14 டிசம்பர் 2020

கவரி மானும் கவரிங் மானும்

சிரம்பான், மந்தினில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்குள் ஒரு சின்ன ஊடல். மனைவிக்கு மானம் போகிற விசயம்.

அப்படி என்னதான் நடந்தது. மனைவி ஆசையாய் ஒரு கிளியை வளர்த்து இருக்கிறாள். அது கணவனுக்குப் பிடிக்கவில்லை. ஓர் உயிரை அந்த மாதிரி கூண்டுக்குள் போட்டு அடைத்து வைக்கக் கூடாது. அது பாவம் என்று மனைவியைக் கண்டித்து இருக்கிறான்.

திடீரென்று ஒருநாள் அந்தக் கிளி பறந்து போய் விட்டது. கணவன்தான் திறந்து விட்டு இருக்க வேண்டும் என்று மனைவிக்கு சந்தேகம்.

அதனால் அவன் வளர்த்த நாயை, மனைவி அவிழ்த்து விட்டு இக்கிறாள். விடுதலையான நாய், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய், பக்கத்து வீட்டுக்காரனைக் கடித்துவிட்டது.

அதனால் புருசனுக்கும் மனைவிக்கும் வாய்ச் சண்டை. அதுவே பேய்ச் சண்டையானது. மனைவியை கைநீட்டி அடித்தும் விட்டான். மனைவிக்கு ஆத்திரம். மூட்டைப்பூச்சி மருந்தை வாங்கிக் குடிக்கப் போய் இருக்கிறாள்.

அதைக் கணவன் தடுத்து நிறுத்தி இருக்கிறான். ‘நான் கவரிமான் பரம்பரையைச் சேர்ந்தவள்’ என்று மனைவி சொல்ல, ‘நானும் ஒரு கவரிமான்தான். மருந்தைக் கொண்டுவா.

நானும் குடிக்கிறேன்’ என்று சொல்லி போத்தலைப் பிடுங்கி இருக்கிறான். இரண்டு பேருக்கும் மல்லுக்கட்டு. அதில் மருந்து போத்தல் கீழே விழுந்து உடைந்து போனதுதான் மிச்சம்.

அப்புறம் என்ன. இரண்டு கவரிமான்களும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, கட்டிப் பிடித்து அழுது இருக்கின்றன. வருடங்கள் பல ஆகிவிட்டன. நல்லபடியாக குடும்பம் நடத்தி, நாலு பிள்ளைகளுக்கு அப்பா அம்மா ஆகிவிட்டார்கள்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா. இவர்களின் பெரிய மகள் இப்போது சிரம்பானில் ஒரு புகழ்பெற்ற மருத்துவர். மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்தவர்களுக்கு மருத்துவம் செய்து வருகிறார்.

ஆக, ஒருவர் கவரிமான் பரம்பரையில் இருந்து வந்தால் என்ன. இல்லை வராவிட்டால்தான் என்ன. அதற்காக உயிரைப் போக்கிக் கொள்ள பூச்சிமருந்தைக் குடிக்க வேண்டுமா? இல்லை மானம் போகிறது என்பதற்காக, கவரிமானைப் பிடித்து வம்புக்கு இழுக்க வேண்டுமா? சொல்லுங்கள்.

சரி, கவரிமான்… கவரிமான்… என்று சொல்கிறார்களே, அந்தக் கவரிமானை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா. நான் பார்த்தது இல்லை. பார்க்க ஆசைதான். ஆனால், பார்க்க முடியாதே. சரி, விசயத்திற்கு வருகிறேன்.

கவரிமானைப் பார்க்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அப்படிப்பட்ட ஒரு மான் இருந்தால்தானே பார்ப்பதற்கு. அப்படி ஒரு மான் உலகத்திலேயே இல்லையே. அப்புறம் எப்படி பார்க்க முடியும்.  

அப்படி என்றால் வள்ளுவர் சொன்னது தப்பா என்று நீங்கள் கேட்கலாம். அவர் தப்பாகச் சொல்லவில்லை. தப்பாக எழுதவும் இல்லை. சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதை நன்றாகப் பாருங்கள்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
(969-ஆம் குறள்)


என்று வள்ளுவர் எழுதி இருக்கிறார். அந்தக் குறளில் கவரிமா என்றுதான் சொல்லி இருக்கிறார். கவரிமான் என்று சொல்லவே இல்லை. அந்தக் குறளை மறுபடியும் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல. கவரி மா என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.

கவரி மா என்பது ஒரு விலங்கு. அப்படி ஒரு விலங்கு இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் Yak Bos Grunniens என்று அழைப்பார்கள். அதைத்தான், நம் தமிழ் மக்கள் கவரி மான் என்று போட்டுக் குழப்பி விட்டனர். ’மா’ எனும் எழுத்திற்கு காது குத்தி, மூக்குத்தியும் போட்டு விட்டார்கள்.

புறனானூற்றில் ஒரு பாடல் வருகிறது..

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்…


இமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு இருக்கிறது. அது நரந்தை எனும் புல்லைச் சாப்பிடும். அங்கே தன் துணையுடன் ஜாலியாக வாழும். அர்த்தம் புரிகிறதா. புரியவில்லை என்றால் புறநானூற்றைப் புரட்டிப் பாருங்கள்.

அறிவியல் ரீதியில் கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு இல்லவே இல்லை. அது இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்.

கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல. முடி சடை போல தொங்கக் கூடிய ஒரு விலங்கு. அதாவது சடைமுடியுடன் வாழும் விலங்கு. இன்னோர் ஆச்சரியம் என்ன தெரியுமா. அது மான் இல்லை. மாடு வகையை சார்ந்தது என்பதாகும்.

கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. சிங்கத்தை அரிமா என்று சொல்லவில்லையா. அதைப் போல கவரிமா என்பது ஒரு மாட்டைக் குறிக்கும் பெயர்ச் சொல் ஆகும்.

இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு வாழும். தன் உடம்பில் உள்ள மயிரை இழந்துவிட்டால், குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் அது இறந்துவிடும்.

இதைத்தான் திருவள்ளுவர், ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்கிறார். மற்றபடி கவரிமான் என்று அவர் சொல்லவே இல்லை. இந்தக் கவரிமான் என்பது நாமாக உருவாக்கிய ஓர் உயிரினம்தான்.

ஆக, அன்னப்பறவை எனும் பறவையைப் போல, கவரிமான் எனும் மான் இல்லவே இல்லை. அன்னப்பறவையைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா என்று ஒரு திரைப்பாடல் வேறு இருக்கிறது. இதில் கவிஞர் எந்த மானைச் சொல்கிறார் என்றும் தெரியவில்லை.

வள்ளுவரின் குறளுக்குப் பொருள் எழுதிய சிலர், இந்தக் கவரிமா எனும் சொல்லுக்குத் தவறான விளக்கத்தைக் கொடுத்து இருக்கின்றனர். ஆனால், பரிமேளழகர் மிகச் சரியான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கவரிமா என்பது ’யாக்’ என்று அழைக்கப்படும் ஒரு மாடு. அந்த மாட்டின் வாழ்வியலைச் சரியாகப் புரியாமல் விளக்கம் கொடுக்கலாமா.  இமயமலையைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்குதான் கவரிமா.

கலைஞர் தன் உரையில் ’கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என்று சொல்கிறார். அதே போல மானம் மிக்க மனிதர்கள், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள்’ என்றும் விளக்கம் கொடுக்கிறார்.

அது சரியான விளக்கம். இந்தக் கவரிமான், கவரிமா சர்ச்சையில் கலைஞர் சிக்காதது பாராட்டுக்குரிய செய்தி.

கவரிமானைப் புள்ளிமானுக்கு ஒப்பிட்டும் சொல்வார்கள். அது தவறு. கவரிமான் என்ற ஒன்று இல்லாத போது புள்ளிமானை எப்படி அதற்கு ஒப்பிடுவது. புள்ளிமான் இந்தியா, இலங்கை, நேப்பாளம், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் காட்டுப் பகுதிகளில் வாழும் மான் இனம் ஆகும். பாகிஸ்தானிலும் சிறு அளவில் காணப்படுகிறது.

புள்ளிமானின் தோல் பழுப்பு நிறத்திலும் வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும். அதன் காரணமாகவே, அதற்கு புள்ளிமான் என்று பெயர் வந்தது. புள்ளிமான் ஆண்டுக்கு ஒரு முறை தன் கொம்பினை உதிர்க்கும்.

ஆண் மான்கள் பெண் மான்களை விடப் உருவில் சற்றுப் பெரிதாக இருக்கும். 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

’சவரி முடி’ என்று நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். இந்த முடியை ’கவரி முடி’ என்று அழைப்பார்கள். இது கவரி மாட்டில் இருந்து கிடைக்கும் முடியாகும். அன்றைய பெண்கள் பயன்படுத்திய பொய்முடி. முன்பு சீனாவில் இருந்து மலாயாவிற்கு இறக்குமதியானது.

இப்போது வருகின்றதா என்று தெரியவில்லை. ‘கவரிமுடி’ எனும் சொல்தான் ‘சவரிமுடி’ என்று மாறியதாகவும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, இல்லாத ஒரு மானைப் பிடித்து வந்து, அதற்கு கவரி மான் என்று பெயரைச் சூட்டி விட்டார்கள். அப்புறம் அதற்கு கவரிங் நகைகளைப் போட்டு அழகு பார்த்தார்கள்.

ஆனால், இப்போது அதற்கு கவரிங் நகைகளும் இல்லை. கலரிங் நகைகளும் இல்லை. யாராவது கவரிமானைப் பற்றி பேசினால், இந்த உண்மையைச் சொல்லுங்கள்.

அப்படியே அடம் பிடித்தால் இதையும் சொல்லுங்கள். பாவம் கவரிமான். காட்டிற்குள் ஓடிவிட்டது. பிடிக்கப் போய் இருக்கிறார்கள். பிடித்ததும் குறும்செய்தி வரும் என்று சொல்லுங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2012



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக