04 April 2010

கணினியும் நீங்களும் - பகுதி 33

(மலேசிய நண்பன் - 08.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் மலேசியா நண்பன் நாளிதழில் ‘கணினியும் நீங்களும்’ கேள்வி பதில் அங்கத்தில் அடியேன்  அளிக்கும் பதில்கள் இணையத்திலும் இடம் பெறும்.  முதலில் பழைய பகுதிகளை பதிவு ஏற்றம் செய்து விடுகிறேன்.விஜயன் சுப்பிரமணியம்  svijiyan@yahoo.com
கே: இணையத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழி எது?

ப:
சந்தேகம் இல்லாமல் ஆங்கிலம்தான். அடுத்ததாக ஜெர்மன் மொழி வருகிறது. அதற்கு அடுத்து ஜப்பானிய மொழி. அடுத்து பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்து கீசியம், டச்சு மொழிகள் வருகின்றன. 14வது இடத்தில் மலாய் மொழி வருகிறது. தமிழ் மொழி எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

எம்.பிரபு, பெந்தோங் (குறும் செய்தி 1.11.2009)
கே: கணினி கேள்வி-பதில் அங்கம் வந்த பிறகு எங்கள்  வீட்டில் மலேசிய நண்பன் நாளிதழுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டு விட்டது. உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். எங்கள் பெந்தோங் நகரில் கணினி பயிற்சி வகுப்பை நடத்த முடியுமா?


ப: அழைப்புக்கு நன்றி. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரவுப் நகருக்குப் போகும் போது உங்களுடைய பெந்தோங் நகரைக் கடந்து சென்றேன். அமைதியான ஊர். ஆர்ப்பாட்டம் இல்லாத மக்கள். அதிகமாக இந்தியர்களின் நடமாட்டம். பல வரலாறுகளைப் படைத்த சிறப்புகள். அந்த ஊரில் ஒரு கணினிப் பயிற்சி வகுப்பை நடத்தச் சொல்கிறீர்கள்.

அதற்கு முன்னர் ஒரு சின்னக் கொசுறுச் செய்தி. பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் வெகு விரைவில் பேராக் மாநில தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு கணினிப் பட்டறையை நடத்த உள்ளது. தேதி விவரம் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் எறும்புகளை மிஞ்சிப் போகும் அளவுக்கு செயலாளர் சித.நாராயணன் ரொம்ப ரொம்ப 'பிசி'யாக இருக்கிறார். தலைவர் இராமலிங்கம், ஜி.பி.செல்வம், சகோதரரி கமலாட்சி ஆறுமுகம் மனசு வைத்தால் žக்கிரமாகப் பட்டறையை நடத்தலாம். அதன் பின்னர் கணினிப் பயிற்சி வகுப்பைப் பெந்தோங்கில் நடத்தவும் ஏற்பாடு செய்வோம்.

திருமதி.விமலாதேவி, பெட்டாலிங் ஜெயா
கே: இப்போது உள்ள குழந்தை கள் கணினி மூலமாக தமிழில் நன்றாக 'டைப்' செய் கிறார்களாமே. பார்த்தீர்களா?

ப:
ஓ... நன்றாக. அண்மையில் ஒரு பத்து வயது சிறுமி தமிழில் தட்டச்சு செய்வதைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அருகில் போய் எப்படி தமிழில் தட்டச்சு செய்கிறார் என்று கேட்டேன். 'ரொம்ப ஈசி அங்கிள். பர்ஸ்ட் 'அல்ட்'டை தட்டணும். தென் யு பிரஸ் நம்பர் 2. தமிழ் வில் கம். இட் ஈஸ் வெரி ஈஸ’ அங்கிள்' என்றார். இது போதும். காலா காலத்திற்கும் தமிழ் மொழிக்கு இருமல் வந்து மிளகு  ரசம் கேட்கும்.

ஆர்.ஜெயமோகன், சாலாக் திங்கி
கே: Folder என்பதைக் கோப்பு என்கிறோம். இதை மற்றவர் படிக்க முடியாதபடி அல்லது திறக்க முடியாதவாறு பாதுகாக்க முடியுமா?

ப:
முடியும். எந்த ஒரு கோப்புக்கும் Password எனும் சங்கேதச் சொல்லைக் கொடுத்து பாதுகாக்க முடியும். மற்றவர்களால் திறந்து படிக்க முடியாது. அந்தக் கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யவும். அப்புறம் Sharing >> Make this Folder Private >> Apply >> Create Password >> Ok. அதன் பின்னர் அந்தக் கோப்பை மற்றவர் யாரும் திறக்க முடியாது.

ஆர்.சற்குணம், பாங்கி (SMS - குறும் செய்தி 5.11.2009)

கே: சார். கணினியைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். கணினியைப் பற்றி படித்து கண்டிப்பாகப் பட்டங்கள் வாங்கி இருக்க வேண்டுமே. உங்களை எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா.

ப:
ரொம்பங்க... ரொம்ப வாங்கியிருக்கிறேன். பேரப் பிள்ளைகள் தீபாவளிக்கு வந்து அவற்றில் இரண்டு மூன்று பட்டங்களைப் மடக்கிப் போட்டுக் கிழித்தும் விட்டார்கள். என்ன செய்வது.  மிச்ச சொச்சம் இருக்கிறது. நன்றாகக் காற்று அடிக்கிற காலத்தில் பறக்க விட்டுக்  கொள்ளலாம் என்று இருக்கிறோம். நான் எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா. எல்லாம் சரி. மற்றவர்களுக்குப் பயன் படும் படியான கேள்விகளாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லீங்களா. சரியா.

தமிழரசு  tamila139@gmail.com
கே: இணையக் கலைக் களஞ்சியமான Wikipedia வைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சொல்லுங்கள்.

ப:
அருமையான கேள்வி. இணையத்திலே ஒரு கலைக் களஞ்சியம் இருக்கிறது. அதன் பெயர் விக்கிபிடியா. உலகில் உள்ள 267 மொழிகளில் செயல் பட்டு வருகிறது. http://en.wikipedia.org/wiki/Interpedia எனும் இடத்தில் இருக்கிறது. இதற்கு எழுதுபவர்கள் எல்லாம் வாசகர்கள்தான். அவர்களே எழுதி அவர்களே திருத்திக் கொள் கிறார்கள்.

உலகத்திலேயே மாபெரும் கலைக் களஞ்சியம் இதுதான். 1993 ல் Interpedia எனும் பெயரில் தொடங்கப் பட்டது.1999ல் விக்கிபிடியா உருவாக்க வேண்டும் எனும் கருத்தைச் சொன்னவர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்பவர். இருந்தாலும் Nupedia எனும் பெயரில் தொடங்கியது. தன்னார்வத் தொண்டர்களும் எழுத்தாளர்களும் உதவிக்கு வந்தனர். 15.1.2001ல் அசல் விக்கிபிடியா வந்தது. Wiki என்பது ஹவாய் மொழிச் சொல். விரைவு என்று அர்த்தம்.

இதில் 30 இலட்சம் கட்டுரைகள் உள்ளன. இதன் பின்னணியில் ஆயிரக் கணக்கானவர்களின் அயரா உழைப்பு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் கட்டுரைகள் எழுதி வெளியிடலாம். 2003ல் தமிழ் மொழிக் கட்டுரைகள் வந்தன. மயூரநாதன், நிரோஜன், சந்திரவதனா போன்றவர்கள் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் மட்டும் மொத்தம் 3245 கட்டுரைகள் உள்ளன. www.ta.wikipedia எனும் இணைய முகவரியில் தமிழ் மொழி உலா வருகிறது. ஆக, இப்போதைக்கு விக்கிபிடியாவில் 174 கோடி சொற்கள் உள்ளன.

(தங்களுடைய கணினிகளைப் பழுது பார்த்துக் கொடுக்கும்படி பலர் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். கைப்பேசி 012-5838171 எண்களுக்கு அழைத்து உறுதி செய்து     கொள்ளுங்கள். பழுது பார்க்க ஏற்பாடுகள் செய்யப் படும்.)


2 comments:

  1. சிறப்பான இப்பணி தொடர வாழ்த்துக்கள். இது வரைக்கும் நண்பனில் வெளிவந்த கணணி கேள்வி பதில் அங்கம் முழுமையாக இப்பக்கத்தில் இடுகையிடப்பட்டால் மகிழ்ச்சியடைவோம். நான் அவ்வப்போது நண்பன் வாரப்பத்திரிகையை தவறவிட்டு விட்டு வருத்தப்படுவதுண்டு.

    ReplyDelete
  2. Folder க்கு pass word கொடுக்கலாம் என்றால் அது user account க்கு pass word apply செய்ய சொல்கிறது. தயவு செய்து விளக்குங்கள்

    ReplyDelete