர்த்தகப் பெருவழியே கலாசாரப் பெருவழியாகவும் ஆயிற்று. இவ்வாறு டத்தோ நடராஜன் கூறுகிறார். சரி. நாட்டியத் தாரகை கற்சிலைக்கு வருவோம்.

சுங்கை மெர்போக் படகுத் துறையில் (Kompleks Jeti Sungai Merbok) இருந்து மலாக்கா நிரிணைக்குப் படகில் செல்லும் போது ஆற்றின் இரு புறமும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்குக் காண்டா காடுகள் உயர்ந்து நிற்கும்.

ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலட்சக் கணக்கான காண்டா மரங்களும்; காட்டு மரங்களும் வரிசை வரிசையாய் அழகு காட்டுவதைப் பார்க்கலாம்.

இந்த ஆற்றில் மூன்று முறை படகுப் பயணம் செய்த அனுபவம் உள்ளது. சும்மா சொல்லக் கூடாது. ஆற்றில் வீசும் காற்று, கடலில் வீசும் காற்று போல ஆளைத் தள்ளும். கொஞ்சம் ஏமாந்தால் ஆற்றிலேயே தள்ளிவிடும். அதனால் பாதுகாப்புப் பட்டைகளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்தியக் கடலோடிகள்; தென்னிந்திய அரசர்கள்; இந்தோனேசிய அரசர்கள்; அரபு நாட்டு வணிகர்கள்; சீனா நாட்டு புத்தச் சமயப் போதகர்கள் பயணம் செய்த இதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கும்.


மெர்போக் ஆற்றுப் பயணத்தில் பாதி தூரம் கடந்ததும் புக்கிட் லிந்தாங் ஆற்று முகத்துவாரம் இடது புறத்தில் எதிர்படும். இந்த இடத்தில் தான் பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

இந்த இடத்திற்கு ஒரு முறை போய் இருக்கிறேன். பந்தாய் மெர்டேகா எனும் கடற்கரை ஓய்வு நகரத்திற்குப் போகும் வழியில் காட்டுப் பகுதியில் அந்த இடம் உள்ளது.

(Figure of a dancer carved in high relief found at Batu Lintang, south of Kedah in 1957 by Dr.Sullivan and Dr.H.A. Lamb.)

1957-ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்கள் டாக்டர் சுலிவான் (Dr.Sullivan); டாக்டர் லாம்ப் (Dr.H.A. Lamb); அந்தச் சிலையைக் கண்டு எடுத்தார்கள். இப்போது அந்தச் சிலை கோலாலம்பூர் தேசிய அரும் காட்சியகத்தில் உள்ளது.

கடாரத்து நாகரிகத்தை மறுபடியும் நினைவு கூர்கிறேன். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும்; ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

(The Sungai Batu Archeological Complex, claimed to be Southeast Asia’s oldest civilization (older even than Borobudur and Angkor Wat), is said to be the lost world of Kedah Tua (Ancient Kedah), a kingdom complete with iron ore mines, smelting factory, a port, palace, burial sites and a thriving city.)

பத்து லிந்தாங் நாட்டியத் தாரகைச் சிலை, மெர்போக் ஆற்றுப் பகுதியில் கண்டு எடுக்கப் பட்டதாகும். தவிர செமிலிங் காட்டுப் பகுதிகளில் நிறைய தொல் பொருள்களையும் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

ஆய்வுப் பணிகளுக்காகப் பல முறை செமிலிங் காட்டிற்குள் போய் இருக்கிறேன். மறக்க முடியாத அனுபவங்கள். ஓர் அனுபவத்தை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தனிப்பட்ட தகவலாக இருந்தாலும் அதில் வரலாறும் சற்றே கலந்து போகிறது.

செமிலிங் காட்டிற்குள் ஒரு முறை நடந்த நிகழ்ச்சி. நானும் என் நண்பரும் போய் இருந்தோம். அங்கு ஒரு பெரிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. வெயில் காலங்களில் அந்த நீர்வீழ்ச்சி, காய்ந்து போன கற்பாறை போல இருக்கும்.

அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் நான்கைந்து சின்னச் சின்னக் கரும் பாறைகள் அருகருகே இருக்கும். மேலே உச்சிப் பகுதியில் பாழடைந்து போன ஒரு பலகை வீடும் இருந்தது.

அது ஒரு மாதிரியான காற்றுச் சேட்டை கொண்ட குடிசை என்று பின்னர் தெரிய வந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிகள். லாலான் புற்கள். காற்று இல்லாமலேயே ஆடும் சின்னச் சின்ன மரங்கள். பறவைகள் சத்தம் இல்லை.

சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படும். அன்றைக்கு ஒரு நாள்... பகல் மணி பன்னிரண்டு இருக்கும். நீர்வீழ்ச்சியின் உச்சத்தில் இருந்த உச்சிப் பாறையில் அமர்ந்து இருந்தேன்.

அப்போது யாரோ எனக்குப் பின்னால் வந்து மூச்சு விடுவது போல இருந்தது. என்னுடன் வந்த நண்பர் நீர்வீழ்ச்சியின் கீழே இருந்தார். அவர் மேலே ஏறி வரவில்லை.

ஒரு மாதிரியான வெப்பக் காற்று. திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை. ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள். எனக்குப் பயம் வந்துவிட்டது.

அப்புறம் என்ன. திரும்பிப் பார்க்காமல் அரக்கப் பரக்க கீழே வந்து சேர்ந்தேன். னல்லவேளை வழுக்கி விழவில்லை. பூஜாங் அரும் பொருள் காட்சியகத்தில் இருந்த அதிகாரிகளிடம் நடந்ததைச் சொன்னேன்.

நடு மத்தியான நேரம். நல்ல நேரம் அல்ல. இந்த நேரத்தில் நீங்கள் போய் இருக்கிறீர்கள். காற்றுச் சேட்டைகளாக இருக்கலாம். சொல்ல முடியாது என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள். இன்றைய வரைக்கும் அந்த நிகழ்ச்சியை நினைத்தால் சற்றே பயமாக இருக்கும்.

வாய்ப்பு கிடைத்தால் உச்சிக்குப் போய்ப் பாருங்கள். ஆனால் ஒரு சின்ன நினைவுறுத்தல். காற்று சேட்டை கரடிச் சேட்டை என்று கவிழ்ந்து அடித்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. கடாரத்தின் கடைசி ராஜா ஸ்ரீ விஜய அரசர் விஜயதுங்க வர்மன் தான் பதில் சொல்ல வேண்டி வரும்.

அவரும் ரொம்ப பிசி. பூஜாங் வரலாற்றுக்கு உலக பாரம்பரியத் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார். மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார். பாவம் விஜயதுங்க வர்மன்!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2021


சான்றுகள்:

1. Journal of the Malayan Branch of the Royal Asiatic Society Vol. 31, No. 1 (181) (May, 1958), pp. 188-219

2. https://commons.wikimedia.org/w…/File:Muzium_Negara_KL10.JPG (Arca penari ukiran timbul dijumpai di Batu Lintang, Kedah Selatan pada tahun 1957 oleh Dr. M. Sullivan dan Dr. H.A. Lamb.)

3. Nilakanta Sastri, K.A. (2000). A History of South India. New Delhi: Oxford University Press. ISBN 0195606868.

4. Vasudevan, Geeta (2003). Royal Temple of Rajaraja: An Instrument of Imperial Chola Power. Abhinav Publications. ISBN 0-00-638784-5.

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: இன்றைய தமிழ் மலரில் தலைவரின் கைவண்ணம் வாங்கிப் படிக்க மறவாதீர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கணேசன் ஆசிரியரின் ஏற்பாட்டில் ஐயா டத்தோ. நடராஜா அவர்களின் விளக்கமும்  அவரின் புத்தக அறிமுகமும் நடைபெற்றது அதற்கு முன்பே அடியேன் பூஜாங் பள்ளதாக்கு பகுதிக்கு சென்று ஒரு சொல்ல இயலா அனுபவத்தை பெற்று வந்தேன்

உங்கள் கட்டுரை அதை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து விட்டது ஐயா மலேசிய தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக கால் பதிக்க வேண்டிய இடம் பூஜாங் பள்ளதாக்கு. நன்றி ஐயா 🌹💞🙏👌💪💪💪💪

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒரு முறையாவது போய்ப் பார்க்க வேண்டும். மலையகத்தில் தமிழர்கள் முதன்முதலில் கால் பதித்த இடம்... கடாரத்து வரலாறு கொஞ்சம் கொஞ்சமாய் மறைக்கப்பட்டு வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் இல்லாமலே போகலாம்.

கொரோனா முடியட்டும். ஒரு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்வோம். கண்டிப்பாகப் போய்ப் பார்க்க வேண்டும். கருத்துகளுக்கு நன்றிங்க தனா...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  இத்தாலி நாட்டில் இருந்து ஒரு தமிழரின் பதிவு...


டாக்டர் சுபாஷிணி: அருமையான கட்டுரை. மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய பல்வேறு மிக முக்கிய தகவல்களை இக்கட்டுரை வழங்குகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுகளில் இணைக்கின்றோம். 😊🌷

தனசேகரன் தேவநாதன்:  நன்றி அம்மா மலேசிய தமிழ் பள்ளி மலேசிய தமிழர்களின் அடையாள ஆவணம். ஆரம்ப கல்வி தொடங்கி
உயர்க்கல்வி கூடம் வரை. அதாவது கோ.சா அவர்களின் தமிழ் எங்கள் உயிர் என்ற போராட்டம் காலம் மட்டும்மல்ல.

இன்றுவரை பலரின் தியாகங்கள் தான் இந்நாட்டில். தமிழ் நிலை பெற்று வாழ்கிறது. உங்களது பங்கும் அடித்தளத்தை பலமாக்கட்டும் வாழ்த்தும் பாராட்டுகளும் நன்றியும். வாழ்க வாழ்க 💞🙏👌🌹💪💪💪💪💪

உதயக்குமார் கங்கார்: கட்டுரை மிகச் சிறப்பு ஐயா, வரலாற்று தகவல்கள்.

செல்லையா செல்லம்: கட்டுரை மிக சிறப்பு  உங்களுடைய எழுத்துப் படிவங்களை நான் தவறாமல் வாசிக்கிறேன்   

சத்யா பிரான்சிஸ்: மிகச் சிறப்பான வரலாற்று கட்டுரை..

வேலாயுதம் பினாங்கு: அருமை ஐயா...👍👍☝

பெருமாள் கோலாலம்பூர்: நீங்க காட்டுக்கு உள்ளே உச்சி நேரத்தில் தனிமையில் இருந்தால் அது போன்ற உணர்வுகள் வந்து போகலாம். திகிலான நிகழ்வு நீங்கள் மிரண்டு போனீர்களா, அதிர்ந்து போனீர்களா.

வேலாயுதம் பினாங்கு: அண்மையில், குனோங் ஜெராய் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பல மண் அறிப்புக்கள் ஏற்பட்டு சில சரித்திர பொருட்கள் வெளியே வர / தெரிய வாய்ப்புக்கள் உள்ளது ஐயா. மலை உச்சியில் இருந்து கடும் வேகத்தில் நீர் அடித்து வந்ததாகத் தகவல். 🙏🙏

பெருமாள் கோலாலம்பூர்: உண்மை தான்  ஆய்வு செய்தால் ஏதாவது தட்டுப்படும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  பிற்பகல் மணி பன்னிரண்டு. நான் மட்டும் தான் இருந்தேன். ஆகக் கீழே... அடிவாரத்தில் நண்பர் இருந்தார். முதலில் பயம் இல்லை. மிக மிக அமைதி. மூச்சு விட்டால்கூட கேட்க முடிந்தது. அப்போது ஒரு மாதிரியான உணர்வு. அவ்வளவு சுலபத்தில் பயப்பட மாட்டேன்.

எத்தனையோ தடவை அடர்ந்த மலைக் காடுகளுக்குள் தனியாகப் போய் வந்து இருக்கிறேன். ஆனால் அந்த இடத்தில் வித்தியாசமான உணர்வுகள். விவரித்துச் சொல்ல முடியவில்லை. இன்றும் அதை நினைத்துக் கொண்டால் பயம் வரச் செய்கிறது.

தேவிசர கடாரம்: அருமையான வரலாறு... 👌👍🏻 ஆச்சரியத்தோடும் ஆவலோடும் படித்தேன்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  எத்தனை மார்க் கொடுக்கலாம்... 😃

தனசேகரன் தேவநாதன்:  தமிழக அரசு வெளியிட்ட அறிக்கைப்படி செயல் படுமானால்... உலக மக்களுக்குத் தமிழரின் சாதனைகள் வெளிப்படும். ஐயா போன்றவர்களின் கடின உழைப்பிற்குப் பயன் உண்டாகும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  நானும் கேள்விப் பட்டேன். எடுத்துப் போய் இருக்கிறார்களாம். விவரம் தெரியவில்லை. டத்தோ நடராஜா அவர்களுக்கு போன் செய்தேன். அவரும் போய் இருக்கிறார். எதையும் பார்க்க கிடைக்கவில்லை என்றார்.

பெருமாள் கோலாலம்பூர்: இல்லை, தலைவரே மூதாதையர் நம்ம வாரிசு வந்திருக்காரு போய் பார்ப்போம் என தேடி ஓடி வந்து இருப்பார்களோ. மாநிலம் விட்டு மாநிலம் Rentas kawasan வந்தால் நம் புலன நண்பர்களோடு ஒரு சுற்றுலா போய் வரலாமே

தேவிசர கடாரம்: இந்த கட்டத்தில் என்னையும் ஒரு வித திகில் சூழ்ந்து கொண்டது...

பெருமாள் கோலாலம்பூர்: பாத்துமா... வேப்பிலை கையில் ஒரு கொத்து வைத்து கொள்ளுங்கள்...

தேவிசர கடாரம்: நானே வருவேன் ... இங்கும் அங்கும்

ராதா பச்சையப்பன்: இந்த பாடலை நாங்க அங்கு போய் படித்தால், அங்கு உள்ளது  லாரிதான் 🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️😃👍👌.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  முதலில் கீழடி நாகரிகத்தை முழுமையாகக் கண்டுபிடித்துச் சொன்னாலே பெரிய விசயம் ஐயா. கடாரத்தில் அவ்வளவு எளிதில் ஆய்வு செய்ய விட மாட்டார்கள்.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் குனோங் ஜெராய் உச்சிக்குப் போக முடியவில்லை. அங்கே ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். இப்போது இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

சுங்கை பத்து பகுதியில் ஒரே சமயத்தில் பத்து பதினைந்து இடங்களில் பினாங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள். ஒவ்வொரு களத்திலும் கூடாரங்கள் அடித்து களப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கூடாரத்திலும் நூற்றுக் கணக்கான மண்குப்பிகள்... சிறுசிறு மண் களையங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு தரவு எண்கள் பொறித்து அடுக்கி வைக்கிறார்கள். எண்ணிப் பார்க்கவே முடியாது. நூறுகள் அல்ல. ஆயிரங்களில் மண் குப்பிகள்... வரிசை வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

சுங்கை பத்துவின் நீளம் ஒரு பத்து மைல் இருக்கும். ரோடு போய்க் கொண்டே இருக்கும். இரு புறங்களிலும் எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள்... மரங்கள். அங்குதான் களப்பணி கூடாரங்களை அமைத்து இருக்கிறார்கள்.

சில களப்பணிக் கூடாரங்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஜாகா இருப்பார்கள். அவர்களிடம் நைசாகப் பேசி உள்ளே சென்று விடுவோம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவ்வளவு பொருள்களை தோண்டி எடுத்து வைத்து இருக்கிறார்கள். எண்ணவே முடியாது.

ஏறக்குறைய 100 இடங்கள் உள்ளன. சுங்கை பத்து பகுதியைச் சுற்றி வர எப்படியும் ஒரு மாதம் பிடிக்கும். சின்ன இடம் அல்ல. பெரிய இடம். 50 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அங்கு தான் செமிலிங் காடுகள் உள்ளன. அங்குதான் எனக்கு அப்படி ஓர் அனுபவம்.

தேவிசர கடாரம்: படிக்கும் போதே போய்  பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  இந்தக் காடுகளில் தான் சோழப் படையெடுப்பு நடந்து உள்ளது. பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம். விஜயதுங்க வர்மனின் படைகள் ஒரு புறம்... இராஜேந்திர சோழனின் படைகள் ஒரு புறம். இதை என் நண்பரிடம் சொன்னேன். அவர் மேலே வருவதற்கு மறுத்து விட்டார். 😃

போகுவரத்து வாகனங்களின் சத்தம் இருந்தாலும் உட்பகுதிக்குள் தனியாக யாருமே போக மாட்டார்கள்.

செமிலிங் காடுகள் ரொம்பவும் அமைதியாக இருக்கும். பயமாகவும் இருக்கும். இரண்டு பேர் போனாலும் கொஞ்சம் துணிச்சல் வேண்டும்.

பெருமாள் கோலாலம்பூர்: [10:31 pm, 12/09/2021] Perumal Kuala Lumpur: குனோங் ஜெராய் மலயேறி உள்ளேன். முதல் அனுபவம். நடந்து தான் குழுவாகச் சென்றோம். உச்சியில் Telekom Tower. இருக்கிறது. ஓரிரு வீடுகளைக் காண முடிந்தது.

அங்கு பயிர் செய்யப்படும் காய்கறிகள் கெடா சுல்தானுக்கு அனுப்பப் படுமாம். அங்கு கோயில் எதனையும் காணவில்லை. அது1967ல் மலையேறியது.

பெருமாள் கோலாலம்பூர்: [10:33 pm, 12/09/2021] Perumal Kuala Lumpur: இப்பொழுது பொது மக்கள் காரில் செல்கிறார்களாம்

ராதா பச்சையப்பன்: இப்படி எல்லாம் பயம் காட்டினால் எங்கனம் நாங்கள் போய் செமிலிங் காடுகளையும், காய்ந்து போன நீர்வீழ்ச்சிகளையும் பார்ப்பதாம். 😳😳🤔🤔.

வெங்கடேசன்: உள்ளே செல்லும் போது அங்குள்ள சக்திகளிடம் அனுமதி கேட்டுச் செல்ல வேண்டும்

பெருமாள் கோலாலம்பூர்: போகலாம். தினமும் பொதுமக்கள் போகிறார்கள். மியூசியம் உள்ளது. பக்கத்திலே காட்டாற்று நீர் கொட்டுகிறது. பெரும் பாறைகளைக் காணலாம். கானகக் காட்சியில் மயங்கலாம்

ராதா பச்சையப்பன்: நன்றி சகோதரரே, 👌👍🙏🌹.

குனோங் ஜெராய் உச்சிக்குப் போக இரண்டு காட்டுப் பாதைகள் உள்ளன. Tapah Forest Reserve Trail - Singkir Forest Reserve Trail. இரண்டு பாதைகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நான் சிங்கிர் காட்டுப் பாதையைப் பயன்படுத்தினேன். சிவன் கோயில் உடைக்கப்பட்டு விட்டதாக பின்னர் சொன்னார்கள். எவ்வளவோ முயற்சி செய்தோம். எங்களால் பார்க்க இயலவில்லை. பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து கோயிலை மறைத்து விட்டதாகச் சிலர் சொன்னார்கள்,

வெங்கடேசன்: காடுகளுக்கு உள்ளும் அமானுஷ்ய சக்திகள் உண்டு கவனமாக இருக்க வேண்டும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: 1997 / 1998 கோவில் உடைக்கப்பட்டது ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  நானும் கேள்விப்பட்டேன். உறுதிபடுத்த முடியாமல் இருந்தது. ஜெராய் மலை உச்சியில் சிவன் கோயில் இருந்தற்கான ஒரு படத்தை கம்பியூட்டர் மூலமாக வரைந்து விட்டார்கள். பயம் காட்டவில்லை. உண்மைதான் சொல்கிறேன். குழுவாகப் போனால் பயப்பட வேண்டாம்.

பெருமாள் கோலாலம்பூர்:
நல்ல தகவல். இன்று என் கனவில் ராஜ ராஜ சோழன் வந்தால் நாளை என் செய்தி தலைப்பாக இருக்கும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: [10:51 pm, 12/09/2021] Ganeson Shanmugam Sitiawan: ஐயா இச்செய்தி இன்று எடுக்கப்பட்டது

கணேசன் சண்முகம் சித்தியவான்:
[10:52 pm, 12/09/2021] Ganeson Shanmugam Sitiawan: கெடா மாநில பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்று. ஜெராய் மலைத் தொடரில் நடைபெறும் வழிபாடுகள், தியானங்கள், பூஜைகள் நிறுத்தப்பட வேண்டும். இஸ்லாத்துக்கு எதிரானது. அண்மையில் பெரும் வெள்ளத்துக்கு காரணமும் இங்கு நடைபெறும் பூஜைகள்தான் காரணமாம்.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நாலு நம்பர் எடுப்பது... மண்டி பூங்ஙா... ஆடு வெட்டுவது கோழி வெட்டுவது... இப்படி படை எடுத்துச் செல்வதால் அங்குள்ள மக்களுக்கும் தொல்லை... நம்ப ஆட்களில் சிலர் மேலே கொட்டகை அடித்து குடியும் கும்மாளமுமாக பிடிபட்டார்களாம்.  ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

வேலாயுதம் பினாங்கு: மலாக்கா, புலாவ் பெசாரிலும் இதே பிரச்சினை... தான்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக