07 அக்டோபர் 2009

கணினியும் நீங்களும் உங்கள் கேள்வி எங்கள் பதில் - 4.10.2009


அர்ச்சனா முனுசாமி, archana.munusamy-yahoo-com
கே: உலகில் முதல் கணினி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

ப: 1943 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதல் கணினியை உருவாக்கினார்கள். மின்னியல் சாதனங்கள் சாதாரண நடைமுறைக்கு வந்து கொண்டிருந்த காலக் கட்டம் அது. இப்பொழுது உள்ள கணினிகளை ஒரு காய்கறிப் பைக்குள் போட்டு அப்படியே அலுங்காமல் குலுங்காமல் அமுக்கி விடலாம். முன்பு இருந்த கணினிகள் அப்படி இல்லை. எடுத்தால் எட்டு வெள்ளி. பார்த்தால் பத்து  வெள்ளி என்பார்களே அந்த மாதிரி. எல்லாம் டன் கணக்கில்.

அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ENIAC எனும் கணினி இருக்கிறதே அதன் எடை முப்பது டன்கள். அதாவது 50 பேரை ஏற்றிச் செல்லும் ஒரு பெரிய பேருந்து இருக்கிறதே அந்த அளவிற்கு கனம். அதன் நீளம் எவ்வளவு தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம். 80 அடிகள் நீளம். மூன்று பெரிய லாரிகளை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு நீளம் இருக்கும். அவ்வளவு நீளம். அதன் உள்ளே 17,000 கண்ணாடிக் குழாய்கள். அதை வைத்துக் கொண்டு ஒரு இலட்சம் ஆரஞ்சு பாட்டில்களைத் தயாரித்து ஒரு சின்ன கம்பெனியையே திறந்து விடலாம்.

இப்படி கஷ்டப் பட்டு செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அதன் வேகம் ரொம்பவும் கம்மி. இப்போது உள்ள கணினிகள் அந்தக் காலத்து 'எனியாக்' கணினியை விட 50 ஆயிரம் மடங்கு துரிதமாக வேலைகளைச் செய்கின்றன. இவற்றின் கொள் அளவும் (disc storage) மிக மிகக் குறைவு. கணினிக் கர்த்தாகளின் தலையாய முயற்சிகளுக்குத் தலை வணங்குவோம்.

முருகன் சுப்பிரமணியம்  Murugan_Subramaniam-ameron-com-my
கே: இணையம் மூலமாக FM வானொலி லையங்களிலிருந்து 24 மணி நேரமும் பாடல்களைக் கேட்க முடியும் என்கிறார்கள். எப்படி?
ப: FM என்பது Frequency Modulation எனும் சொற்களின் சுருக்கம். இதைத் தமிழில் பண்பலை என்கிறோம். இணையத்தில் பல பண்பலை வானொலி லையங்கள் உள்ளன. http-www-tamilfms-com எனும் இணையத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். அல்லது கூகிள் தேடல் இயந்திரத்திற்குப் போய் Tamil Online Radio Stations என்று அச்சு (type) செய்தாலு போதும். சரம் சரமாக வந்து கொட்டும். டி.எச்.ஆர் ராகா, மின்னல், வசந்தம், ஜெர்மன் வானொலி, பிபிசி, கனடிய தமிழ் ஒலிபரப்பு, சென்னை அகில இந்திய வானொலி, யூயார்க் நகரம், பாரிஸ் மல்லிகா என்று றைய வரும். உங்களுக்குப் பிடித்தமானதைத் தேர்ந்தெடுத்து கேட்டு ரசிக்கலாம்.

இதற்கு இணையத் தொடர்பு இருக்க வேண்டும். இந்தத் தளங்களில் வீடியோ தளங்களும் உள்ளன. இன்னும் ஒரு விஷயம். நீங்களும் சொந்தமாக ஒரு வானொலி இணையத் தளத்தையும் நடத்த முடியும். ஆஹா... முடியுமா என்று வாயைப் பிளக்க வேண்டாம். முடியும்.

அது ஒன்றும் பெரிய கம்ப சித்திரம் இல்லை. நானும் நடத்திப் பார்த்திருக்கிறேன். வருகிறவர்கள் போகிறவர்களுக்கு எல்லாம் அது என்னவோ அந்தக் குத்துப் பாட்டு கொத்துப் பாட்டுதான் வேண்டுமாம். நமக்கு அது எல்லாம் சரி பட்டு வராது என்று றுத்தி விட்டேன். அந்த மாதிரி பொல்லாப்பு வேண்டாம் என்பது அனுபவசாலியின் அறிவுரை.

அதையும் மீறினால் அப்புறம் என்ன உங்கள் இஷ்டம். சரி. http-www-shoutcast-com-download எனும் இணையத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். சகலமான மங்கள மரியாதை கொடுப்பார்கள். 'வடிவேலு... ஆஹா... வடிவேலு' வானொலி நிலையம் அல்லது 'கருத்தம்மா... ஓகோ... கருத்தம்மா' வானொலி நிலையம் என்ற ஒன்றைத் திறந்து  நன்றாக நடத்திக் கொள்ளுங்கள். மன்னிக்கவும்...  வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அர்சுன் செல்வராஜா  arjunselvaraja-ymail-com
கே: வைரஸ் என்றால் கணினியைத் தாக்கும் அழிவி என்பது தெரியும். சிலர் Trojan, Worm என்று சொல்கிறார்களே. இவை அனைத்தும் ஒன்றா?
ப: Virus, Worm, Trojan இவை மூன்றும் அழிவிகள் தான். ஆனால், அடிப்படையில் வேறு வேறானவை. கணினியைக் கஷ்டப் படுத்தும் முறைகளும் மாறுபடுகின்றன. வைரஸ் அழிவி கணினிக்குள் உள்ள ரலிகளில் தன்னை இணைத்துக் கொள்கின்றது. ஒரு ரலியிலிருந்து இன்னொரு ரலிக்கு தாவித் தாவி பரவுகிறது. சேதங்களை ஏற்படுத்துகின்றது.

Worm எனும் அழிவி இருக்கிறதே இது தானாகவே கணினிக்குள் ஒட்டிக் கொள்ளும். நாச வேலைகளைத் தொடங்கும். தன்னைப் போல மேலும் பல அழிவிகளை உருவாகும். மற்ற கணினிக்குள் ரகசியமாக நுழைந்து பற்பல அழிவு வேலைகளைச் செய்யும்.

Trojan என்பது நமக்கு நன்மையைச் செய்யும் நிரலியைப் போல இருக்கும். ஆனால், அது ஒரு பயங்கரமான அழிவி. அசலா நகலா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அந்த மாதிரி அசல் நிரலியைப் போல தெரியும். நாம் ஏமாந்து விடுவோம். கணினிக்குள் பதிவு (Install) செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

கரும்புக் கொல்லையில் காட்டு யானைகள் நுழைந்த கதைதான். நீங்கள் ஆசை ஆசையாகச் சேமித்து வளர்த்த ஆவணங்களைத் துவம்சம் செய்துவிட்டுதான் மறு வேலை.  இந்த டிரோஜன்களை அழிக்க Trojan Hunter, Trojan Shield என்று அழிவுத் தடுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் முற்றாக அழிக்க முடியாது. அழிப்பது ரொம்ப சிரமம். கணினியை ஒரேயடியாக Format எனும் சுத்திகரிப்பு செய்தால்தான் முடியும். வைரஸ்களை அழித்து விடலாம். Worm எனும் அழிவுப் புழுக்களை அழித்து விடலாம். ஆனால், டிரோஜன்களை அழிப்பது குதிரை கொம்பு. அதனால், புதிதாக எந்த ஒரு நிரலி அல்லது செயலியைக் கணினிக்குள் பதிவு செய்வதாக இருந்தாலும் பல முறை அசல் தன்மையை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆக, வைரஸ் என்பது ஒரு சீருந்து. வோர்ம் என்பது பேருந்து. டிரோஜன் என்பது சுமையுந்து.

ஜி. செசினா, தாமான் ஆலாம் மேகா, ஷா ஆலாம்
கே: குழந்தைகள் விரும்பும் அனைத்து அம்சங்களும் கொண்ட ஓர் இணையத் தளத்தை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். அதில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், படச் சுருள்கள், போட்டி விளையாட்டுகள் என்று எல்லாம் இருக்க வேண்டும். நல்லதாக ஒன்றைச் சொல்லுங்கள்.
ப: குழந்தைகளுக்கு நிறைய தளங்கள் உள்ளன. இருந்தாலும் நீங்கள் கேட்கும் விதத்தில் எல்லாமே அடங்கிய ஒரு நல்ல தளம் இருக்கிறது. அதன் பெயர் www-alfy-com - இந்தத் தளம் மிக மிக அருமையானது. ஒரு முறை போனவர்களுக்கு மறுபடியும் போகத் தூண்டும் பல வகையான சிறப்பு அம்சங்கள் அங்கே உள்ளன.

ஆர்.ராகவன், சிம்பாங் பெர்த்தாங், பகாவ்
கே: Jurassic Park எனும் ஒரு விளையாட்டு இருக்கிறதாம். சின்ன பிள்ளைகளுக்கான விளையாட்டு. ஆசைப் படுகிறோம். இடத்தைச் சொல்லுங்கள். பதிவிறக்கம் செய்து கொள்கிறோம். உதவி செய்யுங்கள்.

ப: உலகில் உள்ள எல்லா இந்தியர்களுக்கும் உதவி செய்வதே நம்முடைய நோக்கம். நீங்கள் சொல்லும் விளையாட்டு இருக்கிற இடம்:

http-www-filefactory-com-file-a0eafbf-n-JurassicPark_Sim_rar

இந்த விளையாட்டை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதைத் தயாரித்தவர்கள் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்தார்கள். ஆனால், அதில் இருந்து 28 மில்லியன் சம்பாதித்து விட்டார்கள். அதனால், இலவசமாக சில இடங்களில் கிடைக்கிறது. பதிவிறக்கப் பிரச்னை என்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

1 கருத்து: