09 April 2010

ஜெயவர்மன் சூரியவர்மன் - வரலாற்றுக் கட்டுரை


ஜெயவர்மன் சூரியவர்மன்
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

இந்தக் கட்டுரை இன்னும் மலேசியா நாளிதழ்களில் வரவில்லை. நானும் அனுப்பவில்லை. இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நானும் என் மனைவியும் கம்போடியா போய் வந்தோம். அது தொடர்பான படங்களை http://ksmuthukrishnan-pix.blogspot.com/2009_09_01_archive.html  எனும் இடத்தில் பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் இருப்பவர் என் மனைவி ருக்குமணி. மலேசியாவில் ஒரு நல்ல எழுத்தாளர். இவரைப்பற்றிய விவரங்கள் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தில் இருக்கிறது. அதன் முகவரி:
 http://ta.wikipedia.org/wiki/ருக்குமணி_முத்துக்கிருஷ்ணன்

உலக அதிசயங்கள் ஏழு என்று சொல்வார்கள். எட்டு என்பதுதான் சரி. காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த எட்டாவது அதிசயம்  1860ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப் பட்டது. Henri Mahout என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.  ஒரு தாவர ஆராய்ச்சியாளர். கம்போடியக் காடுகளில் வண்ணத்துப் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் தேடிக் கொண்டு போனார். அப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஆல மர வேர்கள் வலை பின்னிய ஒரு சிவன் ஆலயத்தில் தடுக்கி விழுந்தார். அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான  கோட்டைகள்.

பார்க்கிற இடம் எல்லாம் கோயில்கள் குளங்கள். நீர் பூக்கும்  தாமரைத் தடாகங்கள். சரம் சரமாய்ச் சலங்கைகளை வார்த்துச்  சுதி பாடும் கருங்கல் சிலைகள்.  தில்லை அம்பலத்தின் திவ்யச் சுந்தரங்கள்.  அற்புதச் சிற்பங்கள். அழகு பார்க்கும் ஆயிரம் கால் மண்டபங்கள். 

சொர்க்க லோகத்தைக் காட்டும் சொப்பனச் ஜீவன்கள்


சிற்ப சாஸ்திரங்களின் படி கிழக்கு மேற்கு கோபுரங்கள். வெளிப் பிரகாரத்தில் கருங்கல் தள வரிசைகள். அவை எல்லாம் சொர்க்க லோகத்தையே திறந்து காட்டும் சொப்பனச் ஜீவன்கள். புராண இதிகாசங்களை அழகழகாய் அபிநயம் பிடிக்கும் ஆலாபனைகள். மனிதர் கிரங்கிப் போனார்.

அவை எல்லாம் பல நூறு ஆண்டுகள் கம்போடியக் காடுகளில்  மர்மமாய் மாயமாய் மௌன ராகம் பாடிக்கொண்டிருந்த கலைக் காவியங்கள். கலா ஓவியங்கள். உலக அதிசயங்களின் ஒட்டு மொத்தப் பேழைகள். இப்படி ஓர் அதிசயம் இருப்பதை உலகத்திற்குச் சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. 1930 ஆம் ஆண்டுகளில் அந்த அதிசயத்தைப் பற்றிய தீவிர ஆய்வுகளில் இறங்கினார்கள்.

Airborne Synthetic Aperture ராடார் அதி நவீன கருவிகளைப் பயன் படுத்தி எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் ராமர் பாலம் சர்ச்சை    தெரியும் தானே. உண்மையிலேயே ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியைத் தான் பயன் படுத்தினார்கள். அதன் முடிவு என்ன. ஊர் வம்பு வரும். வேண்டாமே.

அலை அலையான கலா ரகசியங்கள்


இதற்கு அமெரிக்காவின் NASA விண்வெளி நிறுவனம் பெரிதும் உதவியது. அப்புறம்  நேராகப் போய் படம் எடுத்தார்கள். அந்தப் படங்களைப்  பார்த்து உலகமே வியந்து போனது. அவை எல்லாம் உண்மையாக இருக்குமா  என்று அனைத்துலகப் பட்டி மன்றங்கள் வேறு நடத்தினார்கள்.

நான் பார்த்ததைச் சொல்கிறேன். காடுகள் நெடுகிலும் அற்புதமான லீலா விநோதச் சிலைகள். அலை அலையான வெளி  மதில்கள். நடன மோகனத் தாரகைகளின் நவரச நாட்டியங்கள். சாகும் வரை சலைக்காமல் பார்க்க வேண்டிய சித்திரா இழை பாடுகள். மூச்சு நிற்கும் போதும் கூட மூச்சு விடாமல் பார்க்க வேண்டிய மனோ ரஞ்சிதங்கள். மூச்சு போன பிறகும் கூட மூன்றாம் பிறையைப் போல சரசமாடும் சர்வ லோக அப்சரங்கள்.

அத்தனையும் அப்சரங்கள். அவற்றை அப்சாரா என்று கம்போடியர்கள் அழைக்கிறார்கள்.  என்னே கலா அதிசயங்கள். ஒளி வீசிக் கொண்டு இருக்கும் ஊர்வசிகள் ரம்பைகள். ஊர்வலம் போகும் சொப்பனச் சுந்தரிகள். போதும். இதற்கு மேல் கேட்க  வேண்டாம். மற்றதை நீங்களே போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த அதிசயத்தைக் கம்போடிய மக்களே முதலில் நம்பவில்லை. மற்றவர்களைக் கேட்க வேண்டுமா. வேறு உலகத்தில் இருந்து மகா மெகா மனிதர்கள் வந்தார்களாம். கோயில்களைக் கட்டினார்களாம். குளங்களைத் தோண்டினார்களாம். சிலைகளைச் செதுக்கினார்களாம். ஆலமரங்களை நட்டார்களாம். 

அப்புறம் தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பறந்து விட்டார்களாம். எல்லாரும் கை எடுத்துக் கும்பிட்டு அழுதார்களாம். சீரியஸாகச் சீரியல்களைப் பார்த்தால் பேரிளம் பெண்களின் விசும்பல் சத்தம் கேட்கும் இல்லையா. அந்த மாதிரி ஏதாகிலும் நடந்து இருக்கலாம்.

ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள்

கம்போடியர்கள் இப்போது அதை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். பார்க்க வருபவர்களிடம் ஆண்டுக்கு எழுநூறு கோடி ரிங்கிட்டிற்கு டிக்கெட் விற்று சந்தோஷப் படுகிறார்கள். அந்த உலக அதிசயம்தான் அங்கோர் வாட்.

இந்த அதிசயத்தின் பின்னால் நீண்ட நெடிய  வரலாறே இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அங்கோர் வாட் ஆலயங்களைக் கட்டிய ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள் என்பதைச் சொல்கிறேன். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எல்லோரும் படிக்க வேண்டும் என்பது நம்முடைய ஆசை.

கட்டுரையை எழுதுவதற்காக அண்மையில்  கம்போடியா நாட்டின் அங்கோர் வாட்டிற்கே போய் வந்தேன். என்னுடன் வந்தவர்களைப் பற்றிய விவரங்களைப்  பிறகு சொல்கிறேன்.

முதலில் அங்கோர் வாட் வரலாற்றை ஆரம்பத்திலிருந்தே சொல்ல வேண்டும். அப்போதுதான் ஜெயவர்மன் சூரியவர்மன் கதையும் உங்களுக்குப்  புரியும். சரியா.

கி.பி.100ஆம் ஆண்டுகளில் அதாவது 1900 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.    தென் கிழக்கு ஆசியா மாபெரும் வணிகத் தளமாக, வாணிபக் கேந்திரமாக விளங்கியது. வடக்கே சீனாவில் இருந்து பட்டுத் துணிகள் வந்தன. பாரசீகத்தில் இருந்து பலசரக்குகள் வந்தன. இந்தியாவில் இருந்து இந்து-புத்த மதச் சித்தாந்தங்கள் வந்தன. இதில் இந்தியர்களும் சீனர்களும்தான்  அதிகமாக வந்தனர்.

புதிய மண்ணில் புதிய கலப்பு இரத்தம்

சரி. அப்படி வியாபாரம் செய்ய வந்தவர்கள் தங்களுடைய கலைகளையும் கலாசாரங்களையும் கொண்டு வந்தனர். அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்கள் அந்தக் கலா மரபுகளுக்குள் கவர்ந்து இழுக்கப்பட்டனர்.

அங்கு வாழ்ந்த சுதேசிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். புதிய மண்ணில் புதிய கலப்பு இரத்தம். அதனால் வித்தியாசமான வியூகங்கள். வித்தியாசமான அணுகு முறைகள். 

இதில் இந்தியர்களின் கலை, சமயம், சட்ட ஒழுங்கு முறைகள், அரசியல் சாணக்கியம், எழுத்து, இலக்கியம் போன்றவை பூர்வீகக் குடிமக்களை வெகுவாகப் பாதித்து விட்டன. பாதிப்பு என்றால் இங்கே ஈர்ப்பு என்று அர்த்தம்.

அந்த வகையில் இந்திய இனங்களைச் சார்ந்தவர்கள் சின்னச் சின்ன நிலப் பிரபுகளாக  மாறினார்கள். அவர்கள் தனித் தனியாகச் சின்னச் சின்ன நகரங்களை உருவாக்கினார்கள். அந்த நகரங்களுக்குள் கோட்டைகளைக் கட்டினார்கள். அந்தக் கோட்டைகளுக்குச் சுவர்கள், மதில்கள், பாதுகாப்பு அரண்கள். அதற்குள் பூர்வீக மக்களின் அடிமைத்தனச் சேவைகள்.

நாளடைவில் ஆளுமையும் அதிகாரமும் பெருகின. ஆசைகளும் மல்கின. ஒரு சில படிகள் மேலே போனர்கள். தங்களைக் குறுநில மன்னர்களாக, நிலப் பிரபுகளாக  மாற்றிக் கொண்டார்கள். அப்புறம் என்ன. மண்ணாசைக்குப் பின்னால் பெண் ஆசையும் கலைக் கட்டியது. இயற்கையான மனித இயல்புகள்தானே.

Funan என்பது பூநாண்

தொட்ட குறை விட்ட குறையாகப் பொன் ஆசையும் ஒட்டிக் கொண்டது. அவருடைய நிலத்தை இவர் பிடுங்குவதும், இவருடைய மனைவி மக்களை மற்றவர்  இழுத்துச் செல்வதும் சகஜமாகிப் போனது.  இவை எல்லாம் என்ன நேற்று இன்று நடக்கிற விஷயமா. காலாகாலத்திற்கும் அரிச்சுவடி ஆகிப் போன கலைகள் தானே. அது ஆரம்பக் கட்டம். ஒரு சாம்ராஜ்யம் உருவாகின்ற காலக் கட்டம்.

கம்போடியாவுக்கு வட மேற்கில் இருப்பது வியட்நாம். இந்த வியட்நாமில் கி.பி.300 ஆவது ஆண்டுகளில் பலம் வாய்ந்த ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவாகியது.

அந்தச் சாம்ராஜ்யத்தின் பெயர் பூனான்.  அது  செழிப்பும் கொழிப்புமாகப் புகழின் உச்சியில் வளர்ந்து கொண்டிருந்தது.  Funan என்பது என்னவோ சீனச் சொல் மாதிரி இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். அது ஒரு சமஸ்கிருதச்  சொல். இருந்தாலும் பூனான் என்றால் சீன மொழியில் மலை என்று பொருள்.

காலப் போக்கில் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, பர்மா, மலாயாவின் வட பகுதிகள் எல்லாம் பூனான் ஆட்சியின் கீழ் வந்தன. பூனான் ஓர் இந்திய சாம்ராஜ்யம். நம்ப முடிகிறதா.

ஒரு காலத்தில் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்றால்  நம்ப முடிகிறதா. இவற்றை எல்லாம் எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. அவர்கள் விட்டு விட்டுப் போகாமல் இருந்தால் வரலாறு இப்போது வேறு மாதிரியாக இருக்கும் இல்லையா.

கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர்


கம்பு எனும் பிராமணர்தான் பூனான் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர். அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68)  என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Ruler_of_Cambodia எனும் இணையத் தளத்தில் இந்த விவரங்கள் உள்ளன. ஆனால், விரிவாக இல்லை. கம்பு எனும் கவுந்தன்யா கம்போடியாவுக்கு வந்தார். நிலங்களை வாங்கிப் போட்டார். சில ஆண்டுகளில் நிலப் பிரபுவாக மாறினார்.

அங்கே உள்ள பூர்வீகப் பெண்ணைக் கல்யாணம் செய்தார். அவளுடைய  பெயர் Saoma எனும் மீரா. பின்னர் கம்புவின்  நிலபுலன்கள் எல்லாம் கிராமங்களாக மாறின. அப்புறம் கிராமங்கள் மாவட்டமாக மாறியது. மாவட்டங்கள் ஒரு சாம்ராஜ்யமாகவே மாறியது. இப்படித் தான் பூனான் சாம்ராஜ்யம் உருவானது. சரியா.

கம்பு என்பவரின் பெயரில் இருந்துதான் கம்புஜா எனும் நாட்டின் பெயரும் உருவானது. கம்போடியாவின் இப்போதைய பெயர் கம்புஜா. அப்படியா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. விஷயம் என்னவோ புதிசு. இருந்தாலும்  வரலாறு இருக்கிறதே அது ரொம்பவும் பழசு. அவருக்குப் பின் பல அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். முந்நூறு ஆண்டுகளுக்குச் சரியான வரலாற்று விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததைத் தருகிறேன்.

கி.பி.100 லிருந்து கி.பி.434 வரை எட்டு அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். Hun Panhuang, Fan Shih-Man, Fan Chin-Sheng, Fan Siyun, Tian Chu Chantan எனும் பெயர்களில் சீன அரசர்களும் இருந்து இருக்கிறார்கள். கி.பி.434 க்குப்  பின் வந்தவர்கள்.

ஸ்ரீஇந்திரவர்மன் (கி.பி.434- கி.பி.435)
கவுந்தன்யா ஜெயவர்மன் (கி.பி.484- கி.பி.514)
ருத்ரவர்மன் (கி.பி.514- கி.பி.550)
பவகவர்மன் (கி.பி.550- கி.பி.600)
மோகேந்திர வர்மன் (கி.பி.600- கி.பி.616)
ஈசனவர்மன் (கி.பி.616- கி.பி.635)
பவகவர்மன் I (கி.பி.639- கி.பி.657)
ஜெயவர்மன் 1 (கி.பி.657- கி.பி.681) 
ஜெயாதேவி (கி.பி.681- கி.பி.713)

இது இப்படி இருக்க,  பூனான் சாம்ராஜ்யத்திற்கு வடக்கே செந்திலா எனும் ஒரு குட்டி சாம்ராஜ்யமும் இருந்தது. இந்தச் செந்திலா குட்டி சாம்ராஜ்யமும் பூனான் ஆளுமையின் கீழேதான் இருந்தது. கி.பி.600 ஆம் ஆண்டுகளில் நம்முடைய பூனான் ஆட்சியில் குளறுபடிகள் நிகழ்ந்தன. ஆட்சியும் ஆட்டம் கண்டது.

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டது செந்திலா குட்டி அரசு. பூனானின் வடக்குப் பகுதியைக் கலவரம் செய்து  பிடித்துக்  கொண்டது. கீழே தாய்லாந்தில் இருந்த Mon பூர்வீக மக்கள் சும்மா இருப்பார்களா. அவர்களும் தங்கள் பங்கிற்கு தென் பகுதியைப் பிடித்துக் கொண்டனர்.


சைலேந்திரா மன்னர்கள் 

இந்த 'மோன்' அரசுதான் இப்போதைய தாய்லாந்து. செந்திலா அரசு இருக்கிறதே அது இப்போதைய கம்போடியா. காலம் ஓடியது. செந்திலா அரசும் எஞ்சி மிஞ்சி இருந்த மற்ற எல்லா பூனான் நிலத்தையும் அடித்துப் பிடித்துக் கொண்டது.
செந்திலா அரசர்கள் கி.பி.706 லிருந்து கி.பி. 802 வரை இந்திய மன்னர்களின் பூனான் அரசை ஆட்சி செய்தார்கள்.

செந்திலா ஆட்சிக்கு வந்ததும் பூனான் பரம்பரையைச் சேர்ந்த இளவரசர்கள் கண் காணாத இடங்களுக்கு போய் மறைந்து வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் நம்முடைய அங்கோர் வாட் கதாநாயகன் ஜெயவர்மன் II. இவர் ஜாவா தீவில் நாடோடியாய் வாழ்ந்தார். அப்போது ஜாவாவை சைலேந்திரா சாம்ராஜ்யம் ஆட்சி செய்து வந்தது. பலம் வாய்ந்த அரசு. சைலேந்திரா மன்னர்கள்  ஜெயவர்மன் II ஐ நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

சைலேந்திரா அரசு ஜாவா தீவை ஆட்சி செய்தது. ஸ்ரீ விஜயா அரசு சுமத்திராவை ஆட்சி செய்தது. ஸ்ரீ விஜயா அரசும் சைலேந்திர அரசும் நல்ல உறவுகளூடன் வாழ்ந்தவை. இந்தோனேசியாவை மொத்தமாக இந்தியர்கள் ஆட்சி செய்து வந்த காலம் என்றும் சொல்லலாம்.

இந்தக் காலத்தில் தான் Borobudur 'போராபுடுர்'  எனும் புத்த நினைவுக் கோட்டையும் கட்டப் பட்டது. கட்டியவர்கள் சைலேந்திரர்கள். இந்த 'போராபுடுர்' இருக்கிறதே இது தான் உலகிலேயே இப்போதைக்கு மிகப் பெரிய புத்த நினைவு ஆலயக் கோட்டை.

இந்தக் காலக் கட்டத்தில் மேலே செந்திலா ஆட்சியில் பிரச்னை புகையத் தொடங்கியது.. உள்நாட்டுப் போர். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் செந்திலா அரசு இரண்டாக உடைந்து போனது.

பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை. ஒரு நல்ல நாள் பார்த்து ஜெயவர்மன் II கம்போடியாவுக்கு வந்தார். சும்மா வரவில்லை. ஜாவாவிலிருந்து ஒரு பெரிய படையைக் கொண்டு வந்தார்.

வந்தது கி.பி. 790 ஆம் ஆண்டு. கம்போடியாவைக் கைப்பற்றியது கி.பி.802ல். 25 ஆண்டுகள் தொடர்ந்து கடல் போர். இந்த ஜெயவர்மன் II தான் கம்போடியாவின் தலை எழுத்தையே மாற்றிப் போட்டவர்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். இப்படி ஒரு இந்தியப் போர் நடந்தது பலருக்குத் தெரியவே தெரியாது.

இந்த ஜெயவர்மன் தான் கம்போடியாவை அந்தக் காலத்தில் வல்லரசாக மாற்றியவர். தாய்லாந்தைத் தலை குனிய வைத்தவர். சீனாவைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தங்களின் எதிரியான செந்திலா ஆட்சியை அடியோடு துடைத்து ஒழித்தவர்.

சிவன் விஷ்ணு ஆலயங்கள்

கம்போடியா நாட்டை விரிவு படுத்தி ஹரிஹரலயா எனும் மாபெரும் நகரத்தையும் உருவாக்கினார். லிங்கத்தை வழி படுதல், சிவா, விஷ்ணு தெய்வங்களை வழி படுதல் போன்றவற்றை அறிமுகம் செய்தவரும் இவரே. அவர் செய்த இன்னும் ஒரு பெரிய காரியம்  யசோதபுரம் எனும் தலைநகரை உருவாக்கியது. ரவுலஸ் கோட்டைகளைக் கட்டியது.

ஆனால், உலக அதிசயமான அங்கோர் வாட்டை இவர் கட்ட வில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். அவர்தான் கட்டியதாகப் பலர் இன்னும் நினைத்து வருகிறார்கள்.  இவர் நிறைய சிவன் ஆலயங்களைக் கட்டினார். விஷ்ணு ஆலயங்களைக் கட்டினார். உண்மைதான். இவருடைய பெயரால் சியாம் ரியாப் நகரில் இன்றும் ஒரு பெரிய மருத்துவமனை இயங்கி வருகிறது. 

கி.பி. 850ல் ஜெயவர்மன் II இறந்து போனார். அவருக்குப் பின் ஜெயவர்மன் III என்பவர்  வந்தார். இவர் பல மலை ஆலயங்களைக் கட்டினார். அதன் பின்னர், இந்திரவர்மன் I வந்தார். இவரும் கி.பி. 879ல் பிரியா கோ ஆலயத்தையும், கி.பி. 881ல் பாகோங் ஆலயத்தையும் கட்டினார்.

அடுத்து வந்த யசோவர்மன் I கி.பி.893ல் அங்கோர் பகுதிக்கு தன் தலைநகரத்தை மாற்றினார். முதல் ஆலயக் கோயிலையும் அங்கேதான் கட்டினார்.

அடுத்து வந்த ஹர்ஷவர்மன் 1 என்பவர் பிரசாத் கார்வண் எனும் கோயில்களைக் கட்டினார்.

அடுத்து ஜெயவர்மன் IV வந்தார். இவர் பங்கிற்கு இவரும் பல அரண்மனைகளைக் கட்டினார். தெப்பக் குளங்கள் கட்டப் பட்டன. அதற்கு அடுத்து சூரியவர்மன் II என்பவர் வந்தார். இவர்தான் அங்கோர் வாட் அதிசயத்தைக் கட்டியவர். தென் கிழக்கு ஆசியாவைக் கம்போடியாவின் கீழ்   கொண்டு வந்தவர் இவர்தான். முதலில் தாய்லாந்து விழுந்தது. அடுத்து வியட்நாம் விழுந்தது.

பைத்தியம் பிடித்த மனிதர்கள்

அவர் கட்டிய கோயில்களைப் போய்ப் பாருங்கள். இப்படி எல்லாம் கட்டி இருக்கிறார்களே. பைத்தியம் பிடித்த மனிதர்கள் என்று நினைக்கத் தோன்றும். மூலைக்கு மூலை கோயில்கள். பார்க்கும் இடம் எல்லாம் கல் தூண்கள். மொத்தம் 2000 கோயில்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு வருடம் சுற்றினாலும் பார்த்து முடிக்க முடியாது.

அதோடு அந்தக் கோட்டைகளையும் கோயில்களையும் எண்ணிப் பார்க்கவும் முடியாது.   ஏனென்றால் பார்க்கும் இடம் எல்லாம் கோயில்களாகத் தான் இருக்கும். எப்படி எண்ணுவது. இடது பக்கம் திரும்பினால் கண்ணுக்கு எட்டிய வரை கோயில்கள். வலது பக்கம் பார்த்தால் அதே மாதிரிதான். மொத்தம் பதினாறு சதுர கிலோமீட்டர் அளவுக்கு கோயில்கள், குளங்கள், ஏரிகள், தாமரைத் தடாகங்கள். முன்னூறு நானூறு வருடங்களுக்கு ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

அங்கோர் வாட்டின் உள்ளே நுழைந்ததுமே நமக்குள் ஒரு பயம் வந்துவிடுகிறது. அது என்ன பயமோ தெரியவில்லை. ஆனால், எனக்கும் வந்தது.  ஒரு மாதிரியான பயம். இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு கட்டி இருக்கிறார்களே. எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள். எப்படி கட்டி இருப்பார்கள். என்ன மாதிரியான அறிவியல் அறிவு அவர்களிடம் இருந்து இருக்கும். அவர்களும் நம்மைப் போன்ற இந்தியர்கள்தானே. இந்த மாதிரியான எண்ணங்கள் வந்தன

ஜெயவர்மன் VII எனும் அரசன் இந்து மதத்தில் இருந்து மாறிப் போய் புத்த மதத்தில் சேர்ந்தான். இது நடந்தது 1181ஆம் ஆண்டு. இந்த அரசன் தான் மஹாயனா புத்த மதத்தைக் கொண்டு வந்தவர். இவர் வருவதற்கு முன் Cham எனும் இனத்தவர் கம்போடியாவைக் கொஞ்ச காலம் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பாயோன் புத்த ஆலயங்களைக் கட்டியவர் ஜெயவர்மன் VII தான். அவர் இறந்த பிறகு இந்திரவர்மன் II எனும் அரசர் வந்தார். இவரும் நிறைய ஆலயங்கள் என்றும்  கோட்டைகள் என்றும் கட்டினார். அதன் பின்னர் வந்தது ஜெயவர்மன் VIII என்பவர் வந்தார். இவர் கம்போடியாவை புத்த மதத்திலிருந்து மறுபடியும் இந்து வேதாதங்களுக்குக் கொண்டு வந்தார். இவர்தான் அங்கோர் சாம்ராஜ்யத்தின் ஆகக் கடைசி அரசர்.

இவர் இறந்த பிறகு கம்போடியா பலகீனமாகிப் போனது. கம்போடியா என்கிற நாடு சியாம் ஆட்சியின் கீழ் வந்தது. சில ஆண்டுகளில் சியாம் ஆட்சியும் சிதைந்தும் போனது. அப்புறம் பலப் பல மாற்றங்கள், பலப் பல அரசியல் திருப்பங்கள்  ஏற்பட்டன. இப்போது இந்த அங்கோர் வாட்டை உலகச் சுற்றுப் பயணிகளிடம் அடகு வைத்துக் கொண்டு கம்போடியா தன் வறுமையைத் துடைத்து வருகிறது. இது தான் விஷயம்.

இப்போது இருக்கின்ற உலக அதிசயங்களில் சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடுகள், தாஜ் மகால் தவிர அடுத்த நிலையில் இருக்கும் அதிசயம் இந்த அங்கோர் வாட் தான். ஐந்தாவதாக ஜாவாவில் உள்ள பொரபடுர் கோயில்கள் வருகின்றன. என்னுடன் வந்து எனக்கு பல வகைகளில் உதவி செய்தவர்கள் என் மனைவி ருக்குமணி. மைத்துனர்கள் சந்திரன், குணா. தங்கை நிர்மலா சந்திரன். அவர்களுக்கு நன்றி.

6 comments:

 1. அங்கோர்வாட் ஆலயத்தின் பின்னணியில் இந்தியபாரம்பரிய பின்னணி இருப்பது ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் இப்படியோர் நீண்ட வரலாறு இருப்பது ஆச்சரியம்தான். இது போல இன்னும் பல தகவல்களை தாருங்கள்.நன்றி ஐயா.

  ReplyDelete
 2. மூர்த்தி12/4/10 6:52 PM

  அருமை....

  ReplyDelete
 3. அருமையான விபரங்கள். நன்றி

  ReplyDelete
 4. அமரர் சாண்டில்யனின் கடல்புறா படித்துப் பாருங்களேன்.அதில் வரும் விஜயப்பேரரசு ,மற்றும் கடலில் நடக்கும் போர் ,ஜாவா சுமத்ரா ஆகியவற்றின் பழங்காலப் பெயர்கள்,பழக்க வழக்கங்கள்,தமிழரின் பெருமை அறியலாம்

  ReplyDelete
 5. mikka nandru ayya. miga arumaiyana thagavalgal.nandri ayya

  ReplyDelete
 6. ஐயா ராமர் பாலம் உண்மையா பொய்யா என்று கடைசிவரை சொல்லவில்லை?
  தயவுசெய்து சொல்லுங்கள்.

  ReplyDelete