21 September 2009

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் - 2 (மறு பதிப்பு)


போருக்குப் பின் ஹுமாயுன் ஆக்ரா நகரத்தையே வேட்டை ஆடத் தொடங்கினான். முதுகெலும்பையே முறித்தெடுக்கும் வேட்டை. கடைசியில் மன்னர் லோடியின் தாயாரைக் கண்டுபிடித்தான். ஒரு வீட்டில் மறைந்து இருந்தார். வயதான பெண். ஹுமாயுன் ஒன்றும் செய்யவில்லை. எதிரியின் தாயாராகப் பார்க்கவில்லை. ஒரு வயதான பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தான்.


இருந்தாலும் ஹுமாயுனைச் சாந்தப்படுத்த ஒரு பெட்டி நிறைய தங்க ஆபரணங்களையும் நவரத்தின கற்களையும் சேர்த்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அந்தப் பெட்டிக்குள்தான் கோல்கொன்டாவில் இருந்து டில்லிக்கு வந்த கோகினூர் வைரம் இருந்தது. 


அவற்றை எடுத்துக் கொண்டு போய் தன் தந்தை பாபரிடம் கொடுத்தான் ஹுமாயுன். அதனுள் இருந்த கோகினூர் வைரத்தைப் பார்த்து எல்லோருமே மலைத்துப் போனார்கள். அப்பேர்ப்பட்ட ஒளி, அப்பேர்ப்பட்ட பிரகாசம், அப்பேர்ப்பட்ட வசீகரம். கோகினூர் வைரம் என்றால் சும்மாவா!

கோகினூர் வைரம் காலம் காலமாகப் பட்டைத் தீட்டப்படாமல் இருந்தது. வைரத்தை அழகு படுத்த வேண்டும் என்று மன்னர் பாபர் ஆசைப்பட்டார். ஆக, போர்கியோ எனும் பொற்கொல்லனைக் கூப்பிட்டு பட்டைத் தீட்டித் தருமாறு கேட்டார். பொற்கொல்லனும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போனான். பாபர் கொடுக்கும் போது அந்த வைரத்தின் எடை 793 காரட். உலகத்திலேயே அப்போதைக்கு பட்டை தீட்டப்படாத பெரிய வைரம் அதுதான். 

பொற்கொல்லன் என்ன செய்தான் ஏது செய்தான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பட்டைத் தீட்டிக் கொண்டு வந்து மன்னனிடம் மறுபடியும் கொடுக்கும் போது அதன் எடை 186 காரட்டாகக் குறைந்து போயிருந்தது. 607 காரட் அபேஸ். கடுப்பாகிப் போனார் பாபர். 

அப்புறம் என்ன. அவன் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார். அவனுடைய சொந்த பந்தங்களின் நில புலன்களை பறிமுதல் செய்தார். ஆத்திரம் தீரவில்லை. பொற்கொல்லனைத் தூக்கிச் சிறையில் போட்டார். நல்ல வேளை அவனுடைய உயிர் தப்பியது.

1530ல் பாபர் இறந்து போனார். ஹுமாயுன் பதவி ஏற்ற பத்து ஆண்டுகளில், எங்கிருந்தோ வந்த Sher Khan Sur எனும் பழைய எதிரி மொகலாயர்கள் மீது படை எடுத்தான். அதில் ஹுமாயுனுக்குப் படுதோல்வி. ஹுமாயுன் தன் மனைவி பிள்ளைகளுடன் கோகினூர் வைரத்தையும் எடுத்துக் கொண்டு ஈரானுக்குத் தப்பி ஓடினார். நாடோடியானர் ஹுமாயுன்.சொந்தச் சகோதரர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. இடையே அவருடைய வைரத்தை அபகரித்துக் கொள்ள பல திட்டங்கள் போடப்பட்டன. பல சூழ்ச்சிகள். பணக்காரர்கள் பலர் பலவிதமாகக் கதை கட்டி  கோகினூர் வைரத்தை விலை பேசினர். அதிலிருந்து எல்லாம் தப்பித்துக் கடைசியில் அந்த வைரம் ஈரான் போய்ச் சேர்ந்தது.

அங்கே அந்த வைரத்தை அடமானமாக வைத்து தன் நாட்டை மீட்டுத் தருமாறு ஈரானிய மன்னன் Shah Tamasp ஐக் கேட்டுக் கொண்டார். சம்மதித்த ஈரான் மன்னன் 12000 பாரகத் துருப்புகளை ஹுமாயுனுக்குக் கொடுத்து உதவினான்.  பயங்கரமான போருக்குப் பின்னர்   மொகலாய சாம்ராஜ்யம் மறுபடியும் கிடைத்தது. ஆனால், கோகினூர் வைரம் மட்டும் கிடைக்கவில்லை.  ஈரானிலேயே அடைக்கலம் ஆனது.

அதன் பின்னர், கோகினூர் வைரம் அங்கே பல தலைமுறைகளுக்கு கைமாறியது. ஒரு நூறாண்டுகள் காலத்திற்கு கோகினூர் வைரம் ஈரான் அரண்மனைகளில் வலம் வந்தது. பின்னர், கோல்கொன்டா அரண்மனைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. எப்படி! இங்கேதான் சுவராசியமான கதையே வருகிறது. அந்தக் காலத்தில் கோல்கொன்டா சாம்ராஜ்யம் மிகமிகப் புகழ்பெற்றது. அதன் கீர்த்திகள் உலகம் முழுமையும் பரவி நின்றன. கோல்கொன்டா மன்னருடன் நட்பு வைத்துக் கொள்ள ஈரான் மன்னர் விரும்பினார். அந்த நட்பின் அடையாளமாக கோகினூர் வைரம் கோல்கொன்டா மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. 

இந்தக் கோகினூர் வைரத்தின் மர்ம ஜாலங்களைப் பாருங்கள். எங்கிருந்து போனதோ அங்கேயே மறுபடியும் வருகிறது. கோல்கொன்டா அரண்மனையில் கோகினூர் வைரம் சில வருடங்கள்தான் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தில் கோல்கொன்டா சுல்தானுக்கு மிர் ஜும்லா என்பவர் நண்பராக இருந்தார். மிர் ஜும்லா ஒரு பாரசீக வணிகர். அவருக்கு எப்படியாவது கோல்கொன்டா சாம்ராஜ்யத்தின் மன்னராக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கோல்கொன்டாவின் இரகசியம் எல்லாம் மிர் ஜும்லாக்கு அத்துப்படி. ஆக, அப்போது Deccan Plataeu எனப்படும் தக்கணபூமியின் ஆளுநராக இருந்த ஒளரங்கசிப்பின் மண்டையைக் கழுவினார் மிர் ஜும்லா.

மிர் ஜும்லா உசுப்பிய உசுப்பில் சிவனே என்று இருந்த ஒளரங்கசிப் வெறி பிடித்துப் போய் கோல்கொன்டாவையே அழித்து ஒழித்துவிட்டான். கோல்கொன்டா கஜானாவைக் காலி செய்யும் போது இந்தக் கோகினூர் வைரமும் சிக்கியது. அந்த வைரத்தை அப்படியே கொண்டு போய் டில்லியில் இருந்த தன் சகோதரி ஜகநாராவிடம் ஒளரங்கசிப் கொடுத்திருக்கிறான். 


அப்போது மொகலாய சாம்ராஜ்யத்திற்கு ஷாஜகான் மன்னராக இருந்தார். ஜகநாரா அதை தன் தந்தை ஷாஜகானிடம் கொடுக்க... கோகினூர் வைரம் பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்தது. பார்த்தீர்களா. இந்த வைரம் சாமான்யப்பட்ட வைரமா! இனிமேல்தான் கடல் கடந்து போன கதையே வரப் போகிறது. அமைதியாகப் படியுங்கள். (தொடரும்)

4 comments:

 1. சுவாரஸ்யமாகவும் விறுவிறுபாகவும் தொடரும் பதிவுகள்! சிறப்பு! புதிய தகவல்கள் பல, நன்றி அய்யா!

  ReplyDelete
 2. நன்றி.
  உங்களுடைய ஆதரவான சொற்களுக்கு நன்றி.

  ReplyDelete
 3. இது போன்ற வரலாற்றுக் கட்டுரைகள் எங்களுடன் பரிமாரி கொண்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 4. hi Mr.Muthu,
  pls keep up your good work.

  ReplyDelete