07 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 39

(மலேசிய நண்பன் - 29.11.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)

மா.மணிவண்ணன், கம்பார், பேராக்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. இரண்டும் ஒன்றுதானே?

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet எனும் ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப்படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம். இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள்.

இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் எல்லாம். இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப்பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

சமுராய்  asksamurai@gmail.com
கே: என்னுடைய கைப்பேசியில் Anti Virus எனும் நச்சு நிரல் கொல்லியைப் பயன் படுத்த விரும்புகிறேன். எப்படி பயன் படுத்துவது? எங்கே இருந்து பதிவு இறக்கம் செய்வது என்று ஒன்றுமே தெரியவில்லை. உதவி செய்யுங்கள்.

ப:
ஜப்பானில் உள்ள பழைய சமுராய் கத்தியின் பெயரை வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறீர்கள். கணினிக்கு நச்சு நிரல் கொல்லியைப் பயன் படுத்தும் காலம் போய் இப்போது கைப்பேசிக்கும் வந்துவிட்டது. அந்த அளவிற்குத் தொழில் நுட்பம் முன்னேறி விட்டது.

எதிர்காலத்தில் ரேடியோ டெலிவிஷன்களுக்கும் வைரஸ் வரலாம் என்று சொல்கிறார்கள். சவர்க்காரம் போடாமல் துணி துவைக்கும் மெஷின் வந்துவிட்டது. அதற்கும் வைரஸ் வந்துவிட்டதாம்.  என்ன கூத்து பாருங்கள். கைப்பேசிகளுக்கு நச்சு நிரல் கொல்லி Anti Virus இலவசமாகக் கிடைக்கும் இடங்களைச் சொல்கிறேன். போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. http://www.avg.com/us.68361free
2. http://www.avira.com/en/downloads/antivir_for_mobile.html


இனிமேல் உண்மையான பெயரைச் சொல்லுங்கள். இல்லை என்றால் அதே சமுராய் கத்தியைத் தூக்கிக் கொண்டு உங்களைத் தேடி வருவேன்.

க.ரவி, லூயி மூடா, பகாவ், நெகிரி செம்பிலான்
கே: விண்டோஸ் Vista பற்றி சொல்ல முடியுமா?

ப:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் உருவாக்கிய ஒர் அடிப்படைச் செயலி (Operating System).  இதன் பழைய பெயர்  Longhorn. 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி உலகம் முழுமையும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக விண்டோஸ் XP இருந்தது. விண்டோஸ் விஸ்த்தாவில் பல புதிய மாற்றங்கள், புதிய செயல் பாடுகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

நிறைய பாது காப்பு முறைகளையும் இணைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த XP அடிப்படைச் செயலியில் அழிவிகள் (Virus) சுலபமாக நுழைந்து கணினியைச் செயலிழக்கச்செய்தன. அதைக் கருத்தில் கொண்டு புதிய பாது காப்பு அணுகுமுறைகள் இந்த விண்டோஸ் விஸ்த்தாவில் இணைக்கப் பட்டுள்ளன. அடுத்ததாக விண்டோஸ் 7 எனும் புதிய செயலி 2010 ஆண்டு வாக்கில் வெளி வந்தது.

பாரதி  barat82@gmail.com
கே: கணினியில் செருகி இருக்கும் USB ஐ பிடுங்கி எடுக்க கணினித் திரையில் கீழே உள்ள சின்னத்தை கிளிக் செய்கிறோம். அதன் பிறகு Safely Remove Hardware என்பதைத் தட்டி வெளியாக்குகிறோம். இதைத் தவிர்க்க வேறு சுருக்கு வழி இருக்கிறதா?

ப:
USB என்பதைத் தமிழில் நேரியல் பாட்டை என்கிறோம். Flash Drive, Pen Drive, Thumb Drive என்று பல பெயர்களில் உள்ளன. ஐ பாட், டிஜிட்டல் கேமரா, கைப்பேசி போன்ற சாதனங்கள் யு.எஸ்.பி யைப் பயன் படுத்துகின்றன. இவற்றைக் கணினியில் இருந்து கழற்ற வேண்டும் எனில் திரையின் கீழே இருக்கும் Safely Remove Hardware பகுதிக்குப் போய் அதைத் தட்டி யு.எஸ்.பி யை வெளியாக்குகிறோம். இதைச் சுலபமாக வெளியாக்க வழி இருக்கிறது. USB Ejector எனும் நிரலி இலவசமாகக் கிடைக்கிறது.

http://quick.mixnmojo.com/usbdiskejector எனும் இடத்தில் அந்த நிரலி கிடைக்கிறது. அதைக் கணினியில் பதித்துக் கொள்ள வேண்டும். பதித்ததும் ஒரு சின்னம் திரையில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அதைச் சொடுக்கினால் கணினிக்குள் செருகப் பட்டிருக்கும் எல்லா USB களையும் காட்டும். எந்த USB ஐ வெளியாக வேண்டுமோ அதை இரண்டு முறை சொடுக்கினால் போதும். சரி. அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திப் பாருங்கள்.

குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?

ப:
தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம்.

அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். மலேசியத் தமிழர்கள் தயாரித்த பொருள். கேட்டதற்கு இதுவரை வெளி வந்துள்ள தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள்.

அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.

2 கருத்துகள்:

  1. பலருக்கும் பயன்படும் வகையில் பல பதிவுகளை சிறிதுநகைச்சுவையுடன் (சிலப்பேருக்கு அது நக்கல்)எழிய நடையில் வழங்கும் உங்களுக்கு நன்றிகள் அய்யா.
    USB Ejector எனும் நிரலியை விண்டோஸ்ஏழு ல் உபோயோகப்படுத்தமுடியுமா?
    பதிவுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா29/7/12, PM 7:00

    SUPERB THALA

    பதிலளிநீக்கு