04 மே 2022

மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் பாதை - 1903

மலாக்காவில் 1905-ஆம் ஆண்டில் முதன்முதலாக ஓர் இரயில் பாதையை அமைத்தார்கள். அந்தப் பாதையின் பெயர் எம்.ஜி.ஆர். இரயில் பாதை. அந்தப் பாதையில் ஓடிய இரயிலின் பெயரும் எம்.ஜி.ஆர். தான்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். பிறப்பதற்கு முன்னதாகவே அவருடைய பெயரில் இரயில் ஓடி இருக்கிறது. அதுவும் வரலாற்றுப் புகழ் மலாக்காவில் ஓடி இருக்கிறது. ஆச்சரியப்பட வேண்டாம். உண்மை. தொடர்ந்து படியுங்கள்.

மலாயாவின் முதல் இரயில் பாதை தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). 137 ஆண்டுகளுக்கு முன்னால் 1885-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

மலாக்கா இரயில் நிலையம் - 1910.
(நன்றி: சிங்கப்பூர் தேசிய நூல்நிலையம்)


அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து, 1903-ஆம் ஆண்டில், தம்பின், புலாவ் செபாங் நகரத்தில் இருந்து மலாக்காவுக்கு 32 கி.மீ. (21 மைல்கள்) தொலைவிற்கு ஓர் இரயில் பாதை போடப் பட்டது.

1900-ஆம் ஆண்டில், அப்போதைய மலாக்கா அரசாங்கத்திற்கு அந்த இரயில் பாதை அமைப்பதற்கான குத்தகை கிடைத்தது. அதற்கு மலாக்கா அரசாங்க இரயில் பாதை (Malacca Government Railway) என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மலாக்கா அரசாங்க இரயில் பாதையின் சுருக்கம் M.G.R.

அதற்கு மலாக்கா அரசாங்கம், எம்.ஜி.ஆர். இரயில் பாதை என்று முதலில் பெயர் வைத்தது. அந்தப் பாதையில் முதன்முதலில் ஓடிய இரயிலின் பெயரும் எம்.ஜி.ஆர். தான். இரயிலின் செல்லப் பெயர் ”லேடி கிளார்க்” (Lady Clarke).

மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் 2 .  Steam engine used by M.G.R.
The Malacca Government Railway had 4 steam locomotives. 
(நன்றி: மலாயா இரயில்வே)

பின்னர் 1905-ஆம் ஆண்டு அந்த எம்.ஜி.ஆர். இரயில் பாதை, (Federated Malay States Railway - FMSR) எனும் மலாயா கூட்டரசு இரயில் சேவையுடன் இணைக்கப் பட்டது.

பழைய சரக்கு வண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பாதைகளுக்குப் பதிலாக தம்பின் - மலாக்கா இரயில் பாதை அமைக்கப் பட்டது. மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் பாதையில் இருந்த இரயில் நிலையங்கள்:

தம்பின் - 0.0 கி.மீ.
தஞ்சோங் ரிமாவ் -  6.4 கி.மீ.
காடேக் - 8.1 கி.மீ.
அலோர் காஜா  - 12.9 கி.மீ.
மலாக்கா பீண்டா - 14.5 கி.மீ.
பெலிம்பிங் - 19.3 கி.மீ.
பெலிம்பிங் டாலாம் - 20.9 கி.மீ.
டுரியான் துங்கல் - 24.1 கி.மீ.
பத்து பெரண்டாம் - 29.0 கி.மீ.
மலாக்கா - 35.4 கி.மீ.

அனாதையாய் நிற்கும் அலோர் காஜா அறிவிப்புத் தூண்

இந்த இரயில் பாதை கட்டுமானத்தின் தலைமைப் பொறியியலாளர் ஜி. பிரேயர் (G. W. Fryer, Chief Resident-Engineer). கட்டுமானச் செலவு $1,349,505. அப்போதைய 1900-ஆண்டுகளின் மலாயா டாலர் கணக்கு. 1905 டிசம்பர் 4-ஆம் தேதி திறப்புவிழா.

இந்தப் பாதை அமைப்பதற்கு முன்னர் மலாக்காவில் இருந்து பினாங்கிற்கு நீராவிக் கப்பல்கள் மூலமாகச் சென்றார்கள். மூன்று நாட்கள் பிடித்தன.

இந்த இரயில் பாதை அமைத்த பின்னர் முதல் நாள் பிற்பகல் 1 மணிக்கு மலாக்காவில் இரயில் ஏறினால் மறுநாள் காலை 6.20-க்கு பினாங்கைப் பிடித்து விடலாம். 17 மணி நேர இரயில் பயணம்.

1890-ஆம் ஆண்டுகளில் சுங்கை பூலோ அருகில்
இரயில் பாதையைக் கட்டி முடித்த மலாயா தமிழர்கள்.
(நன்றி: மலாயா இரயில்வே)

இப்போது ஒன்றும் சொல்ல வேண்டாம். மலாக்கா பத்து பிரண்டாம் விமான நிலையத்தில் விமானம் ஏறினால் 50 நிமிடங்களில் பினாங்கில் இறங்கி விடலாம்.

அப்போது மலாக்காவிற்கும் பினாங்கிற்கும் 4 இரயில்கள் ஓடி இருக்கின்றன.

1. அன்சலெட் (Hunslet 850; FMSR Class A) - 1904 - 1924 வரையில்

2. அன்சலெட் (Hunslet 851; FMSR Class A) - 1925 - 1930-ஆம் ஆண்டு சயாம் நிலக்கரி சுரங்கத்திற்கு விற்கப்பட்டது.

3. கிட்சன் (Kitson 4289; FMSR Class G) - 1930 - 1931-ஆம் ஆண்டு வரையில்

4. கிட்சன் (Kitson 4290; FMSR Class G) - 1930 - 1934-ஆம் ஆண்டு வரையில்

மலாக்கா இரயில் நிலையம் - 1903
(நன்றி:
FMSR
)

இதற்குப் பின்னர் 8 ஆண்டுகளுக்கு இரயில்கள் ஓடி இருக்கின்றன. அது ஒரு நீண்ட பட்டியல். ஜப்பான்காரர்கள் வந்தார்கள். மலாக்கா எம்.ஜி.ஆர். இரயில் சேவைக்கு ஒரு வழியும் பண்ணி விட்டார்கள்.

அப்போது இருந்த இரயில் வண்டிகள் நீராவி இயந்திரங்கள் மூலமாக இயங்கின. நிலக்கரி அல்லது கட்டைகளைப் போட்டு எரிய வைத்து நீராவியை உண்டாக்கி இரயிலை ஓட வைத்தார்கள். அந்த நீராவி இயந்திரங்களைத் தமிழர்கள் தான் பராமரித்தார்கள்.
F.M.S.R - Tampin - Melaka Railway Line.
(நன்றி: மலாயா இரயில்வே)

இரயிலுக்கான நீராவிப் பெட்டிகள் இரயிலின் முன்பகுதியில் இருக்கும். அதில் வேலை செய்த தமிழர்கள் சிலர் கட்டைகளால் நசுக்கப்பட்டு இறந்து இருக்கிறார்கள். அப்போதே தமிழர்கள் இந்த நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து விட்டார்கள்.

மலாக்கா பீண்டா பகுதியில் பழைய இரயில் பாலம்.
(நன்றி: மலாக்கா கினி)


மலாயாவின் முதல் இரயில் பாதையை உருவாக்கிக் கொடுத்தவர்கள் மலாயாவின் மூத்த தமிழர்கள். உதிர்ந்து போன மூத்த முன்னோர்கள்.

பழைய அலோர் காஜா இரயில் நிலையத்தின் இன்றைய நிலைமை.

1942-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் வந்தது. ஜப்பானியர்கள் மலாயாவுக்கு வந்தார்கள். மலாக்கா இரயில் பாதைகளில் இருந்த இரயில் தண்டவாளங்களை எல்லாம் பெயர்த்து எடுத்தார்கள். அப்படியே மூட்டைக் கட்டி சயாம் மரண இரயில் பாதை கட்டுவதற்கு ’பார்சல்’ பண்ணி விட்டார்கள்.

ஒரு சில தண்டவாளங்களே நினைவுச் சின்னங்களாக இன்னும் இருக்கின்றன. சிதைந்து போன தண்டவாளங்கள் அலோர் காஜா; பெலிம்பிங் டாலாம்; டுரியான் துங்கல்; பத்து பெராண்டாம்; பாச்சாங் போன்ற இடங்களில் இன்றும் உள்ளன. 
 
டுரியான் துங்கல் பகுதிகளில் பழைய இரயில் தண்டவாளங்கள் இன்னும் உள்ளன.
மலாக்கா இரயில் நிலையத்தில் உள்நாட்டுச் சேவையாளர்கள் - 1920.
(நன்றி: மலாயா இரயில்வே)

மலாக்கா இரயில் நிலையம் இப்போது இல்லை. காலத்தின் கோலத்தில் கரைந்து விட்டது. அந்த நிலையம் பழைய போனா விஸ்டா (Bona Vista Road) சாலையில் இருந்தது. இந்தச் சாலை இப்போது ஜாலான் அங் துவா (Jalan Hang Tuah) என்று அழைக்கப் படுகிறது.

மீண்டும் புதிதாக ஓர் இரயில் பாதையை அமைப்பதற்கு மலேசிய இரயில் சேவை நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் மிகுதியாகச் செலவினங்கள் ஏற்படலாம் என்பதால் அந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

108 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலாவ் செபாங் இரயில் நிலையமும் கடந்த 06.02.2013-ஆம் தேதி உடைக்கப் பட்டது. மலாக்காவிற்கு மறுபடியும் இரயில் சேவை கிடைக்கும் என்பது நிறைவேறாத ஒரு கனவு.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.05.2022


சான்றுகள்:

1. http://www.malayarailway.com/2009/01/fmsr-tampin-melaka-line.html

2. https://great-railway-journeys-malaysia.weebly.com/malacca.html

3. https://www.thestar.com.my/metro/metro-news/2020/09/01/old-railway-line-in-melaka-to-become-new-attraction

4. https://babanyonyamuseum.com/inter-war-years/



2 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள். உங்கள் வலைப்பூ சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு