07 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 38

(மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியை நடத்தி வருகிறேன். அந்தப் பகுதியின் பழைய கேள்வி பதில்களைக் கட்டம் கட்டமாக இந்த வலைப்பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும்.பயன் அடைய வேண்டும்.நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். இந்த வலைப்பூவைப் படித்த கோவையைச் சேர்ந்த துரை.வேலுமணி, குவாயித்திலிருந்து விஷ்ணு என்பவர்கள் கேள்வி கேட்டார்கள்.மின்னஞ்சல் வழி பதில் வருகிறது.)

ஜெகதம்பாள் பரமசிவம் jega_param67@gmail.com
கே: இணையத்தில் உலா வரும் போது சில சமயங்களில் Apache எனும் சொல் வருகிறது. இது அமெரிக்காவில் வாழும் சிவப்பு இந்தியர்களைக் குறிக்கும் சொல் அல்லவா. அப்படி இருக்கும் போது எப்படி கணினி உலகத்தில் நுழைந்தது?

ப:
அமெரிக்காவில் உள்ள சிவப்பு இந்தியர்களைக் குறிக்கும் சொல்தான் Apache. நீங்கள் சொல்வது சரி. இருந்தாலும் அந்த அமெரிக்க இனத்தவருக்கும் இந்த 'அப்பாச்சி' மென் பொருளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இந்தச்  சொல் கணினி உலகிற்கு வந்த விதம் மிகவும் சுவையான விஷயம். 'அப்பாச்சி' என்பது இணையத் தளங்களை இயக்க உதவும் ஒரு வகையான மென்பொருள். வியாபார நோக்கம் இல்லாத Open Source மென்பொருள்.

1990 களில் வலைத்தளங்களை இயக்கும் புதுமையான மென்பொருள் ஒன்றை ராபர்ட் மென் கூல் என்பவர் எழுதினார். இவர் ஓர் அமெரிக்கர். நண்பர்கள் சிலரும் அவருக்கு உதவி செய்தார்கள். தொடக்கத்தில் நிறைய பிழைகள் ஏற்பட்டன. அந்தப் பிழைகளைக் களைந்து சரி செய்வதை Patching என்று அழைத்தார்கள். பிழைகள் தொடர்ந்து வந்தன. அதனால் அந்த மென் பொருளுக்கு A Patchy Server என்று கிண்டலாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அதுவே நாளடைவில் மருவி 'அப்பாச்சி' என்று பெயர் பெற்றது. தற்சமயம் இந்த 'அப்பாச்சி' தான் விவரங்களைச் சேமித்து வைக்கும் தலை சிறந்த புள்ளியியல் மென்பொருளாக விளங்குகிறது. உலகின் தலை சிறந்த கணினி நிபுணர்கள் எல்லாம் இதற்கு பாது காப்பு அளித்து வருகின்றனர். கணினி அழிவிகளைத் தயாரிப்பவர்கள் கூட இந்த 'அப்பாச்சி' யைத் தொந்தரவு செய்வது இல்லை. அவ்வளவு மரியாதை.

சந்தோஷம் பாண்டியன், தைப்பிங் (குறும் செய்தி 5.12.2009)
கே: கணினியில் 'ஜாவா' மொழி என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் ஜாவா நாட்டில் இருந்து இந்த மொழி வந்ததா?

ப:
கணினியும் மனிதனும் உறவாடிக்  கொள்ள உதவும் மொழி தான் கணினி மொழி. ஜாவா எனும் கணினி மொழியைத் தயாரித்தவர்கள் காலம் நேரம் பார்க்காமல் காப்பி குடித்தார்கள். அந்தக் காப்பியைத் தயாரிக்கக் காப்பிக் கொட்டைகள் ஜாவா எனும் இந்தோனேசியத் தீவில் இருந்து வந்தன. ஒரு கட்டத்தில் அவர்கள் ஜாவா காப்பிக்கு அடிமையாகும் நிலையும் இருந்தது.

அப்புறம் அந்தக் கணினி மொழிக்குப் பெயர் வைக்கும் நேரம் வந்தது. என்ன பெயர் வைப்பது என்பதில் எல்லாருக்கும் ஒரு குழப்பம். அதனால் அவ்வளவு காலம் அவர்களுக்கு உதவி செய்த அந்தக் காப்பிக் கொட்டையின் பெயரையே வைக்காலாமே என்ற ஓர் எண்ணம். சரி, அப்படியே ஜாவா என்று வைத்தும் விட்டார்கள். கணினி மொழிகளில் Amiga, Basic, C, C++, Cobra, Delphi, Fotran, Maya, Modula, Pascal என்று பல இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸை 'சி' மொழியில் எழுதி இருக்கிறார்கள். இப்போது ஜாவா மொழி கொடி கட்டிப் பறக்கின்றது. எனக்கும் பிடித்த மொழி. படித்து முடிக்க மூன்று வருடங்கள் பிடிக்கும். ஆக, ஜாவா கணினி மொழிக்கும் ஜாவா தீவிற்கும் விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது.

சுந்தரராஜன் பெருமாள்  sundrajan12@gmail.com
கே: மேசைக் கணினியைப் பயன் படுத்துபவர்கள் பலர் மடிக் கணினியையும் பயன் படுத்துகிறார்கள். இரண்டையும் ஒரே சமயத்தில் பயன் படுத்த முடியுமா? எப்படி சார் முடியும்?

ப:
எல்லாம் வேலைச் சுமைதான். அவர் அவர்களுக்கு அவர் அவர்களுடைய வேலை முக்கியம். வீட்டில் இருக்கும் போது மேசைக் கணினியைப் பயன் படுத்துவார்கள். வெளியே போகும் போது மடிக் கணினியைக் கூடவே எடுத்துச் செல்வார்கள். மடிக்கணினி இன்றைய காலத்தில் மிகவும் அத்தியாவசியமான பொருளாகி விட்டது. பண வசதி இருந்தால் இரண்டு என்ன மூன்று நான்கு கணினிகளைக் கூட வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

மேசைக் கணினியைப் பிறந்த வீட்டுக் கணினி என்றும் மடிக் கணினியை புகுந்த வீட்டுக் கணினி என்றும் உவமானம் சொல்வது உண்டு.  பெண்களுக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இருக்கிறது. அதற்காக ஆண்களுக்கு சின்ன வீடு, பெரிய வீடு இருக்கக் கூடாதா என்று கேட்டாலும் கேட்கலாம். பெரிய பெரிய பிரச்னைகளுக்கு எல்லாம் சூடம் கொளுத்திச் சாம்பிராணி போடக் கூடாது. தப்பு அய்யா தப்பு.

குமாரி லெட்சுமி வீரராகு, சித்தியவான் (குறும் செய்தி 3.12.2009)
கே: Hard Disk என்பதை வன்தட்டு என்கிறோம். முதன் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட வன்தட்டுகளைப் பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்கள்?

ப:
நம் கணினியில் உள்ள வன்தட்டில் தான் செய்திகள் படங்கள் தகவல்கள் எல்லாமே பதிவு செய்யப் படுகின்றன. இங்குதான் கணினியின் Operating System அமர்ந்து கொண்டு கணினியை இயக்குகிறது. 1956ல் தான் வன்தட்டைக் கண்டுபிடித்தார்கள். IBM நிறுவனம் கண்டுபிடித்தது. அதன் கொள் அளவு 5 MB. அதன் பெயர் RAMAC 305. இரண்டு பெரிய குளிர்சாதனப் பெட்டிகளைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்கும். அவ்வளவு பெரியது.  அப்போதைக்கு அது பெரிய விஷயம். அதன் விலை 50,000 அமெரிக்க டாலர்கள்.

இப்போது நாம் 1 Terra Byte வன்தட்டுகளைப் பயன் படுத்துகிறோம். இது அப்போது இருந்திருந்தால் இதன் விலை என்ன தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம். 35 கோடி மலேசிய ரிங்கிட். அதாவது பினாங்கு பாலத்தைப் பாதி கட்டி முடித்து விடலாம். இப்போது Rapidshare, Hot File, Uploading, Mega Upload போன்றவை Petabytes பரிமாறிக் கணினிகளைப் பயன் படுத்துகின்றன.

Intel நிறுவனத்தை உருவாக்கியவர் கார்டன் மூர் என்பவர். அவர் கண்டுபிடித்த கோட்பாடு ஒன்று உள்ளது. அதன் பெயர் Moore's Law. 'ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை, கணினியை இயக்கும் சாதனங்களின் விலை இரண்டு மடங்கு குறையும். அதே சமயத்தில் அதன் செயல் திறன்கள் அல்லது ஆற்றல்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.'  இது தான் அவர் சொன்னது.

அதே போலத் தான் நடந்தும் கொண்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 35 கோடி ரிங்கிட்டிற்கு விலை போன வன்தட்டு இன்று முன்னூறு வெள்ளிக்கு விற்கப் படுகிறது. இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

விளக்கம்
0 அல்லது 1 = 1 Bit
8Bits = 1 Byte(B)
1000(B) Bytes = 1 Kilo Byte(KB)
1000(KB) Kilo Bytes = 1 Mega Byte(MB)
1000(MB) Mega Bytes = 1 Giga Byte(GB)
1000(GB) Giga Bytes = 1 Terra Byte(TB)
இப்போது 2009 ஆண்டில் நாம் 'தெரா
பைட்'டில் இருக்கிறோம்.

குணசேகரன் சின்னையா   gunasinnma@yahoo.com

கே:
Key Board எனும் தட்டச்சு பலகை கெட்டுப் போனால் மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதனால் குழந்தைகள் கணினியைப் பயன் படுத்திக் கொண்டிருக்கும் போது சாப்பாடு கொடுக்கலாம். குழந்தை கள் விளையாட்டுத் தனமாக அதை உடைத்து விட்டால் பரவாயில்லை. தப்பில்லை என்கிறீர்கள். ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக அதைச் சேதப் படுத்திப் புதிதாக வாங்க வேண்டுமா?  உங்கள் கருத்து சரிதானா?

ப:
உங்கள் ஆதங்கம் தெரிகிறது. ஒரு மருமகள் தன் மாமியாரைச் சொந்தத் தாயைப் போல மதித்து மரியாதையாக நடத்தி வந்தாள். மாமியாருக்கு ஒரு நாள் நல்ல காய்ச்சல். இரண்டு மூன்று நாளைக்கு கஞ்சி சாப்பிட வேண்டும் என்று டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். இந்தக் கட்டத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் சின்ன சலசலப்பு.

மாமியாரைப் பார்த்து 'அத்தை... மத்தவங்க மாதிரி நான் இல்லை. கடைசி வரை உங்களை உட்கார வச்சு கஞ்சி ஊத்துவேன்' என்று மருமகள் சொன்னார். அத்துடன் மாமியார் கப்சிப். உள்ளுக்குள் ஒரு பயம். மருமகள் தனக்கு இனிமேல் சோறு போடாமல் வெறும் கஞ்சியை ஊற்றியே சாகடிக்கப் போகிறாள் என்கிற பயம்தான்.
நாளடைவில் அந்தப் பயமே அவரைப் படுத்த படுக்கையாக ஆக்கியும் விட்டது. மாமியாருக்குப் பன்றிக் காய்ச்சல் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் சில மருமகள்கள் இருக்கிற காலத்தில் இந்த மருமகள் ரொம்பவும் நல்லவர்.
ஆக மருமகள் சொல்ல வந்தது வேறு. மாமியார் நினைத்துக் கொண்டது வேறு. அதே மாதிரி நான் சொல்ல வந்தது வேறு. நீங்கள் எடுத்துக் கொண்டது வேறு. என்ன பண்றது. வடிவேலு கணக்கில் புலம்பல்தான் வருகிறது. ஹய்யோ... ஹய்யோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக