03 பிப்ரவரி 2022

கோலா கிள்ளான் வரலாறு

முன்னர் காலத்தில், குதிரை அல்லது எருமை மாடுகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் தான், கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து ஊடகங்களாக இருந்தன.

கிள்ளான் ஆற்றின் வழியாக டாமன்சாரா வரையில் படகு சவாரிகள் இருந்தன. அங்கு இருந்து கிள்ளான் நகருக்கு மீண்டும் குதிரை, எருமை மாட்டு வண்டிகளில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.


அந்த நேரத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக வில்லியம் புளூம்பீல்ட் டக்ளஸ் (William Bloomfield Douglas) என்பவர் இருந்தார். துணை ஆளுநராக பிராங்க் சுவெட்டன்ஹாம் (Frank Swettenham) இருந்தார்.

கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து முறை; மிக நீண்டது, மிக சலிப்பானது; சீர் செய்யப்பட வேண்டும் என்று பிராங்க் சுவெட்டன்ஹாம் கருத்து தெரிவித்தார்.

அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூர் பகுதிகளில் நிறையவே ஈயம் உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றைப் பத்து துறைமுகத்திற்கு (Pelabuhan Batu) எடுத்துச் செல்ல வேண்டும்.

கிள்ளான் துறைமுகம், அப்போதைய காலக் கட்டத்தில் பத்து துறைமுகம் என்று அழைக்கப்பட்டது. இரயில் பாதை போடும் வேலைகள் தொடங்கின.

1886-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கோலாலம்பூரில் இருந்து புக்கிட் குடு (Bukit Kudu) வரையிலான 19 மைல் இரயில் பாதை திறக்கப்பட்டது.

1890-ஆம் ஆண்டில் அந்த இரயில் பாதை மேலும் 3 மைல் வரை நீட்டிக்கப்பட்டு, கிள்ளான் நகரத்துடன் இணைக்கப் பட்டது.

கிள்ளான் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகிய இரண்டு பகுதிகளும் ஏற்கனவே மலேரியா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாக இருந்தன.

கிள்ளான் துறைமுகம் சதுப்பு நில காட்டுப் பகுதியில் இருந்ததால் மிகையான மலேரியா தொற்றலுக்கு உள்ளாகி இருந்தது.

கிள்ளான் துறைமுகம் திறக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மலேரியாவின் கடும் தாக்கத்தால் துறைமுகமே மூடப்பட்டது.

கிள்ளான் துறைமுகத்தில் மலேரியா தாக்கம் ஏற்படுவற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான், அதாவது 1897-ஆம் ஆண்டில், மலேரியா கொசுக்களால் தான், மலேரியா நோய பரவுகிறது என்பதைப் பிரித்தானிய மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்தார்.

அந்த வகையில் அந்தக் கண்டுபிடிப்பில் இருந்து பயன் அடைந்த முதல் காலனித்துவ நாடு மலாயா. தவிர கிள்ளான் துறைமுகமும் மலேரியா தாக்கத்தில் இருந்து விடுபட்டது.

புதர்க் காடுகள் அழிக்கப் பட்டன. சதுப்பு நிலங்கள் நிரப்பப் பட்டன. கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும்; துறைமுக நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்; பல துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் சதுப்பு நிலக் காடுகளில் தேங்கி நின்ற மேற்பரப்பு நீர் திசை திருப்பப் பட்டது. மலேரியாவின் அச்சுறுத்தல், கிள்ளான் துறைமுகத்தில் இருந்து முற்றாகத் துடைத்து ஒழிக்கப் பட்டது.

அதன் பின்னர் கிள்ளான் துறைமுகத்தில் வணிகம் வேகமாக வளர்ந்தது. 1914-ஆம் ஆண்டில் பல்வேறு துறைமுக வசதிகளுடன் இரண்டு புதிய அணைக்கரைகள் உருவாக்கப் பட்டன.

அதற்கு முன்னர் 1902-இல், கிள்ளான் துறைமுகத்தில் சிலாங்கூர் போலோ விளையாட்டு மன்றம் (Selangor Polo Club) நிறுவப்பட்டது. எனினும் அந்த மன்றம் 1911-இல் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் துறைமுகம் அதிக வளர்ச்சியும்; அதிக விரிவாக்கமும் அடைந்தது. 1940-ஆம் ஆண்டில், அதன் பண்ட பரிமாற்றம் 550,000 டன்னாக உயர்ந்த போது உச்சத்தையும் தொட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது அரச போர் விமானங்களைப் (Royal Air Force) பராமரிக்க, கிள்ளான் துறைமுகத்தில் இருந்த விமானத் திடல்கள் பயன்படுத்தபட்டன. போரின் போது சேதம் அடைந்த துறைமுகத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள் புனரமைப்பு செய்யப்பட்டன.

அப்போதைய மலாயாவின் முக்கியமான இரண்டு ஏற்றுமதி பொருட்களான ரப்பர்; பனை எண்ணைய். இவற்றின் ஏற்றுமதி பெருகியது. அதைக் கையாளும் வகையில் துறைமுகத்தின் தெற்குப் பகுதி விரிவு செய்யப்பட்டது. இறக்குமதியும் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சாத்தியம் அல்ல என்று எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இறக்குமதிப் போக்குவரத்து அமைந்தது.

தற்சமயம் கிள்ளான் துறைமுகம், கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கிள்ளான் துறைமுகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சாண்டியாகோ பிரதிநிதிக்கின்றார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.02.2022

கிள்ளான் துறைமுகம் பற்றி ஒரு கட்டுரை தயாரித்து விக்கிப்பீடியாவில் பதிவு செய்து உள்ளேன். அதன இணைய முகவரி:

https://ta.wikipedia.org/s/axgo



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக