25 நவம்பர் 2023

கடாரம் கங்கா நகரம் - 1

தமிழ் மலர் - 02.05.2019

இராஜேந்திர சோழன் கி.பி. 1025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தார். அந்தப் படையெடுப்பினால் தென்கிழக்காசியாவில் பல இந்துமத அரசுகள்; பௌத்தமத அரசுகள்; ஜாவானிய அரசுகள்; சுமத்திரா நாட்டு அரசுகள்; போர்னியோ சுதேசி அரசுகள் காணாமல் போயின. 

இன்றைய வரைக்கும் அந்த அரசுகள் தொலைந்து போன அவற்றின் அரிச்சுவடிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் அடையாளங்கள் காணாமல் போய் விட்டன.


இராஜேந்திர சோழனின் தென்கிழக்காசிய நாடுகள் மீதான படையெடுப்பு உலகத் தமிழர்களின் வரலாற்றில் புகழ்மிக்க ஒரு காலச் சுவடு. தாராளமாகச் சொல்லலாம். அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் வேதனைமிக்க காலப்பதிவு. அதையும் நாம் மறந்துவிட வேண்டாம்.

இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்ததைப் பற்றி நாம் எந்தவிதத்திலும் குறைவாக மதிப்பீடு செய்யவில்லை. ஒரு தவறான மதிப்பீடும் செய்யவில்லை. ஆனால் முக்கியமான ஒரு விசயத்தை நாம் மறந்து விடுகிறோம்.

ஒரு காலக் கட்டத்தில் உலகத்திலேயே மாபெரும் கடல் படையைக் கொண்ட வல்லரசு நாடாகச் சோழப் பேரரசு விளங்கியது. உண்மை. பல நாடுகளைத் தங்களின் வலிமை மிக்க கடல் படையினால் இறுக்கிப் பிடித்து ஆட்சி செய்தது. உண்மை.

ஆனால் அந்தப் படையெடுப்பு நிகழாமல் இருந்து இருக்குமானால் கடாரத்தில் ஒருக்கால்… மீண்டும் சொல்கிறேன்… ஒருக்கால்… இந்தியர்களின் ஆளுமை சற்றே நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம். அல்லது அந்த ஆளுமையின் இடையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

மலேசியாவில் பேராக் மாநிலத்தில் புருவாஸ் கங்கா நகரம் அழிந்து போகாமல் நீடித்து இருக்கலாம். ஜொகூர் மாநிலத்தில் கோத்தா கெலாங்கி எனும் மாயிருண்டகம் நிலைத்து இருக்கலாம். 

இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு அழிந்து போகாமல் சற்றே நீண்ட காலம் உயிர் வாழ்ந்து இருக்கலாம். இது என்னுடைய கருத்து. இது என்னுடைய பார்வை. 

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்தியர்களின் ஆளுமை சில நூற்றாண்டுகளுக்கு மேலும் நீடித்து இருக்கலாம் என்பது ஒரு சின்ன நப்பாசை.

இத்தனை அரசுகள் அழிந்து போனதற்கு இராஜேந்திர சோழன் என்பவரை மட்டும் காரணம் சொல்ல இயலாது. அவர் மீது ஒட்டு மொத்தப் பழியையும் போடவும் முடியாது. அது மிகவும் தப்பு. 

அந்தப் படையெடுப்பு நடப்பதற்கு ஊதுபத்தி ஏற்றி சூடம் கொளுத்தி சாம்பிராணி போட்டதே ஸ்ரீ விஜய பேரரசு தான். அதை நாம் நினைவில் கொள்வோம்.

சோழப் பேரரசிற்கும் சீனப் பேரரசிற்கும் நீண்ட காலமாக இருந்த நட்புறவிற்கு தடைக் கல்லாக அமைந்தது ஸ்ரீ விஜய பேரரசு. அதனால் சினம் அடைந்த சோழப் பேரரசு ஸ்ரீ விஜய பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது. அதன் விளைவாகப் பற்பல அரசுகளும் அழிந்து போயின.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பைப் பெருமையாக நினைத்துக் கொள்ளலாம். தப்பு இல்லை. ஆனால் அதே சமயத்தில் மலாயாவில் சில பல இந்தியர்களின் அரசுகள் அழிந்து போனதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

அழிக்கப்பட்ட இந்தியர்கள் அரசுகள் பெரிதாகத் தெரிகிறனவா அல்லது இராஜேந்திர சோழனின் படையெடுப்பு மட்டும் நமக்குப் பெருமையாகத் தெரிகின்றதா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளில் மிகவும் புகழ் பெற்றது சைலேந்திரா பேரரசு. ஜாவா தீவில் கோலோச்சிய அந்தப் பேரரசை தரநீந்தரன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். 

அவருடைய காலத்தில் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இது கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அந்தக் கட்டத்தில் சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு. ஜாவாவில் சைலேந்திரா பேரரசு. இந்த இரண்டு பேரரசுகளும் ஒன்றாக இணைந்தன. ஒரே பேரரசாக மாறி ஒன்றாக ஆட்சி செய்தன. ஸ்ரீ விஜய எனும் பெயரில் அந்த ஆட்சி நடைபெற்றது.


அப்படி கூட்டாக இணைந்த ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் தான் கடாரம் எனும் பூஜாங் சமவெளி ஆட்சியும் நடைபெற்றது. 

கடாரத்தைக் ஆகக் கடைசியாக ஆட்சி செய்தவர் சங்கராமா விஜயதுங்கவர்மன். இவர் இந்தோனேசியாவில் இருந்து கடாரத்திற்கு வந்தவர். ஒரு ஸ்ரீ விஜய அரசர். இவர்தான் கடார மண்ணில் கடைசி கடைசியாகக் கால் பதித்து ஆட்சி செய்தவர். சுங்கை மெர்போக் ஆற்றில் கப்பல் ஓட்டியவர். 

சுங்கை மெர்போக் ஆறு என்பதைச் சின்ன ஆறாக நினைத்துவிட வேண்டாம். மலாக்கா நீரிணையில் அந்த ஆறு இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கிலோ மீட்டர்கள். அவ்வளவு பெரிய ஆறு. தொடுவானத்தில் கடலும் ஆறும் ஒன்றாகக் கலந்து நிற்கும். கண்கொள்ளாக் காட்சி.

இந்த ஆற்றில் மூன்று முறை படகு பயணம் செய்த அனுபவம் உள்ளது. பயணம் செய்யும் போது கடாரத்து அரசர்களும் இராஜேந்திர சோழனும் நினைவில் வருவார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பயணம் செய்த அதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் எனும் பெருமையும் ஏற்படும். 



ஆசிய வரலாற்றைப் பாருங்கள். இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் எப்போதுமே நல்ல ஓர் உறவுமுறை இருந்து வந்தது. கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் நல்லவிதமான பண்டமாற்று வணிகங்கள் நடைபெற்று உள்ளன. இந்து சமயப் பண்பாட்டு மாற்றங்களும் பாரம்பரியக் கலாசாரப் பரிவர்த்தனைகளும் நன்றாகவே தடம் பதித்து உள்ளன. 

அந்தத் தடங்கள் அப்படியே கொடுக்கல் வாங்கல் வரை போய் இருக்கின்றன. கொடுக்கல் வாங்கல் என்றால் பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் முறையாகும். 

கொடுக்கல் வாங்கலில் பொன்னும் மணியும் கோடிக் கோடியாய்ப் புழங்கி இருக்கின்றன. அந்தக் காலத்து அரசர்கள் பொன்னும் மணியும் சேர்ப்பதில் கெட்டிக்காரர்கள். மலை மலையாய்ச் சேர்த்து அழகு பார்ப்பதிலும் வல்லவர்கள்.

இந்தியாவில் ஆட்சி செய்த இந்திய அரசர்களின் அத்தகைய பலகீனங்களைத் தெரிந்து கொண்ட பின்னர் தானே இந்தியாவின் மீது பற்பல அந்நியத் தாக்குதல்கள் நடந்து இருக்கின்றன. 


கிரேக்கர்கள்; அராபியர்கள்; துருக்கியர்கள்; ஈரானியர்கள்; ஆப்கானியர்கள்; மங்கோலியர்கள்; கில்ஜிகள்; துக்ளக்குகள்; லோடிகள் எனும் பட்டியல் இரயில்வண்டி பாதை போல நீண்டு கொண்டே போகும். இவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் மீது படை எடுத்து வந்து இருக்கிறார்கள். 

யானைகள் மீது அம்பாரிகள் வைத்து இந்தியாவின் சொத்துக்களைக் கோடிக் கோடியாய்த் தூக்கிக் கொண்டு போய் இருக்கிறார்கள். கஜ்னி முகமது, கோரி முகமது; பாபர், நாடீர் ஷா, செர் ஷா போன்ற படையெடுப்பாளர்களை அதில் சேர்க்கலாம். சரி.

நல்ல உறவு முறையில் இருந்த சோழர்களுக்கும் ஸ்ரீ விஜய அரசர்களுக்கும் இடையே ஏன் பிரச்சினை வந்தது. அதனால் எப்பேர்ப்பட்ட இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

இராஜேந்திர சோழனின் படையெடுப்பிற்குச் சில பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. உண்மையிலேயே அந்தக் காரணங்களை வரலாற்று வேதனைகள் என்றுதான் சொல்ல வேண்டும். தப்பாக நினைக்க வேண்டாம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுப்பை நடத்தியது இராஜாராஜ சோழன் அல்ல. அவருடைய மகன் இராஜேந்திர சோழன். அந்தப் படையெடுப்பிற்குக் கட்டளை போட்டது இராஜாராஜ சோழன். படையெடுப்பை நடத்திக் காட்டியது அவருடைய மகன் இராஜேந்திர சோழன். 


இராஜாராஜ சோழன் என்பவர் இராஜேந்திர சோழனின் தந்தையார். 
இராஜேந்திர சோழன் என்பவர் இராஜாராஜ சோழனின் மகனார்.

தென்கிழக்கு ஆசியாவில் சோழப் பரம்பரைக்குப் போட்டியாக இருந்த அத்தனை அரசுகளையும்; அந்த அரசுகளுக்குக் கீழ் இருந்த சிற்றரசுகளையும் அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். அந்தப் படையெடுப்பு ஓராண்டு காலமாக நடந்து இருக்கிறது. காயங்கள் இன்னும் ஆறவில்லை.

அந்த அவலத்தின் கோலங்களில் பல பேரரசுகள் சின்னா பின்னமாகிப் போயின. பல சிற்றரசுகள் நார் நாராய்க் கிழிந்து சின்னா பின்னமாகிப் போயின. இந்தியர்களின் அரசுகள் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜாவானியப் பூர்வீக அரசுகளும்; போர்னியோ பூர்வீக அரசுகளும் மாட்டிக் கொண்டன. 

தாய்லாந்திலும் பர்மாவிலும் சில அரசுகள் மாட்டிக் கொண்டன. அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.

சைலேந்திரா பரம்பரையினரின் வழி வந்தது ஸ்ரீவிஜய பேரரசு. அந்த அரசு இழந்து போன தன் முகவரியை இன்று வரையிலும் தேடிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சொல்ல வேண்டி வருகிறது.

ஆசிய வரலாற்றில் அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அந்தப் படையெடுப்பினால் பல இலட்சம் பேர் பலியானார்கள். கடார மண்ணில் மட்டும் பல்லாயிரம் பேர் இறந்து போய் இருக்கிறார்கள். 

சண்டை போட்டு மறைந்து போன வீரர்களின் பட்டியல் ஒரு புறம் இருக்கட்டும். அமைதியாய் ஆனந்தமாய் அப்பாவித் தனமாய் வாழ்ந்த ஆயிரம் ஆயிரம் பொதுமக்கள் அநியாயமாக இறந்து போய் இருக்கிறார்களே. அந்தப் பட்டியலை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் சங்கராமா விஜயதுங்கவர்மன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள் நிறைந்து உயர்ந்து மலை போல் நிற்கின்றன. 

கடாரத்தின் வரலாற்றில் உச்சம் பார்த்த மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள் தெரிகின்றன. நெடும் காலமாய்க் கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள் தெரிகின்றன. அந்தப் பச்சைத் தாவரங்களுக்கு அடியில் ஓராயிரம் கடாரத்து மர்மங்கள் விசும்புவதும் கேட்கின்றன. 

அந்த மர்மக் குவியல்களைப் பற்றி முறையான ஆய்வுகள் செய்து மீட்டு எடுப்பதற்கு தடங்கலாகப் பல வரலாற்றுச் சித்தர்கள் எங்கேயும் இருக்கிறார்கள். இதற்கு இடையில் கடாரத்து வரலாற்றை மீட்டு எடுப்போம் என்று கங்கணம் கட்டும் இந்தியப் பெருமக்கள் எங்கேயும் இருக்கவே செய்கிறார்கள். 

(தொடரும்)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
02.05.2019

சான்றுகள்

1. Nilakanta Sastri, K.A. (2000). A History of South India. New Delhi: Oxford University Press. ISBN 0195606868.

2. Vasudevan, Geeta (2003). Royal Temple of Rajaraja: An Instrument of Imperial Chola Power. Abhinav Publications. ISBN 0-00-638784-5.

3. Zvelebil, Kamil (1974). A History of Indian literature Vol.10 (Tamil Literature). Otto Harrasowitz. ISBN 3-447-01582-9.

4. S. R. Balasubrahmanyam, B. Natarajan, Balasubrahmanyan Ramachandran. Later Chola Temples: Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280), Mudgala Trust, 1979.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக