05 செப்டம்பர் 2021

மாயிருண்டகம் கோத்தா கெலாங்கியில் இராஜேந்திர சோழன்

தமிழ் மலர் - 05.09.2021

இராஜா ராஜா சோழன்; இராஜேந்திர சோழன்; இவர்களின் மெய்க்கீர்த்திகள் இல்லை என்று ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசியத் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். நிதர்சனமான உண்மை. நியாயமான உண்மை.

இராஜேந்திர சோழன் பற்றிய மெய்க்கீர்த்திகள் ஓர் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. சோழப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திச் சான்றுகளைக் கொண்டுதான் சோழர் காலத்துப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்த முடிகிறது.


தமிழகக் கோயில்களில் இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் கிடைத்து உள்ளன. சரி.

மெய்க்கீர்த்திகள் என்றால் என்ன? ஓர் அரசரைப் பற்றிய கல்வெட்டுகளில் அல்லது செப்பேடுகளில் செதுக்கப் பட்ட செய்திகள் தான் மெய்க்கீர்த்திகள். பெரும்பாலும் அந்த அரசரின் அருமைப் பெருமைகளைச் சொல்லும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும்; புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் (Meikeerththi - True Glory or Prasaththi) என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.

இன்னும் ஒரு விசயம். கல்வெட்டுகளைச் செதுக்கியவர்கள், மன்னர்களின் பாராட்டைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி அள்ளி விடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக பாண்டியர்களின் ஒரு கல்வெட்டு. அதில் ஒரு வாசகம்.

இராமாயணம் நடந்த காலத்தில் ஒரு பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்தார். அவர்தான் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தார் என்று சொல்கிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம்.

அப்படிப்பட்ட புகழேந்திகள் இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லா காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆக அந்த மாதிரி அள்ளிவிடும் கல்வெட்டுகளும் இருக்கவே செய்கின்றன.

ஒரு கல்வெட்டின் உண்மையை உறுதிப்படுத்த மற்ற மற்ற கல்வெட்டுகளையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

இல்லாத ஒன்றைப் புகழ்ந்து புகழுரைகள் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம், முதலாம் இராஜராஜன் காலத்தில் தோன்றியது. இது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவு.

சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இருந்து (கி.பி. 993), அவை காணப் படுகின்றன.


இந்த மெய்க்கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கங்கை நோக்கி இராஜேந்திரன் எடுத்த படையெடுப்புகளைச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம்.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள்.

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திச் செப்பேடுகளின் பெயர்கள்:

1. திருவாலங்காட்டுச் செப்பேடு

2. கரந்தைச் செப்பேடு

3. திருக்களர் செப்பேடு

4. எசாலம் செப்பேடு

இதில் ஆனைமங்கலச் செப்பேடுகள் (Leiden Copper plates), நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணங்கள்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழகத் தொல்பொருள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு இந்த லெய்டன் செப்பேடுகள் மீட்கப்பட வேண்டும் எனத் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு கடிதம் அனுப்பி இருந்தது.

விரைவில் மீட்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. முயற்சி செய்து வரும் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர்  டாக்டர் சுபாஷிணிக்கு வாழ்த்துகள். சரி.

இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பட்டியலிடும் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி (Inscription of Rajendra Chola - 1, No: 66). அதில் ஒரு பகுதியில் பின்வருமாறு செதுக்கப்பட்டு உள்ளது.

1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.

1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sri Vijaya
2. பண்ணை (சுமத்திரா) - Pannai
3. மலையூர் (சுமத்திரா) - Malaiyur
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa-Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) - Ilangaasokam
6. மாபப் பாளம் (பேராக்) - Maa-Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு) - Mevili-Bangkam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) - Valaipanthur
9. இலாமுரி தேசம் (ஆச்சே) - Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா  - தாய்லாந்து) - Maa-Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa-Nakkavaaram
13. கடாரம் - Kadaaram

மெய்கீர்த்தியில் பொறிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள்.

அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள், சோழர்களில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றன.

இப்போது உள்ள தமிழ்ப் பிரியர்கள் அந்த எழுத்துகைத் தவிர்த்து வருகின்றனர். நல்லது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்கள்:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு

(Inscription of Rajendra Chola - 1, South Indian Inscription Vol 1, Inscription No: 66, page 98.)

(http://www.mayyam.com/talk/archive/index.php/t-10714.html)

ஸ்ரீ விஜயத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் இராஜேந்திர சோழனின் கடல்படை, முதலில் நக்காவரம் எனும் நிக்கோபார் தீவில் முகாமிட்டு உள்ளது.
இந்தத் தீவில் சோழப் படைகள் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிந்து சென்று தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்புகள் நடத்தினார்கள் என்பது வரலாற்று அறிஞர்கள் சிலரின் கருத்து.

மேலும் ஒரு சாரார் இராஜேந்திர சோழன் படையெடுப்புகளில் கலந்து கொள்ளவே இல்லை. அவர் உளநாட்டுப் போரில் கவனம் செலுத்தி வந்தார் என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. இதைப் பற்றி விவரமாக அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

நிக்கோபார் தீவில் படையெடுப்பு செய்த பின்னர், சோழரின் படைகள், மற்ற மற்ற இடங்களின் மீது படை எடுத்து இருக்கிறார்கள். அவற்றில் ஓர் இடம் மாயிருண்டகம் எனும் கோத்தா கெலாங்கி.

மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள்.

(Maayirudingam - Johore kingdom of South Malaysia which was the "Maayirudingam" of Rajendra Chola's Meikeerththi. that existed in the southern most end of then Malaysia, a region without much human habitation and prominance in the early 11th century.)

கி.பி. 950-ஆம் ஆண்டுகளில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை.

தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.

கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே; சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.

அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து ’லெங்குய்’ என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே ’லிங்கி’ எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் ’லெங்குய்’ என்று மருவி இருக்கலாம்.

லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே லெங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as 'Glang Gui' (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.

மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம்.

மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.

இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார்.

பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். அவரின் முயற்சிகளைப் பாராட்டினால் மட்டும் போதாது. தமிழ் நல்லுள்ளங்கள் அவருக்கு நிதியுதவி செய்ய வேண்டும். என்னுடைய தாழ்மையான கருத்து. வாழ்க கணேசனின் தமிழினச் சேவை. சரி.
 
மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசிற்கு மாயிருண்டக அரசு அடிபணிந்து சேவை செய்து வந்தது. சூளாமணி வர்மன் என்பவர் அந்த அரசின் பேரரசராக இருந்தார்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த நகருக்கு கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை பாதுகாப்பு அரணாக வலிமை சேர்த்து இருக்கிறது. மாயிருண்டகப் பேரரசை ஆகக் கடைசியாக சூளாமணி வர்மன் என்பவர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இராஜேந்திர சோழனின் படைகள் வருவதை அறிந்த சூளாமணி வர்மன் தன்னுடைய படைகளை எல்லாம் ஒன்று திரட்டினார். இராஜேந்திர சோழன் படைகள் வரும் பாதையை நோக்கி முன்னேறிச் சென்று இருக்கிறார். இருபது மைல்கள் கடந்ததும் இராஜேந்திர சோழனின் படைகளை எதிர்கொண்டார்.

யானையின் மீது ஏறி வந்த சூளாமணி வர்மன் சோழப் படைகளின் மீது தாக்குதல் நடத்தினார். இராஜேந்திர சோழனும் தன்னுடைய யானை மீது அமர்ந்தவாறு எதிர்த் தாக்குதல் செய்தார். இரு தரப்பிலும் நூற்றுக் கணக்கான பேர் இறந்து போனார்கள்.

அது ஒரு கசப்பான போர். இராஜேந்திர சோழன் கூர் அம்புகளால் சூளாமணி வர்மனைத் தாக்கினார். அதில் ஓர் அம்பு சூளாமணி வர்மன் மீது பாய்ந்தது. அவர் அங்கேயே இறந்து போனார். தலைவரை இழந்த மாயிருண்டகப் படைகள் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறி ஓடின.

அதன் பின்னர் சோழப் படைகள் தங்கு தடை இல்லாமல் கெலாங்கி கோட்டைக்குள் நுழைந்தன. கோட்டைக்குள் இருந்த அரண்மனைக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றன. மாயிருண்டகப் பேரரசின் செல்வங்களை எல்லாம் சூறையாடின. குவிந்து கிடந்த பொன்னும் மணியும்; பவளமும் வைரமும்; மாணிக்கமும் மரகதமும் சுத்தமாக வழித்து எடுக்கப் பட்டன.

(சான்று: இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி; கோர்வையின் முதல் தொகுப்பு; எண்: 66, பக்கம்: 98.)

பின்னர் மாயிருண்டகத்தின் அரசர் சூளாமணி வர்மனின் மகள் இளவரசி ஒனாங்கி (ஓனாங் கியூ) என்பவரை இராஜேந்திர சோழன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் கடல் வழியாகக் கடாரத்திற்குச் சென்றன. அடுத்த கட்டுரையில் கடார வரலாற்றுத் தகவலுடன் சந்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.09.2021

சான்றுகள்:

1. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.

2. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja

3. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen

4. http://www.hubtamil.com/talk/showthread.php?10464-A-brief-historical-study-of-Singapore-(A-D-1025-1275)

5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41


பின்னூட்டங்கள்.
மலேசியம் புலனம் - 06.09.2021 பதிவுகள்.



கருப்பையா ராஜா சுங்கை பூலோ: முழுதும் படித்தேன். அருமை. பாராட்டுக்கள் ஐயா.

கணேசன் சண்முகம் சித்தியவான்: அருமை ஐயா

முருகன் சுங்கை சிப்புட்: மாபப் பாளம் (பேராக்; மாயிருண்டகம் (ஜோகூர்) புதிய தகவல் அருமை 👏👏

சிவகுரு: அருமை ஐயா..

நாகராஜா: சிறப்புங்க ஐயா

சத்யா பிரான்சிஸ்: முத்து அய்யா வணக்கம். நீங்கள் கோத்தா கலங்கி காட்டிற்குச் சென்று வந்துள்ளீர்கள். மீண்டும் போக வாய்ப்பு கிடைத்தால் சொல்லுங்கள் நானும் வருகிறேன். ஜாலான் 'திக்குஸ்' பயன்படுத்துவோம்.

கருப்பையா ராஜா சுங்கை பூலோ: அது என்ன ஜாலான் tikus

சத்யா பிரான்சிஸ்: யாருக்கும் தெரியாத குறுக்குவழி ஐயா

முகில்: கவிஞரின் ஆர்வத்திற்கு நன்றி. களப் பணிகளுக்கு மூன்று முறை போய் இருக்கிறோம். மீண்டும் போக வாய்ப்புகள் அமையவில்லை. பல நாட்கள் கொசுக்கடி... அட்டைக்கடி... ஒரு கட்டத்தில் கரும் பூரான் கடித்துக் காய்ச்சலே வந்துவிட்டது. காடு மலைகள் என்று அலைந்த எனக்கே இப்படி என்றால்...  😀

கஷடப்பட்டு வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்து சம்பந்தப் பட்டவர்களிடம் ஆவணமாகச் சமர்ப்பித்தோம். ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. கிடப்பில் உள்ளன.

ஜொகூர் பாருவில் கணேசன் என்பவரும் அயராது தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி புத்தகமாகப் போட்டு ஜொகூர் அதிகாரிகளிடம் கொடுத்து இருக்கிறார். அவருடைய ஆய்வுகளும் அப்படியே கிடப்பில் உள்ளன.

இரகசியங்கள் வெளியாகின்றன என்று கண்டுபிடித்து பாதுகாப்பு வளையங்கள் இறுக்கப்பட்டு உள்ளன. குறுக்கு வழிகள் உள்ளன. பாதுகாப்புகள் கீழ்ப்பகுதிகளில் அதிகம். மேலே கோத்தா திங்கி பகுதிகளில் சற்றுத் தளர்வு. கொரோனா முடியட்டும். போவதற்கு ஏற்பாடுகள் செய்வோம். நன்றிங்க கவிஞரே...

கணேசன் சண்முகம் சித்தியவான்: இதுதான் ஐயா. நம் நாட்டிற்கும் இந்தோனேசியாவிற்கும் உள்ள வித்தியாசம்.

முருகன் சுங்கை சிப்புட்: நானும் வருகிறேன்

முகில்: தாராளமாக... கொரோனா முடியட்டும். ஏற்பாடுகள் செய்வோம்.

முருகன் சுங்கை சிப்புட்:
நன்றி அய்யா அக்டோபர்- ஜனவரி ஏறக்குறைய நான்கு மாதம் ஈப்போவில் விடுப்பில் இருப்பேன் அய்யா...

வெங்கடேசன்: வணக்கம். ஐயா. நேற்றிலிருந்து இனைய தொடர்பு மிக மோசமாக உள்ளது எந்த ஒரு காணொலியும் பார்க்க இயல வில்லை பார்த்த பிறகு என்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறேன். மிக்க நன்றி 🙏

முகில்:  என் பகுதியில் Fiber Optic இணையத் தொடர்புகளிலும்  பிரச்சினைதான்... சமயங்களில் மெதுவாகி விடுகிறது.

வெங்கடேசன்: அங்கும் இந்த சிக்கல் உள்ளது 🙄 நேற்று கண மழை இடி முழக்கத்திற்கு பிறகுதான் இணைய தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ஐயா

தனசேகரன் தேவநாதன்: இந்த செய்திகள் உலகுக்கு பறைசாட்டப் படவேண்டும். ஐயா பாலன் முனியாண்டி அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

பினாங்கில் இந்து அறபணி வாரியத்தின் மேற்பார்வையில் செயல் படும் அருங்காட்சியகத்தில் மலாயா தொடர்பான ஐயாவின் ஆதாரப்பூர்வ இந்த விசயங்கள் எழுத்து வடிவமாக வரை படங்களுடன் முக்கிய மொழிகளில் இடம்
பெற செய்வது சிறப்பாக அமையும்.

அதுவே அவரின் கடின உழைப்பிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாக அமையும். அரசாங்க தேசிய அருங்காட்சியகத்தின் இலட்சணம் நாம் அறிந்ததே. தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி🌹🙏

முகில்: நூல்களாக வெளியிடுவோம். அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும். அதுதான் நம்முடைய இலக்கு... நன்றிங்க தனா ஐயா...

தனசேகரன் தேவநாதன்: நிச்சயமாக ஐயா நூல்களாக வரவேண்டும். அதே சமயம் மக்கள் பார்வையிலும் படவேண்டும். அதைப் பார்த்து புத்தகத்தை தேட வேண்டும். கடந்த காலத்தில் பாட நூலில் இருந்த சுவாமி சத்தியானந்தாவின் மலாயா சரித்திரம் உள்ளதை உள்ளபடி சொன்ன நூல். நன்றி ஐயா

முகில்:  நிச்சயமாக... விரைவில் கொண்டு வருவோம். ஆதரவிற்கு நன்றிங்க.

ராதா பச்சையப்பன்: வணக்கம் சகோதரி கலைவாணி அவர்களே... கொஞ்ச நாட்களாக புலனத்தில் பயணிப்பது குறைவாகவே உள்ளது. நலம்தானே?🙏🌺.

கலைவாணி ஜான்சன்:  மகிழ்வுடன் இனிய வணக்கம் சகோதரி... கொஞ்சம் உடல் நலக் குறைவு சகோதரி... ஆகவே தான், பயணிக்க இயலவில்லை... ஆனால் பதிவுகளை பார்த்தும் படித்தும் விடுகிறேன். எழுத கொஞ்சம் தடையாக இருந்ததால் எழுத இயலவில்லை... இப்போது நலம் சகோதரி.... உங்கள் அன்பில் அகம் மகிழ்கிறேன் ... மகிழ்ச்சி, நன்றி.. 🙏🙏

முகில்:  உடல்நலம் முக்கியம் கலைவாணி...

கலைவாணி ஜான்சன்:  வணக்கம் ஐயா....மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா....உடல் நலம் கவனித்துக் கொள்கிறேன் ஐயா... மிக்க நன்றி  🙏

முகில்: உடல் நலமாக இருக்க வேண்டும். பத்திரம்மா.

கலைவாணி ஜான்சன்: எத்தனை குரல் கேட்டும் செவிடர்கள் போல் உலா வரும், வெட்கம் மறந்த மனிதர்கள் அரசியல்வாதிகள் இதைக் கேட்டு அவர்களை மாற்றிக் கொள்ள போகிறார்களா? சுயநலவாதிகள் சகோதரரே... இவர் தெளிவாக கேட்டு உள்ளார்... ஆவது ஒன்றும் இல்லையே.. வேதனை..😔

செல்லா செல்லம்: ஐயா உங்கள் சரித்திர கட்டுரைகள் மிகவும் சிறப்பு

தனசேகரன் தேவநாதன்: பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏன் அடுத்த தேர்தல் வரை நாடாளும் மன்றம் கூடவே கட்டாயமில்லை என்று கூட கூறுவார்கள். ஜிங் ஜக் கூட்டம்.

கலைவாணி ஜான்சன்:
வணக்கம் ஐயா... காலையில் இப்பதிவை படித்து விட்டேன். பின்னூட்டம் எழுத இயலவில்லை... எழுத கடமைப்பட்டுள்ளேன்...

இப்போது எழுதுகிறேன்... முழு பதிவையும் படித்து சில விசயங்கள் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி... கடாரம் ஆண்ட இராஜேந்திர சோழன், பல நாடுகளிலும் பல இடங்களை கைப்பற்றி ஆட்சி கண்டுள்ள விசயம் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.

விரட்டி விரட்டி ஆட்சி கண்ட தமிழன் இன்று பிற இனத்தவர்களால் விரட்டப் படுகிறானே என்ற வேதனையும், கோபமும் தான் அதிகமாகிறது. விட்டு விட்டோமே என்ற ஆதங்கம் ஒரு புறம்....

அன்றைய தமிழனின் மலர்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கை  பிறக்கிறது தங்களின் வரலாற்றுப் பதிவில் ஐயா. மெய்க்கீர்த்திகள் சொல்லின் அர்த்தம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா. தெளிவான நீண்ட பதிவுக்கு... நன்றி. 🙏🙏

பெருமாள் கோலாலம்பூர்: உண்மை தான்,19ம் நூற்றாண்டு தமிழன் வாங்கி வந்த வரம் அப்படி. அன்று ஆண்ட பரம்பரை. இன்று அண்டும் பரம்பரை.

முகில்:  நன்றிம்மா கலைவாணி. தென்கிழக்காசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழனின் படையெடுப்பு குறித்து இருவிதமான கருத்துகள் உள்ளன. ஒரு சாரார் இராஜேந்திர சோழன் வரவில்லை. அவருடைய தளபதிகள் தான் படை எடுத்தார்கள் என்கிறார்கள். இன்னும் ஒரு சாரார் இராஜேந்திர சோழன்தான் நேரடியாக களம் இறங்கினார் என்கிறார்கள்.

செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் படை எடுத்தார் என்று குறிக்கப்பட்டு உள்ளன. உறுதியாகத் தெரியவில்லை.

கலைவாணி ஜான்சன்: மிக்க மகிழ்ச்சி ஐயா. கருத்துகள் எவ்வாறு இருப்பினும், அவரது சரித்திரம் வரலாற்றில் பதிந்து விட்டது ஐயா. அதுவே தமிழர்களுக்கு சிறப்பான விசயம். அதை விட சிறப்பு தங்களின் வரலாற்று பதிவுகள் ஐயா. நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. 🙏🙏

முகில்:  தென்கிழக்காசியா மீது இராஜேந்திர சோழன் படையெடுத்த தகவல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. தவிர இடத்தின் பெயர்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

அண்மையில்தான் இராஜேந்திர சோழன் செப்பேடுகளின் விவரங்கள் கிடைத்தன. அதற்கு முன்னர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயெ எழுதிவிட்டுச் சென்று இருக்கிறார்கள்.  தமிழ்படுத்தும் போது தடுமாற்ரம். ஓர் எழுத்து பிழையானாலும் வரலாறே பிழையாகிப் போகும்.

தென்கிழக்காசியா மீது இராஜேந்திர சோழன் படையெடுத்த வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் எவரும் ஆழமாக எழுதி வைக்கவில்லை. பட்டினத்துப்பாலையை மட்டுமே மேற்கோள் காட்டுகின்றனர். செப்பேடுகளில் உள்ளவற்றை பட்டியல் போட்டுக் காட்டவில்லை. இருப்பினும் இயன்ற வரையில் அசல்தன்மை கெட்டுப் போகாமல் தமிழ்ப்படுத்தி கட்டுரை எழுதினேன். நன்றிம்மா.

பெருமாள் கோலாலம்பூர்:  தலைவரே தென்கிழக்காசிய படை யெடுப்பும் கங்கை கொண்டான் படையெடுப்பையும் ஒப்பீடு செய்யும் போது புதிய தகவல் கிடைக்கலாம். ராஜ ராஜன் அங்கும் ராஜேந்திர சோழன் இங்கும் வந்திருப்பார்களோ.

முகில்: இராஜேந்திர சோழனின் ஈழத்தின் மீதான படையெடுப்பு கி.பி. 1018-இல் நடந்துள்ளது. அடுத்து 1019 ஆண்டில் வட இந்தியாவின் வெங்கி, கலிங்கா, வங்காளம் ஆகிய மாநிலங்களைக் கடந்து கங்கை நதியைச் சென்று அடைந்தார்; பாலா நாட்டு மன்னர் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்தார் (Pala king Mahipala I).

1019-ஆம் ஆண்டில் கலிங்கத்து சோம வம்சத்தின் மன்னர் இந்திரனைத் தோற்கடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

சாளுக்கிய படையெடுப்பு கி.பி. 1021-இல் நடந்துள்ளது. திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காணப்படுகின்றன. கி.பி. 1024-ஆம் ஆண்டு வரை கங்கை கொண்ட சோழபுரம் படையெடுப்புகள் நடந்து உள்ளன.

அடுத்து இராஜேந்திர சோழனின் படைகள் 1025-ஆம் ஆண்டில் கடாரத்தின் மீது படை எடுத்து இருக்கின்றன. ஆக வருடங்களை வைத்துப் பார்க்கும் போது இராஜேந்திர சோழன், அவரே அவரின் படைகளுக்குத் தலைமை தாங்கிக் கடாரத்தின் மீது படை எடுத்து இருக்கலாம் என்பது உறுதியாகிறது.

(சான்று: சாஸ்திரி, K. A. நீலகண்டர் (2000) [1935]. சோழர்கள். Madras: University of Madras. பக்கம்: 208)

பெருமாள் கோலாலம்பூர்: அருமை தலைவரே. தெளிவான விளக்கம் நன்றி.

வெங்கடேசன்: அருமை. சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார் ஐயா? சோழர்களின. பரம்பரை இன்றும் உள்ளதா? மிக்க நன்றி ஐயா🙏

தேவிசர கடாரம்: இராஜேந்திர சோழனின் வரலாற்றை இன்னும் ஆழமாக அறிந்து கொண்டேன். 🙏🏻👌👍🏻




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக