05 பிப்ரவரி 2022

கோலா சிலாங்கூர் வரலாறு

கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் ஆட்சியின் கீழ், கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.


18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாகக இருந்தது. பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகம், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

மெலாவத்தி கோட்டை

சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் முகத்துவாரத்தில், கோலா சிலாங்கூர் நகரின் மேற்குப் பகுதியில், ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் சிலாங்கூர் குன்று. அங்கு ஒரு பெரிய கோட்டை உள்ளது. அதை மெலாவத்தி கோட்டை (Kota Malawati) என்று அழைக்கிறார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் மெலாவத்தி கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகமட்டின் (Sultan Mahmud) மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது.

ராஜா லூமு

17-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756-ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா லூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா (Sultan Salehudin Shah) எனப் பெயர் மாற்றம் கண்டது.

இவர் தான் மெலாவத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.

சுல்தான் இப்ராகிம் ஷா


சுல்தான் சலிஹுடின் ஷாவிற்குப் பின்னர் அவருடைய மகன் சுல்தான் இப்ராகிம் ஷா பதவிக்கு வந்தார். இவர் மேலும் அந்தக் கோட்டையின் தற்காப்பு அரண்களுக்கு வலு சேர்த்தார்.

மெலாவத்தி குன்றின் அடிப்பாகத்தில் மேலும் கூடுதலாகப் பீரங்கிகளைச் சேர்த்தார். அதில் ஒரு பெரிய பீரங்கியின் பெயர் ஸ்ரீ ரம்பாய் (Seri Rambai).

தஞ்சோங் கிராமாட் கோட்டை

டச்சுக்காரர்கள் எழுதி வைத்தக் குறிப்புகளின்படி மெலாவத்தி கோட்டையில் 68 பீரங்கிகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தச் சமயத்தில் தான் தஞ்சோங் கிராமாட் குன்றில் மேலும் ஒரு கோட்டை கட்டப் பட்டது.

கி.பி. 1784-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானகம் மலாக்காவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. அதற்கு மறு தாக்குதலாக 11 டச்சுக் கப்பல்கள் கடலில் இருந்து கோலா சிலாங்கூரைத் தாக்கின.

ராஜா முகமட் அலி

கோலா சிலாங்கூர் மீதான டச்சுத் தாக்குதலுக்கு டிர்க் வான் கோகன் (Dirk van Hogen) என்பவர் தலைமை வகித்தார். சிலாங்கூர் சுல்தானகத்திற்கு எதிராக இந்தோனேசியாவின் சியாக் (Siak) அரசும் களம் இறங்கியது. ராஜா முகமட் அலி (Raja Muhammad Ali of Siak) என்பவர் தலைமை தாங்கினார். பயங்கரமான போர்.

கி.பி. 1784-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி டச்சுப் படைகள் கோலா சிலாங்கூர் கடற்கரையில் தரை இறங்கின. மெலாவத்தி குன்றை முற்றுகை இட்டன.

கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராஹிம் ஷாவின் படைகள் காட்டுக்குள் தஞ்சம் அடைந்தன. கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கரங்களில் வீழ்ந்தன.

அல்திங்பர்க் கோட்டை

அதன் பின்னர் மெலாவத்தி கோட்டை அல்திங்பர்க் (Altingburg) கோட்டை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. தஞ்சோங் கிராமாட் கோட்டை உத்ரேட் (Utrecht) என்று பெயர் மாற்றம் கண்டது.

மலாக்காவை டச்சுக்காரர்கள் கி.பி 1641-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1825-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்கள். 183 ஆண்டுகள். இடை இடையே டச்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்களின் தொல்லைகள். ரியாவ் தீவுகளில் இருந்து பூகிஸ்காரர்களின் தொந்தரவுகள்.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தின் தென் பகுதியில் ஜொகூர் சுல்தானகம் உச்சத்தில் இருந்தது. கி.பி. 1606-ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகத்துடன் டச்சுக்காரர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினால் ஜொகூர் சுல்தானகம் இந்தோனேசிய வாணிகத்தைத் தன்னகப் படுத்திக் கொண்டது.

டச்சுக்காரர்கள் மீது தாக்குதல்கள்

வெகு நாட்களாகவே கோலா சிலாங்கூர் ஆளுநர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பிணக்குகள். பெரும்பாலானவை வணிகம் தொடர்பானவை.

இந்தோனேசிய - கோலா சிலாங்கூர் வர்த்தகத்தை ஜொகூர் சுல்தானகம் தன்னகப் படுத்திக் கொண்டதும், மலாக்கா டச்சுக்காரர்கள் மீது கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கோப தாபங்கள். அதனால் டச்சுக்காரர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தினார்கள்.

கோலா சிலாங்கூர் கடல் கொள்ளையர்கள்

அந்தச் சமயத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளில் இருந்து வரும் கப்பல்களைக் கடல் கொள்ளையர்கள், மலாக்கா நீரிணையில் சூறையாடி வந்தார்கள். அந்தக் கடல் கொள்ளையர்களுக்குக் கோலா சிலாங்கூர் அடைக்கலம் தருவதாக டச்சுக்காரர்களின் குற்றச்சாட்டு.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா தீபகற்பத்தில் ஈய வணிகம் கொடி கட்டிப் பறந்தது. அந்த வணிகத்திற்கு கோலா சிலாங்கூர் தடையாக இருந்தது. டச்சுக்காரர்கள் ஒட்டு மொத்த வியாபாரத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவர ஆசைப் பட்டார்கள்.

கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷா


கோலா சிலாங்கூர் போரில், கோலா சிலாங்கூரில் இருந்த இரு கோட்டைகளும் டச்சுக்காரர்களின் கைகளில் வீழ்ந்தன. அதன் பின்னர் அவர்கள் கோட்டைகளுக்குப் பலமான சுவர்களை எழுப்பினார்கள்.

பீரங்கிக் குண்டுகள் ஊடுருவிச் செல்ல முடியாத அளவிற்கு வலுவான சுவர்த் தடுப்புகளைப் போட்டார்கள். இருந்தாலும் அந்தத் தற்காப்பு அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

காட்டுக்குள் தஞ்சம் அடைந்த கோலா சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் ஷாவின் படைகள் மறுபடியும் தாக்குதல்கள் நடத்தின. இந்த முறை பகாங் பகுதியில் இருந்து 2000 பேர் மலாய்க்காரர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

கோலா சிலாங்கூர் உத்ரேட் கோட்டை

1785 ஜுன் 28-ஆம் தேதி டச்சுக்காரர்களிடம் இருந்து இரு கோட்டைகளும் மீட்கப் பட்டன. அல்திங்பர்க் (Altingburg) கோட்டையும் உத்ரேட் (Utrecht) கோட்டையும் கோலா சிலாங்கூர் ஆட்சியாளர்களின் கைகளுக்குள் வந்தன்.

அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து டச்சுக்காரர்கள் இன்னொரு முறை தாக்குதல் நடத்தினார்கள். கடலில் இருந்தே பீரங்கிகளால் மெலாவத்தி கோட்டையைத் தாக்கினார்கள்.

கோலா சிலாங்கூர் கற்பாறைச் சிதைவுகள்

ஆனால் மெலாவத்தி கோட்டையைத் தரை மார்க்கமாக வந்து தாக்குதல் செய்ய முடியவில்லை. அந்தக் கோட்டை 1871-ஆம் ஆண்டு வரை மலாய்க்காரர்களின் பிடியில் இருந்தது. அதன் பின்னர் அந்தக் கோட்டைகளை ஆங்கிலேயர்கள் உடைத்துப் போட்டு விட்டனர்.

கோலா சிலாங்கூர் நகரில் வரலாறு படைத்த அல்திங்பர்க் கோட்டையும்; உத்ரேட் கோட்டையும்; இப்போது அங்கே இல்லை. அந்த இடங்களில் கற்பாறைச் சிதைவுகள் மட்டுமே காட்சிப் பொருள்களாகக் காணக் கிடைக்கின்றன.

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவிலும்; மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வலைத் தளத்திலும் பதிவாகி உள்ளது.)

https://ta.wikipedia.org/s/ay96


சான்றுகள்:

1. SEJARAH DAERAH KUALA SELANGOR - http://kualaselangor.selangor.gov.my/kualaselangor.php/pages/view/99?mid=210

2. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, vol. 69, no. 2 (271)

3. Bukit Melawati, or Melawati Hill, is also an important historical site that offers interesting insights into Kuala Selangor’s fascinating history. - https://www.visitselangor.com/bukit-melawati/

4. Kota Kuala Selangor - Located near the mouth of the Selangor River, the fort complex at Kuala Selangor actually consists of two forts – the larger stone fort of Kota Malawati on Bukit Selangor and a smaller earthworks fort on Bukit Tanjong Keramat about a kilometre and a half to the northeast. - http://www.sabrizain.org/malaya/sgor5.htm

5. Kuala Selangor as the Selangor earliest administration centre and also the beginning of the Royal Selangor Institution created by Raja Lumu (Sultan Salehuddin) in 1766. - https://selangor.travel/listing/kuala-selangor-district-historical-museum/

6. Kuala Selangor was conquered by Dutch in 1784 while attempting to expand their base in Malacca (Melaka) for a share in the tin trade of Perak and Selangor. Bukit Melawati is a hill overlooking Kuala Selangor and the Strait of Malacca. The Dutch destroyed the existing fortifications on the hill during their 1784 invasion, and built a European-style castle, naming it Fort Atlingsburg after their commander. By the end of the 17th century, the Bugis conquered it and in 1857, the Selangor government was formed. - https://www.kuala-selangor.com/

7. On 17 May 1606, Raja Bongsu, accompanied by 3,000 men and 50 galleys met Matelieff de Jonge.18 A treaty, known as the Dutch-Johor agreement of 1606, was signed. - https://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_2014-07-14_095636.html



















 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக