04 பிப்ரவரி 2022

நேதாஜியின் குடும்பத்தினர்

சுபாஷ் சந்திரபோஸ். மனுக்குலம் பார்த்த வரலாற்று மாந்தர்களில் ஓர் அற்புதமான அவதாரம். இந்தியர்களின் உயிர் ஊன்களில் ஈரமான விழுதுகளை விளைத்துச் சென்ற மாபெரும் மனிதர்.

நேதாஜியின் அரசியல் வாழ்க்கை சுனாமிகளும், சூறாவளிகளும், சுழற்சிகளும், கொந்தளிப்புகளும் நிறைந்தவை. ஏறக்குறைய இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கை. அவற்றில் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம்.

நேதாஜியின் பேத்தி அனிதா

விடுதலை உணர்வுகளில் வீரமான வசனங்களை எழுதிச் சென்ற ஒரு சகாப்தம். ஆங்கிலேய அடிமைத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போராட்ட வேள்வியில் இறங்கி, முரசு வாகை மழையில் முழுமையாய் நனைந்தவர்.

_எனக்கு இரத்தம் கொடுங்கள்... இந்தியாவிற்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்_ என்று மாபெரும் புரட்சி செய்த ஒரு விடுதலைக் கலசம்.

நேதாஜி  - அவரின் மனைவி எமிலி

1943 பிப்ரவரி 8-ஆம் தேதி, கடலுக்கு அடியில் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பானுக்குப் பயணமானர். 24000 கி.மீ தூரம். 91 நாட்கள் சாகசப் பயணம்.

ஜெர்மனி கால்சபாட் எனும் இடத்தில்
நேதாஜி; அவரின் மனைவி எமிலி (1935)

மலாயாவில் பயணம் என்றால் பினாங்கு, ஈப்போ, கம்பார், ரவாங், கோலாலம்பூர், சிரம்பான், மலாக்கா, மூவார், பத்து பகாட், ஜொகூர் பாரு போன்ற நகரங்களுக்கு வருகை செய்து உள்ளார். பெரும்பாலும் சிங்கப்பூரில் அவரின் விடுதலைப் பணிகள்.

நேதாஜியின் மகளும் மனைவியும்

அவரின் குடும்பத்தினர் தற்போது ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் வாழ்ந்து வருகின்றனர்.

2022 ஜனவரி 22-ஆம் தேதி, பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, *போஸ் 125* எனும் சிறப்புக் கண்காட்சி நடத்தப் பட்டது.

நேதாஜியின் அரிய படங்கள், அரிய தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அடங்கிய கண்காட்சி. இந்தியத் தூதரக வளாகத்தில் ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் அரிஷ் பர்வதனேனி மற்றும் நேதாஜியின் மகள் பேராசிரியர் டாக்டர் அனிதா போஸ் (Prof. Dr. Anita Bose Pfaff) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேதாஜியின் குடும்பத்தினர் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டனர். அவர்களின் குடும்பப் படம்.


1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் பேராசிரியர் டாக்டர் அனிதா போஸ் (Prof. Dr. Anita Bose-Pfaff; University of Augsburg). வயது 79.
2. நேதாஜியின் பேத்தி மாயா கரினா (Maya Carina)
3. நேதாஜியின் மூத்த கொள்ளுப் பேத்தி
4. நேதாஜியின் பேரன்
5. ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் அரிஷ் பர்வதனேனி

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.02.2022

குறிப்பு:

இந்தியா கல்கத்தாவில் நேதாஜி ஆவணக் காப்பகம் இருக்கிறது (Netaji Research Bureau). நேதாஜியைப் பற்றியும், இந்திய தேசிய இராணுவத்தைப் பற்றியும், பல அரிய தகவல்களை ’டிஜிட்டல்’ முறையில் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

நேதாஜியின் பேரன் பீட்டர் அருண்

முனைவர் பட்டத்துக்காக நேதாஜியைப் பற்றி ஆய்வு செய்வதாகப் பதிந்து கொண்டு, காப்பகத்தின் உள்ளே செல்ல முடிந்தது. நேதாஜியைப் பற்றி அரிதிலும் அரிதான தகவல்கள் கிடைத்தன.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேதாஜி தன் மனைவியையும் மகளையும் ஐரோப்பாவில் விட்டுச் சென்ற போது மகள் அனிதாவுக்கு வயது சில மாதங்கள்தான். அனிதா தன் தாயால் வளர்க்கப் பட்டார். அனிதா, பேராசிரியர் மார்ட்டின் பிபாப் (Professor Martin Pfaff) என்பவரை மணந்தார்.

நேதாஜியின் மகள் அனிதாவிற்கு பீட்டர் அருண் (Peter Arun), தாமஸ் கிருஷ்ணா (Thomas Krishna), மாயா கரினா (Maya Carina) எனும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  அனிதா, ஜெர்மன் நாட்டில் உள்ள ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (University of Augsburg) பேராசிரியராகவும், ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியில் (Social Democratic Party of Germany) அரசியல்வாதியாகவும் இருந்து உள்ளார்.

நேதாஜியின் பேரப் பிள்ளைகள்:

1. பீட்டர் அருண் (Peter Arun);

2. தாமஸ் கிருஷ்ணா (Thomas Krishna);

3. பேத்தி மாயா கரினா (Maya Carina).

நேதாஜி. நம் நினைவுகளில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் ஒரு கனல் கோபுரம். சாகாவரம் பெற்ற சரித்திர நாயகன்.

சான்றுகள்:

1. https://www.republicworld.com/india-news/general-news/netaji-subhas-chandra-bose-honoured-by-indian-embassy-in-germany-exhibition-inaugurated-articleshow.html

2. Bose, Sarmila (2005), "Love in the Time of War: Subhas Chandra Bose's Journeys to Nazi Germany (1941)

3. Gordon, Leonard A. (1990), Brothers against the Raj: a biography of Indian nationalists Sarat and Subhas Chandra Bose, Columbia University Press

4. Hayes, Romain (2011), Subhas Chandra Bose in Nazi Germany: Politics, Intelligence and Propaganda 1941-1943, Oxford University Press

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக