02 செப்டம்பர் 2021

புற்றுநோயை எதிர்த்துப் போராடிய மனிஷா கொய்ராலா

தமிழ் மலர் - 02.09.2021

போராடினேன். போராடினேன். போராடிக் கொண்டே இருந்தேன். போராட்டமே தோற்றுப் போகும் அளவிற்குப் போராடினேன். அந்தப் போராட்டத்தின் உச்சத்தில் தான் வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையில் எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே. இப்படிப்பட்ட எதார்த்தமான உண்மைகளைச் சொல்பவர் பிரபல திரைப்பட நாயகி மனிஷா கொய்ராலா.


மலாய் மொழியில் ‘மனிஷ்’ எனும் ஒரு சொல். இனிப்பு என்று பொருள். அந்த இனிப்பிற்கு இனிக்கும் சேர்க்கும் இனிய பெண் தான் மனிஷா கொய்ராலா.

புகழ், பெருமை, விளம்பரம் என்று எல்லாமே உச்சத்தில் இருக்கும் போது இவரைப் புற்று நோய் தாக்கியது. கர்ப்பப் பையில் புற்று நோய்.

இப்படியே இறந்து விடுவோமோ. இல்லை பிழைத்துக் கொள்வோமா? நாளைய தினம் கண் விழித்துப் பார்ப்போமா? தெரியவில்லை. எதிர்காலத்தின் மீது பயம். வாழும் ஒவ்வொரு நாளின் மீதும் பயம்.

பயம் தெளிந்ததும் யோசித்தார். நோயைக் கண்டு விலகி ஓடாமல் நேரடியாக எதிர்க்கத் தயாரானார். முட்டி மோதுவோம். என்னதான் வரப் போகிறது. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என்கிற மனநிலைக்கு தன்னை மாற்றி அமைத்துக் கொண்டார்.


உடனடியாக அமெரிக்காவுக்குச் சென்றார். ஓர் ஆண்டு புற்றுநோய் மையத்தில் சிகிச்சை. 11 மணி நேர அறுவை சிகிச்சை. அடுத்த ஆறு மாதங்களுக்கு கதிர்ச் சிகிச்சை.

பணம் செலவானது ஒரு புறம். ஆனால் வலிகள் அதிகம். மனத்தளவில் நம்பிக்கை இல்லை. உடல் சக்தி முழுவதையும் இழந்து விட்டது போல உணர்வுகள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புற்றுநோயை தன் உடலில் இருந்து விரட்டி அடித்து இருக்கிறார்.

மீண்டு வந்து புதிய உலகத்தில் கால் வைக்கும் போது மருத்துவர்கள் மேலும் ஓர் அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்கள். ‘வெரி சாரி. உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. கர்ப்பப் பையை எடுத்து விட்டோம்’ என்றார்கள்.


ஏற்கனவே நோயின் தாக்கத்தால் தலையை மொட்டை அடித்து இருந்தார்கள். இப்போது அவளுடைய வாழ்க்கை வாரிசுக் கனவையும் மொட்டை அடித்து விட்டார்கள். மன்னிக்கவும். அதற்குக் காரணம் மருத்துவர்கள் அல்ல. நோயின் தாக்கம். நோயின் கொடூரம்.

இருப்பினும் மனிஷா கொய்ராலா மனம் தளரவில்லை. வந்தது வரட்டும். போராடிப் பார்ப்போம் என்று இன்று வரையிலும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார். அந்தப் போராட்டத்தில் சிரித்து மகிழ்ந்து சின்னப் பிள்ளையாய் வலம் வருகிறார். இப்போது இவருக்கு வயது 51.

அப்போதும் சரி; இப்போதும் சரி; திரைப்படத் துறையில் மின்னுபவர்களில் பெரும்பாலோரின் அடுத்த இலக்கு அரசியலாகத் தான் இருக்கும். ஜொலிக்கும் காலத்திலேயே அரசியல் பேசத் தொடங்கி விடுகிறார்கள். வெற்றி பெறுவது என்பது இரண்டாம் பட்சம். மோதிப் பார்ப்போமே என்று மோதிப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்திய அளவில் மிகப் பெரிய ’பேஷன்’. எம்.ஜி.ஆர். தொடங்கி பாக்கியராஜ், விஜயகாந்த், கமலஹாசன், சரத்குமார், கார்த்திக் வரையில் அந்தப் பாவனையைப் பார்க்கலாம். சிவாஜி, நம்பியார், சிவகுமார், முத்துராமன் போன்றவர்கள் விதிவிலக்கு.

ஆனால், மனிஷா கொய்ராலா அப்படி அல்ல. செல்வாக்கான அரசியல் குடும்பப் பின்னணியில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர். தன்னுடைய அழகாலும்; தன்னுடைய திறமையாலும்; தன்னுடைய முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். ரசிகர்களின் மனங்களில் சாவதானமாய்ச் சம்மணம் போட்டவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர், 2012-ஆம் ஆண்டில் அவருடைய கணவரும் விலகிச் சென்றார். அதாவது மனிஷா கொய்ராலாவிற்கு கர்ப்பப் பையில் புற்று நோய் இருப்பது தெரிய வந்ததும் கணவர் விலகிச் சென்றார் என்று சொல்லப் படுகிறது. வேறு காரணங்களாகவும் இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் அவருடைய சொந்த பந்தங்கள் பக்கத்திலேயே இருந்தனர். அவருடைய காசு பணத்திற்காகச் சிலர் பாசமழை பொழிந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அவர்களையும் அடையாளம் தெரிந்து கொண்டு, இப்போது ஓரடி தள்ளி நின்றே பழகி வருகிறார். தன்னுடைய குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுடன் பழகுவதைக் குறைத்துக் கொண்டார்.

பொதுவாகவே திரைப்பட நடிகைகளைப் பற்றி நான் கட்டுரை எழுதுவது இல்லை. ஆனால் மனிஷா கொய்ராலா என்பவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டிப் போய் நிற்கிறார். ஒரு போராட்டவாதியாக என் கண்களில் படுகிறார்.

அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டமாகத் தெரிகிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ஒரு போராட்டப் பெண்ணாக இவரைப் பார்க்கின்றேன்.

அது மட்டும் அல்ல. நோயில் இருந்து மீண்டு வந்ததும் புற்றுநோய் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். பெண்கள் பலருக்கு நிதி உதவிகள் செய்து உள்ளார்.


ஏழைகளுக்காக மூன்று அனாதை ஆசிரமங்களைக் கட்டி, பராமரித்து வருகிறார். தவிர நேபாளத்தில் ஏழை மாணவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தையும் கட்டி இருக்கிறார். ஒரு கிராமத்தில் பத்து மரப் பாலங்களையும் கட்டி கொடுத்து இருக்கிறார்.

ஆக ஒரு நடிகை என்பதையும் தாண்டி ஒரு சமூகச் சேவகியாகப் பயணிப்பதால் இவர் நம் நெஞ்சங்களில் சம்மணம் போட்டு விடுகிறார்.

யார் ஒருவர் மற்றவர்களுக்காகத் தன்னலம் கருதாமல் உதவிகள் செய்கிறார்களோ; அவர்களை நாம் அடையாளப் படுத்த வேண்டும். வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மனிஷா கொய்ராலா. சின்ன வயதிலேயே பெரிய நோய். மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார். அவரே சொல்கிறார்: மிகுந்த வேதனை. மிகுந்த வலி. மிகுந்த பயத்துடன் இருந்தேன். மீண்டு வந்தேன்.

நான் சொல்வது இதுதான்: வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள். வாழ்க்கையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை என்பது இறைவன் தந்த பரிசு.

மனிஷா கொய்ராலா (Manisha Koirala) 16 ஆகஸ்ட் 1970-இல் பிறந்தவர். 51 வயது. பரதநாட்டியம், மணிப்பூரி நடனங்கள் கற்று அறிந்தவர். நேபாளத்தைச் சேர்ந்தவர்.


இவரின் தாத்தா, பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா. நேபாளத்தின் முன்னாள் பிரதமர். தந்தையார் பிரகாஷ் கொய்ராலா. நேபாளத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். இவரின் தம்பி சித்தார்த். ஒரு நடிகர்.

1989-ஆம் ஆண்டு, மனிஷா கொய்ராலா, நேபாள சினிமாத் துறையில் அறிமுகமானார். 1991-ஆம் ஆண்டில், சாடுகர் எனும் இந்தி படத்தின் மூலம், பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார்.

1995-ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்க்கிய `பாம்பே' படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல். அதன் பின்னர் தமிழ், இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்தார். புகழின் உச்சிக்குச் சென்றார்.

கமல்ஹாசனுடன் `இந்தியன்', ரஜினிகாந்த் ஜோடியாக `பாபா', அர்ஜூனுடன் `முதல்வன்' எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரை உலகில் ஒரு கலக்கு கலக்கினார்.

2010-ஆம் ஆண்டில் தொழிலதிபர் சாம்ராட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர். 2012-ஆம் ஆண்டில் விவகாரத்து. திருமணத்தின் மூலம் அன்பை எதிர்பார்த்தார். பெரும் ஏமாற்றம்.

பணம் இருக்கும் இடத்தில் அன்பை எதிர்பார்க்க முடியாது என்று சொல்வார்கள். உண்மையாக இருக்கலாம். எந்தக் கட்டத்திலும் தன் சுயமரியாதையை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். இன்றும் இருக்கிறார்.


நடிகையாக உயர்ந்து வரும் போது தான் கர்ப்பப் பையில் புற்றுநோய். இறக்கும் கட்டம். புற்றுநோயால் அவதிப்பட்டு பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தவர்.

புற்றுநோய் போராட்டம் குறித்து அவர் சொல்கிறார். ’புற்று நோய் தாக்குவதற்கு முன்னால், என் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை மதிப்பு மிகுந்ததாக இருந்தது.

புற்றுநோய் வந்த போது அதை எதிர்த்துப் போராடினேன். போராடினேன். போராடிக் கொண்டே இருந்தேன். என் நோய் மற்றவர்களுக்கு ஒட்டிக் கொள்ளும் என்று சொந்த பந்தங்களில் பலர் விலகிச் சென்றார்கள்.

மற்ற பெண்களைப் போல குழந்தை பெற முடியாது. ஆகவே, 2017-ஆம் ஆண்டில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். புற்று நோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஓய்வு நேரத்தில் நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்பு, படிப்பது, எழுதுவது, படங்கள் பார்ப்பது, பயணம் செய்வது தவிர குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறார்.


புற்றுநோய் தாக்குவதற்கு முன் பல படங்களில் புகைப்பிடிப்பது போல நடித்தவருக்கு, நோயின் கொடுமையில் சிக்கியதும் தான், புகையினால் ஏற்படும் தீங்கு பற்றி உணர்ந்ததாகச் சொல்கிறார்.

இருப்பினும் மற்ற மற்ற நோய்களைப் போல புற்று நோயையும் குணமாக்க முடியும் என்பதை மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களின் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

’என்னை யாராவது இவர் புற்று நோயில் இருந்து மீண்டு உயிர் வாழ்பவர்’ என்று முத்திரை குத்தினால், அதைப் பற்றி நான் துளியும் கவலைப் படமாட்டேன். ஒரு ரோஜா தன் நிறத்தை முற்றிலுமாய் இழக்கப் போகிறது என்பதை உணர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் நான் என்ன செய்தேன்? ஒன்றுமே இல்லை. இப்போதுதான் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். குறைகள் என்பது உடம்பில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்றும் மனிஷா கொய்ராலா சொல்கிறார்.


’ஹீல்டு’ எனும் புத்தகம் எழுதி உள்ளார். புற்று நோயில் இருந்து மீண்டு வந்து பத்து வருடங்கள் முடிந்து விட்டன. மனிஷா கொய்ராலா சந்தித்த பயம், ஏமாற்றம், நிச்சயமற்றத் தன்மை; அதில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட முறை என அந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளார். படித்துப் பாருங்கள்.

1999-ஆம் ஆண்டில் நேபாளம் நாட்டின் சார்பில், ஐ.நா. சபையின் நல்லெண்ணத் தூதராக மனிஷா கொய்ராலா நியமிக்கப் பட்டார். நேபாள நாட்டில் இருந்து இளம் பெண்களை அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களுக்கு எதிராகப் போராடியவர். பெண்கள் நலப் பொது சேவைகளையும் செய்து வருகிறார்.

பெண்கள் எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்கப் போராட வேண்டும். உயிரே போய்விடலாம் எனும் நிலை வந்தாலும், அஞ்சாமல் எதிர்கொண்டு முன்னேற வேண்டும். ஒரு சிறிய தயக்கம் போதும். நம் நம்பிக்கையை உடைத்துவிடும் என்று மனிஷா சொல்கிறார்.

மனிஷா கொய்ராலா, சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஓர் உந்து சக்தியாக அமைகின்றார். தன்னம்பிக்கைத் துளிராய்த் விளங்கும் இவர் ஆண்கள் போற்றும் பெண்ணாய் வாழ்கின்றார். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.09.2021

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக