02 அக்டோபர் 2021

பாரிட் புந்தார் டெனிசன் கரும்புத் தோட்டம் - 1876

மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே கரும்புத் தோட்டங்கள்; காபித் தோட்டங்கள்; மிளகுத் தோட்டங்கள்; மரவள்ளித் தோட்டங்கள் தோன்றி விட்டன. அத்தனையும் அடுக்குமல்லி போல அழகு அழகான பசும் பச்சைத் தோட்டங்கள்.

அந்த வகையில் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட காபிக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியர்கள் ஆயிரக் கணக்கில் மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டார்கள்.

தவிர 1840-ஆம் ஆண்டுகளிலேயே மிளகு, காபித் தோட்டங்களில் ஆயிரக் கணக்கான தென்னிந்தியர்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். நினைவில் கொள்வோம். தென்னிந்தியர்கள் என்றால் தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள்.

பேராக், பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மலாயாவுக்கு வந்த தென்னிந்தியர்கள் விவரங்கள்:

# 1840 - 1849-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 1800 பேர்

# 1850 - 1854-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 2000 பேர்;

# 1855 - 1858-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 2500 பேர்;

# 1859 -ஆம் ஆண்டில் 3800 பேர்;

# 1860 - 1864-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 4000 பேர்;

# 1865 -ஆம் ஆண்டில் 6000 பேர்;

# 1867 -ஆம் ஆண்டில் 6294 பேர்;

# 1868 -ஆம் ஆண்டில் 6949 பேர்;

# 1869 -ஆம் ஆண்டில் 9013 பேர்;

# 1870 -ஆம் ஆண்டில் 5000 பேர்;

டெனிசன் கரும்புத் தோட்டம் 1876-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. ஆனால் சில உள்ளூர் ஆவணங்களில் 1890 என்றும் 1910 என்றும் பகிர்ந்து உள்ளார்கள்.  

1870-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் (Parit Buntar) மாவட்டத்தில் டெனிசன் தோட்டம் (Denison Estate) இருந்தது. இப்போது அந்தத் தோட்டத்தில் கொஞ்சம் நிலத்தைப் பிடுங்கி எடுத்து சொகுசு மாடி வீடுகளைக் கட்டி இருக்கிறார்கள்.

டெனிசன் எஸ்டேட் கம்பெனி (Denison Estate Company Ltd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. 750 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப் பட்டது. அதன் பின்னர் 310 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் பயிரிடப் பட்டது. தவிர 175 ஏக்கர் தேங்காய் சாகுபடியும் செய்யப்பட்டது.

நிறையவே கால்வாய்களை வெட்டி இந்தத் தோட்டத்தை வடிகட்டி பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். வளப்பம் நிறைந்த மண். ரப்பர், தேங்காய் இரண்டுக்கும் மிகப் பொருத்தமான மண்.

டெனிசன் தோட்டத்திற்கு 1910-ஆம் ஆண்டில் தாமஸ் பாய்ட் (Thomas Boyd) என்பவர் வருகை தரும் முகவராக இருந்தார். இவரின் பார்வையில் கூலா தோட்டமும் (Gula estate) இருந்தது. இந்தத் தோட்டங்களைப் பினாங்கைச் சேர்ந்த மெசர்ஸ் கென்னடி (Messrs. Kennedy e Co., Pinang) எனும் கம்பெனியார் நிர்வாகம் செய்து வந்தனர்.

மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். நேற்று வந்தவர்கள் முந்தாநாள் வந்தவர்களை நோட்டம் பார்க்கிறார்கள். விவஸ்தை இல்லை.

படத்தில் நம்மவர்கள் வேட்டியை இழுத்துக் கோவணமாகக் கட்டிக் கொண்டு வேலை செய்வதைப் பாருங்கள். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தென்னிந்தியர்கள் காடு மேடுகளில் மட்டும் வேலை செய்யவில்லை. கால்வாய், வாய்க்கால், கழனிகளிலும் இறங்கி வேலை செய்து இருக்கிறார்கள். அடுத்து வரும் நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தை எடுத்தவர் விவரங்கள்:

# கார்ல் ஜோசப் கிலெயின்குரோத் - Carl Josef Kleingroth

# ஜெர்மன் நாட்டுக்காரர் (German photographer)

# பிறப்பு இறப்பு (1864 - 1925)

# வாழ்ந்த இடம் மேடான் சுமத்திரா (Medan, Sumatra)

# படம் எடுக்கப்பட்டது 1899

# படம் பாதுகாக்கப்படும் இடம் லெய்டன் பல்கலைக்கழக நூலகம், நெதர்லாந்து (Leiden University Library, KITLV institute, Netherlands)

எவ்வளவுக்கு எவ்வளவு இந்தியர்கள் சார்ந்த ஆவணங்களைச் சிதைக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சிலர் சிதைக்கின்றார்கள். சிதைத்துவிட்டுப் போகட்டும். இருந்தாலும் மீட்டு எடுக்க பலர் இருக்கிறார்கள்.

விடுங்கள். கிணற்றுத் தவளைகள் கத்துவதால் மழை வரப் போவது இல்லை. மழை வருவதால் தான் அவை கூச்சல் போடுகின்றன.

இந்தப் பதிவை எந்த ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2021

சான்றுகள்:

1. Kernial Singh Sandhu. (1969). Indian in Malaysia immigration and settlement 1784-1957. Singapore: Cambridge University Press.

2. New Mandala. asiapacific.anu. edu.au/ newmandala /2013/ 02/20/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia/

3. Aliens in the Land – Indian Migrant Workers in Malaysia - https://apmigration.ilo.org/news/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக