04 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 32

(மலேசிய நண்பன் - 08.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
மூர்த்தி பிரகாஷ்  ilayaprakash@gmail.com

கே: நான் இலங்கையில் இருந்து வந்து வேலை செய்கிறேன். தமிழில் இலகுவாக தட்டச்சு செய்வதற்கு ஏற்ற மென்பொருள் மற்றும் விசைப் பலகை ஜொகூர் பாருவில் கிடைக்குமா? தமிழ் யுனிகோட் பற்றி விளக்கவும். இலங்கையில் இருந்து வந்து மூன்று வருடங்களில் கணினி மறந்து போய் விட்டது. மீண்டும் கணினி பற்றிய உங்களுடைய கேள்வி-பதில் அங்கம் ஊடாக ஆர்வத்தைத் தூண்டியமைக்கு நன்றி. புதிய மடிக்கணினி மற்றும் இணையத் தொடர்பிலிருந்து உங்களுக்கு அனுப்பும் முதல் மின்னஞ்சல் இது.

ப:
உங்களுடைய கடிதத்தைப் படித்து மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையில் இருந்து இங்கே வந்து வேலை செய்து மடிக்கணினியை வாங்கிப் பயன் படுத்துகிறீர்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். தமிழில் தட்டச்சு செய்ய தனிப்பட்ட விசைப் பலகை எதுவும் தேவை இல்லை. சாதாரணமாக எல்லா விசைப் பலகையிலும் தமிழில் தட்டச்சு செய்யலாம். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் இலவசமாகத் தமிழ் நிரலி கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த நிரலியைப் பயன் படுத்தி யுனி கோட் முறையில் தட்டச்சு செய்யலாம். முரசு அஞ்சலில் எப்படி தட்டச்சு செய் கிறீகளோ அதே மாதிரிதான்.

Unicode என்றால் என்ன என்று கேட்டிருந்தீர்கள். கொஞ்சம் விளக்கமாகச் சொல் கிறேன். 1990 களில் சாமான்ய மனிதர்கள் எல்லாரும் கணினியைப் பயன் படுத்தக் கூடிய காலக் கட்டம் வந்தது. அப்போது தமிழில் தட்டச்சு செய்ய ஒரு நேர்த்தியான மென்பொருள் அல்லது தமிழ் நிரலி உருவாக்கப் படவில்லை.

தமிழின் மீது இருந்த தாக்கத்தால் தமிழ் மென் பொருளாளர்கள் தனித் தனியாக நிரலிகளைத் தயாரித்து கொடுத்தார்கள். சிலர் இலவசமாகக் கொடுத்தார்கள். சிலர் காசிற்கு விற்றார்கள். அதனால் நூற்றுக் கணக்கான Fonts எனும் எழுத்துருகள் புழக்கத்திற்கு வந்தன.

அவரங்கல், கம்பன், மதுரம், மயிலை, அக்ஸார், தேனீ, வைகை, சூரியன், இளங்கோ, வானவில், ஜனனி, கோமதி, நந்தினி, ஆத்வின், பரணி, பூபாளம், ஹ’ந்தோலம், கல்கி, மலையமருதம், பரணர், சங்கம், சத்யம், சிந்து, தர்மினி, உதம்பா, விகடன், அபிராமி, அலையரசி, அமுதம், பாமிணி, கீரவாணி, குறுஞ்சி, முல்லை, பல்லாடம், ரத்னகிரி, சஹானா, சரஸ்வதி, சிந்து பைரவி, இணைமதி, இணைக்கதிர், கலப்பை, கலைஞர், அண்ணா, அவ்வையார், கண்ணா, சாய் சாய், ஆண்டாள், அருள்மதி, பாரா, சாய் இந்திரா, ஸ்ரீ, துணைவன், தென்னேரி, அபோகி, அணங்கு, ஆனந்தா, ஈழநாடு, கம்மாஸ், கதன குதூகலம், லத்தங்கி, நீதிமதி, ரஞ்சனி, சாவேரி...  இன்னும் வேண்டுமா. அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் மிகப் புகழ் பெற்றது முரசு அஞ்சலின் இணைமதி. உலகம் பூராவும் இதற்கு தனி மதிப்பு உண்டு.

இந்த மாதிரி பற்பல எழுத்துரு முறைக்குப் பதிலாக ஒரே ஓர் எழுத்து முறை இருந்தால் நன்றாக இருக்குமே என்று தமிழ் ஆர்வலர்கள் ஆசைப் பட்டார்கள். அந்த வகையில் உருவானதுதான் யுனிகோட் முறைமை. இந்த முறைமைக்கு தனியாக எழுத்துருகளைப் பதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினி வாங்கும் போதே அதற்குள் லதா, ரவி, சுருதி, மங்கள் போன்ற இந்திய எழுத்துருகள் இருக்கின்றன.

உலகம் முழுமையும் உள்ள எல்லா கணினிகளிலும் இந்தத் தமிழ் எழுத்துருகள் உள்ளன. ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் உள்ள கணினியிலும் சரி. அமேசான் காட்டில் உள்ள கணினியிலும் சரி. ஆர்க்டிக் பனித் துருவத்தில் உள்ள கணினியிலும் சரி. இந்தத் தமிழ் எழுத்துருகள் உள்ளன. மலேசியாவிலிருந்து யுனிகோட் முறையில் தமிழில் தட்டச்சு செய்தால் அதை உலகத்தில் உள்ள எல்லா கணினிகளும் தமிழில் படிக்கும். கவலைப் பட வேண்டியதே இல்லை. இதுதான் அந்த யுனிகோட் முறை. புரிகிறதா.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, ஸ்ரீ லங்கா, சிங்கப்பூர், மலேசியா, மவுரித்தியஸ் போன்ற நாடுகள் அதிகாரப் பூர்வமாகப் பயன் படுத்தி வருகின்றன. ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தில் Institute of Indology and Tamil Studies எனும் தமிழ்ப் பிரிவு இருக்கிறது. அங்கே தான் தமிழ் யுனிகோட் முறைக்கு முதன் முறையாக அடிக்கல் நாட்டப் பட்டது. INFITT - International Tamil Internet Conference என்பதைத் தமிழில் அனைத்துலக தமிழ் இணைய மாநாடு என்று சொல்லலாம். இதுவரை எட்டு மாநாடுகள் நடைபெற்று உள்ளன.

இவற்றுக்கு எல்லாம் மூலகர்த்தாவாக இருப்பவர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் என்பவர். கை எடுத்து கும்பிடப்பட வேண்டிய மனிதர். இவர் இருப்பதால் தான் ஜெர் மனி -கோலோன் பல்கலைக் கழகத்தில் இன்னும் தமிழ் வாழ்கிறது. விளம்பரம் இல்லாத மனிதர். அவருடைய படம் வந்திருக்கிறது. பாருங்கள்.

திருமதி. என்.வள்ளி, ஜொகூர் பாரு (குறும் செய்தி 1.11.2009)

கே: நான் தனித்து வாழும் தாய். ஒரு மகன் அடுத்த வருடம் எஸ்.பி.எம் படிக்கப் போகிறான். நல்ல படிப்பறிவு. ஒரு கணினி வாங்கிக் கொடுக்க ஆசை. எனக்கு குறைந்த வருமானம். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளேன். கணினியைப் பற்றி எனக்கு போதிய அளவு தெரியாது. எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்?

ப:
உங்கள் குறும் செய்தியைப் படித்து மனம் நெகிழ்ந்து போனேன். தனித்து வாழும் தாய்மார்கள் அனைவருக்கும் இந்த மாதிரி உணர்வுகள் இருந்தால் எவ்வளவு நல்லது. கோயிலுக்குப் போய் புண்ணியம் தேடிக் கொள்வதை விட இந்த மாதிரியான எண்ணம் கொண்டவர்களுக்கு உதவி செய்வது இன்னும் பெரிய தீர்க்க ஆயுசு. இன்னும் ஒரு விஷயம். இந்த மாதிரியானவர்களுக்கு உதவி செய்ய வருபவர்களுக்கு வக்கிரமம் இல்லாத மனசு வேண்டும். அதையும் சொல்லி விடுகிறேன்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தனித்து வாழும் தாய்மார்களுக்கு பல வகைகளில் உதவி செய்து வருகிறது. கணினி வாங்கிக் கொடுப்பதில் சில நல்ல சலுகைகளையும் வழங்குகிறது. வறுமைக் கோட்டைத் தாண்டியவர்களுக்கு இலவசமாகவும் கொடுக்கிறது. அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். என்ன கணினி வாங்கலாம் என்பதை முடிவு செய்வதற்கு முன்னர் மேற்சொன்ன அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது நலம் பயக்கும் என்பது என் கருத்து.

Dell நிறுவனத்தின் கணினிகளை நம்பி வாங்கலாம். இரண்டு வருடங்களுக்கு உத்தரவாதம் தருகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகம். விவரம் தெரிந்த வர்களிடம் கேட்டுப் பாருங்கள். நான் ஈப்போவில் இருக்கிறேன். அங்கே வந்து உங்களுக்கு கணினி வாங்க உதவி செய்ய முடியாது. மன்னிக்கவும். இருந்தாலும் ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷரீர் சமாட் அற்புதமான மனிதர். அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். நல்ல ஆதரவான பதில் கிடைக்கும். உங்களுடைய உயர்வான உள்ளத்திற்கு என்னுடைய தாழ்மையான வாழ்த்துகள்.


எம்.பிரபு, பெந்தோங் (குறும் செய்தி 1.11.2009)

கே:கணினி கேள்வி-பதில் அங்கம் வந்த பிறகு என் வீட்டில் மலேசிய நண்பன் நாளிதழுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டு விட்டது. நல்ல பதில்களைச் சொல்கிறீர்கள். தெளிவாக இருக்கிறது. சுலபமாக புரிந்து கொள்ளவும் முடிகிறது. உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். எங்கள் பெந்தோங் நகரில் இரண்டு நாட்களுக்கு கணினி பயிற்சி வகுப்பை நடத்த முடியுமா. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இங்கே பெந்தோங்கில் கணினி ரிப்பேர் செய்ய அதிகமாக கட்டணம் கேட்கிறார்கள். அப்படியே காசு கொடுத்தாலும் கணினி கெட்டுப் போகிறது. சமயங்களில் டமான்சாராவுக்கு எடுத்து வர வேண்டி இருக்கிறது.

ப:
வீடு தோறும் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நலம் பயக்கும். அழைப்புக்கு நன்றி. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரவுப் நகருக்குப் போகும் போது உங்களுடைய பெந்தோங் நகரைக் கடந்து சென்றேன். அமைதியான ஊர். ஆர்ப்பாட்டம் இல்லாத மக்கள். அதிகமாக இந்தியர்களின் நடமாட்டம். பல வரலாறுகளைப் படைத்த சிறப்புகள். அந்த ஊரில் ஒரு கணினிப் பயிற்சி வகுப்பை நடத்தச் சொல்கிறீர்கள். நன்றி. நடத்துவோம்.

அதற்கு முன்னர் ஒரு சின்னக் கொசுறு. பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் வெகு விரைவில் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு கணினிப் பட்டறையை நடத்த உள்ளது. தேதி விவரம் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் எறும்புகளை மிஞ்சிப் போகும் அளவுக்கு சுறுசுறுப்புடன் இருக்கிறார் செயலாளர் சித.நாராயணன். ரொம்ப ரொம்ப 'பிசி'. தம்பி ஜி.பி.செல்வம், சகோதரரி கமலாட்சி ஆறுமுகம் போன்றவர்கள் மனசு வைத்தால் žக்கிரமாகப் பட்டறையை நடத்தலாம். பார்த்தால் கேட்டுப் பாருங்களேன். அதன் பின்னர் வேண்டுமானால் கணினிப் பயிற்சி வகுப்பை பெந்தோங்கில் வைத்துக் கொள்ளலாம்.

பவானி இளங்கோவன், கடாரம் (குறுஞ்செய்தி 31.10.2009)

கே: நான் உங்கள் தீவிர வாசகி. சார், உங்களின் நகைச்சுவையான பதில்கள் எல்லாம் சூப்பர். நீண்ட நாட்களாக இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். சொல்லி விட்டேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. உங்களின் இந்த அரிய சேவை தொடர வேண்டும்.

ப:
என்னங்க...பவானி. கேள்வி கேட்பீர்கள் என்று நினைத்தேன். இப்படி நன்றிச் செய்தி யோடு முடித்துக் கொண்டீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. ஆக, என் சார்பிலும் நன்றி. நன்றி.

அர்ச்சனா வீர மோகன், தெலுக் மெர்பாவ், சிப்பாங்

கே: PC என்பதை CPU என்கிறார்கள். சரியா. உங்கள் விளக்கம் என்ன?

ப:
நானும் கேட்டது உண்டு. PC என்றால் Personal Computer. அதாவது தனிக் கணினி அல்லது சொந்தக் கணினி. CPU என்றால் Central Processing Unit. அதாவது மையகச் செயலாக்கச் சாதனம். கணினிக்குள் இந்தச்  செயலாக்கச் சாதனம் ஒரு சாதனம் மட்டும் தான். ஆக, இரண்டும் வேறு வேறு. கணினியை மொத்தமாக PC என்று சொல்லுங்கள். தப்பில்லை. ஆனால் அதை CPU என்று சொல்வது தப்பு.

தாயின் வயிற்றுக்குள் தான் சிசு இருக்கிறது. சிசுவுக்குள்ளே தாய் இல்லை. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். மாதா பிதா குரு தெய்வம் என்று ஒளவையார் சொன்னார். அவர் ஏன் இப்படி சொல்ல வந்தார். அதாவது மாதாவும் பிதாவும் தான் உனக்கு குரு. அவர்கள்தான் உனக்கு தெய்வம். அதனால் மாதா பிதா - குரு தெய்வம் என்றார். ஆனால், என்ன நடக்கிறது.

காலப் போக்கில் ஒளவையாரின் நோக்கம் அடிபட்டுப் போனது இல்லையா. அந்த மாதிரிதான் எல்லாமே. இதை எல்லாம் கேட்டு ஒளவைப் பாட்டி மேலே உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம். தெரியவில்லை.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மின்னஞ்சல் முகவரி:
ksmuthukrishnan@gmail.com
கைப்பேசி: 012-5838 171

4 கருத்துகள்:

  1. ஐயா, உங்கள் கேள்வி - பதில் பகுதி மிக்க அருமை. இன்றுதான் தங்கள் வலைப்பூவை பார்த்தேன்.

    உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பொழிகிறது....

    மிக்க நன்றி ஐயா
    ராம்
    சென்னை, இந்தியா

    பதிலளிநீக்கு
  2. hello sir......unggalin thodar ellam naan vaaram thorum padipen....athu enakku mihavum payanbadugirathu. itharkaagave vaaramthorum nanban paper vaangguvean.....unggaludaya keli pechu....enakku mihavum pidithathu.....,unggalin sevai thodare vendugirean........nandri....from : m raseek, penang.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்,போகிரி ராஜாக்களின் பொல்லாத வேட்டை
    படித்து பிரம்மித்து போனேன் இது போல் இன்னும்
    வெளியிடும்.உங்கள் சேவை எங்களுக்கு தேவை
    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. அறிஞர் கல்யாண சுந்தரம் நீடு வாழ்க....

    பதிலளிநீக்கு