29 ஆகஸ்ட் 2023

ஜீன் சின்னப்பா - 1

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஓர் ஆண்மகனைத் தொலைத்துவிடும் என்பார்கள். அதே போலத்தான் ஒரு பெண்ணுக்கும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் அவளைக் கெடுத்துக் கலைத்துவிடும். இவை உலகம் பார்த்த உண்மைகள். 

இருந்தாலும் மலேசியர்கள் பார்த்த ஒரு பயங்கரமான சம்பவம் வருகிறது. சாமான்ய மனிதர்களை உலுக்கிப் போட்ட ஓர் உண்மையான நிகழ்ச்சி. 



அந்த நிகழ்ச்சிதான், இன்றைய சின்னக் கிளி ஜீன் சின்னப்பா கொலை வழக்கு. படியுங்கள். பணம் புகழ் வந்து சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். 

அதையும் தாண்டிய நிலையில், அதை விதி என்று சொல்வதா இல்லை இல்லை கர்மவினை என்று சொல்வதா. அதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மலேசியா எப்போதும் அதன் அழகிய கடற்கரைகள், அழகிய தீவுகள், அழகிய பாரம்பரியத் தளங்கள், அற்புதமான உணவுகள் மற்றும் ஒற்றுமை உணர்வுகளுக்காக நன்கு அறியப்பட்டது. ஆனாலும் மற்ற நாடுகளையும் மற்ற நகரங்களையும் போலவே, மலேசியாவும் அதன் சொந்த இருண்ட கதைகளைக் கொண்டது. சரி.


ஜீன் சின்னப்பா கொலை வழக்கில் முக்கியமான கதாபாத்திரமாகத் திகழ்ந்தவர் கார்த்திகேசு. ஆசிரியர்ப் பயிர்சி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கொலை செய்யப்பட்ட ஜீன் சின்னப்பாவின் கொழுந்தனார். 

கார்த்திகேசு இரு நாள்களுக்கு (27.08.2023) முன்னால் கிள்ளான் தெலுக் பூலோய் புறநகர்ப் பகுதியில் காலமானார். அவருக்கு வயது 81. அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை... 

1970-களில் ஜீன் பிரேரா சின்னப்பா சிரம்பானில் ஓர் ஆசிரியை. ஆங்கிலமொழி கற்றுக் கொடுத்தார். பின்னர், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் பெண்கள் பள்ளி, பெட்டாலிங் ஜெயா சுல்தான் அப்துல் அசீஸ் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 


இவருடைய முழுப் பெயர் பிலோமினா ஜீன் பிரேரா. தகப்பனாரின் பெயர் வி. பிரேரா. 1972-இல் திருமணம் ஆனதும், சின்னப்பா எனும் தன்னுடைய கணவரின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். 

ஜீன் சின்னப்பா கொலை செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் அவருடைய கணவர் சின்னப்பாவும், ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

ஜீன் சின்னப்பாவும் அவருடைய கணவரும் பயணம் செய்த கார் ஒரு மரத்தில் மோதியது. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் இறந்து போனார். ஜீன் சின்னப்பா, காரில் இருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார். 


இருந்தாலும் சொற்ப காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். ஜீன் சின்னப்பா விசயத்தில் விதி கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டது. 1978 வருடப் பிறப்பு தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் தனேந்திரன். வயது ஏழு. இரண்டாவது மகள் ரோகினி. வயது ஐந்து. மூன்றாவது மீலினி. வயது மூன்று. அவர்கள் சவப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, அங்கே என்னதான் நடக்கிறது என்று விவரம் தெரியாத வெள்ளந்தி பருவம். 

அம்மாவின் உயிரற்ற உடலைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்து நின்றார்கள். ஆனால், இப்போது அந்தப் பெண் பிள்ளைகளில் ஒருவர் மலேசியாவில் ஒரு பிரபலமான வழக்குரைஞர். யார் எவர் என்று கேட்க வேண்டாம். நானும் சொல்லப் போவது இல்லை.

1971-ஆம் ஆண்டு. ஜீன் சின்னப்பா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். மாநிலத்தின் நம்பர் ஒன் அழகியானார். பின்னர் சிலாங்கூர் மாநில அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். அதிலும் நம்பர் ஒன் அழகி; சிலாங்கூர் அழகியாக வாகை சூடினார். 


அதற்கு அப்புறம் மலேசியாவின் அழகிப் பட்டம். ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில், முதலாவது இடம் தவறிப் போனது. இரண்டாவது இடம் கிடைத்தது.

இருந்தாலும் அவர் எப்போதுமே ஊரார் மெச்சிய பைங்கிளியாகவே வாழ்ந்தார். புகழ் வானில் கொடி கட்டிப் பறந்தார். பார்த்தால் பற்றிக் கொள்ளும் காந்தர்வப் பார்வை. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சாமுத்திரிகா இலட்சணம். 

அந்தக் காலத்தில் அவரைப் பார்த்துக் கிரக்கம் அடையாத மண்ணின் மைந்தர்கள் இருந்து இருப்பார்களா என்று தெரியவில்லை. அவருடைய திருமணத்திற்கு முன்னால் நடந்ததைத்தான் சொல்கிறேன்.

என்ன செய்வது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒரு நல்ல நாள் பார்த்து, அழகு, ஆடம்பரம், புகழ் என்கிற இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம் போட்டன. ஜீன் சின்னப்பாவின் வாழ்க்கையில் கூட்டாஞ் சோறு ஆக்கிப் போட்டு நன்றாகவே படையல் செய்து விட்டன. 

44 வருடங்களுக்கு முன்னால், ஒரு நாள் நடுநிசி நேரம். அவர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். அந்த நிகழ்ச்சி மலேசியாவையே உலுக்கிப் போட்டது. அது மறக்க முடியாத ஒரு மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சி. பார்க்கிறவர்கள் எல்லாரும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிதான் பேசிக் கொள்வார்கள்.


கணினி கைப்பேசிகள், பேஸ்புக், டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்; எதுவுமே இல்லாத காலம். அதனால், பட்டித் தொட்டிகள், சந்து பொந்துகளில் எல்லாம் சாறு பிழியாத கசமுச பேச்சுகள். அப்போதைக்கு அது சூடான பட்டி அரங்கம் என்றுகூட சொல்லலாம். 

ஜீன் சின்னப்பா என்கிற அந்த அழகி, 1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் சுபாங் விமான நிலையத்திற்குப் போகிற பாதையில் பில்மோர் தோட்டத்திற்குப் பக்கத்தில் கொலை செய்யப்பட்டார். 

இந்த இடம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அப்போது சுபாங் விமான நிலையம் மட்டுமே இருந்தது. பெரிய பெரிய சாலைகள் எதுவுமே இல்லை. பெட்டாலிங் ஜெயா கிள்ளான் நெடுஞ்சாலை தான் பெரிய விரைவுச்சாலை. பத்து தீகாவில் இருந்து சுபாங் டாமன்சாரா ஆர்.ஆர்.ஐ. போன்ற இடங்களுக்குச் செல்வது வழக்கம். நினைவில் உள்ளது. சரி. 

அப்போது ஜீன் சின்னப்பாவுக்கு வயது 31. அவருடைய பிறந்த தேதி 26.10.1947. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு விரிவுரையாளர். பெயர் கார்த்திகேசு சிவபாக்கியம். 



இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கார்த்திகேசு இருக்கிறாரே, இவர்தான் கொலை செய்யப்பட்ட ஜீன் சின்னப்பாவின் மைத்துனர்; கணவர்வழி மைத்துனர். அதாவது ஜீன் சின்னப்பா கணவரின் கூடப் பிறந்த தம்பி. 

1980-ஆம் ஆண்டு, அழகி ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. டாக்டர் நரதா வர்ணசூர்யா என்பவருக்கு ஜீன் சின்னப்பா எழுதிய காதல் கடிதங்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன. 

தொடர்ந்து பல நாட்கள் அந்தக் கடிதங்களைப் பற்றிய விவாதங்கள். நீதிமன்ற வழக்கைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அன்றாடம் ஒரு பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதும். பலருக்கு இடம் கிடைக்காமல் போகும். வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். 

இந்தக் கொலை வழக்கை, மற்ற மற்ற வழக்குகளைப் போல ஒரு சாதாரண வழக்கு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சம்பந்தப் பட்டவர்கள் நன்கு பிரபலமானவர்கள். இறந்து போனவர் ஒரு மலேசிய அழகி. கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டவர் ஒரு பிரபல விரிவுரையாளர். அதுவும் மனோதத்துவ நிபுணர். அடுத்து சொந்த அண்ணியையே கொலை செய்தார் என்கிற குற்றச்சாட்டு. 

இந்த இரண்டு மூன்று முக்கியமான காரணங்களினால் அந்த வழக்கு மலேசிய அளவில் மிகப் பிரபலம் அடைந்தது. இதைவிட படு மோசமான கொலைகள் எல்லாம் மலேசியா பார்த்து இருக்கிறது. சொல்லப் போனால் ஜீன் சின்னப்பா கொலை வழக்கு அப்படி ஒன்றும் ஒரு பெரிய பயங்கரமான கொலை என்று சொல்லிவிடவும் முடியாது.

  • 1974-இல் மலேசியாவின் தலைமை போலீஸ் ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ அப்துல் ரகுமான் ஆசிம் கொலை; 
  • 1992-இல் அரிபின் அகாசு  (Ariffin Agas) கொலை வழக்கு (ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட மிக மோசமான நிகழ்வு)
  • 1993-இல் பகாங், பத்து தாலாம் சட்டமன்ற உறுப்பினர் மசுலான் இட்ரிஸ் கொலை (மோனா பெண்டி கொலை வழக்கு); 
  • 2003-இல் கோலாலம்பூர் பங்சாரில் கென்னி ஓங் கொலை; 
  • 2003-இல் கோலாலம்பூர் ஸ்ரீ அர்த்தாமாஸ் நோரித்தா சம்சுடின் கொலை; 
  • 2004-இல் சபா மாநிலத் துணையமைச்சர் டத்தோ நோர்ஜான் கான் கொலை; 
  • 2006-இல் அல்தான்தூயா கொலை; 
  • 2007-இல் கோலாலம்பூர், வங்சா மாஜு நூருல் சாஸ்லின் ஜாசிமின் எனும் எட்டு வயதுச் சிறுமி கொலை; 
  • 2010-இல் பந்திங் டத்தோ சுசிலாவதி  கொலை; 
  • 2013-இல் அராப் மலேசிய வங்கி நிறுவனர் உசேன் அகமாட் நஜாடி கொலை. 
இன்னும் இருக்கின்றன. அவை அனைத்தும் மறக்க முடியாத துர்நிகழ்ச்சிகள். இதில் ஜொகூர் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கிருஷ்ணசாமியின் கொலையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆனால், அதற்கு முன்னரே ஜீன் சின்னப்பாவின் கொலை மிகப் பிரபலமாகிப் போனது. சரி. என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜீன் சின்னப்பாவும் கார்த்திகேசுவும் கோலாலம்பூருக்குப் போய்விட்டு, கிள்ளானில் இருக்கும் தங்கள் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோலாலம்பூரில் குடியேறுவதாக ஒரு திட்டம். 

அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார். 

சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார். 

சிறுநீர் கழிக்கப் போவதாகக் காரில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது நேரம், நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. வாகனப் போக்குவரத்தும் குறைவு. மிக மிகத் தனிமையான இடம். அப்போதுதான் ஜீன் சின்னப்பா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பாவின் கதை முடிந்து விட்டது. இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக