20 டிசம்பர் 2020

மலாயா தமிழர்கள் வரலாறு: டாமன்சாரா தோட்டம் பத்து தீகா - 1896

1860 - 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் குடியேறி விட்டார்கள். பெரும்பாலும் கிள்ளான், காப்பார், பந்திங், கேரித்தீவு, ரவாங், பத்துமலை பகுதிகளில் அதிகமான தமிழர்களின் குடியேற்றம்.

பத்து தீகா பகுதியில் நிறையவே ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. முன்னர் காபி தோட்டங்களாக இருந்தவை. கிளன்மேரி தோட்டம்; நார்த்தமோக் தோட்டம்; ராசா தோட்டம்; சுங்கை ரெங்கம் தோட்டம்; டாமன்சாரா தோட்டம்; ஈபோர் தோட்டம்; சீபீல்டு தோட்டம்; லாபுவான் பாடாங் தோட்டம்; மேர்ட்டன் தோட்டம்; புக்கிட் கமுனிங் தோட்டம்.

இவற்றுள் டாமன்சாரா தோட்டம் (Damansara Estate) 1896-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பத்து தீகா இரயில் நிலையத்தில் (Batu Tiga Railway Station) மூன்று மைல் தொலைவு. மாட்டு வண்டிச் சாலை. தார் சாலைகள் எதுவும் இல்லாத காலம். அவர்கள் பயன்படுத்திய மாட்டு வண்டிகளைப் படத்தில் காணலாம்.

டாமன்சாரா தோட்டம்; மொத்தப் பரப்பளவு 2107 ஏக்கர். 1906-ஆம் ஆண்டு 12,564 பவுண்டுகள் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

1860-ஆம் ஆண்டுகளிலேயே பத்து தீகா பகுதிகளில் காபி பயிர் செய்யப் பட்டது. ஏற்கனவே டாமன்சாரா தோட்டம் ஒரு காபித் தோட்டம். அப்போது அதன் பரப்பளவு 514 ஏக்கர். ஓர் ஆண்டிற்கு 850 பீக்கள் காபி உற்பத்தி.

டாமன்சாரா தோட்டத்தில் 1906-ஆம் ஆண்டில் 600 தமிழர்கள் 150 ஜாவானியர்கள் வேலை செய்தார்கள். பிரோவெல் (H. F. Browell) எனும் ஆங்கிலேயர் நிர்வாகியாக இருந்தார். பின்னர் இவர் கிள்ளான் கோல்டன் ஹோப் தோட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.

Notes: Damansara Estate, Batu Tiga 1896. 3 miles from Batu Tiga railway station. cart road. owned by Teluk Batu Estate. 2107 acres. coffee and 514 acres. para  62 acres. 1906 - 12,564 ibs of para. 850 piculs coffee. 750 workers Tamils and Javanese. H. F. Browell, the local manager, then to Golden Hope Estate.



(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.12.2020

சான்றுகள்:

1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.

2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908.




17 டிசம்பர் 2020

டத்தோ சுதா தேவி காமன்வெல்த் அறக்கட்டளை தலைவர்

ஆஸ்திரேலியாவிற்கான மலேசியாவின் முன்னாள் தூதர் டத்தோ கே. ஆர். வி சுதா தேவி (Datuk Sudha Devi KR Vasudevan), காமன்வெல்த் அறக்கட்டளையின் (Commonwealth Foundation) தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் மலேசியர்.

Former high commissioner Datuk Sudha Devi KR Vasudevan has become the first Malaysian to be elected as Chair of the Commonwealth Foundation. Sudha will also be the first Chair from Asia since the foundation’s establishment in 1966, holding office for a two-year term from January 1.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பார்.

இங்கிலாந்து, லண்டனில், கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி, இயங்கலை வழியாக நடத்தப்பட்ட கோமன்வெல்த் அரவாரிய அதிபர் வாரியத்தின் சிறப்பு சந்திப்பில், இந்த முடிவு எடுக்கப் பட்டதாக, வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

According to Ministry of Foreign Affairs, Sudha was previously Malaysia’s High Commissioner to Australia and Ambassador of Malaysia to the Federative Republic of Brazil. She has also held various diplomatic positions in Germany, Singapore and Switzerland.

Locally, she has served various positions in the Ministry of  Foreign Affairs, including director-general of the Department of Policy Planning and  Coordination, undersecretary for the East Asia Division and deputy director-general for the Asean-Malaysia National Secretariat.

பாப்புவா நியூ கினியா, கென்யா, கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வேட்பாளர்களை, அதிக வாக்குகள் எண்ணிக்கையில், சுதா தேவி தோற்கடித்து இருக்கிறார்.

She defeated candidates from Cameroon, Kenya and Papua New Guinea in the election held during the Extraordinary Meeting of the Commonwealth Foundation Board of Governors hosted virtually by the UK on October 28.

1966-ஆம் ஆண்டு அந்த அறவாரியம் தொடங்கப் பட்டது. அதனைத் தலைமை ஏற்கும் ஆசியா வட்டாரத்தைச் சேர்ந்த முதல் தலைவர் சுதா தேவி ஆவர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

As Chair of the Foundation, Datuk Sudha will preside over meetings of its Board of Governors, represent the foundation at intergovernmental meetings and events, and serve as an ambassador for the Commonwealth Foundation to promote the foundation’s vision and values,” added MoFA.

The Commonwealth Foundation is an intergovernmental organisation established by heads of Government from Commonwealth countries to strengthen cooperation between each other and act as an agency for civil society. It is currently funded by 49 member states.


16 டிசம்பர் 2020

இந்தோனேசியாவில் சோழர் காலத்து தமிழர்கள்

தமிழ் மலர் - 08.12.2020

1025-ஆம் ஆண்டு. இராஜேந்திர சோழன் அயல் நாடுகளுக்குப் படை எடுத்துச் சென்றார். இந்தோனேசியாவின் மீது படை எடுத்த காலக் கட்டத்தில் இந்தோனேசியாவை ஸ்ரீ விஜயம் எனும் அரசு ஆட்சி செய்து வந்தது. சங்கர ராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் பேரரசராக இருந்தார்.

இராஜேந்திர சோழர் சுமத்திரா தீவைக் கைப்பற்றிய பின்னர் ஏறக்குறைய 200 தமிழர்கள் சுமத்திராவில் விட்டுச் செல்லப் பட்டார்கள். அப்படி விட்டுச் செல்லப்பட்ட தமிழர்கள் அனைவருமே இராஜேந்திர சோழரின் கடல் படையைச் சேர்ந்த வீரர்கள். 

Rias Busana Adat Batak

அவர்களின் வழித்தோன்றல்கள் தான் இன்றும் சுமத்திராவில் உள்ளனர். மொழியை மறந்து... இனத்தை மறந்து.. பூர்வீக மக்களுடன் ஐக்கியமாகித் தனி ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா, மேடான் நகருக்கு அருகில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது தோபா ஏரி (Lake Toba). உலகில் அதிக ஆழம் கொண்ட ஏரிகளில் தோபா ஏரியும் ஒன்றாகும்.

உலகின் மிகப் பெரிய எரிமலை ஏரி. 62 மைல் நீளம். 20 மைல் அகலம். ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் மலை உச்சியில் இருக்கிறது. 450 மீட்டர் ஆழம் கொண்டது. தோபா ஏரியின் மையத்தில் இருப்பது சமோசிர் (Samosir) தீவு. ஒரு பெரிய தீவு. இந்தத் தீவில் ஆறு மாவட்டங்கள் உள்ளன.

1. ஓனான் ருங்கு (Onan Runggu)

2. பாலிப்பி (Palipi)

3. பாங்குருரான் (Pangururan)

4. ரெங்கர் நிகுதா (Ronggur Nihuta)

5. சீமா நிந்தா (Simanindo)

6. நாயன் கோலன் (Nainggolan)

சமோசிர் தீவின் பரப்பளவு 630 சதுர கி.மீ. (240 சதுர மைல்கள்). சிங்கப்பூர் தீவை விட சற்றே சின்னது. சிங்கப்பூரின் பரப்பளவு 721 சதுர கி.மீ. (280.2 சதுர மைல்கள்). அந்த இடங்களின் பெயர்களைப் பாருங்கள். தமிழர் வாடை வீசுவதையும் கவனியுங்கள்.

2010-ஆண்டின் மக்கள் தொகை 95,238. அங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோர் பாத்தாக் (Batak) இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் இந்தோனேசியக் குடிமக்கள்.

It has been suggested that the important port of Barus in Tapanuli was populated by Batak people. A Tamil inscription has been found in Barus which is dated to 1088. Tamil remains have been found on key trade routes to the Batak lands. The Bataks practiced Shaivism and local culture for thousands of years. The last Batak king who fought valiantly against Dutch imperialists until 1905 was an Indonesian Shaivite king.

The Karo marga or tribe Sembiring "black one" is believed to originate from their ties with Tamils, with specific Sembiring sub-marga, namely Colia, Pandia, Depari, Meliala, Muham, Pelawi, and Tekan all of Indian origin. Tamil influence on Karo religious practices are also noted.

Drakard, Jane (1990). A Malay Frontier: Unity and Duality in a Sumatran Kingdom. SEAP Publications.

இவர்களில் பலர் இராஜேந்திர சோழர் படையின் வழித்தோன்றல்கள் என்று சொல்லப் படுகிறது. பல நூற்றாண்டுகள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டார்கள். பூர்வீக மக்களுடன் ஆழமாகக் கலந்து விட்டார்கள். அதனால் அசல் அடையாளம் மறைந்து போய் வாழ்கிறார்கள். தொடர்ந்து படியுங்கள்.

சமோசிர் தீவில் ஒரு துறைமுகம். அதன் பெயர் சீமா நிந்தா (Simanindo). இதற்கு அருகாமையில் இருப்பது தீகா ராஸ் (Tiga Ras) என்கிற துறைமுகம். இந்த இரு துறைமுகங்களுக்கு இடையில் ஒரு மலைக்காடு உள்ளது. இந்த மலைக்காட்டில் தான் சோழர் காலத்துத் தமிழர்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

வடக்கு சுமத்திராவில் செம்பயரிங் (Sembiring) எனும் ஒரு வம்சாவளியினர் உள்ளனர். இவர்களுக்குத் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப் படுகிறது. அந்த வம்சாவளியினரில் துணைப் பிரிவினரும் உள்ளனர்.


கோலியா (Colia);

பெராஹ்மனா (Berahmana);

பாண்டியா (Pandia);

மெலியாலா (Meliala);

டெபாரி (Depari);

முஹாம் (Muham);

பெலாவி (Pelawi);

தெக்கான் (Tekan)

பெரும்பாலும் தென்னிந்தியத் தமிழ் வம்சாவளியினர். இந்த உண்மையை மரபியல் சோதனை மூலமாகக் கண்டு அறிந்து உள்ளார்கள்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான இந்தோனேசியர்களும் தமிழர்கள் என்று சுயமாக அடையாளப் படுத்தப் படுகின்றார்கள். அவர்கள் பெரும்பாலும் வடக்கு சுமத்திராவில் காணப் படுகின்றார்கள். இவர்கள் பூர்வீக மக்களுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டு உள்ளார்கள்.

மரபியல் டி.என்.ஏ. (DNA) அடிப்படையில் சோதித்துப் பார்த்தார்கள். அதிகமான இந்திய டி.என்.ஏ. அணுக்கள் அவர்களிடம் உள்ளன என்பதையும் கண்டுபிடித்தார்கள்.

இந்தோனேசியாவில் இந்தியக் கலாசாரம் மிகவும் வலுவானது. ஆழமானது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியாவிற்கு வந்த தமிழர்கள் இந்து மதத்தை சுமத்திரா; ஜாவா தீவுகளில் பரப்பி இருக்கிறார்கள். உள்ளூர் மக்களுடன் ஆழமாகக் கலந்து உறவாடி இருக்கிறார்கள். அதனால் தான் இந்தோனேசியர்கள் சிலர் இந்திய மரபணுவைப் பெற்று உள்ளார்கள்.

Various influences affected the Batak through their contact with Tamil in southern Batakland, and the east and west coast near Barus and Tapanuli. These contacts took place many centuries ago.

(H. Parkin, The Extent and Areas of Indian/Hindu Influence on the Ideas and Development of Toba-Batak Religion and Its Implications for the Christianization of the Toba-Batak People of North Sumatra. D.Th. Dissertation, Serampore, 1975, p. 440)

இந்தோனேசியர்கள் இன ரீதியாக மிக வலுவான தமிழர்களின் அம்சங்களைக் கொண்டவர்கள். சற்றுக் கறுமையான தோல். தமிழர்களின் தலை அமைப்பு. உடலில் அதிகமான உரோமங்கள்.

இந்தோனேசியாவில் முதலில் கால் பதித்த வெளியூர் மக்கள் யார் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் தான். இந்தோனேசியாவின் ஆச்சே, வட சுமத்திரா, கிழக்கு சுமத்திரா போன்ற இடங்களில் தமிழர்களின் மரபியல் தாக்கங்கள் ஆழமாய்ப் பதிந்து உள்ளன.

உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தடம் பதித்து உள்ளார்கள். இருந்தாலும்; அவர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. நேற்று படகு ஏற்றி வந்தவர்களில் சிலரும்கூட அந்தக் காலத்துத் தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று வாய்கூசாமல் பேசுகிறார்கள். வெட்கம். வேதனை. என்றைக்கு என் இனத்திற்கு இந்த வசைமொழிகளில் இருந்து விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.12.2020

சான்றுகள்:

1. Andaya, Leonard Y. (2002). The Trans-Sumatra Trade and the Ethnicization of the 'Batak'". Land- en Volkenkunde. 158 (3): 367–409.

2. Tamil community forms new cultural association, The Jakarta Post, 15 August 2011.

3. Sandhu, K. S.; Mani, A. (December 18, 1993). Indian Communities in Southeast Asia. Institute of Southeast Asian Studies.

4. J.L.A. Brandes, 1913, Old Javanese inscriptions, bequeathed by the late J.L.A. Brandes.

 

15 டிசம்பர் 2020

கேமரன் மலையில் ஜிம் தாம்சன் மர்மம்

தமிழ் மலர் - 15.12.2020

தாய்லாந்து நாட்டின் பட்டுத் தொழிலுக்குப் புத்துயிர் வார்த்தவர். பாங்காக் பட்டு வண்ணப் பாரம்பரியத்திற்குப் புத்தெழுச்சி செய்தவர். தென் கிழக்காசியக் கலைப் பொருள்களுக்குப் புத்துணர்வு கொடுத்தவர். அனைத்துலகப் பட்டு வணிகத்திற்கு புதிய பாதை அமைத்தவர்.

1967 மார்ச் 26-ஆம் தேதி. கேமரன் மலை அடிவாரத்தில் காற்று வாங்கப் போனவர். கடைசியில் காற்றோடு காற்றாகக் கலந்து போய் விட்டார். மலேசிய வரலாற்று மர்மங்களில் மாய ஜால நாயகனாய் மறைந்தும் வாழ்கின்றார்.

அவர் தான் மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் ஒரு மாய மனிதர் ஜிம் தாம்சன் (James Harrison Wilson Thompson). பட்டு உலகின் ராஜாதி ராஜா.

கேமரன் மலையில் பொடி நடையாக நடக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர். போனது போனது தான். அப்புறம் மனுசனைக் காணவே இல்லை. மர்மமாய் மாயமாய் மறைந்து போனார். என்ன ஆனார் எங்கே போனார். இதுவரை எவருக்கும் தெரியாத இரகசியம். இருந்தாலும் அண்மையில் ஒரு சில இரகசியங்கள் கசிகின்றன.

ஒன்னுமே புரியலே உலகத்திலே... என்னென்னமோ நடக்குது... மர்மமா இருக்குது... என்னான்னு தெரியலே... சந்திரபாபு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

காசுக்காகக் கடத்தப் பட்டாரா? பட்டுத் தொழில் போட்டியில் பழி வாங்கப் பட்டாரா? அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவுத் துறைச் சாரலில் களையப் பட்டாரா? மலாயா கம்யூனிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப் பட்டாரா? காட்டுப் பாதையில் கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்து இறந்து போனாரா? அல்லது காட்டுப்புலி காட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனதா?

அவர் காணாமல் போன மர்மம் உலகின் பத்தாவது மர்மமாக நீடிக்கிறது. அதையும் தாண்டிய நிலையில் தில்லாலங்கடி மாய ஜாலமாகவே இன்று வரை நீண்டு நெளிந்து போகின்றது.

53 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஜிம் தாம்சன் மறைந்து போன கதை மர்மக் கதையாய் இன்றும் பேசப் படுகிறது. புலி அடித்து இருக்கலாம் என்று அப்போது சொன்னார்கள். ஆனால் இப்போது அந்தக் கதையைக் கேட்டாலே பலருக்கும் கிலி அடிக்கிறது. அப்போதைக்கு திக்திக் வரலாறு. இப்போதைக்கு திகில் வரலாறு.

ஜிம் தாம்சன் 1906 மார்ச் 21-ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். ஓர் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் (Office of Strategic Services). இப்போது அந்த நிறுவனத்தை சி.ஐ.ஏ. என்று அழைக்கிறார்கள் (Central Intelligence Agency - CIA).

1945-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓ.எஸ்.எஸ். உளவுத் துறையின் கிளை நிறுவனத்தைத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தோற்றுவித்தார். அதன் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

1948-ஆம் ஆண்டு 900 டாலர் மூலதனத்தில் பாங்காக் மாநகரில் தாய்லாந்து சில்க் கம்பெனியைத் தோற்றுவித்தார் (Thai Silk Company). அப்போது அது பெரிய காசு. அவருடைய பட்டுத் தொழில் நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. வருமானம் பெருகியது. அதே சமயத்தில் தாய்லாந்து மக்களையும் அவர் மறக்கவில்லை.

ஆயிரக் கணக்கான ஏழை மக்களுக்குக் குடிசைத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். பல்லாயிரம் பேரை வறுமைப் பிடியியில் இருந்து மீட்டு எடுத்தார். நான் சொல்லவில்லை. பாங்காக் மக்கள் இன்றும் பேசிக் கொள்கிறார்கள். அவருடைய நிறுவனம் குடிசைத் தொழில் அடிப்படையிலானது. நினைவில் கொள்வோம்.

ஏழை மக்கள் தாங்கள் வாழும் குடிசை வீடுகளில் இருந்தே பட்டுத் துணிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலோர் ஏழைப் பெண்கள். அவர்கள் தயாரித்த தாய்லாந்து பட்டுத் துணிகள் பற்பல வடிவங்களில் பளபளப்பான வண்ணங்களில் உலகம் முழுவதும் வலம் வந்தன.

அன்றைக்கு ஜிம் தாம்சனின் பட்டுத் துணிகள் உலகம் முழுமைக்கும் கம்பீரமாய் ராஜ நடை போட்டு இருக்கின்றன. பிரகாசமான வண்ணங்களில் வியத்தகு வண்ண சேர்க்கைகள் அவரின் பட்டுத் துணிகளுக்குப் பெருமை சேர்த்து இருக்கின்றன.


தாம்சன் ஒரு தொழிலதிபர் தான். ஆனாலும் அரும் கலைப் பொருட்களைச் சேகரிப்பதிலும் அவருக்கு அலாதியான ஆர்வம். காட்டில் சுற்றித் திரிவதிலும் அலாதியான விருப்பம். அடிக்கடி காட்டிற்குள் போய் சுற்றிவிட்டு வருவதும் அன்றாட வழக்கம். ஒரு செருகல்.

காட்டு வாழ்க்கை என்பது சுகமான வாழ்க்கை. அதுவும் தனியாகக் காட்டுக்குள் கொஞ்ச நாட்கள் வாழ்ந்து பாருங்கள். மனதில் உள்ள கவலைகள் எல்லாம் கரைந்து போகும். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. போய்ப் பாருங்கள். பல வகையான காட்டு விலங்குகள்; பறவைகள்; மீன்கள்; பூச்சிகள்; செடி கொடிகள்; கலர் கலரான பூக்கள்.

எல்லாமே கவலை இல்லாத ஜீவன்கள். மனித வாடையே வேண்டாம் என்று தனியாகவே பல நாட்கள் நானும் தங்கி இருக்கிறேன். உண்மையைச் சொல்வதில் என்னங்க தப்பு. மரத்தில் ஏறி பரண் கட்டி இரவில் தங்கிய அனுபவம். ஈப்போ உலுகிந்தா மலையில் ஏறி பகாங் கேமரன் மலையில் இறங்கிய அனுபவம்.

குனோங் தகான் மலை உச்சியில் குளிர்க் காய்ச்சல் வந்து செத்துப் பிழைத்த அனுபவம். கொர்பு  மலையில் காட்டு யானைகளைப் பார்த்த அனுபவம். குனோங் ஜெராய் மலையில் காணாமல் போன அனுபவம். இப்படி நிறைய அனுபவங்கள். சரி போதும். சுயவிளம்பரம் வேண்டாம் என்று சொல்வதும் கேட்கிறது. நம்ப ஜிம் தாம்சன் கதைக்கு வருவோம்.

கேமரன் மலை, தானா ராத்தாவில் ஒரு மாளிகை இருந்தது. அதன் பெயர் நிலவொளி மாளிகை (Moonlight Cottage). அந்த மாளிகையில் தாம்சனின் நண்பர் டாக்டர் லிங் தியென் கி (Dr. Ling Tien Gi) என்பவரும் அவருடைய மனைவி ஹெலன் லிங் (Helen Ling) என்பவரும் தங்கி இருந்தார்கள். தாம்சனும் அந்த மாளிகையில் போய் தங்கினார்.

1967 மார்ச் மாதம் 26-ஆம் தேதி. மதியம் 1.30-க்கு ஒரு நடைப்பயிற்சி செய்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ஜிம் தாம்சன் மாளிகையை விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போது அங்கே இருந்தது ஒரே ஒரு பாதை தான். கமுந்திங் சாலை. அந்தச் சாலை வழியாகத் தான் நடந்து போய் இருக்கிறார்.

மாலை 4.00 மணிக்கு தானா ராத்தாவிற்குச் செல்லும் முதன்மைச் சாலையில் அவரைச் சிலர் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் மாலை 6.00 வரையிலும் தாம்சன் திரும்பி வரவே இல்லை. போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள். தேடும் பணி தொடங்கியது.

காட்டுப் புலிகளும் கம்யூனிஸ்டு கொரிலாக்களுக்கும் கண்ணாமூச்சி விளையாடிய காட்டில் ஏறக்குறைய 500 பேர் தாம்சனைத் தேடினார்கள்.

மலேசியப் போலீஸ் களப் படை; ஒராங் அஸ்லி மலையேறிகள்; குர்கா படையினர்; பிரிட்டிஷ் படை வீரர்கள்; சுற்றுப் பயணிகள்; சாரணர்கள்; பொது மக்கள்; சமயப் பரப்பாளர்கள்; அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே களம் இறங்கி விட்டது.

பதினொரு நாட்கள் தேடி இருக்கிறார்கள். உஹும்… ஜிம் தாம்சன் கண்ணில் படவே இல்லை. காணாமலேயே போய் விட்டார். ஒரு துரும்பும் கிடைக்கவில்லை. ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சி உலகளாவிய நிலையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்புறம் அப்படியே பலரும் மறந்து விட்டார்கள். மக்களும் மறந்து வரும் கட்டத்தில் ஓர் அதிர்ச்சி தகவல்.

1985-ஆம் ஆண்டு கேமரன் மலை பிரிஞ்சாங் பகுதியில் ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்தார்கள். அது ஜிம் தாம்சனின் எலும்புக் கூடாக இருக்கலாம் என்றும் நினைத்தார்கள்.

ஆய்வு செய்து பார்த்ததில் அந்த எலும்புக்கூடு அவருடையது அல்ல என்பது உறுதியானது. ஜிம் தாம்சன் காணாமல் போனது தானா ராத்தா காட்டில்... எலும்புக்கூடு கிடைத்தது பிரிஞ்சாங் காட்டில்...

அதன் பின்னர் பல்வேறு ஊகங்கள். பல்வேறு அனுமானங்கள். சரி. ஒரு காலக் கட்டத்தில் இந்தோசீனாவில் வியட்நாம் போர். தெரியும் தானே. அதில் அமெரிக்காவின் தலையீடு.

அதற்கு ஜிம் தாம்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதனால் அதே அமெரிக்காவின் ஓ.எஸ்.எஸ். உளவுத் துறை அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது.

இருந்தாலும் பாருங்கள். ஒரு காலத்தில் ஜிம் தாம்சன், அமெரிக்காவின் அந்த ஓ.எஸ்.எஸ். உளவுத் துறைக்கு நிறையவே இரகசியத் தகவல்களைச் சேகரித்து வழங்கி உதவிகள் செய்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் இவரைக் கொல்ல வேண்டும். இப்படியும் ஒரு கேள்வி.

கம்யூனிஸ்டு பயங்கரவாதிகள் கொன்று இருக்கலாம் எனும் மற்றோர் ஐயப்பாடு நிலவியது. மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சி ஏற்படும் காலக் கட்டத்தில் தான் ஜிம் தாம்சன் காணாமல் போய் இருக்கிறார். அதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

பேரி புரோமன் (Barry Broman). ஓர் அமெரிக்கர், இரண்டு மணி நேர ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார். அதன் தலைப்பு ஜிம் தாம்சன்: தி மேன் & தி லெஜண்ட் (Jim Thompson: The Man & the Legend). சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட படம்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர் தியோ போக் ஹுவா (Teo Pok Hwa). இவர் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் மலாயா கம்யூனிஸ்டுகள் தான் உண்மையில் தாம்சனைக் கொன்றார்கள் என்று சொன்னதாக பேரி புரோமன் தன் ஆவணப் படத்தில் கூறி இருக்கிறார்.

1960-களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சின் பெங். இவரைப் பார்க்க ஜிம் தாம்சன் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஓர் அமெரிக்கரிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு கோரிக்கை வந்தது கட்சியின் மேல்மட்டத்தில் சந்தேகங்களை எழுப்பி இருக்கலாம்.

அந்த நேரத்தில் கம்யூனிச நடவடிக்கைகளுக்கு கேமரன் மலை ஒரு மையமாக விளங்கி வந்தது என்பதையும் நினைவில் கொள்வோம்.

உண்மையில் ஜிம் தாம்சன் காணாமல் போவதற்கு முன்னர், அவர் தங்கி இருந்த நிலவொளி மாளிகை, ஒரு காலத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையகமாகச் செயல்பட்டு வந்து உள்ளது.

சின் பெங்கைச் சந்திக்க ஜிம் தாம்சன் விரும்பியது மிக மிக ஆபத்தான விசயமாகக் கருதப் பட்டது. அதனால் ஜிம் தாம்சனைப் பற்றி கூடுதல் தகவல்களைத் தோண்டி எடுத்தார்கள்.

ஜிம் தாம்சன் ஒரு ரகசிய சேவை முகவராக இருந்தது; அமெரிக்க உளவுத் துறையில் சேவை செய்தது போன்ற இரகசியங்கள் எல்லாம் வந்தன. அது மட்டும் அல்ல. அவர் ஓர் உளவாளியாகவும் இருந்தவர்; அதுவும் ஒரு மேற்கத்தியர். அவர் சின் பெங்கைப் பார்க்க விரும்பியது சரியாகப் படவில்லை. ஆளும் சரி இல்லை. நேரமும் சரி இல்லை.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தொலைத் தொடர்புகள் சிறப்பாக இல்லை. அவர்களிடம் கம்பியில்லாத் தந்தி வசதிகள் இல்லை. அப்போது அந்தக் கட்சியின் தலைமையகம் தாய்லாந்து எல்லைப் பகுதியில் பெத்தோங் எனும் இடத்தில் இருந்தது.

அதனால் மலாயாவில் இருந்த கம்யூனிஸ்டுகள் தனிக் குழுக்களாகத் தனித் தனியாக இயங்கி வந்தார்கள். அவர்களே சொந்தமாக முடிவுகள் எடுத்தார்கள். ஓர் உளவாளியின் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கலாம். சொல்ல முடியாது.

ஜிம் தாம்சனை முடிவு கட்டுவதற்கு உள்ளூரிலேயே முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். 1967-ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் ஜிம் தாம்சன் வாழ்க்கை ஒரு முடிவிற்கு வந்தது.

காட்டுப்புலி கடித்து இருந்தால் எலும்பாவது கிடைத்து இருக்கும். கரடி கடித்து இருந்தால் மயிர் முடியாவது கிடைத்து இருக்கும். ஆனால் காட்டு முழுக்கத் தேடியும் எலும்பும் கிடைக்கவில்லை. எலும்பைக் கடிக்கும் எறும்பும் கிடைக்கவில்லை. என்னைக் கேட்டால் சிந்தாமல் சிதறாமல் சித்திரம் வரையப்பட்டு உள்ளது என்றுதான் சொல்வேன்.

இது உண்மையாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பேரி புரோமன் தயாரித்த ஆவணப் படத்தில் மேற்கண்ட செய்தி சொல்லப் படுகிறது. அதனால் தான் துணிந்து இங்கே பதிவு செய்கிறேன்.

இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். பிரிட்டிஷ் உயர் ஆணையர் சர் ஹென்றி கர்னி கொல்லப் பட்டதும், அந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

அப்படி இருக்கும் போது ஜிம் தாம்சன் விசயத்தில் மட்டும் ஏன் பொறுப்பு ஏற்கவில்லை. சிந்தித்துப் பார்க்க வேண்டிய விசயம்.

பட்டு உலகின் ராஜாதி ராஜா என உச்சம் பார்த்த ஜிம் தாம்சன் கேமரன் மலைக்கு வந்தார். காற்று வாங்கப் போனார். காட்டு வழியில் காணாமல் கரைந்தும் போனார். மலேசிய வரலாற்று மர்மங்களில் ஒரு மாய ஜால நாயகனாய் ஒரு மர்மக் கதையை எழுதிச் சென்று இருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தி கொள்ளட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.12.2020

சான்றுகள்:

1. https://www.unreservedmedia.com/the-curious-case-of-jim-thompson/)

2. https://asiatimes.com/2017/12/solving-mystery-jim-thompsons-murder/

3. https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Jim_Thompson

4. https://www.unreservedmedia.com/the-curious-case-of-jim-thompson/



 

14 டிசம்பர் 2020

கவரி மானும் கவரிங் மானும்

சிரம்பான், மந்தினில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்குள் ஒரு சின்ன ஊடல். மனைவிக்கு மானம் போகிற விசயம்.

அப்படி என்னதான் நடந்தது. மனைவி ஆசையாய் ஒரு கிளியை வளர்த்து இருக்கிறாள். அது கணவனுக்குப் பிடிக்கவில்லை. ஓர் உயிரை அந்த மாதிரி கூண்டுக்குள் போட்டு அடைத்து வைக்கக் கூடாது. அது பாவம் என்று மனைவியைக் கண்டித்து இருக்கிறான்.

திடீரென்று ஒருநாள் அந்தக் கிளி பறந்து போய் விட்டது. கணவன்தான் திறந்து விட்டு இருக்க வேண்டும் என்று மனைவிக்கு சந்தேகம்.

அதனால் அவன் வளர்த்த நாயை, மனைவி அவிழ்த்து விட்டு இக்கிறாள். விடுதலையான நாய், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய், பக்கத்து வீட்டுக்காரனைக் கடித்துவிட்டது.

அதனால் புருசனுக்கும் மனைவிக்கும் வாய்ச் சண்டை. அதுவே பேய்ச் சண்டையானது. மனைவியை கைநீட்டி அடித்தும் விட்டான். மனைவிக்கு ஆத்திரம். மூட்டைப்பூச்சி மருந்தை வாங்கிக் குடிக்கப் போய் இருக்கிறாள்.

அதைக் கணவன் தடுத்து நிறுத்தி இருக்கிறான். ‘நான் கவரிமான் பரம்பரையைச் சேர்ந்தவள்’ என்று மனைவி சொல்ல, ‘நானும் ஒரு கவரிமான்தான். மருந்தைக் கொண்டுவா.

நானும் குடிக்கிறேன்’ என்று சொல்லி போத்தலைப் பிடுங்கி இருக்கிறான். இரண்டு பேருக்கும் மல்லுக்கட்டு. அதில் மருந்து போத்தல் கீழே விழுந்து உடைந்து போனதுதான் மிச்சம்.

அப்புறம் என்ன. இரண்டு கவரிமான்களும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, கட்டிப் பிடித்து அழுது இருக்கின்றன. வருடங்கள் பல ஆகிவிட்டன. நல்லபடியாக குடும்பம் நடத்தி, நாலு பிள்ளைகளுக்கு அப்பா அம்மா ஆகிவிட்டார்கள்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா. இவர்களின் பெரிய மகள் இப்போது சிரம்பானில் ஒரு புகழ்பெற்ற மருத்துவர். மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்தவர்களுக்கு மருத்துவம் செய்து வருகிறார்.

ஆக, ஒருவர் கவரிமான் பரம்பரையில் இருந்து வந்தால் என்ன. இல்லை வராவிட்டால்தான் என்ன. அதற்காக உயிரைப் போக்கிக் கொள்ள பூச்சிமருந்தைக் குடிக்க வேண்டுமா? இல்லை மானம் போகிறது என்பதற்காக, கவரிமானைப் பிடித்து வம்புக்கு இழுக்க வேண்டுமா? சொல்லுங்கள்.

சரி, கவரிமான்… கவரிமான்… என்று சொல்கிறார்களே, அந்தக் கவரிமானை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா. நான் பார்த்தது இல்லை. பார்க்க ஆசைதான். ஆனால், பார்க்க முடியாதே. சரி, விசயத்திற்கு வருகிறேன்.

கவரிமானைப் பார்க்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அப்படிப்பட்ட ஒரு மான் இருந்தால்தானே பார்ப்பதற்கு. அப்படி ஒரு மான் உலகத்திலேயே இல்லையே. அப்புறம் எப்படி பார்க்க முடியும்.  

அப்படி என்றால் வள்ளுவர் சொன்னது தப்பா என்று நீங்கள் கேட்கலாம். அவர் தப்பாகச் சொல்லவில்லை. தப்பாக எழுதவும் இல்லை. சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதை நன்றாகப் பாருங்கள்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
(969-ஆம் குறள்)


என்று வள்ளுவர் எழுதி இருக்கிறார். அந்தக் குறளில் கவரிமா என்றுதான் சொல்லி இருக்கிறார். கவரிமான் என்று சொல்லவே இல்லை. அந்தக் குறளை மறுபடியும் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல. கவரி மா என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.

கவரி மா என்பது ஒரு விலங்கு. அப்படி ஒரு விலங்கு இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் Yak Bos Grunniens என்று அழைப்பார்கள். அதைத்தான், நம் தமிழ் மக்கள் கவரி மான் என்று போட்டுக் குழப்பி விட்டனர். ’மா’ எனும் எழுத்திற்கு காது குத்தி, மூக்குத்தியும் போட்டு விட்டார்கள்.

புறனானூற்றில் ஒரு பாடல் வருகிறது..

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்…


இமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு இருக்கிறது. அது நரந்தை எனும் புல்லைச் சாப்பிடும். அங்கே தன் துணையுடன் ஜாலியாக வாழும். அர்த்தம் புரிகிறதா. புரியவில்லை என்றால் புறநானூற்றைப் புரட்டிப் பாருங்கள்.

அறிவியல் ரீதியில் கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு இல்லவே இல்லை. அது இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்.

கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல. முடி சடை போல தொங்கக் கூடிய ஒரு விலங்கு. அதாவது சடைமுடியுடன் வாழும் விலங்கு. இன்னோர் ஆச்சரியம் என்ன தெரியுமா. அது மான் இல்லை. மாடு வகையை சார்ந்தது என்பதாகும்.

கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. சிங்கத்தை அரிமா என்று சொல்லவில்லையா. அதைப் போல கவரிமா என்பது ஒரு மாட்டைக் குறிக்கும் பெயர்ச் சொல் ஆகும்.

இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு வாழும். தன் உடம்பில் உள்ள மயிரை இழந்துவிட்டால், குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் அது இறந்துவிடும்.

இதைத்தான் திருவள்ளுவர், ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்கிறார். மற்றபடி கவரிமான் என்று அவர் சொல்லவே இல்லை. இந்தக் கவரிமான் என்பது நாமாக உருவாக்கிய ஓர் உயிரினம்தான்.

ஆக, அன்னப்பறவை எனும் பறவையைப் போல, கவரிமான் எனும் மான் இல்லவே இல்லை. அன்னப்பறவையைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா என்று ஒரு திரைப்பாடல் வேறு இருக்கிறது. இதில் கவிஞர் எந்த மானைச் சொல்கிறார் என்றும் தெரியவில்லை.

வள்ளுவரின் குறளுக்குப் பொருள் எழுதிய சிலர், இந்தக் கவரிமா எனும் சொல்லுக்குத் தவறான விளக்கத்தைக் கொடுத்து இருக்கின்றனர். ஆனால், பரிமேளழகர் மிகச் சரியான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கவரிமா என்பது ’யாக்’ என்று அழைக்கப்படும் ஒரு மாடு. அந்த மாட்டின் வாழ்வியலைச் சரியாகப் புரியாமல் விளக்கம் கொடுக்கலாமா.  இமயமலையைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்குதான் கவரிமா.

கலைஞர் தன் உரையில் ’கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என்று சொல்கிறார். அதே போல மானம் மிக்க மனிதர்கள், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள்’ என்றும் விளக்கம் கொடுக்கிறார்.

அது சரியான விளக்கம். இந்தக் கவரிமான், கவரிமா சர்ச்சையில் கலைஞர் சிக்காதது பாராட்டுக்குரிய செய்தி.

கவரிமானைப் புள்ளிமானுக்கு ஒப்பிட்டும் சொல்வார்கள். அது தவறு. கவரிமான் என்ற ஒன்று இல்லாத போது புள்ளிமானை எப்படி அதற்கு ஒப்பிடுவது. புள்ளிமான் இந்தியா, இலங்கை, நேப்பாளம், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் காட்டுப் பகுதிகளில் வாழும் மான் இனம் ஆகும். பாகிஸ்தானிலும் சிறு அளவில் காணப்படுகிறது.

புள்ளிமானின் தோல் பழுப்பு நிறத்திலும் வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும். அதன் காரணமாகவே, அதற்கு புள்ளிமான் என்று பெயர் வந்தது. புள்ளிமான் ஆண்டுக்கு ஒரு முறை தன் கொம்பினை உதிர்க்கும்.

ஆண் மான்கள் பெண் மான்களை விடப் உருவில் சற்றுப் பெரிதாக இருக்கும். 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

’சவரி முடி’ என்று நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். இந்த முடியை ’கவரி முடி’ என்று அழைப்பார்கள். இது கவரி மாட்டில் இருந்து கிடைக்கும் முடியாகும். அன்றைய பெண்கள் பயன்படுத்திய பொய்முடி. முன்பு சீனாவில் இருந்து மலாயாவிற்கு இறக்குமதியானது.

இப்போது வருகின்றதா என்று தெரியவில்லை. ‘கவரிமுடி’ எனும் சொல்தான் ‘சவரிமுடி’ என்று மாறியதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, இல்லாத ஒரு மானைப் பிடித்து வந்து, அதற்கு கவரி மான் என்று பெயரைச் சூட்டி விட்டார்கள். அப்புறம் அதற்கு கவரிங் நகைகளைப் போட்டு அழகு பார்த்தார்கள்.

ஆனால், இப்போது அதற்கு கவரிங் நகைகளும் இல்லை. கலரிங் நகைகளும் இல்லை. யாராவது கவரிமானைப் பற்றி பேசினால், இந்த உண்மையைச் சொல்லுங்கள்.

அப்படியே அடம் பிடித்தால் இதையும் சொல்லுங்கள். பாவம் கவரிமான். காட்டிற்குள் ஓடிவிட்டது. பிடிக்கப் போய் இருக்கிறார்கள். பிடித்ததும் குறும்செய்தி வரும் என்று சொல்லுங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2012