தமிழ் மலர் - 15.12.2020
தாய்லாந்து நாட்டின் பட்டுத் தொழிலுக்குப் புத்துயிர் வார்த்தவர். பாங்காக் பட்டு வண்ணப் பாரம்பரியத்திற்குப் புத்தெழுச்சி செய்தவர். தென் கிழக்காசியக் கலைப் பொருள்களுக்குப் புத்துணர்வு கொடுத்தவர். அனைத்துலகப் பட்டு வணிகத்திற்கு புதிய பாதை அமைத்தவர்.
1967 மார்ச் 26-ஆம் தேதி. கேமரன் மலை அடிவாரத்தில் காற்று வாங்கப் போனவர். கடைசியில் காற்றோடு காற்றாகக் கலந்து போய் விட்டார். மலேசிய வரலாற்று மர்மங்களில் மாய ஜால நாயகனாய் மறைந்தும் வாழ்கின்றார்.
அவர் தான் மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் ஒரு மாய மனிதர் ஜிம் தாம்சன் (James Harrison Wilson Thompson). பட்டு உலகின் ராஜாதி ராஜா.
கேமரன் மலையில் பொடி நடையாக நடக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர். போனது போனது தான். அப்புறம் மனுசனைக் காணவே இல்லை. மர்மமாய் மாயமாய் மறைந்து போனார். என்ன ஆனார் எங்கே போனார். இதுவரை எவருக்கும் தெரியாத இரகசியம். இருந்தாலும் அண்மையில் ஒரு சில இரகசியங்கள் கசிகின்றன.
ஒன்னுமே புரியலே உலகத்திலே... என்னென்னமோ நடக்குது... மர்மமா இருக்குது... என்னான்னு தெரியலே... சந்திரபாபு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
காசுக்காகக் கடத்தப் பட்டாரா? பட்டுத் தொழில் போட்டியில் பழி வாங்கப் பட்டாரா? அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவுத் துறைச் சாரலில் களையப் பட்டாரா? மலாயா கம்யூனிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப் பட்டாரா? காட்டுப் பாதையில் கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்து இறந்து போனாரா? அல்லது காட்டுப்புலி காட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனதா?
அவர் காணாமல் போன மர்மம் உலகின் பத்தாவது மர்மமாக நீடிக்கிறது. அதையும் தாண்டிய நிலையில் தில்லாலங்கடி மாய ஜாலமாகவே இன்று வரை நீண்டு நெளிந்து போகின்றது.
53 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஜிம் தாம்சன் மறைந்து போன கதை மர்மக் கதையாய் இன்றும் பேசப் படுகிறது. புலி அடித்து இருக்கலாம் என்று அப்போது சொன்னார்கள். ஆனால் இப்போது அந்தக் கதையைக் கேட்டாலே பலருக்கும் கிலி அடிக்கிறது. அப்போதைக்கு திக்திக் வரலாறு. இப்போதைக்கு திகில் வரலாறு.
ஜிம் தாம்சன் 1906 மார்ச் 21-ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். ஓர் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் (Office of Strategic Services). இப்போது அந்த நிறுவனத்தை சி.ஐ.ஏ. என்று அழைக்கிறார்கள் (Central Intelligence Agency - CIA).
1945-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓ.எஸ்.எஸ். உளவுத் துறையின் கிளை நிறுவனத்தைத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தோற்றுவித்தார். அதன் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
1948-ஆம் ஆண்டு 900 டாலர் மூலதனத்தில் பாங்காக் மாநகரில் தாய்லாந்து சில்க் கம்பெனியைத் தோற்றுவித்தார் (Thai Silk Company). அப்போது அது பெரிய காசு. அவருடைய பட்டுத் தொழில் நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. வருமானம் பெருகியது. அதே சமயத்தில் தாய்லாந்து மக்களையும் அவர் மறக்கவில்லை.
ஆயிரக் கணக்கான ஏழை மக்களுக்குக் குடிசைத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். பல்லாயிரம் பேரை வறுமைப் பிடியியில் இருந்து மீட்டு எடுத்தார். நான் சொல்லவில்லை. பாங்காக் மக்கள் இன்றும் பேசிக் கொள்கிறார்கள். அவருடைய நிறுவனம் குடிசைத் தொழில் அடிப்படையிலானது. நினைவில் கொள்வோம்.
ஏழை மக்கள் தாங்கள் வாழும் குடிசை வீடுகளில் இருந்தே பட்டுத் துணிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலோர் ஏழைப் பெண்கள். அவர்கள் தயாரித்த தாய்லாந்து பட்டுத் துணிகள் பற்பல வடிவங்களில் பளபளப்பான வண்ணங்களில் உலகம் முழுவதும் வலம் வந்தன.
அன்றைக்கு ஜிம் தாம்சனின் பட்டுத் துணிகள் உலகம் முழுமைக்கும் கம்பீரமாய் ராஜ நடை போட்டு இருக்கின்றன. பிரகாசமான வண்ணங்களில் வியத்தகு வண்ண சேர்க்கைகள் அவரின் பட்டுத் துணிகளுக்குப் பெருமை சேர்த்து இருக்கின்றன.
தாம்சன் ஒரு தொழிலதிபர் தான். ஆனாலும் அரும் கலைப் பொருட்களைச் சேகரிப்பதிலும் அவருக்கு அலாதியான ஆர்வம். காட்டில் சுற்றித் திரிவதிலும் அலாதியான விருப்பம். அடிக்கடி காட்டிற்குள் போய் சுற்றிவிட்டு வருவதும் அன்றாட வழக்கம். ஒரு செருகல்.
காட்டு வாழ்க்கை என்பது சுகமான வாழ்க்கை. அதுவும் தனியாகக் காட்டுக்குள் கொஞ்ச நாட்கள் வாழ்ந்து பாருங்கள். மனதில் உள்ள கவலைகள் எல்லாம் கரைந்து போகும். சும்மா ஒன்றும் சொல்லவில்லை. போய்ப் பாருங்கள். பல வகையான காட்டு விலங்குகள்; பறவைகள்; மீன்கள்; பூச்சிகள்; செடி கொடிகள்; கலர் கலரான பூக்கள்.
எல்லாமே கவலை இல்லாத ஜீவன்கள். மனித வாடையே வேண்டாம் என்று தனியாகவே பல நாட்கள் நானும் தங்கி இருக்கிறேன். உண்மையைச் சொல்வதில் என்னங்க தப்பு. மரத்தில் ஏறி பரண் கட்டி இரவில் தங்கிய அனுபவம். ஈப்போ உலுகிந்தா மலையில் ஏறி பகாங் கேமரன் மலையில் இறங்கிய அனுபவம்.
குனோங் தகான் மலை உச்சியில் குளிர்க் காய்ச்சல் வந்து செத்துப் பிழைத்த அனுபவம். கொர்பு மலையில் காட்டு யானைகளைப் பார்த்த அனுபவம். குனோங் ஜெராய் மலையில் காணாமல் போன அனுபவம். இப்படி நிறைய அனுபவங்கள். சரி போதும். சுயவிளம்பரம் வேண்டாம் என்று சொல்வதும் கேட்கிறது. நம்ப ஜிம் தாம்சன் கதைக்கு வருவோம்.
கேமரன் மலை, தானா ராத்தாவில் ஒரு மாளிகை இருந்தது. அதன் பெயர் நிலவொளி மாளிகை (Moonlight Cottage). அந்த மாளிகையில் தாம்சனின் நண்பர் டாக்டர் லிங் தியென் கி (Dr. Ling Tien Gi) என்பவரும் அவருடைய மனைவி ஹெலன் லிங் (Helen Ling) என்பவரும் தங்கி இருந்தார்கள். தாம்சனும் அந்த மாளிகையில் போய் தங்கினார்.
1967 மார்ச் மாதம் 26-ஆம் தேதி. மதியம் 1.30-க்கு ஒரு நடைப்பயிற்சி செய்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ஜிம் தாம்சன் மாளிகையை விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போது அங்கே இருந்தது ஒரே ஒரு பாதை தான். கமுந்திங் சாலை. அந்தச் சாலை வழியாகத் தான் நடந்து போய் இருக்கிறார்.
மாலை 4.00 மணிக்கு தானா ராத்தாவிற்குச் செல்லும் முதன்மைச் சாலையில் அவரைச் சிலர் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் மாலை 6.00 வரையிலும் தாம்சன் திரும்பி வரவே இல்லை. போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள். தேடும் பணி தொடங்கியது.
காட்டுப் புலிகளும் கம்யூனிஸ்டு கொரிலாக்களுக்கும் கண்ணாமூச்சி விளையாடிய காட்டில் ஏறக்குறைய 500 பேர் தாம்சனைத் தேடினார்கள்.
மலேசியப் போலீஸ் களப் படை; ஒராங் அஸ்லி மலையேறிகள்; குர்கா படையினர்; பிரிட்டிஷ் படை வீரர்கள்; சுற்றுப் பயணிகள்; சாரணர்கள்; பொது மக்கள்; சமயப் பரப்பாளர்கள்; அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே களம் இறங்கி விட்டது.
பதினொரு நாட்கள் தேடி இருக்கிறார்கள். உஹும்… ஜிம் தாம்சன் கண்ணில் படவே இல்லை. காணாமலேயே போய் விட்டார். ஒரு துரும்பும் கிடைக்கவில்லை. ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சி உலகளாவிய நிலையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்புறம் அப்படியே பலரும் மறந்து விட்டார்கள். மக்களும் மறந்து வரும் கட்டத்தில் ஓர் அதிர்ச்சி தகவல்.
1985-ஆம் ஆண்டு கேமரன் மலை பிரிஞ்சாங் பகுதியில் ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டு எடுத்தார்கள். அது ஜிம் தாம்சனின் எலும்புக் கூடாக இருக்கலாம் என்றும் நினைத்தார்கள்.
ஆய்வு செய்து பார்த்ததில் அந்த எலும்புக்கூடு அவருடையது அல்ல என்பது உறுதியானது. ஜிம் தாம்சன் காணாமல் போனது தானா ராத்தா காட்டில்... எலும்புக்கூடு கிடைத்தது பிரிஞ்சாங் காட்டில்...
அதன் பின்னர் பல்வேறு ஊகங்கள். பல்வேறு அனுமானங்கள். சரி. ஒரு காலக் கட்டத்தில் இந்தோசீனாவில் வியட்நாம் போர். தெரியும் தானே. அதில் அமெரிக்காவின் தலையீடு.
அதற்கு ஜிம் தாம்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதனால் அதே அமெரிக்காவின் ஓ.எஸ்.எஸ். உளவுத் துறை அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் பட்டது.
இருந்தாலும் பாருங்கள். ஒரு காலத்தில் ஜிம் தாம்சன், அமெரிக்காவின் அந்த ஓ.எஸ்.எஸ். உளவுத் துறைக்கு நிறையவே இரகசியத் தகவல்களைச் சேகரித்து வழங்கி உதவிகள் செய்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் இவரைக் கொல்ல வேண்டும். இப்படியும் ஒரு கேள்வி.
கம்யூனிஸ்டு பயங்கரவாதிகள் கொன்று இருக்கலாம் எனும் மற்றோர் ஐயப்பாடு நிலவியது. மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சி ஏற்படும் காலக் கட்டத்தில் தான் ஜிம் தாம்சன் காணாமல் போய் இருக்கிறார். அதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.
பேரி புரோமன் (Barry Broman). ஓர் அமெரிக்கர், இரண்டு மணி நேர ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார். அதன் தலைப்பு ஜிம் தாம்சன்: தி மேன் & தி லெஜண்ட் (Jim Thompson: The Man & the Legend). சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட படம்.
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர் தியோ போக் ஹுவா (Teo Pok Hwa). இவர் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் மலாயா கம்யூனிஸ்டுகள் தான் உண்மையில் தாம்சனைக் கொன்றார்கள் என்று சொன்னதாக பேரி புரோமன் தன் ஆவணப் படத்தில் கூறி இருக்கிறார்.
1960-களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சின் பெங். இவரைப் பார்க்க ஜிம் தாம்சன் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஓர் அமெரிக்கரிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு கோரிக்கை வந்தது கட்சியின் மேல்மட்டத்தில் சந்தேகங்களை எழுப்பி இருக்கலாம்.
அந்த நேரத்தில் கம்யூனிச நடவடிக்கைகளுக்கு கேமரன் மலை ஒரு மையமாக விளங்கி வந்தது என்பதையும் நினைவில் கொள்வோம்.
உண்மையில் ஜிம் தாம்சன் காணாமல் போவதற்கு முன்னர், அவர் தங்கி இருந்த நிலவொளி மாளிகை, ஒரு காலத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையகமாகச் செயல்பட்டு வந்து உள்ளது.
சின் பெங்கைச் சந்திக்க ஜிம் தாம்சன் விரும்பியது மிக மிக ஆபத்தான விசயமாகக் கருதப் பட்டது. அதனால் ஜிம் தாம்சனைப் பற்றி கூடுதல் தகவல்களைத் தோண்டி எடுத்தார்கள்.
ஜிம் தாம்சன் ஒரு ரகசிய சேவை முகவராக இருந்தது; அமெரிக்க உளவுத் துறையில் சேவை செய்தது போன்ற இரகசியங்கள் எல்லாம் வந்தன. அது மட்டும் அல்ல. அவர் ஓர் உளவாளியாகவும் இருந்தவர்; அதுவும் ஒரு மேற்கத்தியர். அவர் சின் பெங்கைப் பார்க்க விரும்பியது சரியாகப் படவில்லை. ஆளும் சரி இல்லை. நேரமும் சரி இல்லை.
அந்தக் காலக் கட்டத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தொலைத் தொடர்புகள் சிறப்பாக இல்லை. அவர்களிடம் கம்பியில்லாத் தந்தி வசதிகள் இல்லை. அப்போது அந்தக் கட்சியின் தலைமையகம் தாய்லாந்து எல்லைப் பகுதியில் பெத்தோங் எனும் இடத்தில் இருந்தது.
அதனால் மலாயாவில் இருந்த கம்யூனிஸ்டுகள் தனிக் குழுக்களாகத் தனித் தனியாக இயங்கி வந்தார்கள். அவர்களே சொந்தமாக முடிவுகள் எடுத்தார்கள். ஓர் உளவாளியின் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கலாம். சொல்ல முடியாது.
ஜிம் தாம்சனை முடிவு கட்டுவதற்கு உள்ளூரிலேயே முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். 1967-ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் ஜிம் தாம்சன் வாழ்க்கை ஒரு முடிவிற்கு வந்தது.
காட்டுப்புலி கடித்து இருந்தால் எலும்பாவது கிடைத்து இருக்கும். கரடி கடித்து இருந்தால் மயிர் முடியாவது கிடைத்து இருக்கும். ஆனால் காட்டு முழுக்கத் தேடியும் எலும்பும் கிடைக்கவில்லை. எலும்பைக் கடிக்கும் எறும்பும் கிடைக்கவில்லை. என்னைக் கேட்டால் சிந்தாமல் சிதறாமல் சித்திரம் வரையப்பட்டு உள்ளது என்றுதான் சொல்வேன்.
இது உண்மையாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பேரி புரோமன் தயாரித்த ஆவணப் படத்தில் மேற்கண்ட செய்தி சொல்லப் படுகிறது. அதனால் தான் துணிந்து இங்கே பதிவு செய்கிறேன்.
இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். பிரிட்டிஷ் உயர் ஆணையர் சர் ஹென்றி கர்னி கொல்லப் பட்டதும், அந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
அப்படி இருக்கும் போது ஜிம் தாம்சன் விசயத்தில் மட்டும் ஏன் பொறுப்பு ஏற்கவில்லை. சிந்தித்துப் பார்க்க வேண்டிய விசயம்.
பட்டு உலகின் ராஜாதி ராஜா என உச்சம் பார்த்த ஜிம் தாம்சன் கேமரன் மலைக்கு வந்தார். காற்று வாங்கப் போனார். காட்டு வழியில் காணாமல் கரைந்தும் போனார். மலேசிய வரலாற்று மர்மங்களில் ஒரு மாய ஜால நாயகனாய் ஒரு மர்மக் கதையை எழுதிச் சென்று இருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தி கொள்ளட்டும்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.12.2020
சான்றுகள்:
1. https://www.unreservedmedia.com/the-curious-case-of-jim-thompson/)
2. https://asiatimes.com/2017/12/solving-mystery-jim-thompsons-murder/
3. https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Jim_Thompson
4. https://www.unreservedmedia.com/the-curious-case-of-jim-thompson/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக