20 செப்டம்பர் 2009

கணினியும் நீங்களும் – 20.09.2009

[இந்தப் பகுதியைப் படித்த பின்னர், தயவு செய்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.  கீழே பின்னூட்டம் எனும் பகுதி உள்ளது. அங்கே எழுதலாம். ஏறக்குறைய ஒரு நிமிடம் பிடிக்கும்.  அவ்வளவுதான். ஆக, என்ன மாற்றங்கள் செய்யலாம். எப்படி இன்னும் சிறப்பாகச் செய்யலாம். இப்படி உங்கள் கருத்துகளைச் எழுதுங்கள். தவிர உங்கள் கேள்விகளையும் கேட்கலாம். படங்களை அனுப்பி வையுங்கள். அதையும் உலக மக்கள் பார்க்கட்டுமே!]

கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com

கே: சென்ற வாரம் Firefox சம்பந்தமாக நான் கேட்ட கேள்விக்கு நல்ல பதிலைக் கொடுத்தீர்கள். நன்றி. இப்போது நான் Internet Explorer உலவியைப் பயன் படுத்துகிறேன். அதோடு இந்த Firefox ஐயும் சேர்த்து இயக்க முடியுமா. பிரச்னை வருமா?

ப: பிரச்னை வராது. ஒரே கணினியில் இந்த இரண்டு உலவிகளையும் இயங்க வைக்கலாம்.  Google Chrome, Internet Explorer, Firefox ஆகிய மூன்று உலவிகளையும் ஒரே சமயத்தில் என் மடிக்கணினியில் நான் இயக்கிப் பார்த்தேன். எந்தப் பிரச்னையும் வரவில்லை. இந்த மூன்று உலவிகளில்  என்னுடைய அனுபவத் தேர்வு Firefox தான். இதற்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


கே: என்னுடைய Desktop மேலே உள்ள அடையாளச் சின்னங்கள் பெரிது பெரிதாக மாறிவிட்டன. என்ன செய்தும் சின்னதாக வரவில்லை. என்ன செய்தால் சின்னதாகும்?

ப: Desktop என்பதைத் தமிழில் முகப்புத் திரை என்று சொல்லலாம். கணினியைத் திறந்ததும் முதன்முதலில் ஒரு திரை வருகிறதே அதுதான் இந்த முகப்புத் திரை. நம் கணினியின் உள்ளே என்னென்ன நிரலிகள், செயலிகள், ஆவணங்கள், படங்கள் இருக்கின்றனவோ அவற்றின் அடையாளமாக சின்னச் சின்ன அடையாளங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆக, இந்தச் சின்னங்கள் பெரிதாக மாறிவிட்டன என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் ஊரில் இல்லாத போது, யாரோ ஊர் பேர் தெரியாத கணினி வித்துவான்கள் அல்லது கற்றுக் குட்டிகள் உங்கள் கணினியை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கலாம். ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்கிற ஆராய்ச்சிதான். தயவு செய்து பெரிய மனசு பண்ணி பிரச்னையைப் பெரிசு படுத்த வேண்டாம்.

சரி. எப்படி பிரச்னையைத் தீர்ப்பது. முகப்புத் திரையில் காலியாக உள்ள இடத்தில் சுழலியினால் வலது சொடுக்கு செய்யுங்கள். Properties என்பதைச் சொடுக்கி Appearance என்று வரும் பட்டையையும் முடுக்கி விடுங்கள். அப்புறம் Effects என்பதைத் தேர்வு செய்தால் அடுத்து Advanced Appearance எனும் திரை வரும். அதில் Icon என்பதைத் தட்டுங்கள். Icon என்பது முகப்புத் திரையில் தெரியும் அடையாளச் சின்னம். சரியா.

இந்த இடத்தில் சின்னத்தின் அளவைச் சின்னதாக ஆக்கிக் கொள்ளுங்கள். OK பொத்தானைத் தட்டிவிட்டு வெளியே வாருங்கள். அதற்கு அப்புறம் Display Properties எனும் திரை தெரியும். அதில் Apply என்பதைத் தட்டுங்கள். சில விநாடிகளில் உங்கள் கணினித் திரை சாம்பல் நிறத்திற்கு மாறும். கவலைப் பட வேண்டாம்.

வருவது எல்லாம் நன்மைக்கே என்று பேசாமல் இருக்கவும். இன்னும் ஓர் அறிவிப்பு வரும். அதையும் OK செய்யுங்கள். அப்புறம் அடையாளச் சின்னங்கள் எல்லாம் சின்னதாக மாறி இருக்கும். இப்போது சந்தோஷம்தானே! இவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு. விண்டோஸ் விஸ்தாவைப் பயன் படுத்தினால் Personalize > Window Colour and Appearance > Advanced எனும் இடத்திற்குப் போய் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

எஸ்.திருக்குமரன், செலாமா, பேராக்

கே: என்னுடைய கணினியில் பல Screen Savers உள்ளன. இதனால் கணினியின் வன்தட்டில் அதிக இடம் பிடிக்கிறது. எப்படி காப்பாற்றுவது?

ப: எதைக் காப்பாற்றச் சொல்கிறீர்கள். உங்கள் Hard Disk எனும் வன்தட்டையா இல்லை ஆசை ஆசையாக நீங்கள் வளர்த்து வரும் Screen Savers எனும் திரைக் கோலங்களையா. உங்களுக்கு ஒன்று தெரியுமா. எவ்வளவுக்கு எவ்வளவு கணினியில் திரைக் கோலங்கள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் கணினிக்கு ஆபத்து. ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு மற்றதை அழித்து விடுங்கள். திரைக் கோலங்கள் வன் தட்டில் நிறைய இடங்களை எடுத்துக் கொள்ளும். பல பிரச்னைகளை உருவாக்கி விடும்.

கா. தர்ஷனன், தாமான் செராஸ், கோலாலம்பூர்

கே: கணினித் துறையில் சிறந்து விளங்குபவர்கள் பெண்கள்தான் என்று என் நண்பர் சொல்கிறார். ஆண்கள்தான் என்று நான் சொல்கிறேன். நீங்கள் யார் பக்கம்?

குடும்பங்களில் குழப்படி செய்வதற்காகவே ஒரு கும்பல் வந்திருக்கிறதாம். கேள்வி பட்டேன். அந்தக் கும்பலில் நீங்கள் எப்பொழுது மெம்பர் ஆணினீர்கள். தம்பி தர்ஷனா, இப்ப தான் கொஞ்ச நாளா இந்த சிக்கன் குன்யா- மட்டன் குன்யா இல்லாமல் மக்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டுமே. வயிற்றெரிச்சல் வரக்கூடாது. ஆக, உங்கள் கேள்விக்கு பதில்… தீபாவளி முடியட்டுமே.

ஜெய வீரபாண்டியன், போர்ட் கிள்ளான்

கே: காலத்திற்கு ஏற்றவாறு கணினிப் பகுதியை ஆரம்பித்து நல்லவிதமாக பதில் சொல்லி வருகிறீர்கள். உங்களுக்கும் நண்பன் ஆசிரியர்களுக்கும் மிகவும் நன்றி. உங்கள் சேவைக்குப் பாராட்டுகள். ஒரு கேள்வி சார். கைத் தொலைப்பேசிக்கு ஆங்கில அகராதி இலவசமாகக் கிடைக்கிறதாமே. எப்படி சார்?

ப: பாராட்டுகளுக்கு நன்றி. ஒரு முழுப் பக்கத்திற்கு கணினி கேள்வி பதில் கொடுக் கலாம், பலருக்கு நன்மையாக இருக்கிறது என்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது. இருந்தாலும் பாருங்கள் எதற்கும் ஓர் அளவு உண்டு. தயிர் சாதத்திற்கு ஊறுகாய் ரொம்ப முக்கியம். சரி தானே.  எல்லாருக்கும் தெரியும். அதே சமயத்தில் ஊறுகாயையே தயிர் சாதமாக மாற்றினால் நன்றாக இருக்குமா. கணினி கேள்வி பதில் ஓர் ஊறுகாய் போல இருந்து விட்டுப் போகட்டும்.

கணினி தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் http://ksmuthukrishnan.blogspot.com/ எனும் இணையத் தளத்திற்கு போய்ப் பாருங்கள். அல்லது http://ksmuthukrishnan.wordpress.com எனும் முகவரியிலும் போய் பார்க்கலாம். கணினி சம்பந்தமாக புதிய புதிய விஷயங்கள் ஒவ்வொரு நாளும் அங்கே வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நம்முடைய நண்பனில் வெளியாகும் ‘கணினியும் நீங்களும் கேள்வி பதில்’ அங்கம், அதே தினத்தில் இணையத்திலும் வெளியாகும். நண்பன் வாசகர்கள் நாளிதழ் வாயிலாக மலேசியாவில் படிப்பார்கள். ஆனால், அதே கேள்வி பதில் அங்கத்தை உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் இணையம் வழியாகப் படிப்பார்கள். பார்த்த பின்னர் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

சரி. கைப்பேசியில் அகராதியைப் பதித்துக் கொள்ளும் விஷயத்திற்கு வருகிறேன்.  http://www.getjar.com/products/10603/Dictionary எனும் முகவரியில் அந்த நிரலி கிடைக்கிறது. அந்த இணைய முகவரிக்குச் சென்றதும் உங்கள் கைப்பேசியின் வகையைத் (Model) தேர்வு செய்யுங்கள். பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கு செய்து கணினிக்குள் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கைப் பேசிக்குள் மாற்றிக் கொள்ளலாம். அகராதி உங்கள் உள்ளங்கைக்குள் வந்துவிடும்.



குமாரி. ஜானகி மலர், ரிங்லட், கேமரன் மலை

கே: திடீரென்று என் கணினியின் திரை காலியான தோற்றத்தைத் தருகிறது. விசைப் பலகையில் எந்தப் பட்டனைத் தட்டினாலும் ஒன்றும் வரவில்லை. ஆனால், கணினியை அடைத்து விட்டு மீண்டும் திறந்தால் திரை வருகிறது. என்ன செய்யலாம்?

ப: உங்கள் கணினியில் VGA Card எனும் வீடியோ அட்டை பிரச்னை பண்ணுகிறது என்று நினைக்கிறேன். எப்படி இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது. திரையில் காலியான தோற்றம் வந்ததும் அதாவது ஒன்றுமே தெரியாத நிலை வந்ததும், உங்களுடைய விசைப் பலகையில் விண்டோஸ் அடையாளம் கொண்ட பொத்தானை அழுத்துங்கள்.
Run என்று ஒரு தொகுதி வரும். இருந்தாலும் திரைதான் தெரியவில்லையே அப்புறம் எப்படி பார்க்க முடியும் என்று கேட்கலாம். கவலைப்பட வேண்டாம். விண்டோஸ் அடையாளம் கொண்ட பொத்தானை அழுத்தியதும் சுழலியை நகர்த்தக் கூடாது. அதை அசைக்கவும் கூடாது. சுழலியின் அம்புக்குறி Run கட்டத்திற்குப் போய் விடும். பார்க்கும் போது தெரியவே தெரியாது. ஆனால், அந்த அம்புக்குறி அங்கேதான் இருக்கும். அப்படி புரகிராம் செய்து வைத்திருக்கிறார்கள்.
சுழலியை அசைத்தால் காரியம் கெட்டுப் போகும். பத்திரமாக cmd என்று டைப் செய்யுங்கள். இப்போது Command Prompt எனும் Dos விண்டோஸ் வரும். இதை நீங்கள் பார்க்கலாம். சின்னக் கறுப்புக் கட்டமாக இருக்கும். இந்தக் கட்டத்தில் Alt + Enter எனும் பொத்தான்களைத் தட்டுங்கள். இந்தக் கட்டம் முழுத் திரையிலும் தெரியும். திரையில் எழுத்துகள் மட்டுமே தெரியும். அடுத்து Exit என்று டைப் செய்து வெளியாகி விடுங்கள்.
உங்களுடைய வீடியோ அட்டையில் சின்னப் பிரச்னை என்றால் கணினித் திரை பழையபடி வழக்க நிலைக்கு திரும்பி வந்துவிடும். வந்தாக வேண்டும். கணினிக்கு இந்த ஊசி மருந்து கொடுத்தும் காய்ச்சல் அடித்தால் வேறு வழி இல்லை. VGA அட்டையை மாற்றித் தான் ஆக வேண்டும். நல்ல தரமான ATI அல்லது NVIDIA கார்டுகள் RM 100க்குள் கிடைக்கும்.

6 கருத்துகள்:

  1. நல்ல தகவல்.நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா பதிவுலகிற்கு தங்கள் வலை ஒரு வரப்பிரசாதம்! இப்பதிவுகள் மேலும் பலரையும் சென்றடைந்து, பயனளிக்க வேண்டும் என்பதே நமது தாழ்மையான விண்ணப்பம்.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்திற்கு நன்றி.
    வாழ்க வளமுடன்!
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நல்ல தகவல்கள்..நன்றி....

    பதிலளிநீக்கு
  5. ஐயா ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டுப்பிடிக்கலாமா? அதற்கான வழிகளை சொல்லுங்கள் ஐயா?

    பதிலளிநீக்கு